37 ஆண்டுகளுக்கு முன் நடந்த அருணாவின் சோகக் கதை தான் இந்த பதிவு முன்னமே இது பற்றி வலைப்பதிவில் எழுதி இருக்கிறேன்.
———————–
‘உங்களுக்கு மேரி டிரின்டிக்னன்டை தெரியுமா….?’
“தெரியாது…”
‘எலிசபெத் ராட்-க்ரானெஜ்-ஐ…?’
“தெரியாதுங்களே…”
‘என்னங்க… இவங்களை எல்லாம் தெரியாதுங்கிறீங்க… இவங்கலெல்லாம் பெண் விடுதலைக்காக குரல் கொடுத்த வெளிநாட்டுக்காரங்க…’ என்று விடை சொன்னவரின் கையில் வார இதழ் ஒன்று இருந்தது.
“அப்படியா… எனக்கு வெளிநாட்டுக்காரங்கள பத்தியெல்லாம் தெரியாதுங்க… அதுவும் பெண்விடுதலைக்காக குரல் கொடுத்தவங்களை சுத்தமா தெரியாது. ஆனா… இவை பற்றி எல்லாம் பேசுற நம்ம நாட்டுல பெண்கள் நெலமை எப்படி இருக்குன்னு மட்டும் தெரியும்க…”
‘அவங்களுக்கு என்னங்க… நல்லா தானே இருக்காங்க…?’ என்று ஆதங்கத்துடன் சொன்னவரிடம்… நான் மும்பையில் பத்திரிக்கையாளனாய் பணியாற்றிய போது எழுத முடியாமல் போன ஒரு அபலைப் பெண்ணின் கதையை சொல்லத் தொடங்கினேன்.
சாதாரண மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பத்தில் இரண்டாவதாக பிறந்தவர் அருணா ஷான்பாக். இவருக்கு மூத்தவரும் சகோதரி தான். மரபு மீறா பழமைவாதக் குடும்பம் அது. ஆனால்… காலத்தின் கட்டாயத்தால் வீட்டுப் பெண்களை வேலைக்கு அனுப்ப சம்மதித்தது குடும்பம்.
சிறுவயது முதல் சமூக சேவையில் ஆர்வம் கொண்ட அருணா நர்ஸ் படிப்பை தேர்வு செய்தார். நன்கு படித்து தேறியவுடன் மும்பையின் ‘கிங் எட்வர்ட் மெமோரியல்'(கே.ஈ.எம்) மருத்துவமணையில் டிரைனிங் நர்ஸாக வேலைக்கு சேர அழைப்பு வந்தது. ஏகப்பட்ட கனவுடன் கர்நாடக மாநிலத்திலிருக்கும் சிமோகா (இது தான் இவரின் சொந்த ஊர்)-வை விட்டு மும்பைக்கு ரயிலேறினார் அருணா.
தனது இருபத்தியோராவது வயதில்(1966-ல்) கே.ஈ.எம் மருத்துவ மனையில் பயிற்சி நர்ஸாக சேர்த்துக் கொள்ளப்பட்டவரின் ஒழுங்கு, சுறுசுறுப்பு, நோயாளிகளிடத்து கனிவுடன் சேவையாற்றும் பாங்கு… என எல்லாவற்றையும் கண்ட நிர்வாகம் தேர்வு மூலம் நிரந்தர பணியாளராக்கிக் கொண்டது.
கருப்பு-வெள்ளை படங்களில் நடித்த டி.ஆர். ராஜகுமாரி போன்ற முகச் சாயலில் மிக மிக அழகாய்த் தோன்றியவர் அருணா. ‘சுண்டினால் ரத்தம் வரும்’ என்பார்களே அப்படியான சிவப்பு நிறம். எப்போதும் உதட்டோரம் புன்னகையுடன் வலம் வரும் அருணாவுக்கு கே.ஈ.எம்-ல் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. சில வருடங்களிலேயே மராட்டி மொழியில் சரளமாக பேசவும், படிக்கவும் கற்று தேறி விட்டார்.
நோயாளிகள் முதல் மருத்துவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்தமானவராகிப் போன அருணாவிடம் ஏதோவொரு காந்த சக்தி இருந்ததாகவே எல்லோரும் நம்பினார்கள். அடம் பிடிக்கும் குழந்தைகள் முதல் அடாவடி பண்ணும் பெரியவர்கள் வரை இவரின் புன்னகைக்கு முன் மண்டியிட்டனர்.
அருணாவின் அழகிலும், அறிவிலும் மயங்கி தனது மனதை பறிகொடுத்தார் டாக்டர். சந்திப் தேசாய் என்பவர். இவரும் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட… அருணாவின் குடும்பத்தினரோ எதிர்ப்பை காட்டினர். அதனால் பதிவுத் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டது இந்த காதல் ஜோடி.
ஆனால் அருணாவின் மகிழ்ச்சியும் கனவுகளும் நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை. ஆம்… அந்த சமயத்தில் ஒட்டு மொத்த இந்தியாவையும்… அதிரச்செய்த அக்கொடுமையான சம்பவம் நடந்தேறியது.
எத்தனை கனவுகளோடு கே.ஈ.எம் மருத்துவமணைக்குள் அடி எடுத்து வைத்திருப்பாரோ… அதே மருத்துவ மனையின் கீழ் தளத்தில்(பேஸ்மெண்ட்) ‘சோகன்லால் பார்த வால்மீகி’ என்பவனால் 1973-நவம்பர்-27 மாலை 4.50-க்கும், 5.50க்கும் இடைப்பட்ட காலத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகிறார் அருணா. இந்த வால்மீகியின் தந்தை இதே மருத்துவமனையில் ‘முக்கதம்’ (மேற்பார்வையாளர்) ஆக வேலை பார்த்து வந்தார். அவரின் சிபாரிசின் பேரிலேயே தற்காலிக பணியாளனாக சேர்த்துக்கொள்ளப்பட்டவன் தான் சோகன்லால் பார்த வால்மீகி. இவனின் வெறிக்கு இரையான அருணா மயக்கமடைந்தார். அந்நிலையிலும் அவரைவிடாமல் பலமுறை தின்று தீர்த்து, பின் அங்கிருந்து ஓடி விட்டது அந்த மிருகம்.
மறுநாள் காலை 7 மணிக்கு வேலைக்கு வந்த செக்யூரிட்டி தான் முதலில் அருணாவை பார்த்திருக்கிறார். அதுவும் ஒட்டுத்துணி கூட இல்லாமல்… இடுப்பு பிரதேசம் முழுவதும் ரத்தமான ரத்தமாய் காட்சியளிக்க… உதடு, மார்பு, வயிறு என பல இடங்களில் நகக்கீறலும், பற்களின் தடங்களுமாய் அருணா கிடந்த கோலம் ஒருகணம் அவரை உலுக்கியிருக்கிறது.
அருணா இறந்து விட்டார் என்றெண்ணிய அந்த செக்யூரிட்டி, மேலதிகாரிகளுக்கு தகவல் தர… அவர்கள் வந்து பார்க்க… உயிர் இருப்பதைப் பார்த்ததும், அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டார்.
கிட்ட தட்ட பதினைந்து மணி நேரம் சுயநினைவின்றி…. ஏகப்பட்ட ரத்தப் போக்கும் சேர்ந்து ஏற்பட்டதன் விளைவு… நினைவு மீண்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் நினைவிழந்து கோமா நிலைக்குப் போனார் அருணா. அந்த நினைவு மீண்ட தருணங்களில் வால்மீகி பற்றியும் சொல்லியிருக்கிறார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் வெளியே செய்தி கசிந்து விடாமல் பார்த்துக்கொண்டது.
ஆனாலும், எப்படியோ செய்தி வெளியே கசிந்து.. நவம்பர் 29ம் தேதி எல்லா மும்பை பத்திரிக்கைகளின் எட்டுகால செய்தியானது. அருணா பலாத்காரத்திற்கு பலியாகிப் போனார் என்று தெரிந்தவுடன் அவரின் குடும்பம் கையை விரித்தது. அவரை தங்களின் மகளே இல்லையென தலை மூழ்கியது. குடும்பமே தலை மூழ்கிய பின் மருத்துவ நிர்வாகமும் காவல்துறையில் இக்கொடுஞ்செயலை வழக்காக பதிவு செய்ய வில்லை.
காக்கி உடுப்புக்குள்ளும் நல்ல மனம் படைத்தவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு ‘லஷ்மண்-நாயக்’ ஓர் உதாரணம். இவர் அப்பகுதி காவல் நிலைய துணை ஆய்வாளர். பத்திரிக்கைகளின் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு இவரே வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினார். இவர் விசாரணையில் ஆர்வம் காட்டுவது கண்டு, இவருக்கு தேவையான உதவிகளை செய்ய முன் வந்தார் ‘பிங்கி விரானி’ என்ற பத்திரிக்கையாளர்.
இவ்விருவரின் கூட்டு முயற்சியால் ‘சோகன் லால் பார்த வால்மீகி’ கைது செய்யப் பட்டான். அவனது அடையாளமே தன் பெயரை கையில் பச்சை குத்தி இருப்பது தான். சாட்சியங்களின் மூலமும், விசாரணைகளின் வெப்பத்திலும் இவன் உண்மையை ஒப்புக்கொள்ள, குற்றவாளி என்பது நிரூபணமாகிறது. ஏழாண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படுகிறது.
1973ல் நடந்த இக்கொடுமையான சம்பவத்திற்கு காரணமான ‘சோகன் லால் பார்த வால்மீகி’ தண்டனைக்காலம் முடிந்து.. வெளியே வந்து… மும்பையின் ஜனத்திரளில் கரைந்து போய் விட்டான். ஆனால் அருணா….?
இன்றும் படுக்கையில் கிடக்கிறார். பணியாற்றிய அதே மருத்துவமனையில் இருக்கிறார். ஆசியாவிலேயே மாநகராட்சியால் நிர்வகிக்கப்படும் மிகப்பெரிய மருத்துவமனை என்ற பெருமை வாய்ந்த கே.ஈ.எம். மருத்துவமனை, நீதி மன்ற உத்தரவின் பேரிலேயே இன்றும் கவனித்து வருகிறது.
இருபத்தி ஐந்தாவது வயதில் வீழ்ந்த அருணாவுக்கு இன்று வயது அறுபத்தி இரண்டு!
கிட்டதட்ட முப்பத்தி ஏழு ஆண்டுகள்…… எல்லா உறவுகளும் உதறித்தள்ளிய நிலை…. படுத்த நிலையிலேயே ‘எல்லா’ கடன்களையும் கழிக்கும் அவலம்….. உடலில் ஆங்காங்கே… புரையோடிய புண்கள் என தனது மீதி வாழ்க்கையைப் படுக்கையிலேயே கழித்து வருகிறார் அருணா.
பொதுவாக கோமாவில் போனவர்களின் உடலுறுப்புகள் அசையுறாது என்பார்கள். அவர்களுக்கு பசி, உறக்கம் போன்ற எதுவும் தெரியாத நிலையில் இருப்பார்கள். ஆனால் அவர்களின் இதயம் மட்டும் இயங்கி வரும். அருணாவின் விழிகளின் ஓரத்திலிருந்து இன்றும் கண்ணீர் வடிந்த படி இருக்கிறது. அக்கண்ணீர் சொல்லும் கலைந்த கதைகள் நமக்குத் தெரியும்.
படுக்கையில் வீழ்ந்துவிட்ட அருணா இனியும் கண்ணீர் வடிக்க வேண்டுமா? ஆண்டாண்டு காலமாய் மருத்துவம் படிக்கும் புதியவர்களுக்கு சோதனைக்கூடமாக அருணா பயண்பட வேண்டுமா? எல்லாவற்றையும் இழந்து அருணா வடிக்கும் கண்ணீர் நிற்க… ஒரே வழிதான் உண்டு!
மனித உரிமை ஆர்வலர்கள் கொடி பிடித்து கோஷம் போடலாம்… பரவாயில்லை.
அவர்களுக்கு மனதின் வலி பற்றி தெரியாது. நீங்களும் படித்து விட்டு அமையாக போக மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.
அருணாவின் கண்ணீர்க்கு தீர்வு :- கருணைக் கொலை மட்டுமே!
***************************
17.12.2009 உச்சநீதி மன்றம் கருணைக்கொலைக்கு அனுமதி அளித்துள்ளதாக செய்தித்தாளில் படித்த போது, கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது.
—
நன்றி:-
2005 ஆண்டு இக்கட்டுரையை பிரசுரித்த மும்பை தமிழ் டைம்ஸ்-தினசரிக்கு!
மீள் பிரசூரம்..
—
12 Responses to அருணா-வை கருணைக் கொலை செய்ய உதவுங்கள் பதிவர்களே..