தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதா எவ்வளவு பெரிய ஆளுமை என்பது மறுவாசிப்பில் தான் உணர முடிகிறது. பஸு-ல் பொன்ஸ் கொடுத்த சுட்டி மூலம் சுஜாதாலஜி என்ற வலைப்பக்கத்தை பார்க்க முடிந்தது. அதைல் சமீப காலமாக நான் சுஜாத்தாவைப் பற்றி சொல்லி வருவதையெல்லாம் எழுத்தாக காண முடிகின்ற போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. 🙂 அவரின் சில /பல ஐடியாலஜியில் உடன் பாடு இல்லாவிட்டாலும் அவரது எழுத்துக்கு நான் ரசிகன்.

சிறுகதைகளும், கட்டுரைகளும் போல ஏனோ நாவல்கள் (கணேஷ் + வசந்த் கூட்டனி தவிர) என்னை பெரியதாக ஈர்க்கவில்லை. ஆனால் அவரது அனேக எழுத்துக்களை நான் நூலகத்தில் தான் படித்திருக்கிறேன்.  என் சேமிப்பில் அவரது நூல்கள் ஏதும் இருந்ததில்லை. இந்த முறை புத்தக கண்காட்சியில் சில நூல்களை வாங்கினேன். அனைத்தையும் வாசித்தாகிவிட்டது.. மற்ற அவரது நூல்களை விரைவில் வாங்கவேண்டும் என திட்டம் உள்ளது.

W.R. வரதராஜனின் மரணம் யாரை உலுக்கியதோ.. இல்லையோ.. என்னை நிச்சயம் உலுக்கியது. பழகுவதற்கு மிகவும் எளிமையான மனிதர். ஆங்கில அறிவு அதிகம் பெற்றவர். ஆனால்.. அந்த அறிவை அகங்காரமாக வெளிப்படுத்திக்கொள்ளாதவர். அனேக வட நாட்டு மார்க்சிஸ்ட்டுகளின் தமிழக வருகையின் போது பொழிபெயர்ப்பாளராக இருந்தவர். ஒரு முறை கூட காகிதத்தில் மொழிபெயர்ப்பு குறிப்பு எடுத்து பார்த்ததில்லை. வடநாட்டு காம்ரேட் ஆங்கிலத்தில்.. பேச..பேச.. தமிழில் அருவி மாதிரி மொழிபெயர்த்துச்சொல்லிக்கொண்டே போவார் டபில்யூ.ஆர்.வி.

அவர் கடந்த பிப்ரவரி 11ம் தேதி கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார். போரூர் ஏரியில் இறங்கி இறந்து போனதாக சொல்லப்படும் தோழர் வரதராஜனுக்கு நீச்சல் நன்கு தெரியும் என்பது ஒருவர் சொன்ன செய்தி.

மார்சிஸ்ட் கட்சி வெளியிட்டிருக்கும்..

தோழர். உ.ரா. வரதராசனின் வாழ்க்கைக் குறிப்பு

தோழர் உ.ரா. வரதராசன் 9.7.1945 அன்று, அன்றைய வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள உள்ளியநல்லூர் என்ற கிராமத்தில் ஒரு மத்திய தர வர்க்க குடும்பத்தில் முதல் பிள்ளையாகப் பிறந்தார். அவரது தந்தை ரயில்வே நிலைய அதிகாரியாகப் பணியாற்றியவர்.

சென்னை விவேகானந்தா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரிக் காலத்திலேயே அவருக்கு இலக்கியம் மீதும், அரசியல் மீதும் ஈடுபாடு ஏற்பட்டது. சர்வோதயா இயக்கத்திலும் பின்னர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தலைமையிலான தமிழரசு கழகத்திலும் இணைந்து பணியாற்றினார். அவர் நடத்தி வந்த “செங்கோல்” பத்திரிகைக்கு உறுதுணையாக இருந்தார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறினார்.

தோழர் உ.ரா. வரதராசன் சிறந்த சொற்பொழிவாளர், எழுத்தாளர், மொழிப் பெயர்ப்பாளர், “பார்வதிபுரம்” என்ற நாவலை எழுதி சர்வோதாய இயக்கத்தின் பரிசினைப் பெற்றவர். “அருவி” என்ற இலக்கிய சிற்றிதழையும் மாணவப் பருவத்திலேயே நடத்தியுள்ளார். இதில் தமிழகத்தின் ஏராளமான எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர்.

1967ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கிப் பணியில் சேர்ந்த அவர் 17 ஆண்டுகள் வங்கிப் பணியில் இருந்தார். அப்போது, ரிசர்வ் வங்கி ஊழியர் சங்கத்தின் அகில இந்திய செயலாளராக பணியாற்றியுள்ளார். வங்கி ஊழியர் சம்மேளனத்தை உருவாக்குவதில் ஈடுபட்ட முன்னணித் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். அதுபோல் கூட்டுறவு ஊழியர்களை அணி திரட்டுவதிலும் பெரும் பங்காற்றினார்.

ஸ்டாண்டர்டு மோட்டார் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது, ரிசர்வ் வங்கி ஊழியர் சங்கம் அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது. அந்த போராட்டக் களத்தில் மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்ட அவர் 1969ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

1984ஆம் ஆண்டு, வங்கிப் பணியைத் துறந்து, கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றத் துவங்கினார். கட்சியின் சென்னை மாவட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வந்தார். 

இவர் மீது ஒரு பெண்ணுடன் உறவு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டை காரணம் காட்டி கட்சி அவரை பதவியிறக்கம் செய்தது. இது குறித்து ஒரு மார்க்சிஸ்ட் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்னார்.., “30 வயசில் இன்னும் நான் பேச்சிலராகவே காலம் தள்ளிகிட்டு இருக்கேன். ஒரு பொண்ணுங்களைக்கூட என்னால கவர் முடியலை. WRV 65 வசசிலேயும் ஒரு பெண்னை கவர்ந்திருக்கார்னா.. அது பெரிய விசயம் பாலா.., இதையெல்லாம் அனுபவிச்சாத்தான் தெரியும். இதுக்கெல்லாம் கட்சியில் நடவடிக்கை எடுக்கிறவங்க.. என்ன சொல்லுறதுன்னே தெரியலை” என்றார் மிகுந்த வேதனையோடு..!

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால்.. இனி இது போல ஒரு மனிதரை அந்த கட்சி தயார் செய்ய எத்தனை ஆண்டுகள் ஆகும்.. என்பது கேள்வி.
————–

அண்மையில் கிழக்கு பதிப்பகத்தின் “ராஜீவ் கொலை வழக்கு” நூலை வாசித்து முடித்தேன். சூடம் ஏற்றி, அணைத்து சொல்லுவேன்.. அது நிச்சயம் ரகோத்தமன் எழுதியது அல்ல. வேறு ஒருவர் எழுதி இருக்கிறார்.

ஆனந்த விகடனில் ஜக்கி வாசுதேவ் தொடர் எழுதி பிரபலமான போது.. தொடரின் கடைசியில் அந்த தொடரை சுவை பட எழுதியது சுபா என்று போட்டிருந்தார்கள். அது போல இந்த நூலை தொகுத்தவரின் பெயரையும் போட்டிருக்கலாம் என்பது என் கருத்து.

கிழக்கு பதிப்பகத்தில் பல புத்தகங்களை வாசித்திருப்பவர்கள் யாராக இருப்பினும் இந்த நூலை வாசித்தால்.. எழுதியது யார் என்று சொல்லி விட முடியும். 🙂

—–


Comments

2 responses to “விடுபட்டவை 27 பிப்ரவரி 2010”

  1. \\கிழக்கு பதிப்பகத்தில் பல புத்தகங்களை வாசித்திருப்பவர்கள் யாராக இருப்பினும் இந்த நூலை வாசித்தால்.. எழுதியது யார் என்று சொல்லி விட முடியும். :)\\

    நன்றி..! கண்டு கொண்டேன்..கண்டு கொண்டேன்.

  2. DR.Sintok Avatar
    DR.Sintok

    //நாவல்கள் (கணேஷ் + வசந்த் கூட்டனி தவிர) என்னை பெரியதாக ஈர்க்கவில்லை//
    பிரிவோம் சந்திப்போம் கூடவா???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *