நம்ம ஊர் பேய், வெள்ளைக்கார பேய் – ?!

நம்மவர்கள் அனேகரிடமும் ஒரு பேய் கதைகள் இருக்கும். என்னிடமும் ஏராளமான கதைகள் உண்டு. ரத்தக்காட்டேரி, தலை இல்லா முண்டம் (முண்டம் என்றாலே தலை இல்லாததுன்ன தானே பொருள்?!), கொள்ளி வாய் பிசாசு தொடங்கி, கிணற்றில் விழுந்து உயிர் நீத்த காந்திமதி அக்கா, மரத்தில் தொங்கிய செந்தில் அண்ணன் என ஊருக்கு ஊர் விதவிதமான சம்பவங்களும், கதைகளும் இருக்கும்.

ஆனால் மற்றவர்களின் கதைகளில் வரும் படியான கொடுரமான பேய் எதையும் நான் பார்த்ததில்லை. சிறுவயதிலிருந்தே அப்படி வளர்க்கப்பட்டது ஒரு காரணமாக இருக்கலாம். பேய் கதைகளும், பேயும் எனக்கு என்றுமே பிடித்த விசயமாக இருந்தே வந்திருக்கிறது.

அதே மாதிரி, எனக்கு எப்பவுமே பேய் படங்களைப் பார்க்குறப்ப, ஒரு சந்தேகம் வர்றதுண்டு..!, ஒரு பெண் பேய், தன்னை கொண்ணவனை பழிவாங்க புறப்படுதுன்னு வையுங்க, பழிவாங்கப்பட வேண்டியவனோட அப்பாவி மனைவி, மகள், மாமியார், ஆயான்னு எல்லாரையும் போய் கொண்ணுகிட்டு இருக்கும். இப்படி இந்த பேயால் கொல்லப்பட்டு அல்பாயுசுல போற, மனைவி, மகள், மாமியார், ஆயா எல்லோரும் பேயா மாறி, பழிவாங்க நினைக்கிற பேயோட சண்டை போட்டு, தன் உறவினரை ஏன் காப்பாத்த மாட்டிங்குதுங்கன்னு..? அடிக்கடி தோணும்.

இந்திய பேய் படங்களை விரும்பி பார்க்கும் நான், இங்க்லீஷ் பேய் படங்களை பார்ப்பதை அடியேடு வெறுக்கிறேன். காரணம் அவர்களின் பேய்கள் அருவருக்கதக்கன.

நாம, நம்ம ஊர் பேய்க்கு எல்லாம் வெள்ளைவெளேர்ன்னு டிரஸை மாட்டி விட்டு, தலைக்கு நல்லா சீயக்காய், ஷாம்பு எல்லாம் போட்டு விட்டு, அம்சமாய் அலைய விட்டுகிட்டு இருக்கோம். (அதோட நம்மளோட கலாச்சாரப்படி அதிகமா பெண் பேய்களை மட்டும் அலைய விட்டுட்டு, ஆண் பேய்களை சொர்கத்துக்கோ, நரகத்துக்கோ அனுப்பி வச்சுட்டோம் 🙂 .  )

இப்படி சுத்த பத்தமா குளிச்சு, பளிச்சுன்னு இங்க்லீஷ் பேய்கள் இருப்பதில்லை. குளிக்காம அழுக்கு படிஞ்சு, மூஞ்சி மொகரை எல்லாம் ரத்தக்கரையோடயே அலையும். பல்லு கூட வெளக்காம, கரை படிஞ்சு பார்க்கவே கன்றாவியா இருக்கும். பயத்துக்கு பதில் அதுகளைக் கண்டா அறுவெறுப்பு தான் வரும்.

அதோட, நம்ம ஊர் பேய்கள் எல்லாம் நல்ல சூப்பரான சாப்பாடு சாப்பிட்டுகிட்டு, பாட்டு பாடிகிட்டு அலையும் போது, இங்க்லீஷ் பேய்கள் அதோட காதுகளையும், கைகளையும் அதுகளே திண்ணுகிட்டு, எப்பவும் ஒரு கோடரியோ, அழுக்கு பிடிச்ச நகங்களோட அலையுறது எனக்கு பிடிக்கிறதில்லை. பேய் என்றாலும் நம்மவர்கள் எவ்வளவு சுத்தபத்தமா இருக்கோம். வெள்ளைக்காரப் பேய்கள் எல்லாம் நாரப் பேய்களாகவே இன்னும் சுத்திகிட்டு இருக்குதுங்க.

எதுக்குடா இப்ப இந்த பேய் புராணம்னு யோசிப்பீங்கன்னு தெரியும். நானே சொல்லுறேன். என் தளத்தின் உள்ளே ஆராய்ந்துகொண்டிருந்த போது, தளத்துக்கு அதிக அளவில் வரும் நபர்கள் எந்த வார்த்தையை தேடி வந்தடைகிறார்கள் என்று பார்த்தேன். என் தளத்துக்கு அதிகமாக வந்தவர்கள் பேய் என்ற சொல்லைக் கொடுத்து வந்தவர்கள் தான் என்பதை அறிய முடிந்தது. அதனால் கொஞ்சம் எனக்குள் இருக்கும் பேய் பற்றிய எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ளேன்.

என்ன தான் விஞ்ஞானம் வளர்ந்துகிட்டு இருந்தாலும், அதன் மூலமாக வளர்க்கப்படுகிற மூடநம்பிக்கைகளின் எண்ணிக்கையும் அதிகமாகித்தான் போய் இருக்கிறது.

இன்னொரு சமயம் சில பேய் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறேன்.


Comments

3 responses to “நம்ம ஊர் பேய், வெள்ளைக்கார பேய் – ?!”

  1. சு. க்ருபா ஷங்கர் Avatar
    சு. க்ருபா ஷங்கர்

    தமிழில் பாலாவும் ரெண்டெழுத்து, பேயும் ரெண்டெழுத்து. ஆங்கில transliterationல் தட்டச்சும்போது 5 எழுத்துகள். அதனால… வந்து, மாத்தி டைப்பண்ணியிருக்கலாமோன்னு சொல்லவந்தேன்

    ஆக்கில/தமிழ்ப்பேய்கள் அலசல் அருமை. ஆனா பெண்பேய்கள் அளவுக்கு ஆண்பேய்களும்தானே சரிசமமா சினிமாவுல உலாவுகின்றன?

    வெ.கா. பேய்களைப் பாத்தாதான் பயமா இருக்கும். நம்மூருப்பேய் நெனப்பே டெரரா இருக்கும்

  2. உங்கள் கருத்து உண்மையே

  3. அருமையான ஆராய்ச்சி ..

    வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *