4. நோயில் வீழ்ந்த பெரியாரின் பெண் குழந்தை!

அதுவரை இருந்த தைரியம் பொலபொலவென உதிர்ந்தது. நாகம்மை, ஏற்கனவே வசதி குறைவான இடத்திலிருந்து வந்தவள் என்ற எண்ணம் சின்னத்தாய்யம்மையாரின் மனதில் இருந்தது. இப்போது தாலி இல்லாமல் எப்படி போய் நிற்க முடியும். அத்தையின் கண்களில் தன் கழுத்தின் மேல் விழுந்துவிட்டால்.. ஆகாத மனுசி கை பட்டால் குத்தம், கால் பட்டால் குத்தம் என்ற சொலவடை போல.. மருமகளாக வந்து விட்ட போதிலும் இன்னும் மாமியாரின் முழு அன்பை பெறவில்லை.

இந்நிலையில் மாமியார் சொல்லாத விசயத்தை, கணவன் பேச்சை மட்டும் கேட்டு, தான் தாலி கழட்டி கொடுத்தது தெரிந்து போனால்.. தன்னையும் மாமனைப் போல குடும்பத்துக்கு ஆகாதவள் என புறக்கணிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் வந்து மனதில் அமர்ந்துகொண்டது.

புடவையின் தலைப்பை எடுத்து தோளில் சுற்றிக்கொண்டார். கைகளை கழுவி, பித்தளைச் சொம்பில் நீர் எடுத்துக்கொண்டு பூஜை அறைக்கு சென்றார் நாகம்மை. விஷ்ணு சகஸ்கரநாமம் பாராயணம் செய்துகொண்டிருந்த சின்னத்தாய்யம்மையார் பஞ்சபாத்திரத்தை முன்னுக்கு நகர்த்தி அதில் நீர் ஊற்றும்படி சைகை சொல்லி நிமிர்ந்து பார்த்தார்.

வழக்கத்திற்கு மாறாக மிகுந்த பக்தியுடன் போர்த்தி மூடி மருமகள் நிற்பது வித்தியாசமாகப் பட்டது. குனிந்து நீரை ஊற்றிய மருமகளிடம் சைகையாளே கேட்டார் என்ன ஆயிற்று என்று, ஒன்றும் இல்லைனென நாகம்மையும் சைகையிலேயே பதில் சொல்ல.. கண்களை மூடி பெருமாளை சேவித்துவிட்டு, பாராயணம் செய்து கொண்டிருந்த நூலை மூடி வைத்தார் சின்னத்தாயம்மை.

ருத்ரணியில் நீர் எடுத்து பெருமாள் படத்துக்கு முன் வைத்திருந்த பிரசாதத்தை சுற்றி.. நீரை ஓரமாக கீழே கொட்டினார். பிரசாதத்தை நைவேத்தியம் செய்தாயிற்று.

“என்ன ஆச்சு நாகா, என்ன இப்படி இழுத்து போர்த்திகிட்டு நிக்குற..?”

“ஒ…ஒன்னுமில்ல அத்தை.. சும்மா தான்…” தயங்கித் தயங்கி பதில் வந்தது.

“என்னது சும்மாவா.. அப்படி எல்லாம் போர்த்தக்கூடாது.. ஒழுங்கா போடு முந்தானையை” என்று சொல்லவும்.. நெளிந்தார் நாகம்மை. என்னத்துக்கு இப்போது இவள் இவ்வளவு சங்கடப்படுகிறாள். சந்தேகம் தோன்றியது. பலகையில் இருந்து எழுந்த சின்னத்தாயம்மை, அவரே மருமகளின்

புடவையை சரி செய்தார். கழுத்து மூளியாக இருந்தது. ‘அய்யோ.. என்னடி இது கழுத்து காலியா கிடக்கு.. தாலியைக்காணோம்.., தாலிக்கொடி எங்கே..’ என்று மாமியார் சத்தம் போடவும்.. வீட்டில் இருந்த எல்லா பெண்களும் பூஜை அறையை நோக்கி ஓடி வந்தார்கள்.

நாகம்மைக்கு எப்படி சொல்வதென்று தெரியவில்லை. எல்லா காரியங்களிலும் தனக்கு
சம்பிரதாயத்தை சொல்லிக்கொடுத்த மாமியாருக்கு.. இந்த தாலி விசயம் தெரியாமலா இருக்கும். அல்லது தான் தாலியை தொலைத்து விட்டதாக நினைத்துக்கொண்டாரா.. எதற்காக இப்படி சத்தம் போடுகிறார். வேகமாக பூஜை அறையிலிருந்து வெளியே வந்தார் நாகம்மை.

கேக்குறதுக்கு பதில் சொல்லீட்டு போடீ.. நில்லுடி! – துரத்திக்கொண்டு வந்தார் சின்னத்தாய்யம்மையார். தலைகுனிந்த படி நின்றார் நாகம்மை. ‘பதில் சொலுடீ..’ அமைதியாக நின்றார். எல்லாபெண்களும் தன்னை உற்று நோக்கிவதை உணர்ந்த நாகம்மைக்கு வெட்கமாக இருந்தது. ‘இப்ப நீ சொல்லப்போறியா இல்லையா..எவ்வளவு பெரிய காரியத்தை செஞ்சுட்டு.. இப்படி நின்னா என்னடி அர்த்தம்’ வேறு வழி இல்லை. சொல்லித்தான் ஆகவேண்டும். மாமியார் விடுவதாக இல்லை.

“அத்தை தாலியை அவர்கிட்ட கழட்டி கொடுத்திருக்கேன்.” “என்னது.. கழட்டிக் கொடுத்துறிக்கியா.. ஏண்டீ.. என்ன ஆச்சு?” சின்னத்தாய்யம்மையாரின் குரலில் அதிர்ச்சியும் பதற்றமும் இருந்தது.

என்னத்துக்கு இவ்வளவு பதட்டமடைகிறார். மாமன் கிட்ட கொடுத்ததற்கா..! ‘என்ன அத்தை.. தெரியாத மாதிரி கேக்குறீங்க.. புருசன் பக்கத்துல இருக்கும் போது தாலி என்னத்துக்கு? அவர் வெளியூர் போகும் போது மட்டும் போட்டுகிட்டா போதாது?’

மாமியாருக்கு ஒன்றும் விளங்கவில்லை. பதினான்கு வயதான நாகம்மைக்கு தாலியின் பெருமையை தெரியவில்லையா.. அல்லது இவளும் ராமசாமி மாதிரி ஏதாவது காரியங்களில் ஈடுபடுகிறவளா.. அதனால் தான் இவளையே மணப்பேன் என்று அவன் அடம் பிடித்தானா.. ஏகப்பட்ட கேள்விகள் வேகமாக மனதில் தோன்றின. ‘என்னடி சொல்லுற..?’

‘அத்தை.. தாலிங்கிறது என்ன.. புருசனைப் போன்றது இல்லையா.. நிஜ புருசனே பக்கத்துல இருக்குறப்போ.. தாலி என்னத்துக்கு? புருசன் பக்கத்தில் இல்லாதப்பத் தான் தாலியை போட்டுக்கிடனும். அவர் பக்கத்துல இருக்கிறப்போ.. அது தேவை இல்லை. அதனால தான் கழட்டி கொடுத்துட்டேன். இந்த சம்பிரதாயம் உங்களுக்கு தெரியாததா என்ன..?’ மாமியாருக்கே அறிவுறை சொன்ன திருப்தி. சுற்றி நின்ற பெண்களுக்கும் சின்னத்தய்யம்மையாருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

‘என்னடீ சொல்ற.. இது யார் சொல்லிக் கொடுத்த சம்ரதாயம்?’ கோபமாக வந்தது கேள்வி. ‘வேற யாரு.. அவரு தான்’ என்று வெட்கப்பட்டு சொன்னார் நாகம்மை. ‘அது
சரி..புருசனுக்கு ஏற்ற பொண்சாதி தான்’ என்று எல்லோரும் சிரித்தனர். எல்லாம் தன் தவறுதான்.. எல்லா விசயங்களையும் தெளிவாக சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும். இப்படியான குதர்க்கமான திட்டங்கள் எல்லாம் அவன் தான் போடுவான். இப்படியே போனால்.. மருமகளையும் அவனைப் போலவே மாற்றி விடுவான். வீட்டு வேலைகளை மற்றப் பெண்களிடம் கொடுத்து விட்டு.. நாகம்மைக்கு அறிவுரை கொடுக்கத்தொடங்கினார் சின்னத்தாய்யம்மையார்.

கடையை முடித்து இரவு வீட்டுக்கு வந்ததும்.. கணவன் இறந்தால் மட்டும் தான் தாலியைக் கழட்ட வேண்டுமாம்.. அபசகுணமாக நான் தாலியை கழட்டியதால் உங்களுக்கு ஏதேனு நடந்து விட்டால்..என்று கணவனிடம் சண்டைக்குப் போனார் நாகம்மை. காசுமாலை, மோதிரம், ஒட்டியாணம், கொலுசு மாதிரி தாலியும் ஒரு ஆபரணம் அவ்வளவு தான். மற்றபடி அதற்கு தனியாக எந்த சக்தியும் கிடையாது.. அதை நீ போட்டாலும் போடாவிட்டாலும் எனக்கு ஒன்னும் ஆகிடாது என்று விளக்கம் கொடுத்தார் ராமசாமி. ஆனாலும் நாகம்மைக்கு மாமியார் அடித்த வேப்பிலை தான் வேலை செய்தது. தாலியை வாங்கி அணிந்து கொண்டார்.

ராமசாமிக்கு மணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் நாகம்மை கருவுற்றார். மிகுந்த மகிழ்ச்சியடைந்தது குடும்பம். கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார்கள். தனக்கு வாரிசு உருவாகி விட்ட மகிழ்ச்சியில் ராமசாமி நண்பர்களுக்கு அடிக்கடி மதுவிருந்து கொடுத்துவந்தார்.

பிரசவ நேரம் நெருங்கியது. அழகான பெண்குழந்தையை பெற்றெடுத்தார் நாகம்மை.

நல்ல நிறத்தில்.. அம்மா நாகம்மையை அப்படியே அச்சு வார்த்தது போல இருந்தது குழந்தை. அந்த பிரசவத்தில் மிகவும் களைப்பாகிப் போய் இருந்த நாகம்மையைப் பார்த்த ராமசாமி ஒரு முடிவுக்கு வந்தார். அடிக்கடி பிள்ளை பெற்றுக்கொள்வது என்பது பெண்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விசயம். இந்த ஒரு பிரசவத்திலேயே நாகம்மை மிகவும் களைத்துப்போய் விட்டார். போதும்.. ஒருகுழந்தை போதும். இந்த குழந்தையை எந்த குறையுமின்றி நன்கு வளர்க்க வேண்டும்.

இப்போது இருப்பது போன்ற மருத்துவ வசதிகள் அந்த காலத்தில் கிடையாது. நிறைய நோய்களுக்கு மருந்துகள் கூட கண்டுபிடிக்கப்படாத காலம் அது. என்ன மருந்து.. என்ன நோய் என்று கண்டு பிடிப்பதே அப்போதெல்லாம் குதிரைக்கொம்பான விசயம் தான்.

அப்படி ஒரு நோய்..  ராமசாமியின் மகளை ஆறாவது மாதத்தில் தாக்கியது.

This entry was posted in பெரியார் வரலாறு. Bookmark the permalink.

7 Responses to 4. நோயில் வீழ்ந்த பெரியாரின் பெண் குழந்தை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.