கேணி- 11 ஏப்ரல் 2010- ஓர் அனுபவம்

’ஏன் சார்.. இன்னிக்கு மழை வருமா?’

“தெரியலைங்களே..”

‘என்ன இப்படி சொல்லீட்டிங்க..  பத்திரிக்கையில வேலை செய்யுறதா சொன்னீங்களே..?

“?…!…?”

”சார், இந்த சிக்னலில் இருக்கற சிவப்பு விளக்குக்கெல்லாம் டைம் வருதே, அது என்ன கணக்குங்க?”

“தெரியலீங்களே….”

”என்ன சார், டிவில வேலை செய்யறீங்க, இது கூடத் தெரியலீன்றீங்களே?”

—–

“ரஜினிகாந்த்லாம் என்ன சம்பளம் வாங்குவார்ங்க?”

“தெரியலையே சார்”

”தெரியலையா? நீங்கல்லாம் என்ன ஜர்னலிஸ்ட்டோ?”

இது மாதிரியான கேள்விகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு மனிதர்களிடம் சந்தித்துள்ளேன். ஆனால் இதெல்லாம் ஜர்னலிஸ்டாக இருக்கும் ஒருவன் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

இது மாதிரியான கேள்வி கேட்கும் மனநிலை சாதாரண பாமர மக்கள் என்றில்லாமல் இன்று நிறைய வாசிக்கும்.. படித்த மக்களிடமும் நிறைந்து இருக்கிற்து என்பதை தமிழ்ச்செல்வன் கலந்து கொண்ட இந்த கேணி சந்திப்பு எனக்கு உணர்த்தியது.

நான் கலந்து கொண்ட கேணியின் முதல் கூட்டம் இது. என் மனம் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவரான தமிழ்ச்செல்வன் கலந்து கொள்கிறார் என்கிற ஒரு காரணத்திற்காகவே துணைவியாரோடு இந்த கூட்டத்திற்கு போயிருந்தேன். அவருக்கும் ச.தமிழ்ச்செல்வனின் எழுத்துக்கள் பிடிக்கும்.

இவர் எழுதிய ‘அரசியல் எனக்கு பிடிக்கும்’ என்ற சிறு நூலை அன்பளிப்பாக பாரதி புத்தகாலயத்திலிருந்து வாங்கி, சுமார் நூறு பேருக்கும் மேல் கொடுத்திருப்பேன். தமிழுக்கு கிடைத்த ஒரு நல்ல சிறுகதையாளர்.. கட்டுரையாளராக மாறிப்போனதில் எனக்கு கொஞ்சம் வருத்தமே.

ச. தமிழ்ச்செல்வன் மதுரகவி பாஸ்கரதாசின் பேரன் என்பதும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயலாளராக இருக்கிறார் என்பதும், எழுத்தாளர் கோணங்கியின் மூத்த சகோதரர் என்பதும் உபரி தகவல்கள்.

நாங்கள் போய் சேர்ந்த  போதே தமிழ்ச்செல்வன் பேச ஆரம்பித்திருந்தார். நூற்றைம்பதிற்கும் குறையாமல் கூட்டம் கூடி இருந்ததைப் பார்த்த போது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.  ஒரு இலக்கிய நிகழ்வில் இத்தனைபேரை நான் பார்ப்பது இது தான் முதல் முறை.

சுமார் ஒன்றரை மணி நேரம் தமிழ்ச்செல்வன் அவருடைய தொழிற்சங்க அனுபவங்கள், அறிவொளி இயக்க அனுபவங்கள் போன்றவற்றையெல்லாம் பேசினார்(ஏறக்குறைய இன்று பேசிய எல்லா விஷயமுமே அவரால் ஏற்கனவே புத்தகங்களில் எழுதப்பட்டவைதான்).

பேசி முடித்தபின் கேள்வி நேரம் ஆரம்பமானது.

”ஜோதி பாசு 95 வயதில் இறந்தார். ஆனா ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் 88 வயசுலயே இறந்துட்டாரே, ஏன்?” என்ற ரீதியிலான கேள்விகளைத் தவிர அநேகமாக தொழிற்சங்கம், அறிவொளி இயக்கம், மார்க்ஸிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு, சினிமா, நித்தியானந்தா.. உட்பட எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன. நான் கட்சியின் மீதான விமர்சனங்களை கட்சிக்குள் மட்டுமே பேசுவேன் என்று அவர் தெளிவு படுத்திய பின்னும்.. கட்சி குறித்தான கேள்விகளே அதிகம் முன் வைக்கப்பட்டன்.

இதில் அவர் பணியாற்றிய தொழிற்சங்கம் குறித்தும், அறிவொளி இயக்கம் பற்றியும் கேட்கப்பட்ட கேள்விகள் நியாயம் என்பேன். அதே சமயம்.. தமிழ்ச்செல்வன் ஒரு மார்க்சிஸ்ட் கட்சிக்காரர் என்பதால்.. அவரிடம் கட்சி பொதுச்செயலாளரிடம் கேட்கவேண்டிய எல்லா கேள்விகளையும் நம்மவர்கள் அடுக்கியது வேடிக்கையாக இருந்தது.

அக்கட்சியில் டீக்கடை வைத்திருக்கும் ஒருவர் உறுப்பினராக இருப்பார். ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் உறுப்பினராக இருப்பார்.. அவரிடமும் போய்.. சீன கம்யூனிசம், கியூபா கம்யூனிசம்.. யுயெஸ்ஸார்.., பெர்லின் சுவர்.. என்றெல்லாம் கேள்வி கேட்போமா நாம்.. என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

’வீர்யம் குறைவாக உள்ளது ஏதாவது ஒரு லேகியம் சொல்லுங்களேன்..’ என்ற ரீதியிலான கேட்விகள் தவிர அனேகவகையான கேள்விகளும் எழுத்தாளர் ஜெயமோகனிடம் கேட்கப்படுகின்றன. அவரும் சளைக்காமல் எல்லாவற்றுக்குமே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். (இவற்றை தொகுத்து ஜனவரி புத்தக கண்காட்சியில் நூலாக கொண்டு வந்துவிடுவார் என்பது வேறு விசயம்.)

இவரைப் பார்த்ததினாலோ அல்லது  படித்ததினாலோ.. எல்லாவற்றிற்கும் எழுத்தாளனுக்கு பதில் தெரிந்திருக்கவேண்டும்  என்ற முடிவுக்கு இவர்கள் வந்திருப்பார்கள் போல. ஆனால்.. எழுத்தாளனாக இருப்பதனாலேயே எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை என்றே கருதுகிறேன்.

சுமார் இரண்டு மணி நேரம் திறந்தவெளியில் அமர்ந்திருந்தேன். அந்த சமயத்தில் ஒரு கொசு கூட கடிக்கவில்லை என்பது எனக்கு வியப்பிலும் வியப்பாக இருந்தது. மேலும், இந்த நிகழ்வுக்கு செல்லும் முன் பெயர் காரணமான கேணியை எட்டிப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் கடைசியில் மறந்து போய் வந்துவிட்டேன். அடுத்த வாய்ப்பில் நிச்சயம் எட்டிப் பார்க்க வேண்டும். 🙂

சந்திப்புக்கும், கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்திருந்த கேணி தோழர்களுக்கு நன்றிகள்!!

ச.தமிழ்ச்செல்வனின் வலைப்பதிவு முகவரி:- http://satamilselvan.blogspot.com/

This entry was posted in அனுபவம், சந்திப்பு and tagged , , , , . Bookmark the permalink.

13 Responses to கேணி- 11 ஏப்ரல் 2010- ஓர் அனுபவம்

  1. நல்லாத் தொகுத்திருக்கீங்க ஸார்……

    //(இவற்றை தொகுத்து ஜனவரி புத்தக கட்காட்சியில் நூலாக கொண்டு வந்துவிடுவார் என்பது வேறு விசயம்.)//

    கண்காட்சியை கட கண்ணி ரேஞ்சுக்கு ஆக்கிப்புட்டியே தல :))

  2. நன்றி சென்ஷி.. மாத்திட்டேன்..

  3. ramji_yahoo says:

    thanks for sharing, nice post

  4. உண்மை தான் நண்பரே. நான் கி.ரா அவர்களின் சந்திப்பில் கலந்து கொண்ட போது கேட்கபட்ட பார்வையாளர் கேள்விகள், மிகவும் அமெச்சூர் தனமாகவே இருந்தன. அது பற்றி என் பதிவிலும் எழுதியுள்ளேன்.

    இது போன்ற பொது நிகழ்வுகளில் கேள்விகளுக்கு கட்டுபாடு செய்ய முடியாது இல்லையா…

  5. //இது போன்ற பொது நிகழ்வுகளில் கேள்விகளுக்கு கட்டுபாடு செய்ய முடியாது இல்லையா…//

    அது தான் சோகமான உண்மை. ஆனாலும் ரொம்ப அழகாகவே ஒருங்கிணைத்தார் ஞாநி!

  6. நன்றி ராம்ஜி! (நீங்களும் குப்பன் யாஹூவும் ஒரே நபர் தானா..?)

  7. rosa says:

    ஒரு கம்யூனிஸ்டு என்பவர் சில நேரங்களில் மாத்திரம் தான் வேறு கட்சி வேறு என்றெல்லாம் பேச முடியாது. தானே இன்னமும் மனதில் ஏற்றுக்கொள்ளாத ஒரு விசயத்தை பொதுஜனங்களுக்கு ஒரு நியாயமானவன் எப்படி சொல்ல முடியும். எனவே அதற்கு மழுப்பலாக பதிலளித்த தமிழ்செல்வனைத்தான் நியாயமானவர்கள் விமர்சித்து இருக்க வேண்டும். அது டீக்கடை வைத்திருப்பவராக இருந்தாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். சொல்லத் தவறினால் அது அதிமுக, திமுக போன்ற முதலாளிகளின் கட்சிகளுக்கு வேண்டுமானால் ஓகே. தொழிலாளி வர்க்க விடுதலைக்காக சமூக மாற்றத்திற்காக போராடுவதாக சொல்லிக் கொள்ளும் ஒரு கட்சியில் அது சாத்தியமில்லை. அப்படி ஒரு வேளை அவர்களுக்கு கியூபா சீனா பற்றி தெரியாமல் இருந்தாலும் அவர்களுக்கு அரசியலை சொல்லித் தராத குற்றத்திற்காக கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும். கூடுதலாக மார்க்சிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தமிழ்செல்வன் என்ற முறையில் கேள்வி கேட்டது சரிதான். பதில் சொல்லாத்துதான் அவரது தவறு.

    அப்புறம் கம்யூனிஸ்டு கட்சிகளில் மாத்திரம்தான் தலைவர் முதல் தொண்டர் வரை ஒரே மாதிரியான அரசியலை பேபசுவார்கள். அவர்களுக்குள் மாத்திரம்தான் இது ஒரு வேலைப்பிரிவினை என்பது உண்மையில் இருக்கும் என்பதால் இதுபோன்ற கருத்துக்களின் சிறுபிள்ளைத்தனம் நினைத்து சிரிப்புதான் வருகிறது.

    எழுத்தாளனாக இருப்பதால் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நியாயத்தை யாரும் வலியுறுத்தவில்லை. ஆனால் நித்தியானந்தா பிரச்சினையில் அவர் தெரிவித்த கருத்துக்களும் உ.ரா வரதராசன் தற்கோலையில் அவர் தெரிவித்த கருத்துக்களுக்கும் அவர்தானே பொறுப்பேற்க வேண்டும். இரண்டையும் ஒப்பிட்டு கேட்கப்பட்ட கேள்விக்கு அவரது பதில் இரட்டைத்தனைமையுடன் இருந்த்து உங்களுக்கு தெரியவில்லையா.
    க‌ம்யூனிஸ்டுக‌ள் மாத்திர‌ம்தான் எல்லாப் பிர‌ச்சினைக‌ளும் த‌னிந‌ப‌ர் சார்ந்த‌ ஒன்ற‌ல்ல‌ அத‌ற்கு ஒரு ச‌மூக‌ அடிப்ப‌டை இருக்கும் என்ற‌ ரீதியில் சிந்திப்ப‌வ‌ர்க‌ள். ஆனால் நித்தியான‌ந்தா என்ற‌ ச‌மூக‌ம் ஏமாந்த‌ க‌தைக்கு ஒரு இளைஞ‌னின் பாலிய‌ல் தேவைக‌ளை முக்கிய‌மான‌தாக‌ த‌ந்தையின் ஸ்தான‌த்தில் இருந்து பார்ப்ப‌வ‌ர்க‌ளை நூறு ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ரே லெனின் தெளிவாக‌ குறிப்பிட்டுள்ளார். ஒரு பொருளின் வ‌ள‌ர்ச்சி ம‌ற்றும் வீழ்ச்சியை வைத்து அப்பொருளின் த‌ன்மையை வ‌ரைய‌றுத்து ம‌திப்பிடுகையில் அதில் இன்ன‌தும் க‌ல‌ந்திருக்கிற‌தே என்ப‌வ‌ன் புக‌ழ்பெற்ற‌ எத்த‌னாக‌வோ வாய்ப்புர‌ட்ட‌னாக‌வோ அல்ல‌து ஏமாளியாக‌வோதான் இருக்க‌ முடியும் என்ற‌ அந்த‌ மேற்கோள் த‌மிழ்செல்வ‌ன் நித்தியான‌த்தாவின் பாலிய‌ல் தேவைக்காக‌ வ‌ருத்த‌ப்ப‌ட்டு ம‌க்க‌ள் ஏமாந்த‌ ச‌மூக‌ விளைவை பின்னுக்கு த‌ள்ளிய‌ விச‌ய‌த்தில் பொருந்தாதா..

  8. rosa says:

    நந்திகிராம் பற்றியும் சிங்கூர் பற்றியும் உண்மைக்கு மாறாக அரசிலை மாத்திரமே அங்கு பேசினார். அதனை யாரும் விமர்சிக்கவில்லை. மக்கள் தாக்கப்பட்டது உண்மையில்லை என கருணாநிதி சொன்னால் கண்டிப்பதும் அதனை புத்த்தேவ் சொன்னால் ஆமோதிப்பதும் அங்கு வந்த பார்வையாளர்களால் ஏன் கேள்வியாக்கப்படவில்லை.

    லீனா கூட்ட‌த்திற்கு போக‌ மாட்டோம் என்ப‌தை இதுவ‌ரை அவ‌ர‌து இணைய‌த்தில் கூட அறிவிக்காம‌ல் அன்றைக்க‌ கேள்வி கேட்ட‌பிற‌கு ஒப்புக் கொள்ளும் ம‌னித‌ரின் நேர்மையை உங்க‌ளால் ஏற்றுக் கொள்ள‌ முடிகிற‌தா… ச‌ரி லீனாவுக்கு ஆத‌ர‌வாக‌ à®…. மார்க்சு கூட்டியுள்ள‌ கூட்ட‌ம் க‌லாச்சார‌ போலீசுக்கு எதிரான‌ கூட்ட‌ம் என்றால், அவ‌ர‌து அக்கூற்றுக்கு மாறாக‌ அவ‌ர்க‌ள‌து க‌ட்சி தோழ‌ர் க‌வின்ம‌ல‌ர் கீற்று த‌ள‌த்தில் தான் க‌ல‌ந்து கொள்வ‌தாக‌த்தான் இதுவ‌ரை வாதாடி வ‌ருகிறார். இதுதான் க‌ட்சிக் க‌ட்டுப்பாடா. க‌லாச்சார‌ போலிசு வேலையை எதிர்ப்ப‌து என்ப‌தை சிபிஎம் பேசுவ‌தே வேடிக்கை. பால் ச‌க்காரியாவை தாக்கிய‌ அவ‌ர‌து தோழ‌ர்க‌ள் அச்ச‌ம்ப‌வ‌த்திற்கு முந்தைய‌ இரு வ‌ய‌தான‌ ஆண் பெண் இருவ‌ரையும் விபச்சார‌ வ‌ழ‌க்கில் கைது
    செய்ய‌ வைத்த‌ அவ‌ர்க‌ள‌து தோழ‌ர்க‌ள். த‌ஸ்லிமா பிர‌ச்ச‌னையில் ந‌ட‌ந்து கொண்ட‌ வித‌ம் என‌ எவ்வ‌ள‌வு க‌லாச்சார‌ போலிசு வேலை செய்து இருக்கிறார்க‌ள். இதெல்லாம் அங்கு வ‌ந்த‌ யாருக்கும் தெரியாதா. இதையெல்லாம் யாரும் கேட்டால் மிர‌ட்டுவ‌த‌ற்காக‌ சில‌ரும் வ‌ந்திருந்தார்க‌ள் என்ற‌ விச‌ய‌மும் உங்க‌ளுக்கு தெரியுமா..

    லீனா பிர‌ச்சினையில் க‌லாச்சார‌ போலிசுதான் பிடிக்காதா லா அண்டு ஆர்ட‌ர் போலிசுன்னா ஓகே வா என்ற‌ கேள்வி யில் உள்ள‌ கிண்ட‌ல் ஞானிக்குத்தான் புரிய‌வில்லை. உங்க‌ளுக்குமா புரிய‌வில்லை. சிங்கூரும், ந‌ந்திகிராமும் ஞாப‌க‌ம் வ‌ந்தால் நான் பொறுப்ப‌ல்ல்.

  9. இலக்கியவாதிகளில், அரசியல் வெளியில், பொதுவாழ்விற்கு வந்தவர்களிடத்தில் ‘மனிதனை’ பார்ப்பதே அரிதாக உள்ளது. அந்த அரிதான ஒரு நிகழ்வைக்கான வந்த மக்கள் கூட்டம் தான் ச.தமிழ்ச்செல்வனைக் காண வந்த கேணி சந்திப்புக்கூட்டம்.

    ச. தமிழ்செல்வனைப்பற்றி அதிகம் சொல்லத்தேவையில்லை பிறரின் (ஒடுக்கப்பட்ட, புறக்கனிக்கப்பட்ட, ஒதுக்கி புறந்தள்ளபட்ட மனிதனின்) வலியுணர்ந்த மனிதன்.

    வலியோடு ஒரு வேளை உணவிற்காக வாழ்க்கையோடு போராடும் மனிதர்களின் பிரதிநிதி. அவரின் எழுத்திலிருந்து சில வரிகள்.

    ‘அந்த பளபளக்கும் மொசைக் தரைகளில் செருப்பில்லாத எம் உழைப்பாளிப் பெண்களின் புழுதிபடிந்த கால் தடம் முதன் முறையாக பட்டது. கலெக்டர் அலுவலகம் உடல்சிலிர்த்து அதிர்ந்தது.
    ஆண்டாண்டு காலப் பாவங்கள் படிந்து போன அரசாங்கக் கட்டிடங்களில் எல்லாம் எம் மக்களின் கால் புழுதிபட வேண்டும். அன்றுதான் அவை புனிதமடையும்.’ – இதை விட அதிகாமாக எந்த பாமரமக்களின் பிரதிநிதியும் சொல்லிவிடவில்லை. சமகாலத்தில் வாழும் மக்கள் எழுத்தாளன். களப்பணியாளன்.

    நிச்சயமாக சிபிஎம்க்கு தமிழ்ச்செல்வனால்தான் பெருமை. கட்சி மீது வரும் விமர்சனங்களை தம்மீது அதிகம் வாங்கிக்கொள்ளும் பிரதிநிதி தமிழ்செல்வன்.

    தமிழ்செல்வனுக்காக வாழ்த்துகளையும், அனுதாபங்களையும் சொல்வதைதவிர வேறு ஏதும் சொல்வதற்கில்லை……

    – சென்னைத்தமிழன்

  10. //இதெல்லாம் ஜர்னலிஸ்டாக இருக்கும் ஒருவன் கட்டாயம் தெரிந்து வைத்திக்கருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை,//

    இந்தக் கருத்துக்கு மட்டும் இங்கே மாற்றுக்கருத்து சொல்ல விரும்புகிறேன் பாலா!

    ஐந்து விஷயங்களில் நூறு சதவிகிதம் தெரிந்து வைத்திருப்பவன் ஆராய்ச்சியாளன். ஆனால் ஒரு ஜர்னலிஸ்ட்டின் அத்தியாவசிய தகுதிகளில் மிக முக்கியமான ஒன்று.. அவன் நூறு விஷயங்களில் குறைந்தபட்சம் ஐந்து சதவிகிதமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்!

    தன் அனுபவங்களாலும், முயற்சிகளினாலும், பயிற்சிகளினாலும் அந்த ஐந்துகளை எவ்வளவுக்கெவ்வளவு கூட்டிக்கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவன் தன் கடமைக்கு நேர்மையாக இருக்கிறான் என்று அர்த்தம்.

    ஒரு ஜர்னலிஸ்ட் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேச – எழுத – நியாய அநியாயத்தைத் தரம் பிரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

    ‘பிணம் தண்டவாளத்துல கிடந்துச்சுன்னா அது ரயில்வே போலீஸ் லிமிட்ல வரும். தண்டவாளத்துக்கு இந்தப்பக்கம் கிடந்துச்சுன்னாத்தான் கேஸ் எங்க ஸ்டேஷன் லிமிட்ல வரும். தண்டவாளத்துல அடிபட்டு பாடி தண்டவாளத்துக்கு அந்தப்பக்கம் விழுந்துட்டதால நீங்க அந்தப்பக்கம் இருக்க ஸ்டேஷனுக்குத்தான் போய் கேஸ் கொடுக்கணும்’ என போலீஸ்காரர்கள் சொல்வதுபோல ஜர்னலிஸ்ட்டுகள் சால்ஜாப்பு சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது.

    பி.டி. கத்திரிக்காய் பிரச்னை பற்றி செய்தி சொல்ல தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள விரும்பும் ஜர்னலிஸ்ட் விவசாயம் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொண்டுதான் ஆகவேண்டும்.

    சட்டசபையில் உறுப்பினர்கள் பேசுவது எக்கச்சக்கமாக எதிரொலிக்கிறது என எழுதும் ஜர்னலிஸ்ட், ஏன் எதிரொலிக்கிறது.. கட்டுமானத்தில் என்ன கோளாறு என ஒரு பொறியாளரிடம் கேட்டு, தற்காலிக பொறியாளருக்குரிய பார்வையைப் பெற்றே ஆகவேண்டும்.

    இப்படித்தான்.. நிறைய உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு ஜர்னலிஸ்ட்டுக்கான இரை எங்கே இருந்து வேண்டுமானாலும், எந்த துறை சார்ந்தும் கிடைக்கலாம். அந்தந்த துறையில் முயற்சியும் பயிற்சியும் பெற்று அனுபவ அறிவை வளர்த்துக்கொண்டே முன்னேறுபவனே முன்மாதிரி ஜர்னலிஸ்ட்.

    ஏரியா பிரித்துக்கொண்டெல்லாம் ஒரு ஜர்னலிஸ்ட் தன்னை வளர்த்துக்கொள்ள முடியாது. நாளிதழ்களில் செய்தியாளர்களுக்கு கோர்ட், கமிஷனர் ஆபிஸ், கவர்ன்மெண்ட் ஆஸ்பிடல் என ஏரியா பிரித்துக்கொடுப்பது மெஷினுக்குப் பயங்கரமாகப் பசிக்குமே (தினம் தினம்) என்பதால் நிர்வாக வசதிக்காக கொடுக்கப்படும் தண்டனைதான்! அப்படியே இருந்தாலும், கமிஷனர் ஆபிஸ் டூட்டி பார்க்கும் செய்தியாளர் தான் வழியில் சந்திக்கும் ஒரு மக்கள் பிரச்னையையும் செய்தியாக்கத் தெரிந்திருப்பதே அவரது தொழில் தர்மம்.

    விகடன் ஆசிரியராக இருந்த (என்றும் எங்கள்) எம்.டி.யான எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் எங்களுடன் பகிர்ந்துகொண்ட ஒரு சம்பவத்தை இங்கே நினைவுகூர்கிறேன்..

    அப்போது விகடன் ஆசிரியர் கல்கி. செய்தியாளர் சாவி. ஆசிரியர் செய்தியாளரை அழைத்து விழா ஒன்றினை கவர் செய்யுமாறு அசைன்மெண்ட் கொடுக்கிறார்.

    விழாவுக்குப் போய் செய்தியாளர் வரிசையில் உட்காரும் சாவி, ஏதேச்சையாகத் திரும்பிப் பார்க்கிறார். அங்கே.. ஆசிரியர் கல்கி!

    கூட்டத்தோடு கூட்டமாக இருக்கும் ஆசிரியரைப்பார்த்ததும் சாவிக்கு பதட்டம்! ‘ஆஹா.. ஆசிரியரே விழாவுக்கு வந்திருக்கிறார். எதையாவது மிஸ் பண்ணித் தொலைத்தால் அசிங்கமா போயிடும்’ என புலம்பியபடியே விழா நடப்புகளை ஒரு வார்த்தை விடாமல் குறிப்பெடுக்க ஆரம்பிக்கிறார்.

    குறுகுறுப்போடு திரும்பி ஆசிரியரைப் பார்க்கிறார் சாவி. அவர் தன்னையே உற்றுப்பார்ப்பதை உணர்து மறுபடியும் கர்ம சிரத்தையாக குறிப்பெடுத்தலைத் தொடர்கிறார்.

    விழா முடிகிறது.

    அலுவலகம் வந்ததும் சாவியை கூப்பிட்டு அனுப்புகிறார் கல்கி.

    ‘ஆமா.. மாய்ஞ்சு மாய்ஞ்சு ஏதோ எழுதிட்டே இருந்தியே.. என்ன?’ எனக் கேட்கிறார்.

    ‘குறிப்பெடுத்தேன்’ என்கிறார் சாவி.

    ‘குறிப்புன்னா?’ – கல்கி.

    ‘ஃபங்ஷனுக்கு நீங்க வேற வந்திருந்தீங்களா.. அதான்.. எதையும் மறந்துடக்கூடாதுங்குறதுக்காக ஒரு வார்த்தை விடாம குறிப்பெடுத்துட்டேன்’ என்கிறார் சாவி.

    ஆசிரியரின் பாராட்டை எதிர்பார்த்திருந்த செய்தியாளருக்கு (ஜர்னலிஸ்ட்) கல்கி சொன்னதாக எங்கள் எம்.டி. சொன்னது எந்த நிகழ்ச்சியை கவர் செய்ய நான் போனாலும் இப்போதும் என் காதுகளில் அசரீரியாக ஒலிக்கும்..

    அது..

    ‘உன் இரு கண்களும், உன் இரு காதுகளும் உனக்குச் சொந்தமானவையாக இருக்கலாம். ஆனால் லட்சோபலட்சம் வாசகர்களுக்கு சேதி சொல்ல வேண்டியவை. லட்சக்கணக்கான வாசகர்களின் சார்பாகவே நீ அந்த விழாவினை கவனிக்கிறாய். அவ்வளவு பொறுப்புமிக்க உனக்கே ஒரு விஷயம் மறக்கிறது என்றால் அது உபயோகமில்லாத விஷயம் என்றே பொருள். உபயோகமில்லாத குப்பையை எதற்கு மற்றவர்களுக்கு குறிப்பெடுத்துச் சொல்லவேண்டும்?!’

    ஆம்.. லட்சக்கணக்கான வாசகர்களுக்கு செய்தி சொல்ல வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒரு ஜர்னலிஸ்ட், அந்த லட்சக்கணக்கானோரின் விருப்பு வெறுப்புகளுக்கு செய்தி கொடுத்தே ஆகவேண்டும். இந்த ஏரியா அந்த ஏரியா என கூறுகட்டிப் பிரிக்காமல் எல்லா துறைகளிலும் மூக்கை நுழைத்தே ஆக வேண்டும்.

    இன்னொரு சம்பவம்.

    விகடனில் என்னுடன் பணிபுரிந்துகொண்டிருந்த சிலர் மதுரை காமராசர் பல்கலைக்கழ்கத்தில் எம்.ஏ. ஜர்னலிஸம் கோர்ஸ் படிக்கச் சேர்ந்தார்கள். கல்லூரிக்காலத்தில் மாணவ நிரூபர்களாக களமிறங்கி, அப்படியே விகடன் பல் கலைக்கழகத்தில் அனுபவப்பாடம் பயின்றவர்கள்தான் நாங்கள். இருந்தாலும் பயோடேட்டாவில் போடலாமே என்பதற்காக படிக்க ஆரம்பித்தார்கள்.

