ஆமை காட்டிய அற்புத உலகம் 3ஆம் பதிப்பு

இது சிறுவர் இலக்கியத்தில் எனது முதல் நூல். 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல்பதிப்பு வெளியானது. அப்போதே பரவலான கவனத்தை இந்த நூல் பெற்றது என்றுதான் சொல்லவேண்டும். பெற்றோரும் ஆசிரியர்களும் மட்டுமல்லாது பல சிறுவர்களும் வாசித்து மகிழ்ந்த நூல் இது.

வெளியான காலத்தில் அதுவரை வெளிவந்துகொண்டிருந்த சிறார் நூல்களில் இருந்து இது வேறு ஒரு புதிய பாய்ச்சலை நிகழ்த்திக்காட்டியது. புனைவும் அறிவியலும் இணைந்த இந்த நடையை பின்னாலில் சிலர் தொட்டுப் பார்த்தனர். அதோடு இப்படியான ஒரு வடிவம் என்பதே அதுவரை இல்லாத ஒரு புதுமுயற்சியே! இந்த நூலுக்கான ஓவியங்களை வழிய அண்ணன் யூமா வழிகாட்டினார். ஓவியர் சொக்கலிங்கம் தனது அற்புதமான தூரிகையினால் அபரிதமான பங்களிப்பு செய்தார். வடிவமைப்பிலும் பாரதி புத்தகாலயத் தோழர்கள் குணா, காளத்தி ஆகியோரின் உழைப்பில் சிறப்பாக வெளியானது.
2017ஆம் ஆண்டு பிப்ரவரியிலேயே இரண்டாம் பதிப்பும் கண்டது. (இடையில் நூலகத்திற்கு தனிப்பதிப்பு அச்சானது)

எனது சிறார் வாசகர்களில் பலருக்கும் இந்த நூல் மிகவும் பிடித்த ஒன்று. இன்றைக்குமே இந்த நூலுக்கு சிறார்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. இந்த நூல் இன்று மூன்றாம் பதிப்புக்கு சென்றுள்ளது.

Posted in சிறுவர் இலக்கியம் | Tagged , , , , | Leave a comment

முதல்வரின் வாழ்த்தும் எனது கோரிக்கையும்

மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலுக்கு சிறார் இலக்கியத்தின் உயரிய விருதான சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து (28.09.2021) வாழ்த்தும் பாராட்டும் பெற்றேன்.

முதல்வரை சந்திக்கும் வாய்ப்பில், தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மாற்றுத்திறன் குழந்தைகளின் மேம்பாட்டிற்கு அரசு சில முன்னெடுப்புகளை செய்தால் நன்றாக இருக்கும் என எனக்குத் தோன்றியதை, ஒரு மனுவாக எழுதி எடுத்துச்சென்று, முதல்வரின் கைகளில் நேரடியாகச் சேர்த்தேன். உறைக்குள் வைத்து கொடுத்த மனுவை உடனடியாக பிரித்து, கோரிகைக்களைப் படித்த முதல்வர் அதனை உதவியாளரிடம் அப்படியே கொடுத்தார்.

முதல்வரின் கவனத்திற்கு நான் கொண்டு சென்ற கோரிக்கைகள் இவைதான்.

 1. அறிவுசார் வளர்ச்சிக்குறைபாடு உடைய குழந்தைகளுக்கான, அரசு சிறப்பு பள்ளி மாநிலத்திற்கே ஒன்றுதான் உள்ளது. இதனை, குறைந்த பட்சமாக மாவட்டத்துக்கு ஒரு பள்ளி திறக்கவேண்டும்.
  *
 2. 18 வயது பூர்த்தியடைந்த ஆதரவற்ற, மனவளர்ச்சி குன்றியோருக்கு பராமரிப்பு இல்லங்கள் மாவட்டத்திற்கு ஒன்று உருவாக்கவேண்டும்.
  *
 3. அறிவுசார் வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகளை தொடக்க நிலையில் கண்டந்து, பயிற்சிகொடுக்க உதவும் ஈ. ஐ. (E.I) செண்டர்கள், தற்போது மாவட்ட அளவில் உள்ளன. இதனை தாலுகா அளவில் கொண்டு வந்து மேலும் பல செண்டர்கள் திறக்கப்படவேண்டும்.
  *
 4. ஆட்டிசம், மூளை முடக்குவாதம், தசைச்சுருக்கு நோய் போன்ற பாதிப்புக்குள்ள குழந்தைகளின் தெரபி வகுப்புகளுக்கு அதிகப்படியாக செலவு ஆகிறது. தெரபி வகுப்பு செலவுகளை சமாளிக்க பெற்றோர் சிரமப்படுகின்றனர். முதல்வர் கருணை கொண்டு, சிறப்புக் குழந்தைகளுடைய பெற்றோரை அரசு காப்பீடுதிட்டத்தில் சேர்க்கவேண்டும். (இதில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர் என்ற விதி தளர்த்தப்படவேண்டும். சிறப்புக்குழந்தைகளுடைய எல்லா பெற்றோருக்கும் அக்குழந்தையின் தெரபி வகுப்பு செலவுக்கு என தனி காப்பீடு அட்டை கூட வழங்கவேண்டுகிறோம்)
  *
 5. தெரப்பி வகுப்புகளை முறைப்படுத்த, கட்டணங்களை அரசே நிர்ணயித்து அறிவிக்க வேண்டும். சமூக நலத்துறையிலிருந்து குழு அமைத்து, திடீர் ஆய்வுகள் மூலம் பயிற்சி நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாம். முறையாகப் படிக்காத ஆசிரியர்களை வைத்து நடத்தப்படும் செண்டர்களை மூடவும், நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
  *
 6. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஆரம்பப்பள்ளிகளிலும், நடுநிலைப் பள்ளிகளிலும் குறைந்தபட்சமாக ஒரு சிறப்பாசிரியரும், ஒரு உதவியாளரும் நியமிக்கப்பட வேண்டும். (இது ஆரம்பப் பள்ளி அளவிலேனும் ஒருங்கிணைந்த கல்விமுறை நன்கு இயங்க அடிப்படையான தேவையாகும்.)

-இவற்றை கருணையோடு இந்த அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு கோரிக்கையும் அதனதன் அளவில் முக்கியமானவையே, எனவே இதில் எது நிறைவேற்றப்பட்டாலுமே எனக்கும் என்னைப்போன்ற பலருக்கும் மகிழ்ச்சி தான். ஏனெனில் இதன் மூலம் சிறப்புக் குழந்தைகளுடைய பல பெற்றோர் பலனடைவார்கள்.

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், அரசியல், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சிறுவர் இலக்கியம், தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

நிப்மெட்டை -மாற்றாதே!

எனது தளத்திற்கு வரும் வாசகர்களுக்கு நிப்மெட் பற்றி அறிந்த்திருப்பீர்கள். பலமுறை அதனைப்பற்றி நான் எழுதி உள்ளேன். பேசி உள்ளேன். ஆண்டுக்கு குறைந்தது 500 பெற்றோர்களையாவது அங்கே செல்லும்படி அறிவுறுத்தி வருகிறேன்.

நிப்மெட் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட வளர்ச்சிக்குறைபாடு உடையவர்களின் மேம்பாட்டுக்கான நிறுவனம்.

சென்னை, முட்டுக்காடு பகுதியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. காங்கிரஸ்- திமுக ஆட்சியின் போது தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிறுவனம் இது. இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடு உடையவர்களுக்கா நாட்டில் உள்ள நிறுவனங்களிலேயே இது மிகவும் சிறப்பானது என பலமுறை விருதுகளையும் பெற்று உள்ளது. இந்த நிப்மெட் (NIEPMD) நிறுவனத்தை, தற்போது செகந்திராபாத்தில் உள்ள அறிவுசார் வளர்ச்சிக்குறைபாடு உடையவர்களின் வளர்ச்சிக்கான தேசிய நிறுவனத்துடன் (NIEPID) இணைக்க மத்திய அரசு முயற்சி எடுத்துவருவதாக செய்திகள் வருகின்றன. பல்வேறு சமூக ஆர்வளர்கள் இதனை எதிர்த்து குரல்கொடுத்து வருகின்றனர்.

ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுடையவர்களுக்கான இந்த ஆய்வு நிறுவனத்தை, அறிவுசார் வளர்ச்சிக்குறிபாடு உடையவர்களுக்கானதாக மட்டும் சுருக்கிடவேண்டாம் என்பதே எனது கருத்தும்! இதே முறையில் இந்நிறுவனம் சென்னையிலேயே தொடர்ந்து இயங்கவேண்டும். அவசியமெனில் அறிவுசார் வளர்ச்சிக்குறைபாடு உடையவர்களின் வளர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தை (நிப்பிட் -NIEPID) தமிழகத்தில் தொடங்கின மத்திய அரசு நினைத்தால், இதே வளாகத்தில் தனியொரு கட்டிடத்தில் கொண்டுவரலாம்.

அல்லது நம்மாநிலத்தின் வேறு எங்காவது தொடங்கலாம். சிறப்பான முறையில் இயங்கி வரும் நிப்மெட்டை, ஒரு குறைபாடு உடைய நிறுவனமாக மாற்றுவதே, அதன் தலைமையை இடம் மாற்றுவதே தேவையற்றது. இம்முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிடவேண்டும்! மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், இப்பிரச்சனை சார்பாக தொடக்கத்திலேயே தலையிட்டு, இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். மாநிலத்தில் உள்ள இதர அரசியல்கட்சிகளும் மத்திய அரசின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, இது நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமாய் பல சிறப்புக்குழந்தைகளின் பெற்றோர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
–யெஸ்.பாலபாரதி

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், எதிர் வினை, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு | Tagged , , , , , , , , , , , | 1 Comment

வணக்கம் தமிழா- நேர்காணல்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு இது. அதே நிறுவனத்தில் செய்தியாளனாகவும் பணியாற்றி இருந்தேன். அதை நினைவுகூர்ந்து அங்கே பணியாற்றிய பலரும் தொலைபேசியில் அழைத்துப் பேசினர். பெரும் மகிழ்ச்சியைத் தந்த சமீபத்திய நேர்காணல் இது.

மரப்பாச்சி சொன்ன ரகசியம் – நூலுக்கு பால சாகித்ய புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டத்தைத்தொடர்ந்து இந்த நேர்காணல் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

யூடியூப் சுட்டி இங்கே

Posted in அனுபவம், குழந்தை வளர்ப்பு, சிறுவர் இலக்கியம், நேர்காணல், வாசிப்பனுபவம், புத்தகங்கள், வீடியோ | Leave a comment

மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலுக்கு -பாலசாகித்ய புரஸ்கார்

மரப்பாச்சி சொன்ன ரகசியம் – நான் எழுதிய சிறுவர் நாவல். 2018ஆம் ஆண்டு வெளியானது.

குழந்தைகளின் மீது நிகழ்த்தபப்டும் பாலியல் அத்துமீறலை எதிர்த்து குரல்கொடுக்க, பிள்ளைகளை ஊக்கப்படுத்தும் கதைக்களம்.

பள்ளி விடுமுறையில் பாட்டி வீட்டுக்குச் செல்லும் ஷாலினி என்னும் சிறுமிக்கு ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது. அந்த பொம்மை உயிர்பெற்று ஷாலினியோடு பேசுகிறது. அவளின் தோழி பூஜாவுக்கு ஒரு பிரச்னை வரும்போது மரப்பாச்சி பொம்மை அதிலிருந்து விடுபட வழிகாட்டுகிறது.

ஓவியர் ராஜனின் அழகான ஓவியங்கள் கதை வாசிப்பை மேலும் சுவாரஸ்யப்படுத்தின. வானம் பதிப்பகம் அழகுற அச்சிட்டிருந்தது.
பரவலான கவனத்தைப் பெற்ற இந்நூலுக்கு ஏற்கெனவே சிறந்த சிறுவர் நாவலுக்கான விருதை வாசகர் வட்டம் அமைப்பும், ஆனந்தவிகடனும் விருதுகளை வழங்கி கௌரவித்தன.

தற்போது, மத்திய அரசின் சாகித்ய அகாடமி வழங்கும் 2020ஆம் ஆண்டுக்கான பாலசாகித்ய புரஸ்கார் விருதையும் மரப்பாச்சி பெற்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன். சாகித்திய அகாடமிக்கும் தேர்வுக்குழுவுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விருது பெற்றமைக்கு தமிழக முதல்வர் டிவிட்டர் மூலம் வாழ்த்துக்களைப் பகிர்ந்திருந்தார். உள்ளபடியே எதிர்பார்க்காத மகிழ்ச்சி அது!

Posted in கட்டுரை, சிறுவர் இலக்கியம், வாசிப்பனுபவம், புத்தகங்கள், வாழ்த்து, விடுபட்டவை | Tagged , , , , , | Leave a comment