Appreciation

சின்னச் சின்ன பாராட்டுக்கள், பெரிய பெரிய செயல்களுக்கு அடித்தளமாக அமையும் என்பதை நாம் நினைவில் வைத்திருப்பது நல்லது. ‘இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அதெற்கெல்லாம் எங்கே சார் நேரமிருக்கிறது?’ என்று சொல்வோர் அதிகமாகிவிட்டனர். அது உண்மையாகவும் இருக்கலாம். அவர்களுக்காகவே கட்டுரைக்குள் நுழையும்முன், ஒரு சின்னக் கதையைப் பார்த்துவிடுவோம் நாம். அதன்பின் தலைப்புச்செய்திக்கு நாம் திரும்பலாம்.

 

தங்களின் ஓரே பையனை பள்ளியில் சேர்க்க, பல இடங்களைப் பார்த்து கடைசியாக ஒரு பள்ளியை முடிவுசெய்து சேர்த்துவிட்டனர் அந்தத் தம்பதியினர். மூன்று மாதம் கழித்து மகனை அழைத்து, ‘‘என்னவெல்லாம் பள்ளியில் சொல்லிக் கொடுக்கிறார்கள்?’’ என்று கேட்டார் தந்தை. அவனும், “ஏபிசிடி எல்லாம் சொல்லிக் கொடுக்குறாங்கப்பா. ரைம்ஸ் எல்லாம்கூட சொல்லிக்கொடுத்து இருக்காங்க” என்றான் மகிழ்ச்சியுடன்.

“எங்கே சொல்லு?” என்றார் அப்பா.

“ஏஏயே..” என்று பையன் தொடங்கினான்.

அப்பா அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். பையன் அடுத்த வார்த்தை சொல்லாமல் அப்பாவையே பார்த்தான். ‘சொல்லுடா!’ என்று குரலை உயர்த்தினார். திரும்பவும் பையன், ‘ஏஏயே..’ என்று நிறுத்தினான்.

அப்பாவுக்குக் கோபமாகிவிட்டது. ‘சொல்லுடான்னா..’ என்று ஓர் அதட்டல் போட்டார். அவ்வளவுதான்! பையன் ‘வீல்’ என்று அலறியபடி அம்மாவைத்தேடி உள்ளே ஓடினான்.

மூன்று மாதங்களுக்கு மேலாகியும் பையனுக்கு ‘ஏ’ தவிர ஒன்றுமே தெரியவில்லையே என்ற புகாருடன், மறுநாள் பள்ளி முதல்வரை சிறுவனின் பெற்றோர் சந்தித்தனர். முதல்வர், அச்சிறுவனின் வகுப்பாசிரியரை வரவழைத்தார்.

வகுப்பாசிரியர் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி. அவர் வந்ததும், பெற்றோர்தரப்பு புகார் என்ன என்று விளக்கப்பட்டது. ஆசிரியரோ, பெற்றோரின் புகாரை மறுத்தார். பையனுக்குச் சொல்லிக்கொடுத்த எல்லாப் பாடங்களும் தெரியும் என்று நற்சான்றிதழும் கொடுத்தார். ‘நிரூபிக்க முடியுமா?’ என்று பெற்றோர் கேட்டனர்.

ஆசிரியர் சிறுவனைத் தன் பக்கம் அழைத்து, “ஏபிசிடி தெரியும்தானே?” என்று கேட்டார். பெற்றோரின் நடவடிக்கையால் பயந்துபோயிருந்த சிறுவன், தெரியும் என்பதுபோலத் தலையாட்டினான். “எங்கே சொல்லு பார்க்கலாம்?” என்றார் வகுப்பாசிரியை.

‘ஏ’ என்று தொடங்கினான். ஆசிரியை ‘ம்’ என்றார்.

அவன் அடுத்து, ‘பி’ என்றான். ஆசிரியை ‘ம்’ என்றார்.

அடுத்து ‘சி’ என்றான். ஆசிரியர் திரும்பவும், ‘ம்’ என்றார்.

இப்படியாக அவன் சொல்லச் சொல்ல ஆசிரியை, ‘ம்.. ம்..’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இருபத்தி ஆறு எழுத்துக்களையும் தடையின்று சொல்லி முடித்தான் சிறுவன். ஆக, ஒரு சிறுவனுக்குத் தடையாக இருந்த அச்சத்தை சிறிய ஊக்குவிப்பு, சிறிய அங்கீகாரம் தகர்த்துவிட்டது.

இந்தக் கதையை இதற்கு முன்பும் நீங்கள் கேட்டிருக்க முடியும். ஆனால், இந்தக் கதையில் சொல்லப்படும் அங்கீகாரம்தான் இன்றைக்கு குழந்தைகளுக்கு மிகவும் தேவையாக இருக்கிறது. அவர்களை ஊக்குவிக்கவும், சரியான பாதையில் அழைத்துச்செல்லவும் பெற்றோரின் அரவணைப்பு அவசியமாகிறது.

நாமும் இப்படித்தான் இருக்கிறோமா என்பதை நாமே நமக்குள் கேட்டுக்கொள்வது சிறந்தது. அங்கீகாரம் என்றால் அதை எப்படி வழங்கவேண்டும் என்பதற்கு சில விதிகள் இருக்கின்றன. அவற்றைப் பார்ப்போம்…

1. பாராட்டில் உண்மை இருக்கட்டும்: ஒரு பானைக்கு நாலு கால் வரைந்து, ‘இதுதான் யானை’ என்று குழந்தை உங்களிடம் காட்டினால், ‘ஆஹா! அருமை, அற்புதம்’ என்று சொல்வதைவிட, ‘நல்லா இருக்கு. இப்படியே வரைஞ்சு பயிற்சி எடுத்துக்கிட்டா, யானை வரைய வந்துடும்’ என்று சொல்வதுதான் சரி.

thanks-418358_640

2. குழந்தைகளின் நற்பண்புகளைப் பாராட்டுங்கள்: நேர்மை, கனிவு, நம்பகத் தன்மை போன்ற குணங்கள் அவர்களிடம் வெளிப்படுகையில், அவர்களைப் பாராட்டுங்கள். அதேநேரம் மோசமான குணங்களுக்கு, கண்டிக்கவும் செய்யுங்கள். இரண்டையும், ஒவ்வொரு முறையும் தொடர்ந்து செய்யுங்கள். பாராட்டு, எப்போதும் வெறும் வாய் வார்த்தையாக மட்டுமாக இருந்துவிடாமல் அவ்வப்போது சிறுசிறு ஊக்கப்பரிசுகளும் தரவேண்டும்.

3. நட்சத்திரப் பட்டியல்: குழந்தைகளின் கண்ணில் படும் இடத்தில் அவர்களின் நட்சத்திரப் பட்டியல் ஒன்றை வைக்கலாம். ஒவ்வொரு நற்செயலுக்கும் அதில் ஒரு நட்சத்திரம் சேர்க்கலாம். ஐந்து அல்லது பத்து நட்சத்திரம் சேர்த்தால் அதற்கொரு சாக்லேட் அல்லது ஐஸ்கிரீம் என்பதுபோல அவர்களின் ஊக்க போனஸை வடிவமைக்கலாம். (இரு குழந்தைகள் இருக்கும் இடத்தில் நிச்சயம் ஒப்பீடு செய்யாதீர்கள்!)

4. சேமிப்பையும் நற்பண்புகளையும் ஒன்றிணையுங்கள்: வீட்டு வேலைகளில் உதவுவது, மதிப்பெண் வாங்குவது போன்ற நற்செயல்களுக்கு ஊக்கத் தொகையாகப் பணம் தருவது தவறல்ல. என்னென்ன நற்செயல்கள், அவற்றுக்கு எவ்வளவு பணம் நாம் தருகிறோம் என்பதை தேதி வாரியாக குழந்தையை விட்டே ஒரு நோட்டில் எழுதச் சொல்லலாம். அதேபோல, அவர்கள் அப்பணத்தைச் செலவழிக்கும் விதத்தையும் பதிய வைத்தால், வரவு செலவுகளைக் கையாளும் திறனும் வளரும்.

5. உழைப்பைப் பாராட்டுங்கள்: தீவிரமான உழைப்பிற்குப் பிறகும் உங்கள் குழந்தை ஒரு போட்டியில் பரிசுபெற முடியாமல் போகலாம். ஆனால், அவன் எவ்வளவு உழைத்தான் என்பது உங்களுக்குத் தெரியும். அதைக் குறிப்பிட்டு பாராட்டுங்கள்.

6. வேலையின் தரத்தைப் பாராட்டுங்கள்: காய் நறுக்கித் தரும்போது ஒரே சீராக அழகாக நறுக்கியிருந்தால், அதைக் குறிப்பிட்டு பாராட்டுவது. ஏனோதானோவென்று செய்வதைவிட தரமாகச் செய்வதை ஊக்குவிப்பது, அவர்களைச் செம்மையாளராக்குவதற்கான (perfectionist) வழி.
7. நண்பர்களையும் பாராட்டுங்கள்: குழந்தைகளின் நண்பர்களையும் அவர்களின் நற்செயல்களுக்குப் பாராட்டுங்கள். இதை உங்கள் குழந்தையிடமும் சொல்லுங்கள்: “உன் ஃப்ரெண்ட் மது, ரொம்ப நல்ல பொண்ணுப்பா. ரோட்ல கண்ணு தெரியாதவங்களுக்கு கிராஸ் பண்ண உதவிட்டிருந்தா” என்பதுபோல.

—-

நன்றி: செல்லமே மார்ச் மாத இதழ்

படம்: http:// pixabay . com/