எத்தனையோ புத்தகங்கள் படித்திருப்போம். சினிமாக்கள் பார்த்திருப்போம். சிலருக்கு மன்னர் கால கதைகள் என்றால் கொள்ளைப் பிரியமாய் இருக்கும். அதிலும் திருப்பங்கள் நிறைந்து, சஸ்பென்ஸ் வேறு இருந்துவிட்டால்.. கேட்கவே வேண்டாம். இன்றும் கூட பொன்னியின் செல்வன் சக்கை போடு போடுவதற்காக அடிப்படையே நமக்குள் புதைந்து கிடக்கும் பழங்கால கதைக்கான ஏக்கங்களின் வெளிப்பாடு என்று தான் நான் கூறுவேன்.

புகைப்படங்களே இல்லாத அந்த பழங்காலத்திற்கு நாம் செல்ல முடியாத ஏக்கம் ஒரு புறம் என்றால்.. பண்டைய மக்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் இன்னொரு புறம். இவை தான் இப்படியான படைப்புகளின் வெற்றி என்றும் நம்புகிறேன்.

தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் நமக்கு முழுமையாக கிடைத்திருப்பவை மூன்று மட்டுமே. இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம், சீத்தலைச் சாத்தானார் எழுதிய மணிமேகலை, திருத்தக்க தேவர் எழுதிய சீவக சிந்தாமணி. இதில் மணிமேகலை சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சி.

இவை எல்லாம் செய்யுள் வடிவில் வடிக்கப்பட்ட இலக்கியங்கள். அருகில் ஒரு வாத்தியார் இருந்து நமக்கு சொல்லிக்கொடுக்காமல் எளிதில் புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம். ஏனெனில் நமக்கான தமிழறிவும் அப்படித்தான் இருக்கிறது. பாடங்களை மொட்டை உறு செய்தால் தேர்வில் வெற்று பெற்றுவிடக்கூடிய கல்வி முறையில் வேறு என்ன எதிர் பாக்க முடியும்.

சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார்? திருத்தக்க தேவர் என்கின்ற சமணமுனிவர். இவரின் காலம் எது? கி.பி 2ம் நூற்றாண்டிலிருந்து 7ம் நூற்றாண்டுக்குள் இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.- என்ற ரீதியில் ஒருவரியில் விடையளிக்கும் அளவுக்கே எனக்கு இக்காப்பியங்கள் பற்றி தெரிந்திருந்தது.

எண்பதுகளின் மத்தியில் நூலகத்தில் சேர்ந்து வாசிப்பு பழக்கத்திற்கு வந்துவிட்டாலும், வாசிப்பு வசப்பட்டதென்னவோ தொண்ணூறுகளின் மத்தியில் தான். நூலகம் தவிர்த்து வெளியேவும் புத்தகங்களை தேடத்தொடங்கி இருந்த சமயம் அது. சென்னையில் அநுராகம் என்ற பெயரில் இயங்கிவந்த(இப்போதும் உள்ளது என நினைக்கிறேன்) பதிப்பகம் ஒன்று ரு.4.50க்கு நூல்கள் வெளியிட்டு வந்தது.

சோதிடம், சமையல் தொடங்கி, பழந்தமிழ் இலக்கியங்கள் வரை சகல விதமானவைகளையும் சிறு பிரசுரங்களாக, உரைநடை வடிவில் அவ்விலைக்கே கிடைக்க வழிசெய்தது. அப்படி அநுராகம் வெளிட்ட நூல்கள் வழிதான்.. தமிழின் தொன்மையான இலக்கியங்களை கதைவடிவில் அறிந்துகொண்டேன் நான். ஆனால்.. அவை முழுமையானதாக இருக்கவில்லை. பள்ளி பாடநூலில் சொல்லப்படும் கதை போலவே இருந்தது. அதுவும் 32 பக்கங்களுக்குள் எல்லாவற்றையும் சுருங்கச்சொல்லவேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கிருந்தது. எனக்கோ செய்யுள் வழி இக்காப்பியங்களின் அடிப்படை கதைகளை தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்தது. அந்த வகையில் அப்புத்தகங்கள் என் ஆரம்பகால வாசிப்புக்கு விதையாக இருந்தன என்றால் மறுப்பதற்கில்லை.

அதன் பின் மூல உரையை தேடி பயணப்பட்டபோதும் என்னால் முழுமையாக அவற்றை வாசிக்க முடியாமல் என் தமிழறிவு தடுத்தது. உரையாசிரியர்களின் உரையும் கூட துண்டு துண்டாகவே நின்றன. சரி இது சரிப்படாது என்று ஓடி வந்துவிட்டேன். சமீபத்தில் பழங்காப்பியங்களை உரைநடைவடிவில் கிழக்கு வெளியிட்டு இருந்தது. அவற்றை வாங்கிவிட்டேன். நான் முதலில் வாசிக்க எடுத்தது சீவக சிந்தமணி.

முதலில் கதை சுருக்கத்தை கூறிவிடுகிறேன். சச்சந்தன் என்றும் மன்னனுக்கு நெருக்கடியான காலகட்டத்தில் மகனாக பிறக்கிறான் சீவகன். பின்னர் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கிறான். சமண குருவான அச்சணந்தி என்பவரிடம் குருகுல கல்வி பயில்கிறான். சீவகன் அழகும் அறிவும் வீரமும் ஒருங்கே பெற்ற யுவனாக வளர்கிறான். தந்தையை ஏமாற்றிக் கொலை செய்து ஆட்சியை பிடித்த கட்டியங்காரனை பழிவாங்குவது தான் மீதிக் கதை. இடையிடையே சீவகன் எட்டு பெண்களை மணந்து கொள்கிறான். இப்படி பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், உறவுகளையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான். முப்பது ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்யும் சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் மேற்கொள்கிறான். அவனோடு அவனது எட்டு மனைவியரும் துறவறம் மேற்கொள்கின்றனர். எட்டு திருமணங்களை சீவகன் செய்தாலும் காமக்களியாட்டங்களில் கதை பயணிக்காமலும் சீவகனை காமுகனாக காட்டாமலும் இப்படைப்பு இயற்றப்பட்டிருப்பதை இன்றைய நவீன எழுத்தாளர்கள் அறிந்துகொள்வது நல்லது என்று தோன்றுகிறது. 🙂

நாவல் வடிவ இந்நூலில் தொடக்கமே சுஜாதா கையாளும் பாணியான அதிர்ச்சியை கொடுக்கும் வரிகளில் தொடங்குகிறது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் நடை. படிக்க படிக்க சோர்வு ஏற்படுத்திவிடாத மொழி.

சீவகனின் பிறப்பில் தொடங்கி, அவனது வாலிப பருவம் என எல்லாமும் படுவேகமாக நகர்கிறது. இக்காலத்தில் அதிகம் புரிந்துகொள்ள முடியாத வார்த்தைப் பிரயோகங்களும் இடையிடையே இருக்கிறது. பழங்கால இலக்கியமென்பதால் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். ஆனாலும் கல்கி மாதிரியானவர்களின் எழுத்துக்களை அதிகம் படித்தறியாத வாசகவட்டம் இன்னும் இங்கே இருக்கிறது. அதனால்.. முன் பின் வார்த்தைகளை வைத்து சில இடங்களில் சொற்களுக்கு பொருள் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. அதற்கு சிறு குறிப்புகள் கொடுத்திருக்கலாம்.

உதா:

”மாலுமி! இன்னும் எவ்வளவு தூரம் நாம் போகவேண்டும்? என்ன நாம் கிளம்பி ஒரு மாதம் ஆகி இருக்குமா” சீதத்தன் சாதாரணமாகத்தான் கேட்டான். ஆனால் மாலுமி முகத்தில் இருந்த கலவரம் அவரை பயமுறுத்தியது.

‘என்ன ஆயிற்று? ஏன் இந்த கலக்கம்?’

‘ஐநூறு காத தூரத்தைக் கடந்துவிட்டோம். ஏமாங்கத்தை அடைய இன்னும் ஒரு யோசனை தூரம் தான் இருக்கிறது. இப்போது பார்த்துத்தானா இப்படி ஆகவேண்டும்?’(பக்கம்.63)

இதில் காத தூரம், யோசனை தூரம் என்பது எவ்வளவு என்று எத்தனை பேரால் உணர்ந்துகொள்ள முடியும்? குத்துமதிப்பாக கணக்கு பண்ணிக்கொள்ள வேண்டியது தான் போல. அதுபோலவே சமணசமய கதையான இதில் அருகர் என்று ஒரு தெய்வத்தை பற்றிய செய்திகள் வருகின்றன. இந்த அருகர் குறித்து எங்கும் குறிப்பு படித்தது போல நினைவு இல்லை. இத்தெய்வம் குறித்து விவரணைகளோ, குறிப்போ இல்லாதது நூலின் குறையென எனக்கு படுகிறது.

மேலும் மூல ஆசிரியரான திருத்தக்கத்தேவர் பற்றிய குறிப்பு இல்லாததும், நாவலாசிரியரின் அனுபவக் குறிப்பு இல்லாததும் பெரிதும் வருத்தமே. அவை வாசகனை இன்னும் நூலோடு ஒன்றச்செய்யும் விசயமாக இருந்திருக்குமென்பது என் எண்ணம்.

