துலக்கம் அட்டை

அனைவருக்கும் இனிய அன்பான மாலை வணக்கம்.
குழந்தைகள் திரைப்படமோ, குழந்தைகளைக் குறித்த கதையோ அல்லது கவிதையோ எப்போதும் நம் மனதை உடனே லகுவாக்கும் வித்தையை தனக்குள் வைத்திருக்கும். நாமும் குழந்தையோடு குழந்தையாகி மகிழும் வாய்ப்பை அந்த நேரங்களிலாவது பெற்றுக் கொள்வோம்.

ஒரு பயணம், அது பேருந்து பயணமோ அல்லது இரயில் பயணமோ, தொடர் பயணத்தின் வறட்சியான ஒரு பொழுதை ஏதோ ஒரு குழந்தையின் புன்சிரிப்பு சட்டென வசந்தமான மனநிலைக்கு மாற்றிவிடும்.

ஏதோ ஒரு பயணத்தில், ஏதோ ஒரு குழந்தையுடன் பேச ஆரம்பித்த நட்பு வீட்டுப் பெரியவர்களுடனான நட்பாக மாறி குடும்ப நட்பாகவும் மாறிய கதைகள் முன்னொரு காலத்தில் நம்மிடையே இருந்தது. இப்போது சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு குட் ட்ச் பேட் டச் கற்றுக்கொடுக்கும் அளவில், இந்தக் கால மனிதர்களின் போக்கும் மாறி இருப்பதை கண்கூடாகக் காண்கிறோம்.

நம் தெருவில் இருக்கும் பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு, நான்கு ஐந்து வயது வரையில் இரண்டு அல்லது மூன்று இட்லிகள் சாப்பிட கொடுக்கும் தாராளமனமும் மாறி இருப்பதை வருத்தத்துடன் கவனிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.

இராஜபாளையத்தில், ஒரு நாள் காலை பத்து மணியளவில் வீட்டின் பின்வாசலில், ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று ஒரு விநோதமான குரல் கேட்டுக் கொண்டிருந்தது. அது இன்னொரு தெருவின் பகுதி. வேலையை முடித்து விட்டுப் போய்ப் பார்த்தபோது அங்கே எவருமில்லை. ஒரு நாய் மட்டும் படியில் படுத்துக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் அதே ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ற குரல் முன் வாசலில் கேட்க, இன்னும் கேட் கதவு லேசாக ஆட்டப்படும் சத்தமும் கேட்டது. அங்கிருந்து இங்கே வந்து பார்ப்பதற்குள் இங்கே யாருமில்லை.

இரண்டு நாட்கள் கழித்து ஓ வென்ற சத்தமும் சற்றே பதட்டமான குரல்களும் கேட்க வீட்டுக்கு முன்னால் சென்று பார்த்தேன். எதிர் வீட்டு வாசல் கேட்டை ஒரு சிறுவன் இறுகப் பிடித்திருக்க, ஒரு பெண்மணி அவனை அடித்துக் கொண்டிருந்தார். இன்னும் இரண்டு சிறுவர்கள் அங்கிருந்து ஓடியே போய்விட்டனர். என்ன நடந்ததென்று விசாரிப்பதற்கு முன்பே, குழந்தையை அடித்தவர், அவரின் அம்மா போலிருக்கிறது, ஏதோ ஒரு அமானுஷ்ய குரலில் அவன் அழ அழ அவனை இழுத்துக்கொண்டு போய்விட்டார்.
மறுநாள் காலையில் பத்து மணிக்கு மேல் அதே ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ற சத்தம் தொடர்ந்து கேட்க, அந்தச் சிறுவன் நம் வாசல் கேட்டருகே முதுகு கேட்டை ஒட்டுமாறு நின்று, இரு கைகளாலும் கேட்டை உலுக்கி அந்த சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. என்னம்மா என்று கேட்க, திரும்பிப் பார்த்தவன் என் கண்களைப் பார்க்காமல் மறுபடியும் திரும்பிக் கொண்டான். அவனுடைய மூடியிருந்த வாய் ம்ம்ம் ஐ உச்சரித்துக் கொண்டிருந்தது. உள்ளே வேலையை முடித்துவிட்டு வந்துவிடலாம் என்று போனேன். ‘பாண்டி’, ‘பாண்டி’ என்று குரல் கேட்டது. சிறுவனின் பெயர் பாண்டி என்பதும் குரல் எழுப்பி பெயர் சொல்லி அழைத்தது பாண்டியின் தாய்தான் என்றும் தெரிந்தது.

‘ஏன்மா பச்சைப்புள்ளையை போட்டு இப்படி அடிச்சீங்க’ என்று சட்டென கேட்டு விட்டேன். ஒரு முறை என்னை நிமிர்ந்து பார்த்தவள் கண்கள் கலங்க எந்த தயக்கமும் இல்லாமல் உடனே பேச ஆரம்பித்து விட்டாள். ’பன்னிரெண்டு வருஷம் குழந்தையே இல்லாம கோயில் கோயிலுக்கா போயி இவன் பொறந்தான்கா. நல்லாதான் இருந்தான். இப்படி ஆயிட்டான். ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அலைஞ்சும் சரியாகல. இவன் பொறக்காமலேயே இருந்திருக்கலாமே’ என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. சிறுவன் பாண்டி நல்ல ஆரோக்கியத்துடன் மிகவும் அழகாக இருந்தான். ஆனால் முகத்தில் ஏதோ ஒரு சின்ன வேறுபாடு தெரிந்தது. கண்களைப் பார்த்து பேசவில்லை. ’என்ன பாண்டி நாம விளையாடலாமா’ என்று கேட்டதும், தலையை குனிந்து கொண்டு சிரித்தான். மெதுவாக கையை நீட்டி கன்னத்தை லேசாகத் தொட்டு கையை எடுத்துக் கொண்டான். ’அக்கா இவனுக்கு ஒங்களை புடிச்சுடுச்சு. ஆம்பளங்களை விட பொம்பளைங்க கிட்ட சுளுவா ஒட்டிப்பான்’ என்று சிரித்தபடி சொன்னாள். மறுபடியும் ம்ம்ம் சத்தத்துடன் கேட்டை டகடகவென ஆட்டியபடி தன்னுடைய தனி உலகத்துக்குப் போய்விட்டான்.

‘அக்கா இவனுக்கு இப்பிடி ஆயிடுச்சா. மத்த குழந்தைங்களுக்கு இது தெரியாம இவனை எதுனா சொல்லிடறாங்க, இவன் போட்டு அவங்களை அடிச்சுடறான். இப்போல்லாம் வேணும்னே இவனை வம்புக்கு இழுக்கிறாங்க. அதான் போட்டு அடிச்சேன்’ என்றாள். ‘ஏம்மா. நீங்க அடிச்சா அந்தக் குழந்தைக்கு எதுனா நீங்க எதுக்கு அவனை அடிச்சீங்க என்கிறது புரியுமா’ என்றேன்.

’என்ன பண்ணுவேன். இவனுக்கு தனியா சொல்லித்தர வேற ஊருக்கெல்லாம் வாரத்துக்கு மூணு தடவை போறேன். என்னென்னமோ சொல்லிக் குடுக்கிறாங்க. நானும் கூடவே இருக்கிறேன். நம்ம ஊருல இவனுக்கு சொல்லித்தர பள்ளிக்கூடம் இல்லக்கா. வீட்டுல நான் எவ்வளவு நேரம்தான் பாத்துக்குறது. இப்பிடி வெளியே ஓடி வந்துர்றான்’ என்றாள்.

’இங்கே தானே இருக்கிறான் வேறு தெருவுக்குப் போறதில்லை இல்லையா? வீட்டுக்குள்ளேயே எவ்வளவு நேரம் இருப்பான் குழந்தை’ என்றேன். ஆமாக்கா என்று சொன்னவள் பாண்டியை அழைத்துக்கொண்டு போய்விட்டாள். அமீர்கானின் திரைப்படம் நினைவுக்கு வந்தது. பாண்டியை அவனுடைய தாயார் எப்படியும் ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவந்துவிடுவாள் என்னும் நம்பிக்கையை தினமும் அந்தத் தாய் நிரூபித்துக் கொண்டிருந்தாள்.

நம் தெருவில் இரவில் நிறுத்தி வைக்கப்படும் ஆட்டோவைப் பிடித்து உலுக்குவான். வீட்டு வாசல் கேட்டைப் பிடித்து உலுக்குவான். தானாகத் தனியாக தன்னுடைய உலகத்தில் உலவுவான். பாண்டி என்றால், நாம் இருக்கும் திசை பார்த்துத் திரும்பினாலும், நம்மைப் பார்க்காமல் சிரித்து விட்டு மறுபடியும் தனக்குள் ஆழ்ந்து போவான்.

பாண்டியும், பாண்டியின் தாயாரும் தினமும் மாலையில் பால் வாங்குவதற்காக நம் வீட்டு வழியே போவார்கள். இருவரையும் பார்த்ததும் பாண்டி என்று நான் அழைப்பதும் அவன் வெட்கமாக சிரித்துவிட்டுப் போவதும் மட்டும் நடக்கும். அதற்கு மேல் குழந்தை பாண்டியை என்னால் நெருங்கவே முடியவில்லை. பாண்டியின் அம்மாவும் தினமும் அவனைக் குறித்து ஏதேனும் இரண்டு வரிகள் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுப் போய்விடுவாள். தெருவில் இருக்கும் பிறர் அவனை சரியாகப் புரிந்துகொள்ளாமல் பேசவதிலும் நடந்துகொள்வதிலும் காயப்பட்டிருந்த அவளுக்கு, நாங்கள் மூவரும் இரண்டொரு நிமிடங்கள் மட்டும் சேர்ந்து இருப்பதும், சந்தோஷமாக அவன் சிரிப்பதும் ஒரு ஆசுவாசத்தைக் கொடுப்பதை உணர முடிந்தது.

அப்போதுதான் எஸ். பாலபாரதியின், ’ஆடிஸம் – சில புரிதல்கள்’ புத்தகம் வெளிவந்திருந்தது. அதை வாங்கிப் படித்ததும் பாண்டி ஆட்டிசம் உள்ள குழந்தை என்பது தெரிந்தது. அவன் தாயின் மேலும் இனம் புரியாத பாசம் அதிகமானதை என்னுள் உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஒருமுறை சென்னைக்கு வந்துவிட்டு இருபது நாட்கள் கழித்து இராஜை திரும்பிய பின், ஒரு வாரமாக பாண்டியை பார்க்க முடியவில்லையே என்று இருந்தது. மறுநாள் நிழலில் அவன் மட்டும் இருந்தான். பாண்டி என்றதும் நான் இருக்கும் திசை பார்த்து சிரித்து விட்டு கண்கள் மேல் நோக்கி சுழல திரும்பிக் கொண்டான்.

மறுநாள் என்னுடைய அம்மாவிடம், ’பாண்டியின் அம்மா எங்கே’ என்று கேட்டேன். ’உனக்குத் தெரியாதா, பாவம் அவள் இறந்துட்டா, அவனோட அப்பா தான் வேலைக்கும் போய்க்கிட்டு அவனையும் பாத்துக்கிறாரு’ என்றார் என்னுடைய அம்மா. அம்மா இல்லாமல் பாண்டி என்ன செய்வான் என்பதும், வாரத்துக்கு மூன்று முறை அவனை வெளியூர் பள்ளிக்கு யார் அழைத்துப் போவார்கள் என்றும் பதட்டம் எழ, இதோ இன்று வர பாண்டியைப் பார்க்க முடியவில்லை. வேறு ஊருக்குப் போய்விட்டார்களா என்பதும் தெரியவில்லை.

