உப்பு வேலி – நூல் அறிமுகம்

(நீண்ட நாட்களாக நூல் அறிமுகம் ஏதும் எழுதவில்லை. பழைய நூல்கள் தான் என்றாலும் எனது வாசிப்பு அனுபவத்தை பதிவு செய்வது நன்றாக இருக்கும் என்று எண்ணுவதால், இனி அவ்வப்போது, நூல்கள் குறித்து எழுததிட்டம்)

ராய் மாக்ஸம் எனும் பிரிட்டீர் ஆய்வாளர், ஒரு பழைய புத்தகக்கடையில் ஒரு நூலை கண்டெடுக்கிறார். அது, 1893இல் வெளியான மேஜர் ஜெனரல் ஸ்லீமன் எழுதிய ஒரு இந்திய அதிகாரியின் புலம்பல்களும் ஞாபகங்களும் (Rambles and recollections of an Indian official – W.H.Sleeman KBC) என்ற நூல். அதில் இருந்து ராயின் தேடல் துவங்குகிறது.

அப்புத்தகத்தில் ஸ்லீமன் குறிப்பிடும் சுங்க வேலி(Customs hedge) ஒரு உயிர் வேலி குறித்த குறிப்புகள் ராயின் கவனத்தை ஈர்க்கின்றன. பிரிட்டீஸ் இந்தியாவில் உள்நாட்டுப் பகுதியில் அத்தனை பெரிய சுங்க வரி வசூல் அமைப்பு இருப்பது அவருக்கு நம்ப முடியாததாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர் அந்த வேலியைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்குகிறார்.

ஸ்லீமனின் புத்தகத்தில் தில்லிக்கும் ஆக்ராவுக்கும் இடையில் இருந்த ஹோரல் எனும் இடத்தில் சுங்க வரி வசூலிக்கப்பட்ட விதத்தைப் பற்றி பேசுகிறது. அதில் பொதுப்பணித்துறை அலுவலர் ஒருவரை மேற்கோள் காட்டி ஒரு அடிக்குறிப்பு சேர்க்கப் பட்டிருந்தது. சர். ஜான் ஸ்ட்ராச்சி(Sir John Stratchey) என்பவரைப் பற்றிய அந்த அடிக் குறிப்பில் வழியே ஜான் ஸ்ட்ராச்சி எழுதிய  புத்தகத்தை(இந்தியாவின் நிதி மற்றும் பொதுப்பணிகள் துறை – The Finances and public works of India – 1869 – 1881) நூலகங்களில் தேடி ராய் கண்டு பிடிக்கிறார்.

இந்தியாவுக்கு குறுக்காக உருவாக்கப்பட்ட நீண்ட சுங்க எல்லையைப் பற்றி விவரிக்கிறார். 1869இல் அது சிந்துவிலிருந்து மகாநதி வரை 2300 மைல்கள் தொலைவுக்கு அமைக்கப்பட்டிருந்தது. 12 ஆயிரம் நபர்கள் காவல் பணியிலிருந்தனர். முள் மரங்களால் ஆன பெரும் புதர்கள் அந்த வேலியில் முக்கியப் பங்கு வகித்தன என புதர் வேலி குறித்த மேலதிக தகவல்களை  அந்நூல் அளிக்கிறது.

அதற்குப்பின் இந்தியாவின் உள்நாட்டு சுங்கத் துறையின் ஆண்டு அறிக்கைகளை நூலகத்தில் தேடி கண்டுபிடித்த ராய் சுங்க வேலி குறித்த தெளிவான குறிப்புகளை அவற்றிலிருந்து பெறுகிறார்.

மஹாராஷ்டிராவின் பர்ஹான்பூரில் தொடங்கி மத்தியப்பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து மாநிலம் என நீண்டு காஷ்மீரின் எல்லை வரை செல்லும் அந்த வேலி. சில வரைபடங்கள் கிடைத்தாலும் அவை தெளிவாக இல்லை. முடிந்தவரை அவ்வேலி சென்றிருக்கக் கூடிய ஊர்களின் பட்டியலோடு முதல் முறை இந்தியா வரும் ராய் அவ்வேலியின் எச்சங்கள் எதுவும் இல்லாததோடு அருகாமை கிராமங்களில் உள்ள வயதானவர்களுக்கும் கூட அவ்வேலி குறித்த நினைவுகள் எதுவும் இல்லாமலிருப்பதைக் கண்டு சோர்வடைகிறார்.

