சின்னத்திரை தொடங்கி, பெரிய திரை வரைக்கும் நீண்ட அனுபவம் கொண்டவர் நடிகர் ப்ரித்விராஜ் (என்கிற) பப்லு. கலைத்துறையைக் கழித்துவிட்டுப் பார்த்தால் – அவர் ஒரு அன்பான கணவர், கனிவான தந்தை, பொறுப்பான குடிமகன். செல்லமேவின் ஏப்ரல் இதழுக்காக அவரிடம் நாம் கண்ட நேர்காணல் இது…

 

செல்லமே: உங்களுடைய வீட்டில் யாரோட ஆட்சி?
பப்லு: இதென்னங்க கேள்வி? (சிரிக்கிறார்) எல்லா வீடுகளைப் போலவே எங்க வீட்டுலயும் அம்மாவோட ஆட்சிதான். அப்பா போலீஸ்காரராக இருந்தாலும், சினிமாவுலதான் ஆர்வம் அதிகம். ஏன்னா, அந்த போலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி நடிக்கணும்கிற ஆர்வத்தோட சுத்திக்கிட்டு இருந்தாராம். அவரோட கண்ணு நீலக் கலர்ல இருக்கும். அவருக்கு நடிக்க ஒரு வாய்ப்பும் வந்தது. டெஸ்ட் எல்லாம் எடுத்துப் பார்த்தாங்களாம். அப்போ கருப்பு வெள்ளை சினிமாதானே! டெஸ்ட்டுல இவரோட கண்ணு திரையில வெள்ளையாக இருந்ததால், அந்தச் சினிமாவுல நடிக்கும் வாய்ப்பு பறிபோயிடுச்சு. அதுக்கப்புறம்தான் அவரு, போலீஸ் வேலையில சேர்ந்துட்டார். சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்தார். ஜெமினி ஸ்டூடியோ பக்கம்தான் வேலை. அதனால தொடர்ந்து சினிமாக்காரர்களோடு நட்பு இருந்துகிட்டே இருந்துச்சு. அம்மாதான் வீட்டையே தாங்கினாங்க!
செல்லமே: சின்ன வயசுல உங்களுக்கு அம்மா, அப்பா – யாருகிட்ட பயம்?
பப்லு: சந்தேகமில்லாம அம்மாவுக்குத்தான்! அம்மா பாசமானவங்கதான். அதேசமயம் ரொம்பவும் கண்டிப்பானவங்க!

செல்லமே: சினிமாவுக்குள்ள எப்படி வந்தீங்க?

பப்லு: எங்க அப்பாவுக்கு சினிமாவுல பலரையும் தெரியும்னு சொன்னேன் இல்லையா? அவர் ஒரு ஷூட்டிங் பார்க்க என்னைக் கூட்டிக்கிட்டு போயிருந்தார். என்னைய அழைச்சுகிட்டுப்போன அவரே ஷூட்டிங் பார்க்குறதுல ஆர்வமா நின்னுட்டார். ஒரே இடத்துல இருக்கப் பிடிக்காமல் நான் அப்படியே நகர்ந்து அந்த ஸ்டூடியோவை விட்டு வெளியே வந்துட்டேன். அடுத்த ஸ்டூடியோவுல ஏதோவொரு இந்திப்பட ஷூட்டிங் போல! அங்க மும்பையில இருந்து ஒரு குழந்தை நட்சத்திரம் வரவேண்டிய சூழல், அவங்க வந்துசேர தாமதமாகிக்கிட்டு இருந்துச்சு போல. என்னைய கூட்டிக்கிட்டுபோய் நடிக்க வச்சுட்டாங்க. நானும் நல்லா நடிச்சுட்டேன். அப்புறம் மும்பை குழந்தை நட்சத்திரம் வந்துசேர, அவங்க அம்மா, அந்தப் படத்தோட டைரக்டரோட ஒரே சண்டை. அந்தப் பக்கம் என்னைக் காணோம். எங்க அப்பா தேடிக்கிட்டு இருக்கார். நானோ மேக்அப் எல்லாம் போட்டு நடிச்சுகிட்டு இருக்கேன். மும்பை குழந்தை நட்சத்திரத்தை, திரும்பவும் அவங்க அம்மா கூட்டிக்கிட்டு போயிட்டாங்க. அதனால என்னையவே நடிக்கவச்சு அந்தப் படத்தை எடுத்தாங்க. இப்படித்தான் என் சினிமா என்ட்ரி இருந்தது. தன்னால் நடிக்க முடியாமல் போனாலும் நான் நடிக்க வந்துட்டேன்னு அவருக்கு ரொம்பப் பெருமை. அப்படியே சின்ன வயசுலேயே பல படங்களில் நடிச்சுட்டேன். அன்றைக்குத் தொடங்கிய பயணம் இன்னும் தொடருது.

செல்லமே: தொடக்க காலத்தில் வில்லனா வந்தீங்க! இடையில காமெடியில் எல்லாம் கலக்குனீங்களே!

பப்லு: நான் இயல்பிலேயே காமெடி சென்ஸ் நிறைஞ்ச ஆளு. பெசன்ட்நகர் பீச்சுல நண்பர்களோட உட்கார்ந்துகிட்டு, ஒரே கலாட்டாவும் காமெடியுமா இருப்போம். நண்பர்கள் கூட்டத்துல எப்பவுமே நான் காமெடியன்தான். நான் சொல்ற காமெடிக்கு எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பாங்க. அந்தச் சமயத்துலதான் கே.பி. சாரோட மகன் கைலாசமும், டைரக்டர் நாகாவும் சேர்ந்து ரமணி vs ரமணி சீரியலுக்குப் பொருத்தமான ஹீரோவ தேடிக்கிட்டு இருந்தாங்க. அப்போ சினிமாவுல நான் தொடர்ச்சியா சைக்கோ மாதிரியான கேரக்டர்கள்ல நடிச்சுகிட்டு இருந்தேன். அதனால அவங்களுக்கு நான் இதுக்கு செட் ஆவேனான்னு சந்தேகமிருந்தது. பீச்சுல நாங்க வழக்கமா சந்திக்கிற இடத்துல அவங்களும் வந்துட்டாங்க. நான் சில காமெடி சீன்ஸ் நடிச்சுக் காட்டினேன். எல்லோருக்கும் ஹாப்பி. அதுக்கு அப்புறம்தான் ரமணி vs ரமணி சீரியலில் நடிச்சேன்.

செல்லமே: உங்களுடைய திருமணம்?

பப்லு: அக்மார்க் காதல் திருமணம். பெற்றோர் ஒப்புதலோடு நடந்தது. ஒரே ஒரு பையன். அஹேத்னு பெயர் வச்சோம். பாரசீக மொழியில் அஹேத்னா, தனித்துவமானவன், தனியொருவன்னு பெயர்.
செல்லமே: உங்க மகனுக்கு எத்தனை வயதில் ஆட்டிசம் இருப்பதைக் கண்டுபிடிச்சீங்க?

பப்லு: மூணு மூன்றரை வயதிருக்கும். டாக்டர் சொன்னதுமே எல்லா பெற்றோர் போலவும் முதலில் இருக்கவே இருக்காதுன்னு மறுத்துட்டோம். ஏன்னா பார்க்குறதுக்கு எங்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அப்போ ஆட்டிசம்ங்கற வார்த்தையே எங்களுக்குப் புதுசு. அதன்பிறகு பல ஊர்களுக்கும் போய், பல டாக்டர்களைப் பார்த்தோம், சுவிட்சர்லாந்து வரைக்கும் கொண்டுபோய் பார்த்தோம். எங்கயாவது உடனே சரிபண்ணிட முடியாதான்னு ஒரே ஏக்கமா இருந்துச்சு. இல்லை, எங்கேயும் இதை உடனே குணப்படுத்திட முடியாதுன்னு ஆனதும் சோர்ந்து போயிட்டோம்.

act babloo-003
மகனுடன் நடிகர் பப்லு


செல்லமே: அப்புறம்?

பப்லு: பல இடங்களில் தேடி கடைசியாக டெல்லியில நாங்க ஓர் அற்புதமான பெண்மணியைச் சந்திச்சோம். திருமதி. மேரி பர்வா (Merry Barua) என்பது அவங்க பெயர். அவங்க பையனுக்கும் ஆட்டிசம்தான். ஆனா தொடக்கத்துல என்னன்னு தெரியாம, பல வைத்தியம் பார்த்திருக்காங்க. மனநலக் கோளாறோ அப்படின்னு சந்தேகப்பட்டுக்கூட அதுக்கு வைத்தியம் பார்த்திருக்காங்க, கோயில், குளம்னு எல்லா இடங்களுக்கும் போய், கடைசியில தன் மகனுக்கு ஆட்டிசம் இருப்பதை அவங்க உணர்ந்துகொண்டபோது அந்தப் பையனுக்கு வயசு பதினெட்டு. அதுக்கு அப்புறம் அவங்க படிச்சு, இக்குழந்தைகளுக்காக வேலை பண்ணத் தொடங்கி இருக்காங்க. ஆக்ஷன் ஃபார் ஆட்டிசம் (Action for Autism) என்ற அமைப்பைத் தொடங்கினாங்க மேரி பர்வா. அவங்க நடத்தின ஒரு மாநாட்டுல கலந்துக்க, என்னோட மனைவி போயிருந்தாங்க. திரும்பி வந்தபோது கம்பீரமாக வந்தாங்க. அவங்கதான் சொன்னாங்க.. ஆட்டிசம்னா இப்படி இப்படி.. மருந்து மாத்திரை எல்லாம் சரிப்படாது. தெரபிக்கள் மூலம் ட்ரைனிங் கொடுத்தா நல்லதுன்னு. அப்புறம் மேரி பர்வா நடத்துற சிறப்பு கோர்ஸ்ல சேர்ந்து படிச்சாங்க. அதுக்கப்புறம் அவங்க இங்கே வந்து ஹேமா, கீதான்னு ரெண்டு தோழிகளுடன் இணைந்து, We Can-னு ஒரு ஸ்கூல் ஆரம்பிச்சாங்க. கீதா நிறைய பணம் போட்டாங்க. இப்போ அந்த ஸ்கூல் தொடங்கி பத்து வருஷத்துக்கும் மேலாகுது. நல்லா போய்க்கிட்டு இருக்கு.
இன்னிக்கு என்னோட மகனுக்கு, பத்தொன்பது வயது. சாதாரண குழந்தைகளைப் பெற்றவர்களுக்குள் இந்த வயது குழந்தைகளைப் பற்றிய ஒரு டென்ஷன் இருக்கும். கெட்ட பழக்கங்கள் ஏதும் பழகிடக் கூடாதேன்னு. ஆனா, எனக்கு தினம் தினம் மகிழ்ச்சிதான்! ஒவ்வொரு விஷயமாக என் பையன் கத்துக்கிட்டு செய்யும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளினால் சொல்லிவிட முடியாது. அவனுடைய தினசரி செயல்களில் ஒண்ணு புதுசா பண்ணினால்கூட அன்னிக்கு நாள் கூடுதல் சந்தோஷமாக இருக்கும்.

செல்லமே: ஒரு சிறப்பியல்பு குழந்தையை, மற்ற குழந்தைகளிடம் எப்படி அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பப்லு: குழந்தைகளுக்குள்ள எந்த வேறுபாடும் கிடையாதுங்க. பெற்றவர்கள்தான் இந்த விஷயத்தில் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கு. உதாரணத்துக்கு, அஹேத் சின்னவனா இருக்கும்போது அருகில் இருக்கும் குழந்தைகள் விளையாட அழைப்பாங்க. இவன் சட்டுனு போகமாட்டான். அப்ப அந்தக் குழந்தைகள் தங்களோட அப்பா, அம்மாவைப் பார்ப்பாங்க. அவங்களும் பந்து போட்டு விளையாடுன்னு சொல்லுவாங்க. அப்பிள்ளைகள் பந்து தூக்கிப்போட, இவனும் பந்து தூக்கிப்போட்டு விளையாடுவான். மாறாக பிள்ளைங்க பார்க்கும் நேரத்தில் அப்பெற்றோர், ‘கிட்டப் போகாதே! ஓடி வந்துடு’ன்னு சொன்னாங்கன்னா என்னாகும்?! பிள்ளைகள் பயந்துபோய் பின்வாங்கும். அதனால மற்ற பெற்றோர், முதலில் இக்குழந்தைகளைப் பற்றிய நல்ல புரிதலுக்கு வந்தால், சிறப்பியல்பு குழந்தைகளின் பெற்றோருக்கு பெரிய பலமாக இருக்கும்.

செல்லமே: இன்னிக்கு நிறைய ஆட்டிசக் குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுக்கிட்டு இருக்காங்களே!

பப்லு: ஆமா! நானும் கவனிச்சுக்கிட்டுதான் இருக்கேன். ஏன், எப்படி என்பது பற்றிய ஆய்வுகளை மருத்துவ உலகம் செய்துகிட்டு இருக்கு. கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதை சீக்கிரம் கண்டுபிடிக்க முடியுது. விழிப்புணர்வு இன்னும் பரவலாகணும். அதேசமயம் இக்குழந்தைகளின் பெற்றோர் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னன்னா, இங்கே எல்லா சிறப்பியல்பு குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும் வாழ்வில் முக்கியமான சில நிலைகள் இருக்கும். அப்படி எல்லாம் இருக்காது என்று மறுதலிப்பது, ‘என் பிள்ளையப் பார்த்து ஸ்பெஷல் பிள்ளைன்னா சொல்லுற!’ என்று கோபப்படுவது, எனக்கு மட்டும் ஏன் இப்படி அப்படீன்னு கழிவிரக்கம் கொள்வது, கடைசியாக உண்மையை ஏற்றுக்கொள்வது.. இந்த நிலைகளை எல்லா சிறப்பியல்பு குழந்தைகளின் பெற்றோரும் படிப்படியா கடந்து வருவாங்க. சிலர் கடைசி நிலையை மட்டும் ஒப்புக்கொள்ளவே மாட்டாங்க. ஒத்துக்கொள்கிறவர்களுக்கு, உலகம் என்ன சொன்னாலும் அதைப்பற்றிய கவலை இருப்பதில்லை. அதனாலேயே நாங்கள் போகும் கூட்டம், செமினார்ஸ் எல்லா இடங்களிலும் ஒப்புக்கொள்ளும் மனநிலையை அடையவேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இன்றைய அவசியத் தேவையும்கூட இதுதான்!

**************************

நன்றி: செல்லமே மாத இதழ்;ஏப்ரல் 2015


Comments

One response to “மகிழ்ச்சியான அப்பா நான் – நடிகர் ப்ருத்விராஜ் நேர்காணல்”

  1. அருமையான புரிதல் பாலா! நேர்காணல் ரொம்ப தகவல் நிறைஞ்சதா இருக்கு.

    பாராட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *