தண்ணீர் தேசம்

ன்பது வருடங்களுக்குப் பின் மீண்டும் சொந்த மண்ணை மிதிப்பதில் ஒரு சுகம் இருக்கத் தான் செய்கிறது. குதிரை வண்டிகளும் மிதி ரிக்ஷாக்களும் நிறைந்திருந்த ரயில் நிலையத்தில் இப்போது ஆட்டோக்கள் வரிசை கட்டி நின்றிருந்தன. எஸ். எஸ். கலைவாணர் வீதியில் நிறைந்திருந்த குடிசைகளில் பல கட்டிடங்களாக உருமாறியிருந்தன.

மீன்பிடித் தொழில் மட்டுமே பிரதானமாயிருந்த ஊரில், துணிக்கடை, மருந்துக்கடை போல தெருக்கொரு டாஸ்மார்க் கடையின் போர்டுகளைப் பார்க்க முடிந்தது. சைக்கிள் குறைந்து ஸ்கூட்டரிலும், ஹீரோ ஹோண்டாவிலும் பறந்தபடி இருந்தார்கள் இளைஞர்கள். சைக்கிளின் பின்புறம் கேன் கட்டி வலம் வரும் பால்காரர்கள், எம்-80இல் போய்க் கொண்டிருந்தார்கள்.

புராண புண்ணியதலமாக மட்டுமே அறியப்பட்டிருந்த ஊர், முதல்முறையாக, அறிவியல்பூர்வமாகவும் தன் பெயரைப் பதிவு செய்துகொண்டது, அப்துல் கலாம் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகுதான்.

கடைவீதியில் டீக் குடிக்க நின்ற போது சூடாக போட்டுக் கொண்டிருந்த சுவிங்கத்தை எடுத்துத் தின்றேன். பழைய சுவை மாறாமலிருந்தது.
ஊர் மாறிப் போனது போலவே வீடும் மாறிப் போய் இருந்தது. கலர் டீவி, ப்ரிஜ், மெத்தையுடன் கட்டில், பச்சை வண்ண தொலைபேசி.. குளித்து சாப்பிட்டுவிட்டு, வழக்கமாக நண்பர்கள் கூடும் லாலா மிட்டாய்க்கடைக்குப் போகலாம் என்று கிளம்பினேன். மருதுபாண்டியர் சிலையைக் கடந்து நடந்து போய்க் கொண்டிருக்கும்போது எதிரில் வந்த டேங்கர் லாரி ஒன்று மோதுவது போல் வந்து நின்றது.

“டே(ய்).. சுந்தரம்…”

“பங்கா.. எப்படா வந்த?”

“நேத்திக்கு..”

“ஒரு போன் கூட பண்ணலியேடா… அதுசரி.. இப்ப எங்கடா போற..”

“சும்மா அப்படியே வந்தேன்டா”

“அப்ப சரி.. வண்டியில் ஏறிக்கோ, ‘ஓலைக்குடா’ வர போய்ட்டு வந்திடுவோம்”

ஏறிக் கொண்டேன்.

ராமேஸ்வரத்தைச் சுற்றி இருக்கும் பல மீனவ கிராமங்களில் ஓலைக்குடாவும் ஒன்று. ஊரின் வட கிழக்குப் பகுதியில் கடற்கரையை ஒட்டினாற் போலிருக்கும் கிராமம். முன்னூறுக்கும் குறையாத குடிசைகள். ஒரு தொடக்கப் பள்ளி, சின்ன தேவாலயம், மினி தபால் நிலையம் மட்டுமே கொண்ட சிற்றூர். மருத்துவ வசதிகளுக்கு கிராம மக்கள், ராமேஸ்வரத்திற்குத் தான் வருவார்கள்.

மருத்துவ தேவைகளுக்காக மட்டுமன்றி அவர்கள் ராமேஸ்வரத்துக்கு வருவதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. அது நல்ல தண்ணீருக்காக. நாடு பொன்விழா கண்ட பின்னும்கூட ‘ஓலைக்குடா’ போல பல கிராமங்களுக்கும் குடிதண்ணீர் வசதி மட்டும் ஏனோ வாய்க்கவில்லை. பல வருடங்களாக மக்கள் ஆறு கிலோமீட்டர் நடந்து வந்து, ஊருக்குள்ளிருந்துதான் குடிதண்ணீர் தூக்கிச் செல்வார்கள். சில சமயங்களில் சைக்கிளின் கேரியரில் இரண்டுபுறமும் குடம் கட்டிச் செல்லும் பெண்களையும் பார்க்கமுடியும். வறட்சிக்குப் பெயர்போன ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓலைக்குடா போன்று பல கிராமங்கள் உள்ளன.

“ஏண்டா.. இன்னுமா அங்ஙன தண்ணிப் பிரச்சனை தீரல?”

“ஆமாண்டா.. வர்றவனுங்க எல்லாம் இத முடிச்சிட்டுத் தான் மறுவேல பார்ப்பானுங்க.. போடா…”

“ஏண்டா சலிச்சுக்கிற.. உனக்குத்தான் பணம் கெடைக்குமில்ல?”

“டே.. எனக்கு வெறும் சம்பளம் தாண்டா.. தண்ணி வித்து காசு பார்க்கிறவங்க வேற ஆளுங்கடா..”

“ஒலகம் முழுக்க தண்ணி விக்கறாங்க.. நம்மூர்ல விக்கிறது புதுசு இல்லடா.. ஆமா! ஓலக்குடா இன்னும் அப்படியேதா இருக்கா”

“ம்ம்.. நீ போனப்ப இருந்த ஊரு இல்லடா இப்ப.. ரொம்ப மாறிப்போச்சு.. ஊருக்குள்ளாற டெலிபோன் வசதியெல்லாம் வந்திருச்சு. தார் ரோடு போட்டுடாய்ங்க.! ரெண்டு மூணு பெரிய ஸ்டோர்ஸ் எல்லாம் வந்துடுச்சுடா..”

“ஆனா, குடிக்க தண்ணி மட்டும் இன்னும் சொமக்குறாய்ங்கன்னு சொல்லு”

“அடப் போடா இவனே.. ! தண்ணிய சொமக்குற காலமெல்லாம் மலையேறிப் போச்சுடா.. தேவைக்கு ஒரு போன்! தண்ணி சப்ளைக்குன்னே ஊருக்குள்ளாற ஏழு டேங்கர் ஓடுது”

எங்கள் பேச்சினிடையே கிராமத்தில் நுழைந்துவிட்டோம். முதலில் இருந்த வீடுகளில் இருந்து குடத்துடன் பெண்கள் காத்திருந்தார்கள். டேங்கர் லாரி நின்றதும் நாகசுந்தரம், கிளீனருடன் நானும் கீழே இறங்கினேன்.

முதல் வீட்டிலிருந்து ஒரு கட்டையானவர் வந்து டேங்கரின் பைப் அருகில் நின்று கொண்டு குடத்துக்கு இரண்டு ரூபாய் வசூலித்து தண்ணீர் விடத் தொடங்கினார். அவர்தான் தண்ணீர் ஏற்பாடு செய்துதருபவராக இருக்கலாம். டேங்கருக்கு மொத்தமாக பணம் கொடுத்து, கிராமத்தில் சில்லரையாக வசூலித்துப் பணம் பண்ணும் சின்ன முதலாளி!

கிளீனரை மட்டும் விட்டு விட்டு வண்டியின் முன்பக்கம் வந்தோம். சட்டைப் பையிலிருந்து சிகரெட் பாக்கெட்டை நீட்டியபடியே நாகசுந்தரம் கேட்டான். “விட்டுட்டியா?”

“நா விட்டுட்டேன்.. அது தான் விட மாட்டேங்குது..” என்றபடி எடுத்து பற்ற வைத்தேன்.

“மாப்ளே கிறிஸ்டோபரைப் பார்க்கலாம்னு நெனைக்கிறேன். வர்றியா?”

“இல்லடா.. வண்டிய ஓட்டணும். நீ வேணா அவே வீட்லேயே ஒக்கார்ந்து பேசிகிட்டிரு.. நா வண்டியோட வர்றேன்”

கிறிஸ்டோபரின் வீடு ஊரின் கடைசியில் இருந்தது. அவனும் எங்களோடு படித்தவன் தான். நான் ஊரை விட்டு போன சில மாதங்களிலேயே, மணவிழா பத்திரிக்கை அனுப்பி இருந்தான். வாழ்த்துத் தந்தி கூட அனுப்ப முடியாமல் போய்விட்டது.

நடக்க.. நடக்க.. நிறைய மாற்றங்களைக் கிராமத்தில் பார்க்க முடிந்தது. குடிசையாக இருந்த துவக்கப் பள்ளி காங்கிரீட் கட்டிடமாக வளர்ந்திருந்தது. பல வீடுகள் மாடி வைத்து கட்டப் பட்டிருந்தன. தேவாலயத்தின் மேல் நியான் விளக்கில் சிலுவை செய்திருந்தார்கள். எல்லா வீட்டு வாசலிலும் குடத்துடன் பெண்கள் காத்துக் கிடந்தார்கள்.

பல வீடுகள் தங்களை மாற்றிக் கொண்ட போதும், கிறிஸ்டோபரின் வீட்டை அடையாளம் காண்பது சிரமமாக இல்லை. பழைய குடிசை மாறாமல், அப்படியே இருந்தது. வேலி மட்டையைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தேன்.

“கிறிஸ்டோபா..”

“ஆரது..?” ஆண்குரல்.

“வெளியில வர்றது!”

சிறிது நேரத்துக்குப் பின் வெற்றுடம்புடன் துண்டு மட்டும் கட்டியபடி வெளியில் வந்தார் கிறிஸ்டோபரின் அப்பா. ஒன்பது வருடங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தார். கண்களை இடுக்கிக் கொண்டு என்னைப் பார்த்தார்.

“ஆரப்பு… அடையாளந்தெரியலயே..”

“நாந்தாப்பா..” என்னை அடையாளப்படுத்திக் கொண்டதும் சட்டென உணர்ந்து கொண்டவராய்..”வாப்பூ.. நல்லாருக்கியா ராசா?” என்று கைகளைப் பற்றித் திண்ணையில் அமரச் சொன்னார்.

சிறிது நேரம் பழக்கம் பேசிக் கொண்டிருந்தோம். கிறிஸ்டோபர் கடலுக்குப் போயிருப்பதாகவும், அவன் மனைவி தண்ணீர் பிடிக்கப் போயிருப்பதாகச் சொன்னவர், ‘சென்னீ’ என்று உள் நோக்கிக் குரல் கொடுத்தார். ஐந்து வயதில் ஒரு சிறுமி ஓடி வந்தது.

“ஓடிப் போய்.. பால்ராசு கடையில் சித்தப்பூக்கு ஒரு கலர் வாங்கியா..” என அக்குழந்தையை விரட்டினார்..

“அய்யய்யோ.. அதெல்லாம் வேணாம்பா.. சொம்புல தண்ணி கொடுங்க போதும்” என்றேன் நான்.

“ஒரு சொட்டு தண்ணீ கூட இல்லப்பூ. இருந்ததுல ஒல வச்சிருக்கா.. மருமக எடுத்துட்டு வந்தாத் தான் தண்ணியே! நம்ம ஊருக்குள்ளார பெரிய கடையெல்லாம் வந்தாச்சுப்பூ..ஏ.. ஓடு.!” என்று ஜென்னியை முடுக்கிவிட, அது ஓடிவிட்டது.

பல வருடங்கள் கழித்து.. மணமான நண்பனைப் பார்க்க வெறுங்கையோடு வந்தது மனதை உறுத்தியது. பழக்கம் பேசிக் கொண்டிருக்கும்போதே.. குழந்தை ஜென்னி வந்து நின்றாள்.
அவள் கையில் வியர்த்து வழிந்தபடி இருந்தது “லெஹர் பெப்ஸி” பாட்டில்!

கோப்பு:- முதல் பூங்கா இதழில் தேர்வாகி உள்ளது.

This entry was posted in சிறுகதை. Bookmark the permalink.

13 Responses to தண்ணீர் தேசம்

  1. says:

    oru autograph payanamnu sollunga

  2. says:

    அம்மணி இது படிச்சுட்டு கொடுத்த கமெண்டா…

  3. says:

    பாலா,

    பேசாமல் அனாமி ஆட்டம் என்று போட்டு விட்டுப் போகலாமா என்று தோன்றுகிறதா 🙂

    லெஹர் பெப்ஸியால் செய்ய முடிவதை நமது அரசுகள் செய்ய முடியாததன் அவலம் நாம் ஒவ்வொருவரும் கவலைப்பட வேண்டிய ஒன்று

    அன்புடன்,

    மா சிவகுமார்

  4. says:

    //லெஹர் பெப்ஸியால் செய்ய முடிவதை நமது அரசுகள் செய்ய முடியாததன் அவலம் நாம் ஒவ்வொருவரும் கவலைப்பட வேண்டிய ஒன்று
    //

    அதுக்கெல்லாம் யார் கவலப்பட்டா..
    அனானி விளையாட்டுக்கு ஆள் பத்தாம நம்ம ஆளுங்க அவதிப்படும் போது இது மாதிரி பதிவு போடுறதே தப்புங்கண்ணா.. ஆப்புறம் ஏதாவது சுயமற்ற சொறி நாய் வந்து குறைச்சுட்டுப் போதும்.

    வேண்டாம் சாமீ..
    நா பாட்டுக்கு ஏதாவது பண்ணீட்டுப் போறேன்.

  5. says:

    குடிதண்ணீர் அயல்நாட்டு பானங்களை விட, பசும்பாலை விட விலையுயர்ந்தது. ஜாக்கிரதை. இந்தியாவில் இன்று கிராமங்களுக்குப் போய் குடிக்க தண்ணீர் கேட்பது அநியாயம். சாதாரண நீரைவிட பாட்டில் நீர் சரளமாகக் கிடைக்கிறது நாட்டில்..

  6. says:

    நம் நாடு வளர்ந்திருச்சுனு பெப்ஸி கிடைக்கறத வெச்சு பெருமை படறதா? இல்ல இன்னும் தண்ணீர் தேவைய பூர்த்தி செய்யாததால வளராதா நாடுன்னு வருத்தப்படறதானு தெரியல? 🙁

  7. says:

    முன்னமெல்லாம் கலர்னா ஊருல மாப்பிள்ளை வினாயகர் அல்லது காளி மார்க்…

    இப்போது பெப்சி…கோக்கா…பலே…

    மெயின் ராமேஸ்வரத்துல தண்ணி கஷ்டம் இருக்கா என்ன…நாங்கள் இருந்த போது அப்படி இல்லை (15 வருடங்களுக்கு முன்னால்)

  8. says:

    சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லப்பட்ட நல்ல விஷயம். நல்ல சிறுகதை. தொடருங்கள் பாலா…

  9. says:

    வாழ்த்துக்கள் – முதல் பூங்கா இதழில் இடம் பெற்றமைக்கு.

  10. says:

    ஊருக்கு அழைத்துப் போனதற்கு நன்றி பாலா.. ஓலைக்குடாவில் கடற்கரையை மட்டும் அழகுபடுத்தி, பூங்காவாக்கி விட்டார்கள். கவனித்தீர்களா. ஆனால் தண்ணீர்?..

    ‘பூங்கா’வில் உங்கள் படைப்புக்கு எனது வாழத்துக்கள்..

  11. says:

    // லெஹர் பெப்ஸியால் செய்ய முடிவதை நமது அரசுகள் செய்ய முடியாததன் அவலம் நாம் ஒவ்வொருவரும் கவலைப்பட வேண்டிய ஒன்று //

    நமது அரசுகள் எதும் செய்யமாலிருப்பதே லெஹர் பெப்ஸி செய்ய வேண்டிதான்!!

  12. says:

    பாலபாரதி,
    நல்ல பதிவு. அட நீங்கள் இராமேஸ்வரமா?

  13. says:

    ஆமாம் வெற்றி!
    கடற்கரையில் தவழ்ந்து வளர்ந்தவன் நான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.