பார்வை

எனக்கு அது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை நான். ஆனால், கொஞ்சம் சந்தேகமாகவும் இருந்தது. அது அவளாக இருக்குமோ? சே, எப்படி அது அவளாக இருக்குமென்று மனதில் நியாயமான கேள்வி எழுந்தாலும் இன்னொரு புறம் ஏன் அது அவளாக இருக்கக் கூடாதென்றொரு காட்டுமிராண்டித்தனமான சிந்தனையும் பிறக்காமல் இல்லை.

எதைப் பற்றிப் பேசுகிறேன் என்கிறீர்களா? அதுதான் முக்கியமான பிரச்னை. அன்றும் எல்லா நாளைப் போலத்தான் நகர்ந்து கொண்டிருந்தது. திங்கட் கிழமை. திட்டப்பணிகள் குறித்து எல்லா ஒப்பந்தக்காரர்களிடமும் கலந்தாலோசனை. எல்லாப் பணிகளும் ஒழுங்காக நடக்கிறதா, கடந்த வாரம் ஒப்புக் கொண்ட பணிகளைச் சொன்னது போல செய்து முடித்து விட்டார்களா அல்லது திரும்பவும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு நேரத்தைப் போக்குகிறார்களா என்பதைக் கவனித்து நியாயமான காரணங்களென்றால் அனுமதித்து முறையற்ற தாமதமென்றால் எச்சரித்து மேற்கொண்டு செய்ய வேண்டியவைகளைக் குறித்துத் திட்டமிட்டு அதில் ஒப்பந்தக்காரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைச்
சமாளித்து விளக்கம் சொல்லிக் களைத்துப் போனபோது மணி 11:30 ஆகியிருந்தது. வழக்கமாக 10 மணிக்கு கிடைக்கும் தேநீர் மேசையில் ஆறிப் போய் கிடந்தது.

புதிதாகத் தேநீர் வேண்டும்போலத் தோன்றியது. வழக்கம்போலவே தேவையான நேரத்தில் அலுவலக உதவியாளனைக் காணவில்லை. பக்கத்து சிற்றுண்டி நிலையம் சென்று ஏதாவது கிடைப்பதைக் கடித்து கூடவே தேநீரும் குடித்து வந்தாலென்ன என்று எண்ணிக் கொண்டிருந்தபோதுதான் செல்பேசி சிணுங்கியது. என் முதலாளிதான்.

“என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

“வேறென்ன செய்து கொண்டிருப்பேன். திட்டப்பணிகள் தொடர்பாக…”

இடைமறித்தார் அவர். “எல்லாத்தையும் நரகத்துக்குப் போகச் சொல். மதியம் சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போகிறாய்?”

“இது என்ன கேள்வி? எங்காவது போய் கிடைத்ததைச் சாப்பிட வேண்டியதுதான்”

“அது எனக்குத் தெரியும். அன்றைக்கு என்னை அழைத்துப் போன அதே இந்திய உணவகத்துக்கு அழைத்துப் போகிறாயா?”

“சரி.என்ன திடீரென்று..??????”

“எல்லாம் திடீரென்றுதான் நடக்கும் வாழ்க்கையில். சரியாக ஒரு மணிக்கு இங்கே வா. இரண்டு பேரும் சேர்ந்தே போகலாம்”

பதில் சொல்வதற்குள் தொடர்பு அறுந்து போயிற்று. அவர் அப்படித்தான். சொல்ல வேண்டியதை மட்டுமே சொல்வார். கடந்த முறை கராமாவில் உள்ள அஞ்சப்பர் உணவகத்துக்கு அழைத்து சென்றிருந்தேன். முகமெல்லாம் வியர்த்து பிடறியில் வியர்வை வழிய “காரம் தாங்க முடியலை” என்று சிரித்துக் கொண்டே புலம்பியவருக்கு செட்டிநாடு உணவு வகை பிடித்துப் போனதில் எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

அலுவலகம் போய் கொஞ்ச நேரம் உலக விசயம் பற்றிப் பேசி விட்டு, அவர் சொன்ன அசைவ நகைச்சுவைக்குச் சிரித்து விட்டு அஞ்சப்பர் போகும்வரை எல்லாம் உற்சாகமாகத்தான் இருந்தது-
அந்தப் பெண்ணைப் பார்க்கும்வரை.

உணவுக்கு வேண்டியவைகளைச் சொல்லி விட்டு அங்கிருந்த ‘கசமுச’
சப்தங்களுக்கிடையில் இம்மாதிரி சந்தர்ப்பங்களில் பேசுவதற்காகவே வைத்திருக்கும் உப்புக்குதவாத சில்லறை விசயங்களைப் பற்றிப் பேச
ஆரம்பித்தோம். அப்படியே இன்று நிகழ்ந்தவைகளை ஒப்புவித்து விட்டு சில சிக்கல்களுக்கு ஆலோசனையும் கேட்டுக் கொண்டிருக்கும்போதே உணவு வந்துவிட்டது.

வட்டமான ‘எவர்சில்வர்’ தட்டில் சின்னச் சின்ன அழகான கிண்ணங்களில் உணவுப் பதார்த்தங்கள். “திரும்பவும் எனக்கு நினைவுபடுத்து. இது என்ன?” என்று ஒரு கிண்ணத்தைக் காட்டினார் அவர்.

“இது கோழிக் குழம்பு. இது மீன் குழம்பு. இது ஆட்டுக்கறி குழம்பு. இது சாம்பார். இது கூட்டு. இது பொறியல். இது தயிர். இது இரசம். இது கேசரி” என்று ஒவ்வொரு கிண்ணமாக விளக்கம் சொல்லிக் கொண்டு வந்தேன். இது இன்னுமொரு வழக்கமான விசயம்தான். ஒவ்வொரு முறை ஏதேனும் இந்திய உணவகம் செல்லும்போதும் என்னென்ன உணவு வகை என்பது பற்றி முதலில் பாடம் எடுக்க வேண்டும்.

“அது சரி!! இதில் எதை முதலில் கலந்து சாப்பிடுவது?” என்றொரு கேள்வியும் “எதை வேண்டுமானாலும் கலந்து கொள்ளுங்கள்” என்றொரு அசட்டுத்தனமான பதிலும் பின்னர் தொடர்ந்தது.

“அப்படியானால் இதைத்தான் முதலில் கலப்பது என்று சட்டமெல்லாம் கிடையாதா?”

“அதெல்லாம் கிடையாது. சாதாரணமாக வீடுகளில் சமைக்கும்போது ஏதேனும் ஒரு குழம்பு, ஒரு பொறியல் இருந்தாலே அதிகம். இதெல்லாம் இப்படி உணவகங்களில் மட்டும்தான்” என்று விளக்கம் கொடுத்தேன். அதுகூட இல்லாமல் எத்தனை பேர் பட்டினியால் வதங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எடுத்துச் சொல்ல துணிவு வரவில்லை.

அதற்குள் அவருக்கு மூக்கில் வியர்வை வரத் துவங்கி விட்டது.

“என்ன ரொம்ப காரமாக இருக்கிறதா?”

“பரவாயில்லை. மிக ருசியாக இருக்கிறது” என்றார் கண்ணீர் வழியும் விழிகளோடு. எனக்கு அவரைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. அந்த வேடிக்கையோடு வழக்கம்போல சுற்றியிருப்பவர்களையும் வேடிக்கை பார்க்கும் எண்ணத்தோடு திரும்பியபோதுதான் கண்டேன் அவளை.

அது அவள்தானா என்பதற்காக ஊன்றிக் கவனிக்க முனைந்தபோது, “என்ன, பறவைகளை மேய ஆரம்பித்து விட்டாயா?” என்று குறுக்கிட்டார் அவர். “இல்லை. இல்லை. அது எனக்குத் தெரிந்த பெண் போல இருக்கிறது” என்று சொன்னேன். “தெரிந்த பெண் போல என்றால் போய்ப் பார்த்துப் பேசுவதுதானே?” என்றார்.

அதில்தானே சிக்கல் இருக்கிறது என்று இவருக்கு எப்படிச் சொல்வேன்? அங்கே எனக்கு முதுகு காட்டிக் கொண்டு எதிரில் இருக்கும் எனக்கு அறிமுகமில்லாத ஒரு ஆணோடு கதைத்துக் கொண்டிருந்தது என் நண்பனின் மனைவி என்று எப்படிச் சொல்வது இவரிடம்?

“என்ன, ஆழ்ந்த யோசனை?”

“ஒன்றுமில்லை”

“ஒன்றுமில்லாதைதயெல்லாம் ஏன் யோசித்து வேதனைப்படுகிறாய்?”

“சேசே!! அப்படியெல்லாம் ஏதுமில்லை”

“ஆனால், உன் முகம் அப்படிச் சொல்லவில்லையே. என்னாயிற்று உனக்கு?”

“ஒன்றுமில்லை”

“பொய் சொல்கிறாய். அந்தப் பெண்ணை நீ உற்றுப் பார்த்ததைச் சொன்னது உனக்குப் பிடிக்கவில்லையா?”

“அய்யய்யோ.. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அந்தப் பெண் எனது நண்பனின் மனைவி போலத் தெரிகிறது”

“அப்படியா.. நல்லதுதானே? அவளிடம் போய் ரெண்டு வார்த்தை பேசி விட்டு வா”

“அது முடியாது.”

“ஏன்?”

“அவள் வேறொரு ஆடவனுடன் வந்திருக்கிறாள்”

“அதனாலென்ன? அவளது ஆண் நண்பனோடு வந்திருக்கிறாள். தவறென்ன அதில்?”

அந்த ஆளுக்கென்ன? மேலை நாட்டு நாகரிகம் பேசச் சொல்கிறது. கணவனுக்குத் தெரியாமல் இன்னொரு ஆடவனுடன் உணவகத்தில் உண்ண வருகிறாள் என்றால் அது எம்மால் சீரணிக்க முடியாது என்று எப்படி இவரிடம் எடுத்துச் சொல்ல முடியும்?

“என்ன பேசாமல் இருக்கிறாய்? முடிந்தால் அவளிடம் போய் பேசி விட்டு வா. அல்லது அவளை விட்டுவிட்டு ஒழுங்காகச் சாப்பிடு. நீ இன்னமும் பாதி சாப்பாட்டைக் கூட முடிக்கவில்லை”

உண்மைதான். அது என் நண்பனின் மனைவிதானா என்றும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், அந்த உயரமும் விரிந்து நீண்ட கூந்தலும், அதன் இறுதியில் மட்டும் சின்னப் பின்னலும், ஆளை அடிக்காத வண்ணத்தில் பருத்தியில் செய்த சுரிதாரும், அந்தக் கையில் தென்பட்ட ஒற்றை வளையலும், சற்றே பதட்டத்தோடு உட்கார்ந்திருந்த நிலையும் என் ஐயத்தை வெளிப்படுத்தவே செய்தது. நேரே சென்று கேட்டு விடலாம்தான். ஆனால், அது அவளுக்குப் பெரும் அதிர்ச்சியாக அல்லவா இருக்கும்? கையும் களவுமாகப் பிடித்துவிடலாமா? எனக்கு என் நண்பனை நினைத்தால் பரிதாபமாக இருந்தது.

எனது செல்பேசியில் மனைவியை அழைத்தேன்.

“என்ன ஆச்சரியமா இருக்கு?”

“என்ன ஆச்சரியம்?” என்றேன் எரிச்சலோடு.

“இந்த மாதிரியெல்லாம் இடையில பேச மாட்டீங்களே. அதான் கேட்டேன்”

“ரொம்ப முக்கியம். இதோ பார். அவசரமா நம்ம வசந்தி வீட்டுக்குக் கூப்பிடு. பேசிட்டு என் கிட்ட சொல்”

“என்ன பேசணும்?”

“அவள் அங்க இருக்காளான்னு மட்டும் பார்த்துட்டு எனக்குத் தகவல் சொல்லு”

‘என்னங்க விசயம்?”

“அதெல்லாம் அப்புறம் சொல்றேன். நேரத்தை வீணாக்காதே” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவளைப் பார்த்தேன்.

அவள் இருக்கும் விதத்தில் ஒரு இயல்பு நிலை தென்படவில்லை. ஏதோ ஒருவிதமான இறுக்கத்துடன் அமர்ந்திருப்பதாகத் தெரிந்ததிலிருந்து இது அநேகமாக அவளாகத்தான் இருக்குமென்று எனக்குள் விபரீதக் கணக்கு ஓடியது.

சரி, இனியும் காத்திருக்கத் தேவையில்லை. நேரிடையாகவே போய் தற்செயலாகப் பார்ப்பது போல ஒரு வணக்கம் போட்டு விடலாம் என்றெண்ணியபோது செல்பேசி சிணுங்கியது.

“என்னங்க.. வசந்தி வீட்டுக்குப் போன் போட்டேன்”

“சரி. என்ன சொல்றா அவ”

“வீட்டுல இல்ல போலிருக்கு. எதுக்காக இவ்வளவு அவசரமா ஃபோன் போடச் சொன்னீங்க?”

“அதெல்லாம் அப்புறமா சொல்றேன். வசந்தியத்தானே கூப்பிட்டே?”

“என்ன, அதுலயும் சந்தேகமா உங்களுக்கு?”

“சே!! அதெல்லாம் இல்ல”

“என்ன, ஒரே பதட்டமா இருக்கீங்க?”

“அதான் ஒண்ணுமில்லேன்னு சொல்றேன்ல. அப்புறமும் ஏன் தொணதொணங்குற? போனை வை. வீட்டுல வந்து சாயங்காலமா விவரமா சொல்றேன்”

செல்பேசி இணைப்பைத் துண்டித்தபோது ஏதோ புதிய கண்டுபிடிப்பைச் செய்து முடித்துவிட்ட மாதிரி ஒரு வக்கிர உணர்வு. கையும் களவுமாகப் பிடித்து விட்டோம்? சே!! என்ன கேவலமான நினைப்பு இது. நண்பனின் மனைவியைப் பற்றி இப்படி உடனடியாக அபாண்டமான முடிவுக்கு வரலாமா? அதுவும் இன்னமும் அது அவள்தான் என்பது கூடத் தெரியாமல் என்று மனசாட்சி கொஞ்சம் அதட்டிப் பார்த்தது. ஆனால், இன்னொரு பக்கம் அடுத்தவன் அந்தரங்கத்தில் குறுக்கிட்டுப் பார்க்கும் கேணத்தனம் அரக்கத்தனத்தோடு வெளிப்பட்டு மனசாட்சியை அதட்டிப் போட்டுவிட்டது.

எனது நடவடிக்கைகளும் பதட்டமும் என் நிறுவனத் தலைவருக்கு விபரீதமாகப் பட்டிருக்கவேண்டும்.

“என்ன, நன்றாகத்தானே இருக்கிறாய்?” என்றார்.

“ஆமாம்” என்று நான் தலையாட்டினாலும் எனக்குள் என்ன நேர்ந்தது என்பது பற்றி எனக்கே கொஞ்சம் புரியாமல் இருந்தது போல இருந்தது.

நியாயமாக நான் என்ன செய்திருக்க வேண்டும்? உணவகத்தில் நண்பனின் மனைவியைச் சந்திக்க நேர்ந்தால் நேரிடையாக சென்று நலம் விசாரித்திருக்க வேண்டும். எதிரில் இருப்பது யாரென்பதை அவள் மூலமாகவே அறிந்து கொள்ள முயன்றிருந்திருக்க வேண்டும். அல்லது இதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் என் வேலையைப் பார்த்துக்கொண்டு சும்மாயிருந்திருக்க வேண்டும்.

இதில் எதையும் செய்யாமல் நான் பாட்டுக்கு எதையோ கற்பனை செய்து கொண்டு அந்தக் கற்பனை பொய்த்து விடக்கூடாதென்று தொங்குவது போலப் பட்டது எனக்கு. சே!! என்ன மாதிரி மனிதன் நான் என்று என் மேலேயே எனக்கு கோபம் பிறந்தது. அடுத்தவர் விவகாரங்களில் மூக்கை நுழைக்க எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று என்னை நானே சுய விசாரணை செய்து கொண்டபோது என் தவறு எனக்குப் புரிந்தாற்போல இருந்தது. மிக
இயல்பான ஒரு நிகழ்ச்சிக்கு வர்ணம் பூசி மகிழ நினைக்கும் அற்ப புத்திக்கு அடிமையாகிப் போக இருந்தது புரிந்ததும் மனது கனத்துப் போனது.

மனது மரத்துப் போனது போன்றொரு உணர்வு. வழக்கமாக கேசரியைச் சுவைத்து உண்ணும் எனக்கு அன்று அது பிடிக்காமல் போனது. பணம் கொடுத்து விட்டு அலுவலகம் நோக்கிப் போகும் வழியில் நண்பனுக்குத் தொலைபேசத் தோன்றியது.

செல்பேசியை இயக்கினேன்.

“என்ன, ரொம்ப நாளா சத்தத்தையே காணோம்?” என்றது மறுமுனை.

“அது போகட்டும். எங்கே இருக்கே?”

“கராமாவில் இருக்கேன். சாப்பிட வந்தேன்”

“சாப்பிடவா எங்கே?”

“அஞ்சப்பரில்”

“அஞ்சப்பரிலயா?”

“ஆமாம். இன்னிக்கு ஒரு சின்ன பார்ட்டி. ஆபிஸ்ல புதுசா வேலைக்கு சேர்ந்த ஒருத்தர் பார்ட்டி குடுத்தாரு. ”

“இப்பத்தான் நான் அஞ்சப்பர்லேருந்து சாப்பிட்டுட்டு வர்றேன். உன்னைப் பார்க்கலியே”

“அப்படியா, அட!ஆமாம். ஒரு தம் போடலாம்னு கீழே வந்துட்டேன். மேலே வசந்தி இருந்தாளே பார்க்கலியா?” என்றான்.

“அடடே!! அப்படியா? கவனிக்கவேயில்லையே” என்றேன்.

*******************************
இதை எழுதியது நான் அல்ல! இது மரத்தடி.காம் தளத்தில் இருந்து சுடப்பட்டது. எழுதியவர் என் பாசமிகு ஆசிப் பாய் அவர்கள். இப்படி இருந்த மனுசன்.. இப்ப இப்படி நமீதாவை பார்த்தும் நயனைப் பார்த்தும் பெருமூச்சு விடுவதை காணசகிக்காமல்.. அவரின் படைப்பை அவருக்கு நினைவு படுத்தவே இந்தபதிவுன்னு சொல்லிகிட்டாலும். வெட்டியாக இருப்பதால் ஒன்றும் தோனவில்லை என்பதையும் சொல்லீடனும்! 🙂

This entry was posted in பதிவர் சதுரம் ;-)), வாசிப்பனுபவம், புத்தகங்கள் and tagged . Bookmark the permalink.

7 Responses to பார்வை

  1. ஆப்ரேசன் மெஜேஜ்!

  2. அண்ணாச்சிக்கு நல்ல ஞாபகமூட்டல்….. இதை ஒத்த மரத்தடியில் நான் படித்து விக்கித்துப் போன மறக்க முடியாத அண்ணாச்சியின் படைப்பு…
    பிம்பம்

  3. Lenin says:

    பாலா அண்ணா.. கடைசிவரைக்கும் உங்க கதைன்னு நெனைச்சு ஏமாந்துட்டேன். சரியான வயித்தெறிச்சல் பார்ட்டியா இருக்கேளே..? அநியாயம்.

  4. மாறி வரும் சமுதாயத்தில் மாற வேண்டிய சிந்தனையை ஞாபகப்படுத்தும் கதை. ஆசிப் அண்ணாச்சி எல்லாரும் மறந்து போன பாகச வை ஞாபகப்படுத்தற மாதிரி ஒரு பதிவு போட்டிருந்தாரு. நீங்க ஆசிப் அண்ணாச்சி மறந்து போனதை ஞாபகப்படுத்தி இருக்கீங்க!! (அப்பாடி, அண்ணாச்சி மட்டும் தான் சிண்டு முடிஞ்சு உடுவாரா என்ன :> 🙂

  5. வெற்றி says:

    பால பாரதி,
    அருமையான, விறுவிறுப்பான ஒரு கதையை வாசிக்கத் தந்த உங்களுக்கு மிக்க நன்றி.

    ஆசிப்பிற்குப் பாராட்டுக்கள்.
    அருமையான எழுத்து நடை. அடுத்த வரியைப் படிக்கத் தூண்டும் ஆவல் என நல்ல வடிவான பாணி.

    இப்படி நல்ல படைப்புக்களைத் தொடர்ந்தும் சுட்டுத் தாங்கோ பாலா.

  6. பூர்ணா says:

    பாதி , ம்கூம், இரண்டாவது பத்தி படிக்கத் தொடங்கியதுமே இது பாலா கதை மாதிரி இல்லையேன்னு யோசிச்சேன்,

    ‘எல்லாத்தையும் நரகத்துக்கு’,ன்ன வரியைப் படிக்கும்போதே அது அண்ணாச்சி கதையாத் தான் இருக்கணும்னு தோணிச்சு,, ஆனா இப்படி எல்லாம் பழைய கதையை எடுத்துப் போட்டு எங்களைக் குழப்பி, பாகசவைக் கலைக்க முடியாது! இப்பவே சொல்லிட்டம்..

  7. நல்லதொரு படைப்பு! நல்கிய உங்களுக்கும் ஆசிப் அண்ணாச்சிக்கும் நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.