சிறப்புக்குழந்தைகளின் தொடர்புத்துணைவன் ‘அரும்பு மொழி’மொபைல் செயலி.
ஆட்டிசநிலைக் குழந்தைகளில் பலரால் பேச முடியாது. பேசுபவர்களிலும் பெரும்பாலானோர் முழுமையான வடிவில் பேசமாட்டார்கள். பெரும்பாலும் துண்டு துண்டான சொற்களையே சொல்லுவார்கள். அதன் மூலம் அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதை எதிரில் இருப்பவர்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும். பல சமயங்களில் அந்த துண்டுவார்த்தைகளையும் புரிந்துகொள்ளாமல் கடந்துவிடுவோர் அதிகம். ஆட்டிசம் என்றில்லை, வேறுபல வகையான அறிவுசார் குறைபாடு உடையவர்களும் கூட சரளமான பேச்சுத் திறன் அற்றவர்களாகவே இருப்பர்.
தங்களுடைய எண்ணங்களை பகிரமுடியாமல் போவதின் காரணமாகவே சிறப்புத்தேவை உடைய இக்குழந்தைகள் சமூகத்தின் நடத்தை விதிகளை மீறுபவர்களாக இருக்கிறார்கள் என்று லக்ஷ்மி அடிக்கடி சொல்லுவார்.
இக்குழந்தைகள் தங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள ஒரு மொபைல் செயலியை ஏன் நாம் செய்யக்கூடாது என்று யோசித்தோம். அதுகுறித்த தேடலில் ஏற்கனவே சந்தையில் இருப்பனவற்றைப் பார்த்தோம். அதில் சில போதாமைகள் இருப்பதாக எங்களுக்குத்தோன்றியது. மேலும் (அதிக) விலைகொடுத்து வாங்கவேண்டிய தேவையும் இருந்தது. எனவே பயனர்கள் பயன்படுத்த எளிமையானதாகவும் இருக்கவேண்டும், இலவசமாகவும் இருக்க வேண்டும் என்பதால் வேறு ஒரு புதிய மொபைல் செயலியை உருவாக்குவது என்று முடிவெடுத்தோம்.
நண்பர்களின் உதவியால் இச்செயலியை வெளியிட்டோம். இது சிறப்புக்குழந்தைகளுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் பயனுள்ளதாக இருக்குமென்றே நம்பினோம். அது நிஜமென்று இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பு ஒன்று உறுதி செய்தது.
*கடந்த ஓராண்டாக இச்செயலியின் மூலம் தன் மகனுக்கு பயிற்சிகொடுத்துவந்த தாய் ஒருவர் தொலைபேசினார். இச்செயலி வழி தனது தேவைகளை சுட்டிக்காட்டிய மகன், இன்று ’தண்ணீர் தா’ என்று ஒற்றைச் சொல், முதல் வார்த்தை பேசியதாக்கூறினார். அதைச்சொல்லும்போதே வருக்கு குரல் தழுதழுத்தது. எனக்கும் கண்கள் கலங்கின. எதற்கு ஆசைப்பட்டோமோ, அது நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறியும் போது உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.*
இதன் உருவாக்கத்தின் துணை நின்ற தம்பிகள் அனைவருக்கும் மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
செயலியை பதிவிரக்கம் செய்ய, ப்ளோ ஸ்டோரில் – Arumbumozhi – எனத்தேடுங்கள்.
சுட்டி:- https://plhttps://play.google.com/store/apps/details?id=org.arumbutrust.arumbumozhi
https://play.google.com/store/apps/details?id=org.arumbutrust.arumbumozhi