கு. அழகிரிசாமியின் சிறப்பு நூல்: விலையில்லா பிரதி பெற பதிவுசெய்வதற்கான இணைப்பு

கு. அழகிரிசாமியின் நூலுடன்!

எப்போதும் என் மனத்திற்கு மிகவும் நெருக்கமான எழுத்தாளர் கு. அழகிரிசாமி. இது அவரின் நூற்றாண்டு. இதனை ஒட்டி, அவரது படைப்புகளில் சிலவற்றைத் தொகுத்து, விலையில்லாமல் வழங்கவிருப்பதாக தன்னறம் பதிப்பகம் முன்பு அறிவித்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.

இந்த மகத்தான செயல்வழி அழகிரிசாமி என்னும் படைப்பாளுமையை அடுத்த தலைமுறை பலரிடமும் கொண்டுபோய் சேர்க்கிறது தன்னறம் பதிப்பகம்.

அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். கவிஞர் ராணிதிலக், அந்நூலினை சிறப்பாகத் தொகுத்துள்ளார். மிகவும் நேர்த்தியான வடிவமைப்பில் வந்திருக்கும் இந்த நூல் நேற்று கிடைத்தது. இதன் பின்னணியில் உழைத்த அத்தனை பேருக்கும் வணக்கங்கள்!

+++++++++++++++

தன்னறம் நூல்வெளி அவர்களது பேஸ்புக்கில் இட்டுள்ள பதிவு கீழே:

தமிழிலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளுமையும், சிறந்த சிறுகதை ஆசிரியருமான கு.அழகிரிசாமி அவர்களின் நூற்றாண்டுத் தொடக்கத்தை மனமேந்திக் கொண்டாடும்விதமாக, சில செயற்திட்டங்களை கடந்தாண்டு அறிவித்திருந்தோம். இத்திட்டத்தில், கு.அழகிரிசாமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளைத் தொகுத்துப் புத்தகமாக்கி அதை விலையில்லா பிரதிகளாக அனுப்பிவைக்கும் செயலசைவும் உள்ளடக்கம்.

இதை நிறைவேற்றும் செயலசைவின் நீட்சியாக ‘கு.அழகிரிசாமி : கதைகள்,கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், கடிதங்கள்’ எனும் புத்தகம் அச்சு நிறைவடைந்து கைவந்து சேர்ந்துள்ளது. ஆகவே, முதற்கட்டமாக 500 இளம் வாசிப்பு மனங்களுக்கு இந்நூலை விலையில்லா பிரதிகளாக அனுப்பும் செயலைத் தொடங்குகிறோம். இந்த எண்ணிக்கை எங்கள் சக்திக்குட்பட்டது. ஆகவே, கு.அழகிரிசாமி புத்தகத்தின் விலையில்லா பிரதியைப் பெறுவதற்கான இணையப் படிவத்தையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

புனைவிலக்கியம், மரபிலக்கியம், கடித இலக்கியம், மொழியாக்கம், நாடகம், பதிப்புப்பணி, இசைப்பணி… என பன்முகத்திறனுடைய ஓர் தமிழெழுத்தாளராக தலைசிறந்த படைப்புகளைத் தந்து இம்மொழியின் இலக்கியச் சாத்தியங்களைப் பெருமளவு உயர்த்தியவர் கு.அழகிரிசாமி. அவரை மனமேந்திக் கொண்டாடி நன்றிசெலுத்தும் பொருட்டு துவங்கப்பட்டதே இச்செயற்திட்டம். மனித வாழ்வின் உயிரோட்டங்களை இலக்கியத்தில் தடம்பதித்த மூத்த ஆசிரியர் கு.அழகிரிசாமியை இக்கணம் பணிந்து வணங்குகிறோம்.

விலையில்லா பிரதி பெற பதிவுசெய்வதற்கான இணைப்பு:

https://docs.google.com/forms/d/1qL919q8u52tI-ENVXkqbE3fFYtZ0ALL66ppJcONeRTM/edit

நன்று நிகழ்க!

~

நன்றியுடன்,

தன்னறம் நூல்வெளி

9843870059 | www.thannaram.in

Posted in Uncategorized | Leave a comment

மகிழ்ச்சியைப் பகிர்தல்!

ஈரோட்டில் இருந்து இன்று காலை ஜெயபாரதி அம்மா அழைத்திருந்தார்கள். அவர்கள் பள்ளியில் படிக்கும் சிறப்புக்குழந்தைகளின் பெற்றோர் ஓர் அமைப்பாய் ஒன்று திரள்கின்றனர் என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொண்டார். அந்த அமைப்பின் முதல் கூட்டம் இன்று தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். நானும் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். நீங்கள் பள்ளிக்கு வந்து உரை நிகழ்த்திய பின்னர்தான் இப்படி அமைப்பாய் திரளவேண்டும் என்ற எண்ணமே ஏற்பட்டது அதற்கு உங்களுக்கும் நன்றி எனப் பாராட்டினார். உண்மையில் அந்த பாராட்டு பெரும் மனமகிழ்வைக்கொடுத்தது. ஜெயபாரதி அம்மா ஏற்கெனவே பல நற்செயல்களைச் செய்துகொண்டிருப்பவர்தான். அவரது பார்வையை கொஞ்சம் இந்த மாற்றுத்திறன் குழந்தைகள்+ அவர்தம் பெற்றோர் பக்கமும் திருப்பி விட்டிருக்கிறேன் அவ்வளவுதான்.

ஆட்டிசம் என்னும் உலகினுள் நாங்கள் நுழைந்தபோது எங்களுக்கு கை நீட்டி உதவிட யாருமே இல்லை. தனித்து நின்றுகொண்டிருந்தோம். அதற்கு முன் இங்கே எந்த பெற்றோரிய செயல்பாடுகளும் தனித்து நடந்தேறியதில்லை. சிறப்புப்பள்ளிகள், தெரபி வழங்கும் தனி நபர்கள் ஆகியோர் அவர்கள் அளவில், தங்களை முன்னிலைப் படுத்தி மட்டுமே சில கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தனர். அவற்றில் எந்த நிகழ்விலும் பெற்றோருடன் வரும் பிள்ளைகளை கவனித்துக் கொள்ள எந்த உதவியும் இருக்காது. கட்டணம் பெற்றுக் கொண்டு அவர்கள் நடத்தும் பயிற்சிப் பட்டறைகளுக்குக் கூட குழந்தைகளை அழைத்துச் செல்லமுடியாது. வாங்கும் காசுக்கு உணவு, தேநீர் அதுவும் high tea என்றெல்லாம் கொடுத்தாலும் கொடுப்பார்கள், குழந்தைகளுக்கு மட்டும் நோ எண்ட்ரி.

இந்த சிக்கல்களைப் பற்றி நாங்கள் தொடர்ச்சியாக விவாதித்து, சில முடிவுகளை எடுத்தோம். 2014ஆம் ஆண்டு முதன்முதலாகப் பெற்றோர் ஒன்றுகூடல் நிகழ்வை ஏற்பாடு செய்தோம். குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள, பண்புடன் இணையக்குழுமத்தில் இருந்து நிறைய நண்பர்களை தன்னார்வலர்களாக அழைத்திருந்தேன். குழந்தைகள் விளையாடி மகிழ ஏர் பலூன் போன்ற ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இசைப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த ஆட்டிச நிலைக் குழந்தைகளை மேடையேற்றிப் பாடல் பாடுவதற்கும் ஏற்பாடு செய்தோம்.

எப்போதும் சொற்பொழிவாற்றும் வழக்கமான நபர்களை நகர்த்தி வைத்துவிட்டு, ஒலிப்பெருக்கியை பெற்றோர் அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தோம். இளைய பெற்றோர்கள் தங்கள் ஐயங்களை, அச்சங்களை கேள்விகளாக முன் வைத்தனர். மூத்த பெற்றோர்கள் தங்கள் பயணத்தை, அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள உற்சாகப்படுத்தினோம். மிகுந்த ஆரோக்கியமான உரையாடலாக அந்த நிகழ்வை நடத்தி முடித்தபோது நிறைவாக இருந்தது. சென்னை தவிர்த்து வேறு சில ஊர்களிலும் பெற்றோர் கூட்டங்களை ஏற்பாடு செய்து உரையாற்றினேன். தொடர்ச்சியாக நடந்த அந்த கூட்டங்களில் எல்லாம் பெற்றோர் தாமாகவே முன்னிருந்து சந்திப்புகளை நடந்தவேண்டும் என வேண்டிக்கொண்டோம். பின்னர் அந்நிகழ்விலிருந்து ஊக்கம் பெற்ற சில பெற்றோர் குழுக்களை ஏற்படுத்தி நடத்த ஆரம்பித்தனர்.

‘ஆட்டிசம் சில புரிதல்கள்’ எனும் எனது நூல் கிடைக்கும் தெரப்பிகள், உணவு முறைகள், களையப்பட வேண்டிய கற்பிதங்கள், நம்பிக்கையூட்டும் மனிதர்கள் என அடிப்படை விஷயங்களை விளக்கி, ஆட்டிசக் குறைபாட்டின் தன்மைகளைப் புரிந்து கொள்ள உதவும்படி எழுதப்பட்டது. அடுத்து வெளியான லக்ஷ்மியின் ‘எழுதாப் பயணம்’ நூலோ எங்கள் குழந்தை வளர்ப்பு அனுபவத்தை படிப்படியாக முன்வைத்து, ஒவ்வொரு கோணத்திலும் இளம் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டிய புள்ளிகளை அடையாளப்படுத்தியது.

அடுத்தது ‘அரும்பு மொழி’ செயலி. பேச இயலாத ஆட்டிச நிலைக் குழந்தைகளின் தகவல் தொடர்புத் துணைவனாக முன்வைத்த இந்த செயலி தொடர்ந்து பலருக்கும் பயன்தந்து கொண்டிருக்கிறது.

அதைப் போலவே சிறப்புக் குழந்தை வளர்ப்பில் தந்தையரின் பங்களிப்பு, அதன் தேவை, முக்கியத்துவம் குறித்து மட்டும் விரிவாகப் பேசும் கூட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தேன். இங்கே நம் சமூகம் பொதுவாகவே குழந்தை வளர்ப்பை பெண்களின் பொறுப்பாகவும், ஆண் அதில் உதவி செய்பவனாகவோ அல்லது பார்வையாளனாகவோ இருந்தால் போதும் என்றே நம் உள்ளத்தை வடிவமைக்கிறது. அந்த பொதுவான சிந்தனைகளை உதறி, தந்தையரும் பொறுப்புகளை கையிலெடுத்தால் வாழ்கைப் பயணம் எத்தனை எளிமையாக மாறும் என்பதை பல பெற்றோருக்கும் உணர்த்தக் கிடைத்த வாய்ப்பு அது. பல சகோதரிகள் நேரடியாக அளித்த பின்னூட்டங்கள் அந்த முன்னெடுப்பின் முக்கியத்துவத்தை உறுதிப் படுத்தின.

பெற்றோர் நடுவே செயல்படுவதைப் போலவே பொது சமூகத்தில் விழிப்புணர்வை முன்னெடுப்பதையும் இன்னொரு புறம் தொடர்ந்து செய்து வருகிறோம். துண்டு நோட்டீஸ் அச்சடித்து, ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் என பல இடங்களில் ஆட்டிசம் விழிப்புணர்வு விநியோகம் செய்தோம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வந்துமே நட்பில் உள்ள பத்திரிக்கையாளர்களிடம் ”ஏப்ரல் 2ஆம் தேதி ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் அன்று அது குறித்த ஒரு செய்தியோ, கட்டுரையோ அசியம் வெளியிடுங்கள்” என்று தொடர்ச்சியாக வேண்டுகோள் வைத்துவிடுவேன். அவர்களில் பலரும் செய்கின்றனர். தொடர்ந்து அச்சு இதழ்களிலும், இணையத்திலும் எழுதுவது, பேசுவது என இச்சமூகத்தின் தேவைகளை, வலிகளை கவனப்படுத்தி வருகிறோம்.

அவ்வப்போது சிறப்புக் குழந்தைகள் காணாமல் போவதும், பிறகு கண்டுபிடிக்கப்படுவதும் நடக்கிறது. அதில் தருண் குப்தா போல சில சிறுவர்கள் நிரந்தரமாகவே காற்றில் கரைந்து போய்விடுவதும் நடக்கிறது. எனவே சமூக உதவியாளர்களான காவல் துறையினருக்கு இக்குழந்தைகளின் தன்மையை விளக்குவது அவசியம் என்பதால் அவர்களுக்கு ஒரு பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்திருந்தோம். அதில் கலந்து கொண்ட ஒரு காவல் துறை அதிகாரி, காணாமல் போன ஒரு குழந்தையை சரியான விதத்தில் கண்டறிந்து, அவரது விடுதியில் சேர்த்தார். இதைப் பற்றி அறிந்து கொண்டபோது சரியான திசையில்தான் பயணிக்கிறோம் என்ற உணர்வு கிடைத்தது.