மீண்டும் மேலதிக தகவல்களோடு தனது அடுத்த பயணத்தை திட்டமிடும் ராய் அதற்கிடையில் இந்தியாவின் வரிகள், குறிப்பாக உப்பு வரி பற்றிய தன் பார்வையை முன்வைக்கிறார். இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் மனசாட்சியோடு பிரிட்டீஷாரின் வரிவிதிப்பு முறையை , ஒட்டு மொத்த ஆட்சி முறையை விமர்சனம் செய்யும் வரிகள் நெகிழ்சியூட்டக் கூடியதாக இருக்கிறது.

//பிரித்தானிய பேராசையால் உப்புவரி உருவானது. முதலில் கிழக்கிந்தியக் கம்பெனியின் பணியாளர்களின் தனிப்பட்ட பேராசை, பின்னர் கம்பெனியின், அதன் பங்குதாரர்களின் பேராசை, பின்னர் பிரித்தானிய அரசாங்கத்தின், அதன் மக்களவையின், அதன் மக்கள் பிரதிநிதிகளின் பேராசை.//

எரிச்சல் எனுமிடத்தில்  ராய் மாக்ஸ்ஹாம் ஒரு துறவியைச் சந்திக்கிறார். (அத்துறவி ஒரு முன்னாள் சம்பல் கொள்ளையர்)  அவரின் உதவியோடு அந்த வேலி பற்றிய சில தகவல்களை கண்டடைகிறார். அந்த சுங்க வேலியின் மீது போடப்பட்ட சாலையைக் கடந்து இன்னமும் நிற்கும் சில இலந்தை, புளிய மரங்களின் வரிசையைக் கண்டடையும் ராய் அவை உப்பு வேலியின் எச்சங்கள் என்று உணர்கிறார்.

இடையிடையே ரயில் பயணங்கள், இந்திய மக்களின் மனநிலைகள் குறித்தெல்லாம் எழுதிச்செல்கிறார் ராய். ஆனாலும் ராயின் பயணம் முடிவடையாமல் தொடர்கிறது. யமுனை நதிக்கரையின் மற்றொரு கிராமத்தில் 40 அடி அகலத்திற்கு தழைத்திருக்கும் முள்வேலிப் புதரை – சுங்க வேலியை (பர்மத் லைன் என அப்பகுதிமக்கள் குறிப்பிடும்) கண்டுபிடிக்கிறார். அதைவிட முக்கியமாய் அந்த வேலியை அவருக்கு காட்டித் தந்த சவுஹன் ஜி என்ற பெரியவருக்கு சுங்க வேலி, அதன் காரணமாக உப்பு அநியாய விலைக்கு விற்கப்பட்டது குறித்த பெரியவர்களின் புலம்பல்கள் போன்றவையும் நினைவிலிருந்தது. அத்துடன் அவரது மூன்று வருடத் தேடல் நிறைவுற்றது.

ராபர்ட் கிளைவின் தனிப்பட்ட பேராசை துவங்கி இந்தியாவை பிரித்தானிய ஆட்சி சுரண்டிய விதங்களை ராய் விவரிக்கும் போது நாம் பாடப் புத்தகங்களில் படித்ததற்கு மாற்றாக வேறொரு இணை வரலாறு தென்படுகிறது. அந்த வகையில் இப்புத்தகம் ஒரு முக்கியமான புத்தகம்.

**********************
நூல் பெயர் – உப்பு வேலி

( The Great Hedge of India – தி கிரேட் ஹெட்ஜ் ஆஃப் இந்தியா)

ஆசிரியர் – ராய் மாக்ஸம்

 தமிழில் – சிறில் அலெக்ஸ்

பதிப்பகம்       – எழுத்து

முதற் பதிப்பு – 2015 (தமிழ்) 2001 (English)

பக்க எண்ணிக்கை – 247

விலை:- ரூ. 240/-

This entry was posted in கட்டுரை, நூல் விமர்சனம், மதிப்புரைகள், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள் and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 2 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.