கடைக்கு இளைய மகன் வரத்தொடங்கி, வியாபாரத்திலும் கெட்டிக்காரனாக இருப்பதும் ஆண்டவன் அருளினால் தான் என்று நம்பினார், பக்தி மார்கத்தில் அதிக ஆர்வம் கொண்ட வெங்கட்டநாயக்கர்.

தன் பிராத்தனைக்கு இறைவன் செவி சாய்த்து விட்டான் என்று நம்பிய காரணத்தால்.. முன்னை விட அதிக ஆர்வத்துடன் பக்தி மார்கத்தின் பக்கம் கவனம் செலுத்தத்தொடங்கினார். அவ்வப்போது வீட்டில் தொடர்ந்து கொண்டிருந்த விரதம், பூஜை போன்றவை அடிக்கடி நடக்கத்தொடங்கின. பஜனையும், பாகவதர்களின் வருகையும் முன்பை விட அதிகமாகிப்போனது. எப்போது பார்த்ததாலும் ஏதாவதொரு பூஜை நடந்துகொண்டே இருந்தது.

எதை எல்லாம் செய்யக்கூடாது என்றார்களோ அதை எல்லாம் செய்யத்தொடங்கினான் ராமசாமி. தினம் குளித்து சுத்த பத்தமாக இருக்க வேண்டும் என்பது அந்த வீட்டில் எழுதப்படாத சட்டமாக இருந்தது. ஆனால்.. பல நாட்கள் குளிக்காமலேயே குளித்தது போன்ற பாவனையை ஏற்படுத்துவதை வாடிக்கையாக்கிக்கொண்டான்.

வீட்டில் சொல்லப்படும் கதைகளையும், சொற்பொழிவுகளையும் கேட்டபடியே வளர்ந்த ராமசாமிக்கு அவற்றில் ஏகப்பட்ட சந்தேகங்கள் வரத்தொடங்கின. அவற்றை கதை சொல்லும் பாகவதர்களிடமே கேட்கத்தொடங்கினான்.

அவர்கள் சொல்லும் பதில்கள் போதுமானதாக அவனுக்கு படவில்லை. ஒரே கேள்விக்கு ஒவ்வொரு பண்டிதர்களும் ஒவ்வொரு விதமான பதில்களைக் கொடுத்தார்கள். அதனால் மேலும் மேலும் கேள்விகள் கேட்கும் ஆர்வம் அதிகமானது. படிப்பு வரவில்லை என்பதற்காக பலிக்கப்பட்ட தன்னால், கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தர முடியாமல் பண்டிதர்களே தடுமாறுவதைப் பார்க்க ராமசாமிக்கு கேள்வி கேட்கும் ஆர்வம் அதிகரித்தது.

பெரும்பாலும் இவனது கேள்விகள், காலங்காலமாக சொல்லப்பட்டு வந்த புராண, இதிகாசங்களை சுற்றியே இருக்கும். கேட்கும் கேள்விகளையும் அப்படியே வரட்டு வாதமாக வைக்காமல்.., நகைச்சுவை உணர்வுடன் கூடிய கற்பனை கலந்து கேட்பான்.

பிள்ளையார் சாமி உண்மையாக இருக்குமா..யானைத் தலையும் மனித உடலுமாக எப்படி ஒருவர் இருக்க முடியும்?

அனுமார் என்ற சாமி உண்மையில் இருந்திருக்க முடியுமா..குரங்குத் தலையும் மனித உடலும் சாத்தியமா? அப்படி ஒருவர் இருந்திருப்பாரே ஆனால் குழந்தைகள் அந்த உருவத்தைப் பார்த்து பயந்து போகாதா? பெரியவர்கள் எப்படி கேலி பேசாமல் இருந்திருப்பார்கள். கொஞ்சம் பல்லு தூக்கலாக இருந்தாலே அவனை கேலியும் கிண்டலும் செய்கிறார்களே.. அனுமாரை மட்டும் எப்படி சும்மா விட்டார்கள்?

கடலை ஒரே தாவல் மூலம் கடந்து விட முடியுமா? கடல் என்ன தெருவில் ஓடும் சாக்கடை நீரா?

தீயை அக்னி தேவன் என்று சொல்லுகிறீர்கள்.. அப்புறம் ஏன் அவர் ஏழைகளின் குடிசைகளை எரிக்கிறார். அவருக்கு பாவமாகத் தெரியவில்லையா? – என்பது மாதிரியான கேள்விகளாக இருக்கும்.

வீட்டுக்கு வரும் பண்டிதர்களோடு நின்று விட வில்லை இவனது வாதம். கடையில் வேலை பார்க்கும் வேலைக்காரர்கள் தொடங்கி, வரும் வியாபாரிகள் வரை அனைவரிடமும் வாதம் புரியத்தொடங்கி விடுவான்.எவராலும் பதில் சொல்ல முடிய வில்லை.

முதலாளியின் மகன் என்ற அந்தஸ்தும், கேள்வியில் இருக்கும் நகைச்சுவையும், தாங்களுக்கே புதிதாக இருக்கும் கேள்வி என்பதாலும் கேட்போர் பதில் பேச முடியாமல் போனார்கள்.

எல்லோராலும் குசும்பு பிடித்த கெட்டிக்காரப் பேச்சுக்காரன் என்று சொல்லுமளவுக்கு சிறுவன் ராமசாமி மாறிப்போனான். தன்னை எல்லோரும் பாராட்டும் புகழ்போதைக்கு மயங்கி.. அப்படியான கேள்விகள் கேட்பதைத் தொடர்ந்தான் ராமசாமி. வயது ஏறினாலும் அவனது போக்கில் மட்டும் மாற்றம் ஏற்படவே இல்லை.

இவனது போக்கு குறித்து சின்னத்தாயம்மையாருக்கு வருத்தம் இருந்தது, வெங்கட்டருக்கும் வருத்தங்கள் இருந்தாலும் மகனின் சாதூரியமான கேள்விகளை உள்ளூர ரசித்து வந்தார். அதனாலேயே கேள்வி கேட்கும் விசயத்தில் அவனை பெரிதாக கண்டுகொள்ள வில்லை.கேள்விகளால் வேள்வி செய்து பெரிய ஞானி போல தன் மகன் வந்துவிடுவான் என்று நம்பினார்.

ராமசாமியின் அண்ணன் கிருஷ்ணசாமி தன் அப்பாவைப் போலவே ஆன்மிகத்தில் மிகுந்த ஆர்வமிக்கவராக திகழ்ந்தார். குடும்ப வழக்கப்படி வைணவ வழிபாட்டு முறைகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்.

ஆன்மிகத்தில் இருந்த அதே ஆர்வம் படிப்பிலும் இருந்தது. நன்கு கல்வி கற்று வந்தார். தமிழ் மட்டுமல்லாது, சமஸ்கிரதம் போன்ற பொழிகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். மத சம்பந்தமாக பல செய்யுள் நூல்களை எழுதினார்.

வீட்டுக்கு அடங்கிய நல்ல பிள்ளையாக கிருஷ்ணசாமி வளர்ந்து வருவது அம்மாவுக்கு மன நிம்மதியை கொடுத்தது. நன்கு படித்து தேறி வந்த கிருஷ்ணசாமி சித்தமருத்துவம் படித்து மருத்துவரானார். ‘வெங்கட்டநாயக்கர் தர்ம வைத்தியச்சாலை’ என்ற பெயரில் தொடங்கி நடத்திவரத் தொடங்கினார். ராமசாமியோ சிறந்த வியாபாரியாக மாறி இருந்தார்.

வியாபாரத்தில் கொடிகட்டி பரந்த ராமசாமியின் கிண்டலும், குதர்கமும் அதிகமாகிக் கொண்டே போனது. அவரின் பேச்சை ரசிக்கின்ற, ஆதரிக்கின்ற நண்பர்களின் வட்டமும் பெருகியது. வியாபாரம் தவிர்த்த நேரங்களில் நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து வழக்கப்படி விவாதங்களில் ஈடுபடுவார். நண்பர்களின் சவகாசம் விவாதத்திற்கு மட்டும் பயன் படவில்லை.

அந்த கால கட்டத்தில் பணம் படைத்த செல்வந்தர்களின் மைனர் விளையாட்டுக்களிலும் ஆர்வம் ஏற்பட்டது. ராமசாமியின் மைனர் நண்பர்களில் பலருக்கு குடிக்கும் பழக்கம் இருந்தது. தான் அந்த பழக்கத்திற்கு அடிமையாகா விட்டாலும் நண்பர்கள் எல்லோருக்கும் தன்னுடைய காசிலேயே குடிக்க சரக்கு வாங்கிக்கொடுப்பார்.

அவர்களின் துணையோடு தேவதாசிகளையும் நாடிப்போக ஆரம்பித்தார். மண்டிக்கடையை அடைத்தபின் வீட்டுக்கு வராமல் நேராக தாசி வீடுகளுக்கு போய், உல்லாசமாய் பொழுதை கழித்துவிட்டுத்தான் வீடு திரும்புவார் ராமசாமி.

பெரிய நாயக்கரின் சின்னமகன் ராமசாமி நாயக்கர் இப்படி அடிக்கடி தாசி வீடுகளுக்கு போய் வரும் செய்தி குடும்பத்தாருக்கு எட்டியது. சேரக்கூடாத சேர்மானங்களினால் தான் இப்படி தங்கள் மகன் ஆகிவிட்டான் என்று வருத்தப்பட்டனர் பெற்றோர்.

ஒரு கல்யாணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொந்தங்கள் சொல்ல.. ராமசாமிக்கு பெண் பார்க்கத் தொடங்கினார்கள். விசயம் ராமசாமியின் காதுகளுக்கு எட்டியாது. நேராக வீட்டிற்கு போனார். தான் கேள்விப்பட்ட செய்தி உண்மையா என்று கேட்டார். ஆம் என்றனர் பெற்றோர்.

திருமணம் செய்துகொள்வதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ஆனால் தான் சொல்லும் பெண்ணை மட்டுமே மணப்பேன் என்றும் பிடிவாதமாகச் சொன்னார் ராமசாமி. அவரின் தைரியமான இந்த கருத்து, குடும்பத்தினர் அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

அன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பதை முடிவு செய்யும் உரிமை மணமக்களுக்கு கிடையாது. பெற்றோர்கள் முடிவு செய்வார்கள் பெண்ணோ, பையனோ எதிர்ப்பு சொல்லாமல், பெற்றோரின் சொல்படி நடக்க வேண்டும். அப்படித் தான் நடந்து கொண்டிருந்தது.

அப்படியான சூழலில், நான் சொல்லுகின்ற பெண்ணைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொன்னால்.. அதிர்ச்சியடையாமல் என்ன செய்ய முடியும். மறுத்துப் பேசலாம் என்றாலும் உள்ளுக்குள் ராமசாமியின் செயல்கள் அச்சமூட்டின. குடும்பத்து பெயரை கெடுத்துவிடுவான். அதற்கு அவன் சொல்லுவதை கேட்டுப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள் பெற்றோர்கள்.

சரி.., தாசி வீடுகளுக்கு போவது குறைந்தால் போதும் என்ற எண்ணமும், தங்கள் அந்தஸ்துக்கு ஏற்றபடியே தான் ராமசாமி பெண் பார்த்து இருப்பான் என்ற நம்பிக்கையிலும் ‘ஆகட்டும்..முதலில் பெண்ணைப் பற்றி சொல்லு’ என்றனர்.

ராமசாமி பெண்ணைப் பற்றி சொல்ல.. மேலும் அதிர்ந்து போனார்கள் குடும்பத்தினர்.

__________________00000_________________(தொடரும்..3 )


Comments

7 responses to “2. மைனர் ராமசாமி”

  1. ஏன் என்ற கேள்வி கேட்காத வாழ்க்கை இல்லை? இருப்பதை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளாமல் ஒவ்வொன்றையும் கேள்வி கேட்டு காரணம் புரிந்தால் மட்டும் கடைப்பிடிக்கும் தைரியம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.

    விறுவிறுப்பாக போகிறது. அடுத்த பகுதி எதிர்பார்க்கிறேன்.

    அன்புடன்,
    மா சிவகுமார்

  2. அவசியமான பதிவு. அழகாக செல்கிறது.

    சினிமாவில் செய்யப் பட்ட சமரசங்கள் உங்களுக்குத் தேவைப்படாது. எனவே சினிமா மூலம் அறிந்த பெரியாரை விட அதிகமாக, நிஜமான பெரியாரை இன்றைய மக்கள் அறிந்து கொள்ள உதவும்.

  3. திங்கட்கிழமையை எதிர்பார்க்க வைக்கிறது

  4. sivagnanamji Avatar
    sivagnanamji

    சமரசம் எதுவும் செய்துகொள்ளாமல் எழுதுங்கள்
    வழமையான கோணங்களை விட்டு புதிய கோணத்தில் எடுத்துச் செல்லுங்கள்

  5. sivagnanamji Avatar
    sivagnanamji

    பதிவு நன்றாக உள்ளது

  6. நன்றி நண்பர்களே..
    நிச்சயம் சமரசம் இருக்காது.
    நானறிந்த பெரியாரை வெளிக்கொண்டு வரவே இம் முயற்சி.

  7. எம்.லோகநாதன். எம்.ஏ.,பி.எட். Avatar
    எம்.லோகநாதன். எம்.ஏ.,பி.எட்.

    பெரியார் என் சகாப்தம் இந்த காலத்தில் தொடர்ந்தால் சாதீயக்கொலைகள் குறைந்து, சாதிகளற்ற,மூடப்பழக்கங்களற்ற ஒரு புதிய தேசம் பிறக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *