பதிம வயதை அடையும் பிள்ளைகளுக்கு நான் சொல்லிக்கொடுக்கவேண்டிய விஷயங்களின் பட்டியல் மிகவும் நீண்டது.
அறவுணர்ச்சியை அடிப்படையானது என்றாலும் கூடவே, இச்சமூகத்தின் மீது அக்கறைகொண்ட குடிமகனாக நம்பிள்ளை வளரவேண்டும்.
நல்ல மனிதனாக வளருவதற்கு, அவர்களோடு நாம் உரையாடலைத்தொடங்க இந்த வயது சரியானது. மொட்டைத்தாத்தா குட்டையில் விழுந்தார் என்று பொருளற்று எதையும் தொடங்கிவிடுவதை விட, மேலானது ஒரு நூலை நாம் வாசித்து, பின் அவர்கள் கையில் அதனைக்கொடுத்து, அதன் வழியே உரையாடலைக் கொண்டுபோவதென்பது சிறப்பு.
அந்த வகையில் ச. தமிழ்ச்செல்வன் எழுதி இருக்கும் ‘அன்றாட வாழ்வில் அறிவியல்’ எனும் நூல் முக்கியமானது.
மொத்தம் எட்டு கட்டுரைகள் அடங்கி உள்ள சிறு நூல் இது. ஆனால் எட்டாத பல விஷயங்களைப் பேசுகிறது. நகைச்சுவையாக எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைகள் வாசிப்போரை வசப்படுத்தும். ‘உனக்கு மூளை இருக்கா’ என்று தொடங்கி, ‘சமைப்பது யாருடைய வேலை?’, ‘உன் சாதி என்ன? ’, ‘வரலாறு’ ‘புவியியல்’ என்று பல தளங்களையும் தொட்டுச்செல்லும் இக்கட்டுரைகள் எளிமையான மொழியில் சிந்தனையைத்தூண்டும் விதத்தில் எழுதப்பட்டுள்ளன.
புனைவு நூல்களைப்போல, இதனை வெறுமனே வாசிப்பு சுகத்திற்காக வாசிக்கக்கூடாது. முதலில் பெற்றோர் வாசிக்க வேண்டும், பின்னர் பிள்ளைகளுக்கு கொடுக்கவேண்டும். அதன் பின் அவர்களின் நண்பர்களுக்குக் கொடுத்து வாசிக்கச்சொல்லவேண்டும். அதன் பிறகு எல்லோரும் அமர்ந்து இக்கட்டுரையில் இருக்கும் அறிவியலையும், நாம் கடைப்பிடிக்கவேண்டிய பழக்கங்களையும் உரையாடல் வழி அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லவேண்டும்.
பெற்றோர் என்றில்லாமல், மாணவர்களின் வாழ்விலும், எதிர்காலத்தின் மீது அக்கறையும் உடைய ஆசிரியர்களும் இப்பணியைச்செய்யலாம். இச்சிறுநூல் மாற்றத்திற்கான விதையை விதைப்பதில் நல்ல தொடக்கமாக அமையும்.
நூல்: அன்றாட வாழ்வியலில் அறிவியல்.
ஆசிரியர்: ச.தமிழ்ச்செல்வன்
விலை: ரூ. 40/-
பதிப்பகம்: அறிவியல் வெளியீடு, கோபாலபுரம், சென்னை
(பாரதி புத்தகாலயத்தில் விற்பனைக்குக் கிடைக்கும்:)
பாரதி புத்தகாலயம்; நூல் தேவைக்கு: 044-24332924 / 24332424
#thamizhbooks #thamizhbookscbf
#வாசிப்பு #வாசகப்பரிந்துரை #சிறுவர்_நூல் #இளையோர்_நூல்