16. ஆட்டிசம்- நம்பிக்கை தரும் மனிதர்கள்- 2

பொதுவாகவே ஆட்டிசத்தின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் குழந்தையின் பெற்றோரின் நிலைதான் மிகவும் சங்கடமானது. எப்போது தங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டே தங்கள் உடல்நலத்தினையும் கெடுத்துக்கொள்கின்றனர்.

ஆனால், அப்படி சோர்ந்துபோய் இருந்து விடத்தேவையில்லை என்பதற்காக.. ஆட்டிசத்தின் பிடிக்குள் சிக்கிக்கொண்டாலும், உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பிய சிலரைப் பற்றி சுருக்கமாக அடுத்தடுத்து, பார்க்கப்போகிறோம்.

ஆட்டிசத்தினால் பாதிப்புக்குள்ளான இவர்களால் சாதித்திருக்க முடியும் போது, நம் குழந்தைகளாலும் ஏதாவது சாதிக்கமுடியும் என்று பெற்றோர் நம்பிக்கைகொள்ளவேண்டியது அவசியமானது.

டெம்பிள் கிராண்டின் (Temple Grandin):

 

Temple Grandin

பாஸ்டனில் பிறந்து தற்பொழுது கொலராடோ பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி வரும் டெம்பிள் கிராண்டின் எழுத்தாளரும் கூட. 1949 ல் பிறந்த இவரது இரண்டாவது வயதில் இவருக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்டது.  பெற்றோரின் தொடர்ச்சியான கவனிப்பும்,  சிறந்த ஆசிரியர்களின் அரவணைப்பும் கிடைத்ததால் தனது நான்காம் வயதில் பேசத்தொடங்கினார்.

விலங்கியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர் 2010ஆம் ஆண்டு டைம்ஸ் பத்திரிக்கையால் சிறந்த நூறு மனிதர்கள் வரிசையில் தேர்ந்தெடுக்கப் பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

விலங்கு வளர்ப்பில் பல்வேறு ஆலோசனைகளை அளித்து வரும் கிராண்டின் ஆட்டிச விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார்.

சிறுவயதில் தன் செயல்பாடுகளினால் அடைந்த அவமானமும், தான் அப்படி நடந்துகொண்டமைக்கான காரணங்களையும் இவர் சொல்லிய பின் தான் உலகம், ஆட்டிசத்தின் பிடியில் இருக்கும் குழந்தைகளின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது என்றே சொல்ல முடியும். உதாரணத்திற்கு டெம்பிள் கிராண்டின் சொன்ன ஒரு சிறு சம்பவம்;

சிறுவயதில் விளையாடுவதோ, பள்ளிக்குச் செல்வதோ ஒருபோதும் டெம்பிள் கிராண்டினுக்கு இம்சையாக இருந்ததில்லையாம். ஆனால்.., ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்கு போவது என்பது இவருக்கு வேப்பங்காயாய் கசந்திருக்கிறது. அதற்கு காரணமும் உண்டு. மற்ற இடங்களில் எல்லாம் இயல்புடன் இருக்க முடிந்த டெம்பிள் கிராண்டினால் சர்ச்சில் மட்டும் இயல்பாக இருக்கமுடிந்ததில்லை. அதனால்.. பிராத்தனை நடக்கும் போதே எழுந்து ஓடுவதும், சத்தம்போடுவதுமாக இருந்திருக்கிறார். இதனால் குடும்பத்தினர் மட்டுமல்லாது, சர்ச்சுக்கு வருவோர் மற்றும் பாதிரியின் கோபத்திற்கும் ஆளாகி இருக்கிறார்.

வளர்ந்த பிறகு, தான் சிறுவயதில் சர்ச்சில் அப்படி நடந்துகொண்டதற்கான காரணத்தை அறிந்திருக்கிறார். அதாவது சாதாரண சமயங்களில் பேண்ட் மற்றும் முழுக்கை சட்டையில் வலம் வரும் டெம்பிள் கிராண்டின் சர்ச்சுக்கு செல்லும் போது மட்டும் கவுன் போட்டு அழைத்துச்செல்லப்படுவாராம். உடலைப் பற்றி இருக்கும் ஆடையில் அழுத்தம் காரணமாக சென்ஸரி பிரச்சனைகள் இன்றி எல்லா சமயங்களிலும் இயல்பாக இருக்க முடிந்திருக்கிறது என்றும், கவுண் மாதிரி லூசான ஆசை அணிவது தனக்கு பிடிக்காத காரணத்தினாலேயே தொல்லைகள் கொடுத்திவந்திருக்கிறோம் என்பதை பின்னாளில் தான் உணர்ந்திருக்கிறார். இதனை இவர் கூறிய பின்னர் தான் ஆட்டிசக்குழந்தைகள் ஒருவித உடல் அழுத்தத்தை விரும்புகிறார்கள் என்பதை  உலகம் கண்டுகொண்டது.

Hug machine

ஆட்டிசக் குழந்தைகளுக்காக “ஹக் மெஷின்”(Hug Machine) எனப்படும் ஒரு இயந்திரத்தை உருவாக்கியிருக்கிறார்.  ஒரு நபரால் தாங்கக் கூடிய  அதிகபட்ச அழுத்தத்தை அளிப்பதன் மூலம் ஆட்டிச பாதிப்புடையோரின் சில சென்சரி பிரச்சனைகளுக்கு இவ்வியந்திரம் ஆறுதல் தருகிறது.

ஆட்டிசத்தை குணப்படுத்துவதில் சிறுவயதிலியே கண்டறிவதும்(Early Intervention), நல்ல புரிந்துணர்வுள்ள ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்துள்ள கிராண்டின் அக்கருத்துக்களை தனது எழுத்திலும் பேச்சிலும் வலியுறுத்துகிறார்.

டெம்பிள் கிராண்டின் வலைத்தளம்:- http://www.grandin.com/

விக்கி பக்கம்:- http://en.wikipedia.org/wiki/Temple_Grandin

டெம்பிள் கிராண்டினின் புகழ்பெற்ற தன் அனுபவப் பேச்சு:- My Experience with Autism

(நம்பிக்கைகள் தொடரும்)

=========

மேலும் ஆட்டிசம் தொடர்பான கட்டுரைகளுக்கு:-

http://216.185.103.157/~balabhar/blog/?page_id=25

 

 

This entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, மனிதர்கள் and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.