இதோ இப்போது ஈரோடு பெற்றோர் சங்கத்தின் தொடக்கம் எங்களுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு உற்சாக வெகுமதி. இந்தப் புள்ளியில் நின்று இதுவரையிலான பாதையை, பயணத்தைத் திரும்பிப் பார்க்கையில் நம்மால் இயன்றவரை சிறப்பாகவே செய்திருப்பதாக நிறைவாக உணர்கிறோம். ஆனால் கொரோனாவாலும் வேலைப் பளுவாலும் சற்று வேகம் குறைந்திருப்பதாகத் தோன்றுகிறது. இன்னமும் செய்ய வேண்டிய பணிகளின் பட்டியல் பெரிது.

பதினெட்டு வயது நிறைந்த சிறப்புக் குழந்தைகளுக்கு சட்டரீதியிலான காப்பாளர் பொறுப்பேற்பது, பணம் சொத்து போன்றவற்றை நமக்குப் பின் குழந்தைகளுக்கு அளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்ற விஷயங்களைப் பற்றி இன்னமும் இங்கே போதுமான விழிப்புணர்வு இல்லை. அதைப் பரவலாக்க வேண்டியுள்ளது. போலவே இக்குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றிலும் நிறைய தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. இது போன்ற விஷயங்களில் இனி வரும் நாட்களில் கவனம் செலுத்தி உழைக்க வேண்டும் என்பதே எங்கள் இப்போதைய இலக்கு.

கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பது எங்களுக்கு ஒரு உற்சாகத்தைத் தரும் என்பதாலேயே இப்பதிவு.

+++++++++++

தொடர்புடைய பதிவு

மன நிறைவு கொடுத்த ஈரோடு பயணம்

Posted in Uncategorized | Leave a comment

சிறார் இலக்கியத்திருவிழா -2023

பள்ளிக்கல்வித்துறையின் ஏற்பாட்டில் சிறார் இலக்கியத்திருவிழா-2023 நடந்துவருகிறது. மாநிலம் முழுவதிலும் இருந்து 150 மாணவ மாணவியரை சென்னைக்கு அழைத்து வந்து, ஆறு நாட்கள் தங்க வைத்து, சென்னையைச் சுற்றிக் காட்டி, எழுதுவதற்கும் உரைவீச்சு நிகழ்த்தவும் பயிற்சிப்பட்டறை நடத்தப்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று மாணவர்களிடையே உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

எனது உரையினூடாக உருவக்கேலி, குறைபாட்டை வைத்து கேலி செய்வது போன்ற செயல்கள் கூடாது என்று கூறினேன். அத்தோடு மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த சமூகத்தில் வாழும் சகல உரிமைகளும் உண்டு என்பதை நாம் மறக்கலாகாது என்றும் பதிவு செய்தேன். நம்மால் இயன்ற அளவு மாற்றுத்திறன் உடைய சக மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்பதையும் அழுத்தமாக பதிவு செய்தேன்.

உரை முடிந்ததும் வேக வேகமாக சில மாணவர்கள் என்னிடம் ஓடிவந்து கை குலுக்கினர். அதில் ஒரு பாப்பா, “சார், மாற்றுத்திறனாளிகள் பற்றி இத்தனை பேர் மத்தியில் பேசியதிற்கு மிகவும் நன்றி சார்! எனக்கும் ஒரு தம்பி இருக்கிறான். அவனும் மாற்றுத்திறனாளிதான். நீங்கள் சொன்னதை கேட்டபோது எனக்கு உண்மையே அழுகை வந்துவிட்டது.” என்று கூறினார். அதேபோல இன்னொரு சிறுமியும் “சார், மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் இத்தனை தடைகளும், துயரங்களும் இருப்பது எங்களுக்கு இதுநாள் வரை தெரியவே இல்லை. இனி நாங்கள் அவர்களுக்கு எங்களால் ஆன சந்தர்ப்பத்தில் எல்லாம் உதவுவோம்.” என்று கூறினார்.

விதை பரவுதலில் காற்றின் மூலம் பரவுவதும் ஒரு வகை. வேலிப்பருத்தி போன்ற சில தாவரங்கள் தங்கள் விதைகளை காற்றில் பரவச் செய்வதன் மூலம் வெவ்வேறு இடங்களில் முளைக்க முயலும். ஆனால் அதில் வெற்றி சதவீதம் மிகக் குறைவு என்பதால், கொத்துக் கொத்தாகக் காய்த்து, பறக்க ஏதுவான பஞ்சு போன்ற அமைப்புடன் கூடிய ஏகப்பட்ட விதைகளைக் காற்றில் செலுத்தும். அப்போதுதான் அதில் ஒன்றிரண்டாவது உயிர் பிழைக்கும் என்ற கணக்கீட்டில் இயற்கை செய்துதரும் சாமர்த்தியமான ஏற்பாடு இது. விழிப்புணர்வு பரவலாக்கமும் அது போலத்தான். போய்ச் சேரும் மனங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் என்பதாலேயே, வாய் ஓயாமல், கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் இவ்விஷயங்களைப் பேசியபடியே இருக்கிறேன். இன்று நல்ல ஈர நிலங்கள் சிலவற்றில் அவ்விதைகள் விழுந்துவிட்டன என்று புரிந்த போது எனக்கும் கூட கண்கள் பனித்தன. அக்குழந்தைகளிடம் அதைக் காட்டாமல் சமாளித்துக் கொண்டேன். மிகுந்த நிறைவுடன் முடிந்த நாள் இன்று.

+++++++++

Posted in Uncategorized | Leave a comment

பிறர் ஏற்படுத்தும் காயங்களின் வலி!

நூல்: கையறுநதி
ஆசிரியர்: வறீதையா கான்ஸ்தந்தின்

வெளியீடு : கடல்வெளி பதிப்பகம், தொடர்புக்கு: 24332924

விலை : ரூ 220/-

கையறுநதி: நாவல் மொழியில் எழுதப்பட்டிருக்கும் ஒரு தந்தையின் தன் வரலாற்று பக்கங்கள்

எப்போதும் படிப்பது போல இந்த நூலையும் என்னால் ஒரே மூச்சில் படித்துமுடித்து முடியவில்லை. சில இடங்களில் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானேன். சில அத்தியாயங்களில் என் கண்கள் கலங்கி, எழுத்துகள் மறைந்தன. மனத்திற்கு சற்று ஓய்வு தேவைப்பட்டது. நூலை மூடிவைத்தேன். ரத்தக்கொதிப்பு உயர்வதை உணரமுடிந்தது. மென்நடை பயின்று சமநிலைக்கு வந்தேன். அன்று முழுக்க நூலைத்தொடவே இல்லை. வைத்துவிட்டு, மறுநாள் எடுத்தேன். மீண்டும் மூடிவைத்தேன். பழையபடி பாதிப்பு. மீண்டும் அதே விஷயங்கள். இப்படியாக 10 நாட்களுக்கு மேல் எடுத்து படித்துமுடித்தேன்.

ஒருகாலத்தில் உடல், மன ஊனங்கள் என்பது கடவுளின் கோபம், நாம் செய்த முன்வினைப் பயன் என்றெல்லாம் அடையாளப்படுத்தப்பட்டன. எனவே பொது சமூகத்திற்கு ஊனமுற்ற மனித உயிர்களைக் கையாள்வது ஒரு விதத்தில் எளிதாக இருந்தது. அவர்களை விலங்குகள் போல, அல்லது அதைவிடவும் கீழாக உயிர் வாழ அனுமதிப்பதே பெருந்தன்மை என்று நம்மைச் சமாதானப்படுத்திக் கொள்ள முடிந்தது.

ஆனால் இன்றைய நவீன உலகில், எல்லா மனிதர்களுக்கும் மரியாதைக்குரியதொரு வாழ்வை வாழும் உரிமை உண்டு என்ற எண்ணம் வந்த பின்னர், சமூகம் புற ஊனங்கள் விஷயத்தில் மேம்பட்டிருக்கிறது. ஆனால் இன்னமும் கூட நம்மால் மனம் அல்லது மூளையின் சிக்கல்களை முழுதாக சுருளவிழ்த்துப் பார்த்துவிட முடியவில்லை என்பதால் மனரீதியிலான பாதிப்புகள் மனித சமூகத்தை தொடர்ச்சியாக அலைக்கழித்து வருகிறது எனலாம்.

எனவே ஒரு குழந்தைக்கு மன வளர்ச்சியில் ஏதேனும் சிக்கல் என்றாலோ, வளர்ந்த மனிதர்களுக்கு மனநல பாதிப்புகளோ ஏற்பட்டுவிட்டால் அவரைச் சுற்றியுள்ள முதன்மை உறவினர்களான பெற்றோர், உடன் பிறந்தோர், வாழ்க்கைத் துணைவர், பிள்ளைகள் ஆகியோருக்கு ஏற்படும் பதற்றம் சொல்லால் விளங்க வைக்கக் கூடிய ஒன்றல்ல.

மற்ற நிலைகளில் இருந்து ஒரு மனநல பாதிப்புடைய நோயரைப் பார்த்துக் கொள்வதைவிடவும் துயர் மிகுந்தது பெற்றோராக இருந்து அல்லலுறும் நம் பிள்ளையைப் பேணுவது.

மனநல பாதிப்பு, மன பிறழ்வு, மூளை வளர்ச்சியின்மை என என்னென்ன வார்த்தைகள் உண்டோ அத்தனையையும் இச்சமூகம் சொல்லிக்கொள்ளட்டும். ஆனால் அது எங்களுக்கு குழந்தை. எங்களின் குழந்தை.

இச்சமூகம் ஏற்படுத்தும் காயங்கள் கணக்கிலடங்கா… உறவுகளாகவே இருந்தாலும் சீண்டிப் பார்ப்பதில் தொடங்கி, உச் கொட்டி ஏளனம் செய்வது வரை பலவிதமான சீண்டல்களை செய்துகொண்டே இருப்பர். அந்த வலியை, இப்படியான ஒரு குழந்தையின் பெற்றோராக இருப்பாரால் தான் சரியாக புரிந்துகொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் முடியும்.

இப்படியான நூல்கள் தமிழில் நிறைய வரவேண்டும். அப்போதுதான் இச்சமூகம் விழிப்புணர்வு அடையும். மனப்பிறழ்வு என்றால் சினிமாவிலும் கதைகளிலும் நாடகங்களிலும் மூலமாகவும் நம்மில் பலரும் அறிந்துகொண்ட செய்திகளில் தவறானவற்றை தூக்கி எறியவும், சரியானதை அறிந்துகொள்ளவும் இந்நூல் துணை செய்யும்.

Posted in அனுபவம், மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள் | Tagged , , | Leave a comment

பிறந்தநாள் வாழ்த்துகள் தோழர்

எனது முதல்நாவலான ’அவன் -அது +அவள்’ நாவலை வெளியிட முதலில் அணுகியது வயதில் முதிர்ந்த அந்த தலைவரைத்தான். அவருக்கு என்னை நேரடியாகத் தெரியாது என்றபோதும் நிகழ்வுக்கு வர ஒப்புக்கொண்டார். நான் அழைத்தபோது நாவல் அச்சகத்தில் இருந்தது. நூல் கையில் கிடைத்ததும் அதை எடுத்துக்கொண்டு அந்த தலைவரைப் பார்த்து கொடுத்துவிட்டு, நிகழ்வுத்தேதியை நினைவுபடுத்திவிட்டு வந்தேன். ரெண்டாவது நாள் அவரிடம் இருந்து அழைப்பு. நேரில் சென்று பார்த்தேன்.

நாவலைப்பற்றி பாராட்டிவிட்டு, தன்னால் நிகழ்வில் கலந்துகொள்ள இயலாது என்று வருத்தத்துடன் சொன்னார். எனக்கோ பெருத்த ஏமாற்றம். ‘என்னாச்சுங்க தோழர்?’ என்று கேட்டதற்கு, தன்னுடைய இத்தனை ஆண்டுகால பொதுவாழ்க்கையில் திருநங்கை மக்களுக்காக தான் பெரியதாக ஏதும் செய்யவில்லை என்பதோடு, அவர்களில் வாழ்வு இத்தனை துயரமிக்கது என்பதையும் அறியாமல் இருந்துவிட்டேன் என்பதே குற்றவுணர்ச்சியாக இருக்கிறது. அதனால் என்னால் கலந்துக்க முடியாது. தப்பா நினைச்சுக்காதிங்க என்று கூறினார். நான் அப்படியே நெகிழ்ந்துபோனேன்.

அவரது அந்த நேர்மை என்போன்ற வளரும் தலைமுறையினருக்கான பாதை. அந்த தலைவர் வேறு யாருமல்ல… இன்று 98வது பிறந்தநாள் கொண்டாடும் மதிப்பு மிக்க தோழர் நல்லகண்ணு அவர்கள் தான் அவர்.

Posted in அனுபவம், ஆவணம், வாழ்த்து | Tagged , , , , | Leave a comment