என்னை மன்னிப்பாயா நண்பா!


இருபது வயதுகளின் தொடக்கக் காலத்தில் எப்போதும் நண்பர்கள் குழுவுடனேயே சுற்றித்திரிவோம். அப்போது என் நெருக்கமாக இருந்த நண்பன் ராமகிருஷ்ணன். மிகவும் நல்லவன். தைரியசாலி. பிறக்கு உதவும் குணம் கொண்டவன். முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் என எல்லோருக்கும் தன்னால் உதவும் குணம் கொண்டவன். எப்போதும் ஒன்றாகவே சுற்றுவோம். சின்ன ஊர் என்பதால் காலையில் விடிந்ததும் அவன் வீட்டுக்கு அருகில் இருக்கும் தேனிர் கடைக்குச் சென்றுவிடுவேன். அவனும் எழுந்து வந்துவிடுவான். பெரியதாக வேலைகளுக்குச் சென்று சம்பாதிக்கவேண்டிய நெருக்கடி இல்லாத குடும்பப் பின்னணி எங்கள் இருவருக்கும் என்பதால் வேலைக் குறித்து எல்லாம் அலட்டிக்கொண்டதில்லை.

எங்கள் ஊரன ராமேஸ்வரம் பெரிய கோவிலுக்கும் பேருந்து நிலையத்திற்கும் இடையிலான தூரம் என்பது 3 கிலோமீட்டர்களுக்குள் தான் இருக்கும். பேருந்து டிக்கெட்டின் விலை அப்போது 60 பைசாக்கள். திடீரென ஒருநாள் காலை 15 பைசாக்கள் உயர்ந்தி, 75 பைசா டிக்கெட் விலை என்று சொல்லிவிட்டனர்.

ராமகிருஷ்ணன் வீட்டிற்கு அருகிலேயே ஒரு பேருந்து நிறுத்தம் இருந்தது. கூடுதல் காசு இல்லை என ஒரு வயதான பாட்டியை, பேருந்தில் இருந்து நடத்துனர் கீழே இறக்கிவிட்டார். அந்தப் பாட்டி சத்தம்போட்டபடி அழுது புலம்ப, நானும் ராமகிருஷ்ணனும் என்னவென்று விசாரிக்கும் போதுதான் டிக்கெட்டின் விலை ஏற்றப்பட்ட தகவல் தெரிந்தது. “என்னடா இப்படிச் செய்யுறாய்ங்க?” என்று நான் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, எங்களின் இன்னொரு நண்பனான செந்தில் வந்தான். நாங்கள் மூவரும் பேசி முடிவு செய்தோம்.

அப்போது நாங்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என்னும் அமைப்பில் இருந்தோம். அதனால் உடனடியாகச் சாலை மறியல் செய்வது என்று முடிவெடுத்து, நான்கு முனைச் சந்திப்பான திட்டக்குடி என்னும் இடத்தில் நடுச்சாலையில் அமர்ந்து மறியல் செய்யத்தொடங்கிவிட்டாம். இருப்பதோ மூவர். உள்ளூர் ஆட்கள் வேடிக்கைப் பார்க்க, மேலும் சிலரைத் துணைக்கு அழைத்தோம். அந்தப் பாட்டி வந்து அமர்ந்துகொண்டார். அதற்குள் எந்தப் பக்கமும் வாகனங்கள் செல்லமுடியாமல் அவை வரிசைகட்டத்தொடங்கின.

மேலும் நண்பர்கள் வந்து சாரைச் சாரையாக வந்து அமர்ந்துகொண்டனர். போக்குவரத்துப் பணிமனையில் இருந்து அதிகாரி எல்லாம் வந்து பேசியும் நாங்கள் மசியவில்லை. அப்புறம் இராமநாதபுரத்திலிருந்து உதவி ஆட்சியாளர் ஒருவர் வந்து பேச்சு வார்த்தை நடத்தி, பழைய டிக்கெட் விலையே வசூலிக்கப்படும் என அவர் கொடுத்த உறுதியினால் எங்களின் அன்றைய போராட்டம் முடிவுக்கு வந்தது. இப்படி மக்களுக்கான பல போராட்டங்களில் உடன் நின்றவன் அவன். ஒரு சின்னச் சண்டையில் இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் போய் விட்டது.

எல்லா நண்பர்களின் பாஸ்போர்ட் படங்களையும் வாங்கிச் சேமித்து ஒரு ஆல்பம் தயாரித்துக்கோண்டிருந்தேன் நான். இன்றைய நாட்கள் போல அன்று புகைப்படங்களை நினைத்தபோது எடுத்துக்கொண்டு இருக்கமுடியாது. படம் பிடிக்க ஸ்டூடியோவுக்குச் செல்லவேண்டும். கருப்பு வெள்ளைப் படம் எடுக்க ஒரு விலையும், வண்ணப்படம் எடுக்க ஒரு விலையும் கொடுக்க வேண்டியதிருக்கும். அதனால் படம் எடுத்துக்கொடுப்பதற்கு ஒருவித சோம்பல் பலரிடமும் இருந்தது. அவர்களில் ஒருவன் ராமகிருஷ்ணன். அவன் படமே கொடுக்கவில்லை.

ஒருநாள் எனது ஆல்பத்தை அவனிடம் காட்டிக்கொண்டிருந்தேன். அதில் இருந்த எனது வண்ண பாஸ்போர்ட் படத்தை எடுத்து வைத்துக்கொண்டான். “உன் படம் கேட்டால் தரமாட்டாய், என் போட்டோவை மட்டும் நீ எடுத்துக்கொள்வாயா? திருப்பிக்கொடுடா..?” என்று நான் கேட்க, அவன் மறுக்க, அவனிடமிருந்து எனது புகைப்படத்தைத் திரும்பவும் எடுத்துக்கொள்ளும் போட்டியில் நாங்கள் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக்கொண்டோம். சாலையில் போவோர் வந்து விலக்கி வைக்கும்படியான சண்டை.

ஒரு கட்டத்தில் அவனிடமிருந்து கசங்கிய நிலையில் எனது படத்தைப் பிடுங்கி, நானே கிழித்துபோட்டுவிட்டேன். அவனோ என் மூக்கில் ஓங்கிக் குத்த, சில்லு மூக்கு உடைந்து ரத்தம் கொண்டியது. அவன் கோபமாகச் சென்று விட்டான். நானும் திரும்பிவிட்டேன். அதன் பின்னர்ச் சில முறை அவனும் சில முறை நானும் பேசிக்கொள்ள முயன்றபோது முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றுவிட்டோம். அதன் பின்னர் நானும் ஊரைவிட்டு கிளம்பி வந்துவிட்டேன்.

இது நடந்து எப்படியும் ஒரு வெள்ளிவிழா காலம் கடந்திருக்கும். அற்பகாரணத்திற்காகப் போட்டுக்கொண்ட சண்டையை நினைத்தால் இன்றும் வருத்தமாக உள்ளது. அவன் அன்பைப் புரிந்துகொள்ள என்னை நினைத்து நானே வெட்கப்படுகிறேன். என்னை மன்னிப்பாயா நண்பா!

(அந்திமழை இதழில் எழுதியது)