    விஷயம் கேள்விப்பட்டபோது அப்போது எங்கள் இணை ஆசிரியராக இருந்த மதன் சார் சொன்னார்.. ‘அச்சச்சோ! உங்களுக்கு எல்லாம் தெரியும்னுதானே இங்கே மிகப்பெரிய பதவியெல்லாம் கொடுத்து உட்காரவச்சிருக்கோம். அப்படி இல்லையா? இனிமேல்தான் படிச்சு கத்துக்கப்போறீங்களா?’ என செமத்தியாக கிண்டலடித்தார்.

    பின்னர் பொறுமையாக விளக்கம் சொன்னார்… ‘நீங்கள் ஒவ்வொருவரும் இதுவரை 1000 கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள் என்றால் நூற்றுக்கணக்கான வெவ்வேறு துறைகளைப்பற்றி தெரிந்துகொண்டிருக்கிறீர்கள். இப்படி நாளும் புதிது புதிதாக கற்றுக்கொண்டே இருப்பதுதான் ஒரு ஜர்னலிஸ்ட் டுக்கு இருக்கும் சுவாரசியம். அந்த சுவாரசியத்தை ஆண்டு அனுபவித்துக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள். நீங்கள் படிக்கப்போகும் ஏட்டுச் சுரைக்காய் புதிதாக எதையும் உங்களுக்குச் சொல்லிக்கொடுத்துவிடமுடியாது. நீங்கள் அதையெல்லாம் உங்கள் அனுபவத்தால் கடந்து வந்து விட்டீர்கள்’ என்றார்.

    சாதாரண பாமர மக்கள், படித்த மக்கள் என்ற வேறுபாடு எதுவும் இல்லை. மக்கள் ஒரு ஜர்னலிஸ்டை ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பர’மாகத்தான், ‘எல்லா துறைகளிலும் இண்டு இடுக்குகளிலும் புகுந்து செய்தி எடுத்து வந்து தனக்குக் கொடுக்கும் சுறுசுறுப்பாளனாகத்தான் பார்க்கிறார்கள்.

    அப்படி எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக(எவ்வளவுக்கெவ்வளவு முடியுமோ.. அவ்வளவுக்கவ்வளவு!) தன்னை தன் முயற்சியாலும் பயிற்சியாலும் அனுபவத்தாலும் செம்மைப்படுத்திக் கொள்பவனே நல்ல ஜர்னலிஸ்ட்.

    அல்லது.. தன் சாயம் வெளுத்துவிடாமல் சமாளிக்கவாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்!

  11. ////ஐந்து விஷயங்களில் நூறு சதவிகிதம் தெரிந்து வைத்திருப்பவன் ஆராய்ச்சியாளன். ஆனால் ஒரு ஜர்னலிஸ்ட்டின் அத்தியாவசிய தகுதிகளில் மிக முக்கியமான ஒன்று.. அவன் நூறு விஷயங்களில் குறைந்தபட்சம் ஐந்து சதவிகிதமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்!//

    //அல்லது.. தன் சாயம் வெளுத்துவிடாமல் சமாளிக்கவாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்!//

    கௌதமண்ணே.. உங்கள் கருத்தோடு நான் 200 % ஒத்துப்போகிறேன். :))

  12. ஜஸ்ட் ரீடர் says:

    ’ஆனால் ஒரு ஜர்னலிஸ்ட்டின் அத்தியாவசிய தகுதிகளில் மிக முக்கியமான ஒன்று.. அவன் நூறு விஷயங்களில் குறைந்தபட்சம் ஐந்து சதவிகிதமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்’

    தமிழில் வெளியாகும் இதழ்களைப் படித்தால் பத்திரிகையாளர்களுக்கு அதிக பட்சம் தெரிந்ததே 5% என்று தோன்றுகிறது.

  13. Pingback: விடுபட்டவை » வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் வண்ணதாசன் வாழ்க! – கேணி- அனுபவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.