
டெம்பிள் கிராண்டின்(Temple Grandin) கொலராடோ பல்கலைக்கழகத்தின் கால்நடை அறிவியல் துறையில் ஒரு பேராசிரியர். ஆட்டிச நிலையாளரான இவர் தனது சிறுவயதில் பல்வேறு வகையான சென்சரி பிரச்சனைகளை சந்தித்தவர். நல்வாய்ப்பாக தனது தகவல் தொடர்பாற்றலை மேம்படுத்திக் கொண்டு நிகர் சராசரி வாழ்வை(near normal life) அடைந்த சாதனையாளர். சிறுவயதில் அவருக்கு இருந்த எண்ணற்ற சிக்கல்களில் ஒன்று தொடு உணர்வைப் புரிந்து கொள்வதில் உள்ள குழப்பம். அதாவது எதை இறுகப் பற்றுவது, எதை மென்மையாகப் பற்றுவது என்ற புரிதல் இல்லாமல் இருப்பது. சிறுவயதில் அவர் வீட்டில் வளரும் பூனைகளைத் தூக்கினால் அவை வலியால் கதறுமாம். ஏனெனில் இன்னொரு உயிரைத் தொடுகிறோம் என்று மென்மையாகக் கையாளும் திறன் டெம்பிள் கிராண்டினுக்கு அப்போது இருக்கவில்லை. ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயத்திலும் இந்த தொடுவுணர்வு சிக்கல் அவரை பாடாய் படுத்தியது. இதற்கு தன் உடலுக்கும், சுற்றியிருக்கும் காற்றுவெளிக்குமான தொடர்பை தன்னால் சரியாக உள்வாங்க முடியாததே காரணம் என்று புரிந்து கொண்ட டெம்பிள், தானே ஒரு கருவியை வடிவமைத்தார். ஹக் மெஷின்(Hug machine) என்ற அக்கருவி நரம்பியல் குறைபாடுகளினால் தொடு உணர்வில் சிக்கல் கொண்டோருக்கான வரப்பிரசாதமாக அமைந்தது. உடலுக்குத் தேவையான அழுத்தத்தை(Deep Pressure Stimulation) தரும் இக்கருவியின் மூலம் தனது புலன் உணர்வு சிக்கலில் இருந்து வெற்றிகரமாக வெளி வந்தார் டெம்பிள். பூனைகளை தூக்க கூட முடியாதவராக இருந்தவர் இன்று கால்நடை அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
தொழில்நுட்பக் கருவிகள் என்பது எந்த அளவுக்கு மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை ஒளிர வைக்க முடியும் என்பதற்கு டெம்பிளின் வாழ்வே ஒரு சாட்சி. இது போல் எண்ணற்ற தேவைகள் சிறப்புக் குழந்தைகளின் வாழ்வில் இன்னமும் இருக்கின்றன. எனவேதான் அரும்பு அறக்கட்டளையின் சார்பில் சென்ற வருடம் அரும்பு மொழி செயலியை வெளியிட்டோம். பேச இயலாத சிறப்புக் குழந்தைகளின் தகவல் தொடர்புக்கு அது மிகுந்த உதவியாக இருந்து வருகிறது.
அதே போல சிறப்புக் குழந்தைகள் காணாமல் போவதும், அவர்களைக் கண்டறியப் பெற்றோர்கள் படும் பாடும் கடந்த சில வருடங்களாகவே அதிகரித்து வருகின்றன். காணாமல் போவோரில் ஒரு சிறு சதவீதத்தினர் திரும்பிக் கிடைத்து விடுகின்றனர். ஆனால் பல குழந்தைகள் சமூகத்தின் கருந்துளைகளுக்குள் விழுந்து மறைகின்றனர். எனவே சிறப்புக் குழந்தைகளை நடமாட்டத்தை பெற்றோர் அறிந்து கொள்ளும் வகையிலான ஏதேனும் கருவிகளை அவர்களின் உடலில் பொருத்தினால் அது பயன் தருமோ என்று ஒரு நப்பாசை எனக்கு உண்டு. தொழில்நுட்பத் திறனும், அறிவும் கொண்ட நண்பர்களுடனும் அடிக்கடி இது குறித்து உரையாடிக் கொண்டே இருப்பேன்.
போலவே ஆட்டிச நிலைக்குழந்தைகள் உட்பட அறிவுசார் வளர்ச்சிக்குறைபாடு உடைய குழந்தைகளில் பலருக்கும் சந்திக்கும் சங்கடங்களில் ஒன்று வலிப்பு (Epilepsy)நோய். இது சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கும் சரி அவர்தம் பெற்றோருக்கும் சரி, மிகவும் சிக்கலான விஷயம். இக்குழந்தைகளுக்கு இந்த வலிப்பு வரும் முன் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிந்து அவர்தம் பெற்றோரர், ஆசிரியர் என சிலருக்கு முன்கூட்டியே எச்சரிக்கைவிடுக்கக்கூடிய ஸ்மார்ட் வாட்ச்& ஆப் வடிவமைக்கவேண்டும் என்பதும் எனது நீண்ட நாள் ஆசைகளில் ஒன்று.
அப்போதுதான் தோழர் தீபக் தொலைபேசியில் அழைத்தார். அவர் பணிபுரியும் லயோலா கல்லூரியில் சமூகப்பணித்துறை மாணவர்கள், பின்லாந்து நாட்டு பொறியியல் துறை மாணவர்களுடன் இணைந்து ஒரு புரஜெக்ட் பணியாற்றப்போவதாகவும் அதற்கான குறிக்கோள் மாற்றுத்திறனுடையோர் நலன் என்று திட்டமிட்டிருப்பதாகவும் சொன்னார். அதற்கான தயாரிப்புகளில் அவரது மாணவர்கள் தகவல் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மாணவர்கள் நடுவில் வந்து சிறப்புக் குழந்தைகளின் தேவைகள் பற்றி பேசும்படி அழைத்தார். நானும் மேற்சொன்ன விஷயங்களை எல்லாம் பேசிவிட்டு வந்தேன். இதெல்லாம் நடந்து ஐந்து ஆறு மாதங்களுக்கு மேல் இருக்கும்.

இதோ இன்று பின்லாந்துமாணவர்கள் இங்கே வந்துவிட்டனர். அவர்களுடன் நரம்பியல் மருத்துவர்கள், ஆட்டிச நிலைக்குழந்தைகள் அவர்களின் பெற்றோர், பேராசிரியர்கள் என ஐந்துநாட்களுக்கான பயிற்சி பட்டறைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதன் துவக்க விழா இன்று. மிகச்சிறப்பாக நடந்தது.
மேற்சொன்ன, ஸ்மார்ட் வாட்ச் ஐடியா எல்லாம் ஒரு மூளையில் உதித்த திட்டம். இதையே பத்திற்கும் மேற்பட்ட மூளைகள் சேர்ந்து இதனைப் பற்றி சிந்திக்கும் போதும் இன்னும் சிறப்பான ஒரு கருவி வெளிவரக்கூடும். அதை உங்களால் கொடுக்கமுடியும் என நம்புகிறேன் என அவர்களை வாழ்த்தி பேசிவிட்டு வந்தேன்.
இந்த முன்னெடுப்புகளுக்காக லயோலாவின் சமூகப்பணித்துறை பேராசியர்கள் அத்துனைபேருக்கும், லயோலா கல்லூரி நிர்வாகத்திற்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துகொள்கிறேன். எப்போதும்போல துணை நிற்கும் இனிய தோழன் தீபக்கை இறுக்கி அணைத்துக்கொள்கிறேன்.
வணக்கம்
எனது மகனும் ஓர் ஆட்டிசக் குழந்தை. இப்போது 8வயது. நான் அதை அறிந்து இணையத்தில் தகவல்களைத் தேடியபோது உங்கள் கட்டுரைகளை கண்டு கொண்டேன். உங்களால் தான் முழுமையான விளக்கம் எனக்கு கிடைத்தது. அத்தோடு நம்பிக்கையும் மன தைரியமும் பெற்றேன். நான் இலங்கைத் தமிழர். வசிப்பது பரிஸ் பிரான்ஸ் இல்.எனக்கு தமிழ் மொழியில் இப்படி ஒரு பெரும் விளக்கம் கிடைத்தது பெரிய விடயம்.மொழிதெரியாத இடத்தில் எப்படி மகனைக் கையாள்வது என்று திணறி தவித்தேன். என் நன்றி கோடி……உங்களுக்கு
மிக்க நன்றி!
தொடக்கத்தில் நானும் இப்படித்தேடி அலைந்தேன். கிடைக்காததால் படித்தவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.