ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள்- (ஜேக்கப் ராக்)

ஜேக்கப் இசை அமைப்பாளர் ராப் லாஃபர் உடன்
ஜேக்கப் இசை அமைப்பாளர் ராப் லாஃபர் உடன்

19 வயது ஜேக்கப் ராக், ஓர் ஆட்டிச நிலையாளர். இவரால் சிறு வயதில் பேச முடியாததால் அறிவுத்திறனில் குறைவானவர் என்றே மதிப்பிடப்பட்டார். அவரது குடும்பத்தினரின் தொடர் முயற்சிகளுக்கும் பயிற்சிகளுக்கும் பின்னர் ஐ பேடில் தட்டச்சு செய்து, தன் எண்ணங்களை வெளிப்படுத்தத் தொடங்கினார். எழுத்துப் பிழைகளோ இலக்கணப் பிழைகளோ இல்லாத கச்சிதமான வாக்கியங்களை ஜேக்கப் எழுதுவதைக் கண்டு வியந்தனர் அவரது பெற்றோர். தட்டச்சு செய்யக் கற்றக்கொண்ட ஆறு மாதங்களுக்குப் பின், ஒருநாள் தனது பெற்றோரிடம் ’தனது மனத்திற்குள் 70 நிமிடங்களுக்கான சிம்பொனி குறிப்பு ஒன்று’ இருப்பதாகத் தெரிவித்தார்.

அவரது பெற்றோர் ’ராப் லாஃபர்’ எனும் இசை அமைப்பாளரை அணுகினர். ஜேக்கப்பின் மனதில் இருந்த சிம்பொனிக்கு வடிவம் கொடுக்க உதவினார் ராப் லாஃபர். மறக்க இயாலத சூரிய உதயம் (Unforgettable Sun Rise) எனும் தலைப்பிலான அந்த சிம்பொனி 2023 செப்டம்பர் 30ஆம் தேதி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இசையரங்கில் அரங்கேறியது.

“என் அறிவைக் காட்டவும், எனக்கான அடையாளத்தை உருவாக்கவும் முடிந்திருக்கிறது என்பது எனக்கு மிக மிக நிறைவைத் தருகிறது” என்கிறார் ஜேக்கப்.

“நீங்கள் இத்தனை நாளும் என்னை குறைத்தே மதிப்பிட்டு வந்தீர்கள். ஆனால் நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும், கவனித்துக் கொண்டும்தான் இருந்தேன். இதோ, இங்கு நான் இருக்கிறேன்” என்று அவன் உலகுக்குச் சொல்ல விரும்புகிறான் என்கிறார் ஜேக்கப்பின் தந்தை பால் ராக்.

“ஆம் பிள்ளைகளே… நாங்கள் உங்களை புரிந்துகொள்ளவே முயன்று வருகிறோம்” என்று எங்களுக்கும் சொல்லத்தோன்றுகிறது. இந்த துண்டு வீடியோ உங்கள் கண்களை ஈரமாக்கினால் நீங்களும் என் தோழனே…!

-யெஸ்.பாலபாரதி