துரைப்பாண்டி

இது கதையல்ல! ஆனால் அந்த வடிவத்தில் சொல்லப்பட்ட முயற்சி!
என்வாழ்வில் நான் சந்தித்த மனிதர்களில் அடி மனதில் படிந்துபோயிருப்பவர்களில்… இந்த துரைப்பாண்டியும் ஒருவன். எதிர்ப்படும் எல்லா பணியிடச் சிறுவர்களுக்குள்ளும் ஒவ்வொரு விதத்தில் அவனை நான் பார்த்து வருகிறேன். இனி.. நீங்களும் அவனைத் தேடலாம். என்னைப்போலவே!
————————————

அன்று வீடு மாற்றியாக வேண்டிய நாள். அதனால் எல்லா பொருட்களையும் அட்டைப் பெட்டிகளில் அடுக்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு டைரிக்குள் இருந்து சில கடிதங்கள் விழுந்தன. அவற்றை எடுத்துப் பார்த்தேன். ஒன்று என் அம்மா அனுப்பிய பழைய கடிதம். நான் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு, மும்பையில் படுக்கையில் விழுந்தபோது, ஊருக்கே வந்துவிடும்படி அன்பொழுக கேட்டுக்கொண்ட கடிதம். அம்மா அதிகம் படிக்காதவள். ஆனாலும் அவளின் கையெழுத்து குண்டுகுண்டாக அழகாய் இருக்கும். பழைய தமிழில் இருந்த எழுத்துக்களை மீண்டும் படித்தபோது, தாய் மேலான காதல் இன்னும் அதிகமானது. இன்னொன்றும் அம்மாவுக்கான கடிதம் தான், எழுதியவன் நான். ஆனால் என் அம்மாவுக்கு அல்ல! அது துரைப்பாண்டியின் அம்மாவுக்கான கடிதம்.

துரைப்பாண்டி. உங்களில் பலரும் கூட இவனைப் பார்த்திருக்க கூடும். பதினோரு வயது நிரம்பியவன்(1999-ல்). கட்டையான உருவம், மெலிந்த தேகம், ஏக்கம் வழியும் கண்களுடையவன். பெரிய அலுமினியப்பாத்திரத்தில் இட்லிகளைச் சுமந்து விற்பனை செய்பவன். நான் அவனை முதலில் பார்த்தது மாகிம் தொடர்வண்டி நிலையத்தின் அருகில். பால் முகம் மாறா அவனது பருவமும்,உருவமும் என்னை ஏதோ செய்ய… அவனை அழைத்தேன். அருகில் வந்தவன் நிமிர்ந்து பார்த்தான்.

“க்யா சையே…?” என்றன்.

“அடேய்.. நா தமிழ்காரண்டா…”

“என்ன வேணும்ண்ணே… இட்லியா.. தோசயா?”

“அதெல்லாம் இருக்கட்டும்.. ஓம் பேரென்னப்பா..?”

‘என்னத்துக்கு கேக்குறீங்க?’

“சும்மாத்தான்… சொல்லேன்..”

‘தொறப்பாண்டி’

“எந்த ஊரூப்பா…?”

‘சும்மா.. தொணத்தொணங்காதண்ணே…யாவரத்துக்கு போவனும்..’ என்று நழுவப்பார்த்தவனைத் தடுத்து, ‘ரெண்டு ரூவாயிக்கு இட்லி கொடு’ என்றேன்.

வழவழப்பான ஆங்கிலப் பத்திரிக்கையின் இரண்டு காகிதத்தை ஒன்றன் மீது ஒன்றாய் வைத்து, இட்லிவைத்து, சட்டினியையும் சாம்பாரையும் ஒன்றாய் ஊற்றி நீட்டினான். அதுவரை அப்படி சாப்பிட்டதில்லை நான். அவனிடம் பேச வேண்டுமென்பதற்காக… தோளில் கிடந்த பையை சரி செய்தபடி, இரு கையாலும் பெற்று கொண்டேன்.

இட்லி காகிதத்தை இடது கைக்குள் அடக்கி, வலது கையால் ஒரு இட்லியை விண்டு வாயில் போட்டபடியே கேட்டேன்.

“ம்… இப்போ சொல்லு?”

‘மதுர..’

“மதுரயில..”

‘மேலூருக்கு பக்கம்’

“அதா(ன்) எங்க…”

‘என்னத்துக்கு இவ்ளோ கேக்குறீங்க… நீங்க ஆரூ?’ என்றன் சற்றே எரிச்சலுடன்.

”அடேய்ய்ய்… நானும் மதுரக்காரந்தா(ன்)… இங்கென ஒரு பத்திரிக்கையில வேல பாக்குறேன்.”

‘பத்திரிக்கையினா…’

“பேப்பர்ரா.. நீயூஸ் பேப்பர்! நம்ம ஊரூல தந்தி பேப்பர் வரும்ல… அது மாதிரி…”

பேப்பர் காரைய்ங்களா நீங்க… அய்யய்யோ… ஆள விடுன்னே… எங்க சேட்டு யாரு கூடயும் பேசக்கூடாதுன்னு சொல்லி இருக்காரு! சீக்கரம் துண்ணுட்டு காசு காசு கொடுத்துரூங்க.. நா போயிறேன்’ என்றபடி வேறு பக்கம் பார்க்கத் தொடங்கினான்.

“தொரப்பாண்டி.. உன்னய பத்தியெல்லாம் எழுத மாட்டேண்டா… எழுதினாலும் எங்க எடிட்டர் போட மாட்டார்… சும்மா தாண்டா கேட்டேன்.”

‘எடிட்டர்னா…?’

“ம்… எனக்கு சேட்டு மாதிரி..! அத வுடு தெனம் இங்கிட்டுதா வருவியா..?”

‘ஆமா… என்னத்துக்கு கேக்குறீங்க…’

“தெனம் இட்லி திண்ணலாம்னு தான்”

காலியான காகிதத்தை கசக்கி வீசிவிட்டு, அவனிடமே… வேறு காகிதம் வாங்கி… கைகளைத் துடைத்துகொண்டேன். காசை வாங்கிக்கொண்டவன் பாத்திரத்தைத் தலைக்கு ஏற்றி… சிட்டாய்ப் பறந்து விட்டான். அதன்பின் அவனிடம் ரோட்டு ஓரத்திலேயே இட்லி சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. நான்கு மாதங்கள் தொடர்ந்து அவனிடம் சாப்பிடத் தொடங்கியதில் நெருக்கமானவனாகிப் போனேன் அவனுக்கு.

வீடியோ தியேட்டர்களில் பார்த்த புதுப்படம், டிக்கெட் பரிசோதகரிடம் மாட்டியது, சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காத போலீஸ்காரர்கள், தலையைத் தட்டி பாக்கெட்டைக் காலி செய்த மராட்டியர்கள் என்று பேச ஏகப்பட்ட விஷயங்கள் அவனுக்கிருந்தது. ஆனால் அவற்றை காது கொடுத்து கேட்க அவனுக்கு நான் மட்டுமே இருந்தேன்.

வாரவிடுமுறையான ஞாயிற்றுக்கிழமை மட்டும் அவனைச் சந்திப்பது கிடையாது. மற்ற நாட்களில் எனக்காக அவனோ.., அவனுக்காக நானோ காத்திருந்து சந்தித்து விட்டுப் போவது வாடிக்கையாகியிருந்தது. சந்தித்ததும் அருகிலிருக்கும் தேனீர்கடைக்கு போய் தேனீர் குடிப்பதும் எங்களது வாடிக்கையாகியிருந்தது. அந்த ’பையா’க்காரனின் கடை எங்களது மீட்டிங் பாய்ண்ட் ஆனது. சந்திக்க முடியாத தருணங்களில் கடைக்காரனிடம் செய்தி சொல்லிப் போவோம்.

எப்போதும் அவன் பேசும் போது அவனது கண்கள் இங்குமங்குமாய் அலை பாய்ந்து கொண்டே தானிருக்கும். ஒரு முறை காரணம் கேட்டதற்கு, “எங்க சேட்டு கிட்ட எட்டு பசங்க இருக்காய்ங்கண்னே… நா இப்டி ஒங்க கூட பேசுறத பாத்துப்புட்டா… அவருகிட்ட சொல்லீடுவாய்ங்கண்னே…அதா சுத்தி முத்தி பாக்க வேண்டியதாயிருக்கு..”என்றான்.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் குடும்பத்தைபத்திச் சொல்லுவான்… கூலி வேலை பார்த்து வந்த அப்பாவின் மரணத்திற்குபின் அம்மா கூலி வேலைக்கு போய்வருவதை… அக்காவைத் தாய்மாமனுக்கு மணம்முடித்து கொடுத்ததை.. மூன்றாவது படிக்கும் தங்கையை நன்கு படிக்க வைக்க வேண்டுமென்ற தனது கனவு பற்றி… என எல்லா கதைகளையும் சொல்லுவான். அக்காவின் திருமணத்திற்கு கடன் கொடுத்த தூரத்து உறவுனர் மூலமே மும்பைக்கு அழைத்து வரப்பட்டிருந்தான். சம்பளம் எவ்வளவு என்பதே தெரியாமல் தினம் பதினாறு முதல் பதினெட்டு மணி நேரம் வேலை பார்த்து வந்தான். வீட்டுக்கடன் தன்னுடைய வேலை மூலம் அடைபட்டு வருவதாகவும் சொன்னான். ஐந்தாவதுடன் தனது படிப்பு நின்று போனது குறித்து அதிகம் கவலை இல்லை அவனிடம். ஆனால்… பள்ளி நண்பர்கள், உறவுக்காரர்களின் பிரிவு, தெருவில் விளையாடுவது என்பது போன்றவற்றை இழந்ததில் ஏக வருத்தமுண்டு அவனுக்கு. அது பற்றிச் சொல்லும்போதே அவனது ஏக்கம் கண்களின் வழி நீராய் வழிந்தோடும்.

ஒரு சனிக்கிழமை தாமதமாய்ப் போய் சேர்ந்ததினால் துரைப்பாண்டியை சந்திக்க முடியாமல் போனது. தேனீர்க்கடை’பையா’விடம் மறுநாள் கண்டிப்பாய் சந்திக்கும் வரும்படி சொல்லி இருந்தான்.

ஞாயிற்றுக்கிழமை அவனை சந்திக்க காலையிலேயே கிளம்பினேன். எனக்காகக் காத்திருந்தான். என்னைப்பர்த்ததும் அவனது முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் பரவத்தொடங்கின.

“அப்படி என்னப்பூ… அவசரம் சண்டே வரச்சொல்லியிருக்க..?”

சில நிமிட மவுனத்திற்குப் பின் தழுதழுத்த குரலில் சொன்னான்… ‘நா… ஊருக்கு…போறேண்னே…’

“ஏண்டா..?” என்றதுமே… பொலபொலவென அழுது விட்டான். அழுது முடிக்கட்டுமென காத்திருந்தேன். விசும்பியபடி.. அவனே தொடர்ந்தான்… ‘ரொம்ப அடிக்கிறாய்ங்கண்னே… முந்தா நாத்து கூட சூடு வெச்சுட்டாய்ங்கண்னே…’ என்று தேம்பியவை தேற்றினேன்.

“நா டிக்கெட்டு எடுத்து தரவாடா…”

“ம்…ஹூம்… வேணாம்னே…. ஆத்தாலுக்கு லெட்டர் போட்டா… மாமா வந்து கூட்டிகிட்டு போயிருவாருண்னே…நீங்க லெட்டர் எழுதித்தாங்க போதும்…” என்றான் கண்களை துடைத்தபடி… எங்கள் பேச்சின் பொருள் புரியாவிட்டாலும்.. துரைப்பாண்டியின் துயரத்தை உணர்ந்தவன் போல, ரெண்டு தேனீர் கிளாஸை நீட்டினான் கடைக்காரன். நாங்கள் எடுத்துக்கொண்டதும்… துரைப்பாண்டியின் தலையில் தடவிக்கொடுத்தபடி உள்ளே போய் விட்டான். தோள்பையைத் திறந்து வெள்ளைக் காகிதத்தை எடுத்து… அவன் சொல்லச் சொல்ல… எனக்கு என்னவோ செய்தது. அழுது விடக்கூடாது. அது அவனையும் பாதிக்கும் என்பதால் கட்டுப்படுத்திக்கொண்டு, அவனது வார்த்தைகளை எழுத்துக்களாக உருமாற்றினேன்..!

அன்புள்ள ஆத்தவுக்கு..
பாண்டி எழுதுவது! எப்டி ஆரம்பிக்கிறதுனே தெரியல… அன்னக்கிளி பாப்பா எப்டி இருக்கு? ஸ்கூலுக்கு போவுதா? அக்காவும், மாமாவும் நம்ம வூட்டுக்கெல்லாம் வாராகளா…
ஆத்தா… எனக்கு இங்கென இருக்கவே பிடிக்கல.. ராவுல படுக்க லேட்டாவுது ரவைக்கு வெரசா எழ வேண்டி இருக்கு.. அவனவ(ன்) பொற மண்டையில தா தட்டுறாய்ங்க..! எல்லாத்தையும் விட நா சின்னவனா இருக்குறதுநாள என்னையவே அதிகமா வேல வாங்குறாய்ங்க…
ஏ..ஆத்தா.. கடனே வாங்காம நாமொல்லாம் வாழ முடியாதா…? சித்தப்பூன்னு சொல்லித்தானே.. இவரு கூட இவரு கூட அனுப்பிச்ச.. இங்கன அவர எல்லோருமே ‘சேட்டு’ன்னு தா சொல்லுறேம்… சின்னமாவும் சரியில்ல..எப்பவும் வஞ்சுகிட்டே இருக்குது… ரெண்டு நாளக்கி முந்தி ரவைக்கு எழ லேட்டாகிடுச்சுன்னு சூடு வச்சுட்டய்ங்க..!

வேணாந்தா…இந்த ஊரு வேணா…

நம்ம ஊருக்கு வரணும்போல இருக்குது… மாமாவை அனுப்பிச்சி..என்னய..கூட்டிக்க ஆத்தா… இனி நா ஓங்கிட்ட சுடு சோறு கேக்க மாட்டேன்… பாலு மாமா பட்டறய்க்கே போறேன்… நீ எது ஊத்தினாலும் அதையே குடிக்கிறேந்தா.. என்னைய கூட்டிக்க..ஆத்தா…

அன்னக்கிளி பாப்பா, அக்கா, மாமா, உன்னையனுட்டு..எல்லாத்தையும் பாக்க ஆச ஆசயா இருக்குத்தா… என்னய கூப்பிட்டுக்கத்தா…’’

அன்பு மகன்
துரைப்பாண்டி

எழுதி முடித்ததும் வாசித்து காட்டினேன். முகத்தில் சற்று தெளிவு தெரிந்தது…தான் எப்படியும் மீட்கப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கை அவன் கண்களில் தெரிந்தது.

“முகவரிய.. அதா… அட்ரஸ..சொல்றா தம்பீ”

‘ம்.. அம்மா பேரு நம்புத்தாய்ண்னே…’ என்று அவன் ஆரம்பிக்கும் போதே… ‘இங்கன என்னடா பண்ற…?’ என்று வந்து நின்றான் பதினெட்டு வயதில் ஓர் இளைஞன். அவன் தலையிலும் இட்லி பாத்திரமிருந்தது. அவனைப் பார்த்ததும் உதறல் எடுத்தது… துரைப்பாண்டிக்கு…, ‘இவரு மதுரக்காரர்ணே… தெனம் எங்கிட்ட தா சாப்பிடுவாரு… அதா…. பேசிக்கிட்டு இருந்தேன்… அப்ப..வரேன் சார்..’ என்றபடியே இட்லி பாத்திரத்தோடு கிளம்பி, அந்த இளைஞனோடு நடக்கத்தொடங்கினான். அவனோ… என்னை விசித்திரமாய் பார்த்தபடியே.. போனான்.

அன்றுதான் துரைப்பாண்டியை கடைசியாக பார்த்தது. அதன்பின் சந்திக்கவேயில்லை. அவனது அம்மாவுக்காக எழுதிய கடிதமும் சேரும் முகவரியற்று.. என்னிடமே இருக்கிறது. ‘’இப்போது… எப்படி(?) இருப்பான்..? ‘’ என்ற கேள்வி மட்டும் இன்றும் குடைந்து கொண்டே இருக்கிறது என்னுள்.
——————————————————

நினைவுக்கு:

———–

1. “க்யா சையே…?”= என்ன வேணும்?

2. சேட்/ சேட்டு = முதலாளி

3. பையா = உ.பி மாநிலத்தவரை மும்பையில் குறிப்பிடும் சொல்.
———

பிரசுரம் ஆனது தான் என்றாலும், கோப்புக்காக வலையேற்றி உள்ளேன்.

This entry was posted in சிறுகதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

19 Responses to துரைப்பாண்டி

  1. says:

    என்ன சொன்னாலும் அது க்ளிஷேவாக இருக்கும் வாய்ப்பிருப்பதால், படித்தேன் என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன் பாலா.

    -மதி

  2. says:

    வட இந்தியாவில் நானும் சில துரைப்பாண்டிகளைப் பார்த்திருக்கிறேன்.. கையறுநிலை என்ற வார்த்தைக்கு Practical-ஆக எனக்கு அர்த்தம் சொன்னவர்கள். உங்கள் எழுத்து அவர்களை நினைவூட்டியது. மீண்டும் மனம் பாரமானது.

  3. says:

    பாலா அவர்களுக்கு,

    மனம் கனத்துப் போகும் சம்பவம். இந்த மாதிரி சிறுவர் / சிறுமிகளை பார்த்திருக்கின்றேன், ஆனால் நிறைய பேசியதில்லை. பேசத் தெரியாது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். தொடர்ந்து உங்கள் அனுபவங்களை தொகுத்தளியுங்கள். நன்றி!

    உங்கள் அனுபவத்தை படிக்கையில் தூர்தர்ஷனில் பார்த்த ஏக் கஹானி தொடரில் வரும் ஒரு கதை ஞாபகம் வந்தது. மும்பை வந்து சேரும் ஒரு சிறுவன் வேலை பளுவுனூடே தனது தாத்தாவுக்கு கடிதம் எழுதி அதை தபால் பெட்டியில் சேர்த்துவிட்டு பெருமையோடு திரும்பி செல்வான். அந்த கடிதத்தின் முகவரியாக அவன் எழுதியது –

    நதி கே பாஸ் (நதியின் அருகே)
    ஹமாரே காவ் (உள்ளது எங்களின் கிராமம்)

  4. says:

    படித்தேன். வலி உணர்ந்தேன்.

  5. says:

    இப்போ நேரடியாப்போடலாம்னு வந்தேன். ஏற்கனவே வந்திட்டிருக்கு! நன்றி.

  6. says:

    குங்குமத்தில் ஏற்கனவே படித்தது தான். எத்தனை முறை படித்தாலும் மனம் பதைபதைக்கிறது.

  7. says:

    மனசுக்கு …பாரமாக இருந்தது ..
    என் கண்கள் குளமாகி இருந்தது … படித்து முடித்தபொது

  8. says:

    உங்களின் இத்தகைய முயற்சிகள் தொடர வேண்டுமென விரும்புகிறேன். ஆவன செய்யுங்கள் தல.

    ஆமா… என்னா தல அது… சுய புராணத்துல படம் தலப்பு மாத்தி தலப்பு மாத்தி ஓடுது?! :))

  9. <![CDATA[G.Ragavan]]> says:

    துரைப்பாண்டி எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும். மனதைக் கனக்க வைக்கும் மோசமான(!) கதை. 🙂

  10. இன்பா says:

    மனசே சரியில்லீங்க. இனி உருப்படியாய் தூங்கின மாதிரி தான்.

  11. says:

    அடடா… 🙁
    கடிதத்தை அவனுக்கு மீண்டும் வாசித்துக்காட்டும்போது உங்கள் கண்ணில் ஒரு துளி எட்டிப் பார்த்திருக்குமோ பாலா?

  12. says:

    பணக்கார வீடுகளில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் வேலை செய்யும் ஏழைக்குழந்தைகளை நேரில் கண்டிருந்தபோது ஏற்பட்ட உணர்வுகள் இப்போதும் ஏற்பட்டது. ரயிலில், பேருந்தில் வியாபாரம் செய்யும் குழந்தைகள்……….. இது ஒரு முக்கியமான பிரச்சினை. ஏதாவது செய்யவேண்டும் என்கிற உணர்வையும், என்ன செய்வதெனத் தெரியாது குழம்புகிற தருணத்தையும் ஒருசேரத் தந்து நகர்கின்றன இத்தகைய அனுபவங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

  13. says:

    வலியோடு படித்து முடித்தேன் பாலா..

  14. says:

    படித்தேன்!
    இது போல் எத்தனையோ இளசுகள்!
    🙁

  15. Pingback: விடுபட்டவை » இந்த கொலையில் எனக்கும் பங்கு உண்டு..! :(

  16. krithika says:

    totally moved by this incident.. was it not really possible to find his address out and help him?? its really horrible to hear truth.. i feel bad for doing nothing against such events!

  17. Vincent says:

    That’s a sharp way of thkining about it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.