நூலாசிரியர் ராம்சுரேஷின் உழைப்பும், எழுத்தாற்றலும் பல இடங்களில் பளிச்சிடுகிறது. காட்சியின் விவரிப்புகள் அப்படியே நம்மையும் அக்களத்திற்குள் அழைத்துச்செல்லுகின்றன. சினிமா பார்ப்பது போன்ற உணர்வு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. (சீவகன் கேரக்டரில் எனக்கு மனதிற்குள் ஓடிய உருவம் கருப்பு வெள்ளை காலத்து ஜெமினி 🙂 )

செய்யுள் விருத்தங்களாக உள்ள எழுத்துக்கள் விரிவான உரைநடையாக மாறும்போது என் போன்ற பாமரர்களும் இது போன்ற இலக்கியங்களைச் சுவைக்க முடிகிறது. இது போன்ற புது முயற்சிகளுக்காக நன்றி பத்ரி & பாரா! 🙂

பழந்தமிழ் காப்பியங்களை படிக்க விரும்புகின்றவர்களுக்கு இது நல்ல தொடக்கமாக இருக்கும். உரைநடையில் படிக்கும் போதே இவ்வளவு சுவையாக இருக்கும் நூல், செய்யுள் வடிவில் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் இதைப் படிக்கும் பத்தில் ஒருவருக்காவது வரும் என்பது நிச்சயம்.

நூல்: சீவக சிந்தாமணி- (நாவல்)
நாவல் வடிவ ஆசிரியர்- ராம் சுரேஷ்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம். பக்கம்: 256
விலை: ரூபாய்.125/-

இணையச்சுட்டி:- https://www.nhm.in/shop/978-81-8493-448-9.html

ஆசிரியர் குறிப்பு: ராம் சுரேஷ் 2004ல் இருந்து இணையத்தில் பினாத்தல் சுரேஷ் என்ற பெயரில் எழுதி வருகிறார். :))


Comments

5 responses to “சீவக சிந்தாமணி- நாவல்- வாசிப்பனுபவம்”

  1. மரத்தால் ஆன மயில்போன்ற பறவை செய்து அதில் பறந்தது இந்த சீவகன் தானே தல? எப்பவோ ஒரு தடவ திடீர்னு ஞானோதயம் வந்து தமிழிலக்கியம் படிக்கணும்னு ஆரம்பிச்சி அப்புறம் பத்தே நாள்ள குப்புறடிச்சி தூங்கிட்டேன். அந்த ஞாபகத்துல கேட்டேன்.

    அப்புறம் திருத்தக்கதேவர் பிரம்மச்சாரியான சமணமுனிவராய் இருப்பதால் காமரசம் சொட்டும் காப்பியம் படைக்க முடியாது என்ற சவாலை எதிர்கொள்ளவே சீவக சிந்தாமணியைப் படைத்தார் என்றும் ஒரு கதை.

    இன்னொரு சுவாரஸ்யமான தகவல், தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் அனைத்துமே மன்னர்களை இல்லாமல் குடிமக்களைக் கதைமாந்தராகக் கொண்டு எழுதப் பட்டுள்ளது என்பர். வேறெந்த மொழியிலும் இல்லை என்றும் என் நண்பரின் தகவல். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உண்மையென்றே தோன்றுகிறது. சம்ஸ்கிருதத்தின் ராமாயணமும், மகாபாரதமும், காளிதாசனின் சாகுந்தலமும், கிரேக்கத்தின் இலியட், ஒடிசியும் மன்னர்களைக் கதைமாந்தராய்க் கொண்டு எழுதப்பட்டதுதானே?

    (ஆமா…. ரொம்பவா ப்ளேடு போடுறேன்?!)

  2. விந்தை மனிதன் அதே சீவகன் கதை தான் இதுவும். நீங்களாவது குப்புறடிச்சி தூங்கினீங்க.. புக்கு எடுத்துட்டு படிக்க ஆரம்பிச்ச ரெண்டாவது நாளியேயே நான் தெறிச்சு ஓடிவந்தவன் தான்.. நூலகத்து பக்கமே போகாம.. புக்கு லேட்டானதுக்கு ஃபைன் எல்லாம் கட்டினேனாக்கும். :))

  3. இன்னும் இந்தப் புத்தகம் வாசிக்கலை. ஆசிரியரை நேரில் பாத்து ட்ரீட் வாங்கினப்பிறகு புத்தகம் வாங்கலாம்ன்னு ஒரு எண்ணம் :))

    விந்தை மனிதன் தகவல்களுக்கு நன்றி!

  4. suriya Avatar
    suriya

    இதனை படிக்கும் போது எனக்கு இன்னும் பல காப்பியங்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது .

  5. veerakumar Avatar
    veerakumar

    வாசிக்கத் தூண்டும் கட்டுரை,நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *