இலக்கியவாதியாக காட்டிக் கொள்ள சில வழிகள்…

ஆள்பாதி ஆடை மீதி

க்ளோஸ் அப்ல ஒரு போட்டோ. அல்லது பேனா கொண்டு மூக்கை குத்துவது போலவோ, கண்ணத்தில் கை வைத்து மோட்டு வளையை பார்த்த மேனிக்கோ, ஒருவாரமோ, ஒரு மாசமோ மழிக்காத தாடி மீசையுடன் இருந்தால் சிறப்பு.

பிரதி மட்டுமே மிச்சம். ஆசிரியன் செத்துவிட்டான்னு சொல்லிகிட்டாலும் நாளைக்கு நீங்க புத்தகம் போடும் போது கடைசி அட்டையில போட்டோ போட இதுமாதிரி புகைப்படங்கள் உதவும். பேண்ட் சட்டை எல்லாம் வேலைக்கு ஆவாது. அதனால.. நல்லதா நாலு ஜோடி ஜிப்பா வாங்கி வச்சுகுங்க. மேலுக்கு ஜிப்பாவும், கீழுக்கு ஜீன்ஸும் ஓகே!-ஜீன்ஸ் கொஞ்சம் அழுக்காகவும் இருக்கனும்.

அப்படியே ஒரு ஜோல்னா பை. இது இருந்தா மட்டும் தான் உங்களை நாங்க கணக்கிலேயே எடுத்துப்போம்.

அச்சுடகங்கள் குறித்த தெளிவு

வெகுஜன பத்திரிக்கைகள்/இதழ்கள் Vs சிறு பத்திரிக்கைகள் என்ற வார்த்தையை குறைந்தது ஒரு வார காலத்துக்கு ஒரு நாளைக்கு நூறு முறைக்கு குறையாமல் எழுதிப் பார்த்துக் கொள்ளவும். அவ்வப்போது பேச்சிலும், எழுத்திலும் இடைச்சொருகலாக பயன்படுத்திக்கொள்ளலாம். நம்மூர் சினிமா நடிகைகள்/இயக்குனர்கள் படத்தை அட்டையில் போட்டல் அது வெகுஜன பத்திரிக்கை/இதழ். ஈரானிய, ஹங்கேரி, மங்கோலிய நாட்டு நடிகைகள்/இயக்குனர்களை அட்டையில் போட்டால் அது இலக்கிய பத்திரிக்கை/சிறு பத்திரிக்கை என்ற வித்தியாசத்தை உணர்க.

சில பிரபல பெரிய ஊடகக்காரங்களை தண்ணியா கவனிச்சா.. எழுதி கூட அனுப்ப வேண்டாம். போனிலேயே கூட சொல்லிக்கலாம். அப்படியும் படைப்பு அந்த ஊடகத்தில் வரும். உலகம் போற்றும் எழுத்தாளர்னு சொல்லிக்கலாம்.

சொல்லறிவு

உலகம்- பிரபஞ்சம், நடுராத்திரி- நிசி என்று மாற்று வார்த்தைகளை சரியாக தேர்வு செய்ய பழகிக்கொள்ளவும். ”பார்க்கில் அவன் நடந்தான்” அப்படின்னு எழுத வேண்டிய இடத்தில்  “புற்தரையில் அவன் கால்களால் அளவளாவினான்”னு எழுதனும். அப்ப தான் நீங்க பெரிய ஆளாக மதிக்கப்படுவீங்க. தொடக்கத்தில் கஷ்டமாக தெரிந்தாலும் தொடர் பயிற்சியின் மூலம் வெற்றி பெற முடியும்.

உலக திரைப்பட விமர்சனம்

உலக சினிமா-ங்கிறது என்னென்னா. . வெள்ளைக்காரர்கள் நடித்த நல்ல ப்ளூ பிலிம் டிவிடியா பார்த்து பதினாலு வாங்கிக்கிடனும். அதுல துளியாவது கதையோட இருக்குற மாதிரி பார்த்துக்கிடனும். எடுத்த எடுப்பிலேயே.. ஆடைகளை அவிழ்த்துப்போட்டுட்டு ஜிங்கு ஜிக்கான் ஜிக்கான்னு ஏதும் வராதமாதிரி பார்த்துக்குங்க.

குறிப்பா.. அமெரிக்கர்களோட படத்தை தவிர்த்துடனும். அதுலேயும் துன்புறுத்தி இன்புறும் சைக்கோத்தனமான டிவிடி கிடைக்கும். அதை தேர்வு செஞ்சுட்டா பெட்டர். (அதை பார்த்தா நாலு நாளைக்கு சோறு திங்க முடியாது. அடவிடுங்க பாஸு  இது மாதிரி தியாகம் பண்ணினாத்தான் இலக்கியவாதியாக முடியும்) அப்புறம் அந்த படங்களில் இருக்கும் விசயங்களை எழுத்தில் கொண்டு வந்து எழுதினா.. அது தான் “உலக திரைப்பட விமர்சனம்”. எவனாவது கேட்டா உனக்கு பின்நவீனத்துவ அறிவே இல்லைன்னு சொலீடனும். நடுநடுவுல.. பாலியல்வறட்சி, பாலியல் தாகம், பாலியல் மோர், பாலியல் தயிர் என்று இடையிடையே கொஞ்சம் தூவ மறந்திட வேண்டாம்.

ரே, Samira Makhmalbaf, அகிரா, Giuseppe Tornatore, சித்திக் பர்மக், மஜித் மஜிதி- போன்றோரின் படங்களை பார்க்க நேரிட்டாலும் இதைவிட.. குருவி, அதிசிய பிறவி போன்ற தமிழ்ப் படங்களே மேல் என்று சொல்லிக்கனும். அப்போதான்.. படிக்கிறவன்.. என்னமோ இருக்குடா… நமக்கு பின்நவீனம் தெரியாதுன்னு சொல்லீடுவாய்ங்க போலன்னு அமைதியாக ஓடிடுவாங்க.

கவிதை

இலக்கியவாதி ஆகனும்னா எதாவது எழுததெரியனுமேன்னு கேட்பீங்க.. அது ரொம்ப ஈஸிங்க. ஒரு கவிதைய உதாரணத்துக்கு சமைச்சு காட்டறேன் பாருங்க (கவிதய சமைக்கறதான்னு ஆச்சரியப்படாதீங்க, இப்படித்தான் அப்பப்ப படிக்கறவங்கள அதிர்ச்சியடைய வைக்கணும்) ஒங்க தெருவை இந்த பக்கத்திலிருந்து, அந்த பக்கம் வரை மெதுவா கவனிச்சுகிட்டே நடங்க.. கண்ணில் படுவதையெல்லாம் எழுதிகிட்டே வாங்க.. இதுல ரொம்ப முக்கியம் ஒண்ணுக்கு கீழ ஒண்ணா எழுதிகிட்டு வரனும். இப்படி..

பந்துவிளையாடும் சிறுவர்கள்
இடிந்த வீடு.
மணியடித்தபடி செல்லும் பால்காரன்
ஆளுயரம் வளர்ந்த எருக்கஞ்செடிகள்
சைக்கிள் பழகும் சிறுமி
பட்சிகள் புணரும் படபடப்புச்சத்தம்
காற்றில் திறந்து மூடும் ஒற்றைச் சன்னல்
செங்கல் பல்லிளிக்கும் வீடு
தெருநாய்
வீதியில் கிடக்கும் சானிட்டரி நாஃப்கின்
பிளாஸ்டிக் கழிவு திண்ணும் மாடு
பழங்கால பங்களாவின்முன்
வெகு நேரமாய்
யாசகம் கேட்டுகொண்டிருக்கும்

குருட்டு பிச்சைக்கார கிழவி

குனிந்து கோலம் போடும் எதிர்வீட்டுப் பெண்

குனியாமல் அதை வேடிக்கை பார்க்கும் இளைஞன் (இது நீங்களாக் கூட இருக்கலாம், படைப்பாளியும் பிரதிக்குள்ள வரலாம், தப்பில்ல)

**

இப்படி பார்த்தவற்றை எழுதிய பின் சில வரிகளை நடுநடுவே அடித்துவிட்டால் உங்களுக்கு ஒரு கவிதை கிடைத்து விடும். சில இடங்களில் முன்னும் பின்னுமாக வார்த்தைகளை மாற்றியும் போட வேண்டியதிருக்கும். கீழே பாருங்கள்

பந்துவிளையாடும் சிறுவர்கள்
இடிந்த வீடு.
மணியடித்தபடி செல்லும் பால்காரன்
ஆளுயரம் வளர்ந்த எருக்கஞ்செடிகள்
சைக்கிள் பழகும் சிறுமி

பட்சிகள் புணரும் படபடப்புச்சத்தம்
காற்றில் திறந்து மூடும் ஒற்றைச் சன்னல்
செங்கல் பல்லிளிக்கும் வீடு
தெருநாய்
வீதியில் கிடக்கும் சானிட்டரி நாஃப்கின்
பிளாஷ்டி கழிவு திண்ணும் மாடு
பழங்கால பங்களாவின்முன்
வெகு நேரமாய் யாசகம் கேட்டுகொண்டிருக்கிறாள்
அந்த குருட்டு பிச்சைக்கார கிழவி

குனிந்து கோலம் போடும் எதிர்வீட்டுப் பெண்

குனியாமல் அதை வேடிக்கை பார்க்கும் இளைஞன்

இப்படி எடிட் பண்ணிட்டீங்களா.. இனி கவிதை ரெடி.

முழுமையான சாம்பிள் கவிதை கீழே

ஆளுயரம் வளர்ந்த
எருக்கஞ்செடிகள்
பட்சிகள் புணரும் படபடப்புச்சத்தம்
காற்றில் திறந்து மூடும்
ஒற்றைச் சன்னல்
செங்கல் பல்லிளிக்கும்
அந்த பழங்கால பங்களாவின்
முன்
வெகு நேரமாய்
யாசகம் கேட்டுகொண்டிருக்கிறாள்
அந்த குருட்டு பிச்சைக்கார கிழவி.

கவிதை எழுதியாச்சு. இனி கவிஞன்னு சொல்லிக்கொள்ளலாம். உங்களை யாராவது இன்னொருவரிடம் அறிமுகப்படுத்தும் போது கவிஞர் என்று சொல்லி அறிமுகப்படுத்தும்படி கூறிவிடுங்கள். அவ்வளவு தான் நீங்களும் கவிஞர் ஆகிடலாம்.
கேள்விக்கு பதில் (விவாதங்களின் போது/உரையாடலை முன்வைத்து)

உங்களிடம் யாராவது ஏதாவது கேள்விகளை வைத்தால்.. தொடர்பு இருக்குறமாதிரியே.. தொடர்பு இல்லாமல் பதில் சொல்லனும். சில சமயம் எதிர் கேள்வியையும் கேட்டு வைக்கணும்.

சில உ.தா பாருங்கள்.

கேள்வி: நீங்கள் ஆணாதிக்கவாதின்னும், பின்நவீனத்துவவாதின்னும் சொல்லிக்கிறீங்களே.. பின்நவீனத்துவம் ஆணாதிக்கத்தை ஏற்றுக்கொள்வதில்லையே?

பதில்: நன்றி. எனக்கு பின்நவீனத்துவம் பற்றி நன்கு தெரியும்.

கேள்வி: உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா இல்லையா?

பதில்: யோனியை பற்றி எழுதுவதால் எனக்கு மணமாகிடுச்சுன்னு தீர்மானத்து வருவது தப்பு. யோனியை பற்றி பேசாமல் இருக்குறவங்களுக்கெல்லாம் மணமாகலைன்னும் சொல்லீட முடியாது.

கேள்வி: சமீப காலமா உலகத்திரைப்படங்கள் குறித்து அதிகம் எழுதுகிறீர்கள்.. அப்ப இந்திய திரைப்படங்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?

பதில்: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கலாம். கிட்டப்பார்வைக்கு குழி லென்சும் தூரப்பார்வைக்கு குவி லென்சும் தான் பயன்படுத்துகிறார்கள். அதெல்லாம் தப்புன்னு யாரும் சொல்லலையே.. என்னோட பார்வை எனக்கு. என்னைய மட்டும் ஏன் இப்படி கேக்குறீங்க?

-இப்படி நாலு இடத்தில் பதில் சொல்லிப் பாருங்க.. அப்புறம் ஒரு பய கேள்வியே கேட்க மாட்டான். அவரு பெரிய பின்நவீனத்துவ எலக்கியவியாதிப்பான்னு ஓட ஆரம்பிச்சுடுவான்.

கூட்டங்கள்

இது ஏதோ ஆவி எழுப்புதல் கூட்டம் மாதிரின்னு முன்முடிவுக்கு வந்துட முடியாது. வராமலும் இருக்க முடியாது. நான் சொல்ல வருவது இலக்கிய கூட்டங்கள், நூல் வெளியீட்டு விழா, கவிதை அரங்கம், விமர்சன கூட்டம் இது மாதிரி எங்க போவதாக இருந்தாலும் மேலே சொன்ன ஆடைகளில் போகனும் என்பதை நினைவில் கொள்க.

அப்புறம்.. இலக்கிய கூட்டங்களுக்கு வரும் பெரிய எழுத்தாளர்/சிந்தனையாள்ர்/அறிஞர்/விஞ்ஞானி யாரோ ஒரு ஆளுன்னு வச்சுக்குங்க.. அவரது புகழ்பரப்பும் தொண்டரடிப்பொடிகள் நிறைய பேரு இருப்பாங்க.. அவங்களையும் தெரிஞ்சு வச்சுக்குங்க. புகைப்படம் எடுக்க, புத்தகத்துல கையெழுத்து வாங்கன்னு உதவுவாங்க. (கமிசனா அரை குவாட்டர் கொடுத்தா போதும்)

கொண்டாட்டம்

இது தான் ரொம்ப முக்கியமான கட்டம்/சதுரம்/வட்டம்/நீள்வடிவம் எப்படியோ முக்கியமான ஒண்ணு. கண்டிப்பாக தண்ணியடிக்க தெரிஞ்சிருக்க வேண்டும். அதுவும் அடுத்தவன் காசில். அப்ப தான் நீங்க சரியான இலக்கியாவாதியா உருவாக முடியும். கொண்டாட்ட மனநிலையை உணர்ந்தவராக கருதப்படுவீர்கள்.

தண்ணிவாங்கி கொடுக்கும் ஸ்பான்ஸரிடம் பேசும் போது காப்கா, ஈஷ்கார், தெரிதா, தெரியலையா,  ஜெ.கே, மார்க்ஸ், முல்லர், கில்லர்  என்று ஏகப்பட்ட பெயர்களை நடுநடுவே சொல்லவேண்டும். அப்போது தான் அவர் உங்களை பெரிய ஆளாக நினைத்து பயப்படுவார். அவசியமெனில் திராவிடம், ஆரியம், பார்ப்பனியம், பெரியார் பெயர்களையும் இடையிடையே தூவிக்கலாம். நிஜமான பின்நவீனத்துவ ஆளாக காட்டிக்க இது உதவும்.

அதுக்காக ஒரேடியா இப்படியே பிளேடு போட்டுறக் கூடாது. அப்புறம் அந்த பலியாடு எஸ்ஸாகிரும். அதுனால அப்பப்ப அவங்க ரேஞ்சுக்கு சில சினிமா கிசு கிசுக்களையும் இடையிடையே தூவணும். அப்பத்தானே காசு செலவழிக்கறவனும் கொஞ்சம் திருப்தியாவான். இதில் இன்னொரு விஷயம். உள்ளூர் சினிமா கிசுகிசுவா இருக்கணும். நீங்க பாட்டுக்கு உலக சினிமா கிசு கிசுவ சொன்னா அவன் பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடிடுவான்.

சிறுபத்திரிக்கைகள் & வலைப்பதிவு

தமிழில் ஏகப்பட்ட சிறுபத்திரிக்கைகள் வருகிறது. அதில் சிலவற்றிற்கு சந்தா கட்டி விடுங்கள். அப்புறம் நீங்கள் அதிலும் தொடர்ந்து எழுதலாம். அதில் வரும் அறிவிப்புகளையும், நூல்விமர்சனங்களையும் தழுவியோ, காப்பி எடுத்த உங்கள் வலைத்தளத்தில்/பஸ்ஸில்/பேஸ்புக்கில்……. போட்டு விட்டால் நீங்களும் கூட இலக்கியவாதிக்கான அந்தஸ்த்தை பெற முடியும். எவனை பிடிக்கலையோ.. அவனையும் அவன் எழுதுனதையும் கூட திட்டி எழுதிட்டு, எள்ளல், பகடி, கபடி-ன்னு சொல்லிக்க வேணும்.

எவன் உங்களுக்கு டீ, தண்ணி வாங்கித்தரலையோ அவன் குசு விட்டால் கூட.. நிலப்பரப்புத்துவ, முதலாளித்துவ, தரகு முதலாளித்துவ, நவீனத்துவ, பின் நவீனத்துவ, குண்டூசி நவீனத்துவ, ஆணி நவீனத்துவ மற்றும் கூறுகள் கூறு இல்லாதவைகள்னு கட்டுரைஎழுதனும் /பதிவு போடனும்.

உங்களோடு பேசிக்கொண்டு இருக்கும் போது ஒருத்தனுக்கு அவசரமா சிறுநீர் வந்து, சிறுநீர் கழிக்க ஓடினான்னு வச்சுக்குங்க… உடனே… கார்ப்ரேட் கம்பெனியில் இருப்பதால் தான் இப்படி ஓடுறார். சாதாரண ஆளா இருந்திருந்தால்.. இப்படி ஓரமாக போய் இருப்பார். ஐந்து இலக்கத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் திமிர் அதனால் இப்படியெல்லாம் செய்கிறார் என்று கூவவேண்டும்.

நடுநடுவுல மானே தேனே போடுறமாதிரி.. ஆயா சுட்ட வடை கெட்டு போச்சு, அப்பத்தா செத்துப்போச்சு, தமிழ்ச்சூழல் நசுங்கிப் போச்சு, மலையாள சூழல் வீங்கிப் போச்சு, மராட்டி சூழலுக்கு விரை வீங்கிப்போச்சுன்னு சொல்லிகிட்டே இருக்கனும்.

அரசியல், சினிமா மாதிரி இங்கேயும் சில சமயங்களில் வாரிசுகள் களமிறங்கினாலும்.. உலகம் அவர்களை எளிதாக ஏற்றுக்கொள்ளாது. அதனால.. அவங்களைப் பத்தி பயப்பட வேண்டாம். வழக்கமா அவங்க பரம்பரை பூச்சாண்டி காட்டிட்டு போய்டுவாங்க. அவர்கள் வேறு இடம் சென்று வாரிசு உரிமையை நிலைநாட்டிக் கொள்வார்கள்.

அதைவிட மிக முக்கியமான ஒன்னு இருக்குங்க.. அது என்னென்னா.. வலை உலகில் நீங்க படைப்பு ஏதும் எழுதுனீங்கன்னா.. பல பொஸ்தவம் போட்ட ஆளுகளுக்கு எரிச்சல் வந்துடும். சகட்டு மேனிக்கு திட்டினாலும் திட்டுவாங்க. அதனால்.. நீங்க நூல் அறிமுகம், இலக்கிய வாசிப்பு, எழுத்தாளர் அறிமுகம்னு மட்டும் எழுதிகிட்டு வந்தீங்கன்னா.. சிறந்த ஆளுன்னு பணமுடிப்பும் பரிசும் கொடுத்து.. கவுரவிக்கப்படுவீர்கள் என்பதையும் நினைவில் கொள்க.

படங்கள்:

இலக்கியவாதிகள் போல பொருத்தமான படங்களை சரியான இடத்துல போடத்தெரியாததினால்.. இங்கு சுட்டி கொடுத்திருக்கிறேன். அதை பார்த்து, நீங்களே சரியான இடத்தில் பொருத்தி படித்துக்கொள்ளவும். இந்த படங்கள் சரியான தேர்வு இல்லை எனில் நீங்களே கூட தேடிக்கொள்ளலாம். சுட்டி கட்டக்கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது.

http://tamizharivu.files.wordpress.com/2010/03/literature_1_large_by_james119.jpg

http://static.hfholidays.defacto-cms.com/hfholidays/assets/images/2010/01/Writing_6_jpg_220x145_crop–10,0_q85.jpg

http://oglobo.globo.com/blogs/arquivos_upload/2006/12/55_alienista.jpg

http://www.booksyouwant.net/Images/00530%281%29R.jpg

இங்கே போய் தேடலாம்.

—–

மீண்டும் இன்னொரு சந்தர்ப்பத்தில்…

This entry was posted in நகைச்சுவை, புனைவு and tagged , , , , , , , . Bookmark the permalink.

51 Responses to இலக்கியவாதியாக காட்டிக் கொள்ள சில வழிகள்…

  1. ரசித்து படித்தேன் . படித்தால் உண்மையான இலக்கியவாதியும் தன்னுடைய அத்துமீறல்களை உணருவான் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.