2014ஆம் ஆண்டு விகடன் பதிப்பகத்தின் வழியாக வெளியானது துலக்கம் நாவல்.

அமெரிக்காவில் காணாமல் போன ஆட்டிச நிலையாளச் சிறுவன் ஒருவனை மூன்று நாட்களுக்குப்பின் வசிப்பிடத்திலிருந்து 64 கிலோமீட்டர் தூரத்தில் கண்டுபிடித்ததாகவும்; அப்படிக் கண்டுபிடிக்க அவர்கள் அடைந்த சிரமத்தையும் விவரித்தது செய்தி.
மற்ற நாடுகளை விடக் கொஞ்சம் புரிதல் உள்ள அமெரிக்கா மாதிரி மேலைநாடுகளிலேயே ஆட்டிச நிலையாளச் சிறுவர்கள் காணாமல் போவதும், அவர்களைக் கண்டுபிடிக்க அந்தக் காவல்துறை திணறுவதுமான பல செய்திகள் காணக் கிடைத்தது. போதிய விழிப்புணர்வு இல்லாத நம் ஊரில் இப்படியான ஒரு சிறுவன் காணாமல் போனால், இச்சமூகம் அவனை எப்படி எதிர்கொள்ளும் என்ற எண்ணமே இக்கதைத் தோன்றக் காரணமானது.
இக்கதை எழுதும் போது நம் நாட்டில் இப்படியான சம்பவங்கள் பெரியதாக நிகழவில்லை. அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஆம்! ஆட்டிச நிலையாளர்கள் காணாமல் போவதும், அவர்களில் சிலர் உயிருடனும் சிலர் உயிரற்ற உடலாகவே திரும்பக் கிடைப்பதும் இங்கேயும் நிகழத்தொடங்கிவிட்டன.

2019இல் மும்பையில் தொலைந்துபோன தருண்குப்தாவை இன்றும் அவனது பெற்றோர்தேடி வருகின்றனர். இத்தருணத்தில் தான் அச்சில் இல்லாத எனது துலக்கம் நாவல் 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்டிச விழிப்புணர்வு மாதமான ஏப்ரல் 2024 இல் வெளியாகி உள்ளது.
இம்முறை இந்த நாவலை மயில்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நூலினைப் பெற விரும்பும் நண்பர்கள் கீழ்காணும் சுட்டியின் வழியே பெற்றுக்கொள்ளலாம்.

https://bookpick.in/books/thulakkam/