பாலாவின்  ’துலக்கம்’ கதையின் அஸ்வின் கதாபாத்திரம் பாண்டியை நினைவு கூரச் செய்துவிட்டது. உலகில் எத்தனை பாண்டிகளும், அஸ்வின்களும் இருக்கின்றார்களோ. அவர்களின் பெற்றோரும் குடும்பமும் அந்தக் குழந்தைகளை எப்படி மனவருத்தம் இன்றி கையாள்கிறார்களோ. நல்ல குழந்தைகளை பேச்சைக் கேட்கவில்லை என்று திட்டும், அடிக்கும், பெற்றோர் இவர்களிடமிருந்தெல்லாம் எவ்வளவு பொறுமையை கற்றுக்கொள்ளலாம் என்றெல்லாம் சிந்தை எழுவதை தடுக்கவே முடியவில்லை.  சரி கதைக்கு வருவோம்.

‘துலக்கம்’ ஒரு ஆட்டிச குழந்தையின், குடும்பத்தின் மனநிலைகளை சற்றே துலக்கமாக மக்களுக்கு காட்சிப்படுத்திக் காட்டுகிறது. ஆட்டிசக் குழந்தை அஸ்வினின் குடும்பத்தினரின் பார்வையில் மட்டும் காட்சிகளைக் காட்டாமல் மருத்துவரின், போலீஸின், வீட்டில் வேலைசெய்யும் வள்ளியின் மகன், மற்றும் நண்பர்கள் மூலமாகவும் சாதாரண மக்களுக்குப் புரியாத ஆட்டிசம் குறித்த விஷயத்தை எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறது. பலருடைய பார்வையில் குழந்தையின் இயல்புகள் காட்டப் படுவதால், அலுப்பாகத் தோன்றாமல், ஆட்டிசக் குழந்தையின் இயல்புகளை வெகு இயல்பாக அக்கறையுடன் விஸ்தாரமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

முதல் சில காட்சிகளுக்கு மேல், அந்தக் குழந்தைதான் லாக் அப்பில் அடிபடுகிறது என்னும் விஷயம் புரிய ஆரம்பித்ததும், சில நாட்கள் என்னால் மீதி பக்கங்களை வாசிக்க முடியவில்லை. மனதில் ஒரு பதைபதைப்பு. மூன்று நாட்களுக்குப் பிறகு, மனதை சற்று தைரியப்படுத்திக் கொண்ட பிறகே, மீதிப் பகுதியை வாசிக்க ஆரம்பித்தேன்.

குழந்தை செல்லில் தனது உணர்வுகளை மெசேஜாக எழுத ஆரம்பித்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக அப்பாவுக்கும், அம்மாவுக்கும், கடைசியில் அதுவே வித்தியாசமான திகில் கிளைமாக்ஸாகவும் வெளிப்படும் விதம் மனதை நெகிழச் செய்கிறது. இந்த க்ளைமாக்ஸ் ஒரு புதுவிதமான சுவாரஸ்யத்தையும், மகிழ்வான உணர்வையும் எழுப்புகிறது. அப்பாடா இப்படியாவது புரிந்து கொள்ளலாம் என்கிற பெற்றோரின் மன ஆசுவாசம், நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

செல்லில் எழுதப்பட்டவை உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தாலும், முதல் இரண்டு மூன்று மெசேஜ்களைப் போல இல்லாமல் மீதி மெசேஜ்கள் நீளமாக விரிவாக அஸ்வினின் உணர்வுகள் சொல்லப்பட்டது வாசகர்களின் புரிதலுக்காகவே என்றாலும், சுருக்கமாக பினிஷ்ட் என்று சொல்லப்பட்டதைப் போல சொன்னால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும், அல்லது மெசேஜை அப்பா வாசிக்கும்போது இப்படிப் புரிந்து கொண்டார் என்பதுபோல இருந்தாலும் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

மனைவியின் மற்றும் மருத்துவரின் செயல்களால் காவலதிகாரி முருகனின் நடவடிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் துல்லியமாக பதிவு செய்யப்பட்டிருகின்றன.

காவல்நிலையத்தின் செயல்பாடுகள், கள்ளநோட்டு விஷயம், பெரும் பிரச்சினைகளுக்குரிய நபர்களைக் கண்டுபிடிக்கும் தீவிர பொழுதில், ஆட்டிசம் குறித்து அறியாத முருகன், மருத்துவர் சொல்லியவற்றைப் புரிந்துகொண்டு செல்லில் இசையைப் போடுவதாகட்டும், மெதுமெதுவாக நிர்வாணமாக இருக்கும் அஸ்வினை, அவனுடைய துவைத்து காய வைக்கப்பட்ட உடையை அணியச் செய்யும் விதம் மனதை நெகிழ வைத்தது. எல்லா இரக்கமில்லா மனிதருக்குள்ளும் இரக்கமுள்ள மனிதன் ஒளிந்துகொண்டுதான் இருக்கிறான் என்பதையும் பாலா மிகவும் அழகாக பதிவு செய்திருக்கிறார்.

ஆட்டிசம் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வண்ணம் அமைந்த ‘துலக்கம்,’ அதே சமயத்தில் எந்தப் புகுத்தலும் இல்லாமல் அதை வாசகர்களுக்கு எளிதாகப் புரியும்படியான நடையில் கொடுத்தமைக்கு ஆசிரியரை பாராட்டலாம்.

குறைந்த பக்கங்களில் இத்தனை நுணுக்கமான விஷயங்களை செதுக்கி அளிப்பது மிகவும் கடினமான விஷயம். ஒரு ட்வைன் நூல் சற்றும் தளராமல் இருப்பது போல, துலக்கம் அதன் ஆரம்பத்திலிருந்து டெம்போ குறையாமல் இருக்கச் செய்வதில் பாலா மிகுந்த கவனம் எடுத்துள்ளார்.

உணர்வுபூர்வமான காட்சிகளுக்கிடையில், அஸ்வினின் பள்ளி முதல்வர் பருத்திப்புடவை அணிந்த காட்சியில், அவர் வயது கொஞ்சம் குறைச்சலாக இருப்பதாக ஒரு வரிவரும். பள்ளி முதல்வர் சிபாரிசு செய்த குழந்தை மனநல மருத்துவரும், பருத்தி புடவை அணிந்திருந்ததாக சொல்லப்படும்போது, இவரும் இளமையாக இருப்பாராக இருக்கும் என்று நம்மை அறியாமல் எண்ணம் ஓடுச்செய்கிறது. அடுத்து ’வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளைதான்’ என்று பாட்டில் வந்தால் கேட்க நன்றாகத்தான் இருக்கும். யதார்த்தத்தில் மரம் போல் வாட்ட சாட்டமாய் வளர்ந்தும், சிறுபிள்ளை போல் நடந்து கொள்ளும் குழந்தையை வைத்துப் பராமரித்துப் பார்த்தால்தான் தெரியும், இது போன்ற கவித்துவ வரிகளின் அபத்தமெல்லாம், இந்த வரி அளிக்கும் கனம் மனதை சுமையுடன் தள்ளாட வைக்கும், மொத்த கதையின் வலியை மேலே சுமத்தி. மெருகேற்றியிருக்கிறார். உதாரணத்துக்கு இந்த இரண்டு விஷயங்கள் மட்டும் இங்கே கொடுத்துள்ளேன். இது போன்ற எளிமையான மற்றும் கனமான விஷயங்களை ஆங்காங்கே கச்சிதமாக வைத்து இருக்கிறார்.

பரதேசி திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே ஒளிப்பதிவாளர் செழியன், ’கட்’டே இல்லாத ஒரு நீளமான ஷாட்டில், நம்மை அந்த கிராமத்தின் முழுமையான தெருக்களுக்குள்ளும் உடன் அழைத்துப் போவார். கேமரா கூடவே சென்று ’நூக் அண்ட் கார்னர்’ உடன் இருந்து அனைத்தையும் பார்ப்பது போல் நமக்குத் தோன்றும்.

அதுபோல எக்மோர் இரயில்நிலையத்தில் இருந்து, காவல்நிலையத்தின் கடைசி காட்சிவரையிலும் பாலபாரதி நம்மை இந்தக் காட்சியில் உடன் அழைத்துப் போகிறார்; வெவ்வேறுதுறைகளில் இருக்கும் கதாபாத்திரங்களை ஒவ்வொருவராக அறிமுகம் செய்கிறார், வலிகளைப் புகுத்துகிறார்; பரிதவிக்கச் செய்கிறார்; அஸ்வினைத் தேடி அலையச் செய்கிறார்; எந்த கதாபாத்திரத்தின் மீதும் குறையோ கோபமோ ஏற்படுத்தவில்லை; அஸ்வின் கிடைத்ததும் ஆசுவாசமடையச் செய்கிறார்; ஆட்டிசக் குழந்தை சுற்றுச் சூழலை மறந்து தனதுலகில் ஒரு ஞானியைப் போல இருக்கும் தன்மையை புரிய வைக்கிறார். இத்தனைக்கும் இடையில் ஆட்டிசக் குழந்தையைக் கனிவுடன் பார்க்கும் கனிந்த மனதை கற்பிக்கிறார்.   ஒரு  திரைப்படமாக  இது காட்சிப்படுத்தப் பட்டாலும் மக்களின் மனதில் இன்னும் எளிமையாகப் போய்ச் சேரும்.
தாய் கமலா குறித்து இன்னும் சில விஷயங்களை மட்டும் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அஸ்வினின் அம்மா கமலா, அஸ்வினுக்காக வேலையை விடுபவளாகவும், குழந்தை தொலைந்த விசாரத்தில் அழுபவளாகவும், மயங்கி விழுபவளாகவும், பதட்டப் படுபவளாகவும் மட்டுமே காட்டப்பட்டிருக்கிறார். அதற்கு பதிலாக அந்த செல்லில் இருக்கும் மீதி மெசேஜையாவது தந்தை பார்ப்பது போலில்லாமல் தாய் பார்ப்பது போலாவது அமைத்திருக்கலாம், அல்லது தாய் மகனுக்கான பாசத்தை ஏதேனும் இருவரிகளில் எடுத்துச் சொல்லியிருக்கலாம்.

‘துலக்கம்’ ஆட்டிசம் குறித்து, மக்களிடையே ஒரு ஆதரவான, சாதகமான புரிதலை ஏற்படுத்தும் பணியினைச் செய்திருக்கிறது என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

திருநங்கைகள் குறித்த அவன் – அது = அவள் நாவலும், ஆட்டிசம் சில புரிதல்கள் புத்தகமும், துலக்கமும் கொடுத்த பாலபாரதி இது போன்று வித்தியாசமான கருவினைத் தேர்ந்தெடுத்து மென்மேலும் சிறந்த படைப்புகளைத் தொடர்ந்து தர என்னுடைய மனமார்ந்த வாழ்த்தினையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துகள் பாலா. அடுத்து வரும் படைப்புகளும் சிறப்பாக வெளிவர மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்
மதுமிதா
26.06.2014
(29.06.14 அன்று துலக்கம் குறுநாவல் வெளியீட்டு விழாவில் வாசிப்பதற்காக எழுதப்பட்ட கட்டுரை)