ஐந்திலேயே வளையட்டும்!

கட்டுரைக்குள் செல்லும்முன் கொஞ்சம் கொசுவர்த்தியைச் சுற்றிக்கொள்ளுங்கள். சில ஆண்டுகளுக்குமுன், பள்ளி விட்டு வீட்டுக்கு வரும் பிள்ளை, பள்ளிப்பையைத் தூக்கி எறிந்துவிட்டு நண்பர்களோடு விளையாட, தெருவில் இறங்கி ஓடிவிடுவான். அவனை வீட்டுக்குள் கொண்டுவந்து சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். பள்ளியின் வகுப்பறையிலும், வீட்டுப்பாடம் செய்யும்போதும் மட்டும்தான் ஒரே இடத்தில் அன்றைய பிள்ளைகள் இருப்பார்கள். (நீங்கள் மட்டும் உங்களின் சிறுவயதில் எப்படி இருந்தீர்களாம்?)

இப்போது இன்றைய பிள்ளைகளை, கொஞ்சம் கவனியுங்கள். காலையில் எழுந்து பள்ளிக்குச் சென்றுவிட்டு மதியத்திற்கு மேல் இல்லம் வரும் குழந்தைகள், அவசர அவசரமாக எதையாவதை அள்ளிப் போட்டுக்கொண்டு ஸ்பெஷல் வகுப்புகளுக்கோ, டியூசன் சென்டர் நோக்கியோ அல்லது ஏதாவது பாட்டு, நடனம், ஓவியம் என்ற கலை வகுப்புகளுக்கோ பறக்கிறார்கள். மாலை வீட்டுக்கு வந்த்தும், கொஞ்சநேரம் டீவி அல்லது வீடியோ கேம்ஸ், பின்னர் வீட்டுப் பாடம், இரவு உணவு, உறக்கம் என அன்றைய தினம் முடிந்துபோகிறது. மறுநாள் எழுந்ததும் அதே ஓட்டம்தான். விளைவு?! ஒபிசிட்டி எனப்படுகின்ற உடற்பருமன், இன்றைய இளம் தலைமுறையினரிடையே அதிகரித்து வருவது கண்கூடு.

வெளியே போய் விளையாட மாட்டானா(ளா) என்று பெற்றோர் ஏங்கும் நிலையில்தான், இன்றைய பிள்ளைகள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இதனால் பல்வேறு பிரச்சனைகளை பிள்ளைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. உடற்பருமன் காரணமாக உடற்சோர்வு ஏற்படுகிறது. உடற்சோர்வு காரணமாக எப்போதும் தூங்கி வழியவேண்டி வருகிறது. இதன் காரணமாக, பாடங்களைச் சரிவர கவனிக்க முடியாமல் போகிறது. நினைவாற்றலை உடல் சோர்வு எடுத்துக்கொண்டு விடுகிறது. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

தினமும் தேவை உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்றதுமே நூறு தண்டால் பஸ்கி எடுப்பதும், அதிகாலையில் எழுந்து, தெரு நாய்கள் துரத்திவர, பக்கத்து ஊர் வரைக்கும் ஓடுவதுபோல எல்லாம் கற்பனை செய்துகொள்ள வேண்டாம்.

வீட்டில் இருந்து அடுத்த தெருவில் இருக்கும் பலசரக்கு கடையில் போய் பொருட்கள் வாங்கி வருவதையோ, பால் வாங்கி வருவதையோ அல்லது இஸ்திரிக்கு துணி கொடுக்க நடந்து போவதையோ கூட உடற்பயிற்சியில் சேர்த்துக்கொள்ளலாம். வீட்டு வாசலிலோ, பக்கத்திலிருக்கும் விளையாட்டு மைதானத்திலோ இறகுப் பந்து (ஷட்டில் காக்) விளையாடுவதும்கூட நல்ல உடற்பயிற்சிதான். ஆனால், இவற்றைத் தனியாக பிள்ளைகள் தொடக்கத்தில் செய்ய மாட்டார்கள் என்பதால், கொஞ்ச நாட்களுக்கு பெற்றோர் அவர்களை அழைத்துச் செல்லலாம்.

அதேபோல சின்னச்சின்ன வேலைகளுக்கு வீட்டில் இருக்கும் வாகனங்களை எடுக்காமல் நடக்கப் பழகிக்கொண்டால், நடை என்பது சுமையாக பிள்ளைகளுக்குத் தெரியாது. பின்னர் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி ஆகியவற்றைத் தொடரலாம். தினமும் நடைப்பயிற்சியும் ஓட்டப்பயிற்சியும் செய்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால் சளி பிடிப்பது குறையும்.

பள்ளிகளில், விளையாட்டு வகுப்புகளில் ஆர்வத்தோடு உங்கள் பிள்ளை பங்குபெறுகிறானா என்று பள்ளியில் விசாரியுங்கள். ஏதாவது ஒரு விளையாட்டிலாவது அவனது / அவளது ஆர்வம் இருக்க வேண்டும். அப்போது ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டும், விளையாடும் சக நண்பர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் நல்ல அறிகுறியல்ல! நோய் பீடித்த மனோபாவம். படிக்க வேண்டிய நேரத்தில் படிப்பதும், விளையாட வேண்டிய நேரத்தில் விளையாடுவதும்தான் இயற்கையானது.

தண்டனை அல்ல!

உடற்பயிற்சியை ஏதோ தண்டனை போல இன்றைய பிள்ளைகள் பலரும் நினைக்கக் காரணம், அவர்தம் பெற்றோரே! அவர்கள் எவ்வித உடற்பயிற்சியையும் மேற்கொள்ளாமல் பிள்ளைகளை மட்டும் உடற்பயிற்சி செய்யச் சொல்லும்போது, பாடங்களைப் படிப்பது மாதிரியே உடற்பயிற்சியையும்கூட அவர்கள் பெரும் தண்டனையாகக் கருதும் வாய்ப்புகள் அதிகம். அதனால், தொடக்கத்தில் நீங்களும்கூட பிள்ளைகளுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்வது அவசியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

 என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

விளையாட்டின் வழி உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். இதற்கு, தகுந்த நிபுணர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனையைப் பெறலாம். தினமும் உடற்பயிற்சிகள் செய்வதினால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிட்டால், அது நீண்டுகொண்டே போகும். அதேசமயம் உடற்பயிற்சி தொடங்கிய மறுநாளே இந்நன்மைகள் எல்லாம் வந்து சேர்ந்துவிடும் என்பதில்லை. தொடர்ந்து செய்வதினால் மட்டுமே பலனை அடையமுடியும் என்பதை பெற்றோர் உணர்ந்து, பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும்.

 

உடற்பயிற்சி கொடுக்கும் உற்சாகம்

  1. எவ்வகையான உடற்பயிற்சியாக இருந்தாலும், தினமும் செய்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
  2. குழந்தைகளைத் தாக்கும் டைப் 2 சர்க்கரை நோய் வராது,
  3. இரத்த அழுத்தம், கொழுப்பு எல்லாம் கட்டுப்பாட்டில் இருக்கும்,
  4. இதயம், நுரையீரல் பலப்படும். இதனால் பிற்காலத்தில் இதய நோய் வரும் வாய்ப்பு குறைகிறது.
  5. இன்றைய உணவுப் பழக்கத்தின் காரணமாக ஏற்படும் உடல் பருமன் கட்டுப்பாட்டில் இருக்கும்.
  6. எலும்பு அமைப்புகள், தசை அமைப்புகள் பலப்படும்.
  7. இரத்த ஓட்டம் சீராகும்- இதனால் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அதிகமாகக் கிடைக்கிறது. இதனால் மொத்த உடலும் சுறுசுறுப்படைகிறது.
  8. உடல் உறுப்புகளின் ஒத்திசைவு நன்றாக இருக்கும், ஆற்றலும் அதிகரிக்கும்.
  9. பதற்றம், மன அழுத்தம் குறையும். இதனால், பாடங்களையும் நன்றாகப் படிக்க முடியும்.
  10. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால், உடல் சோர்வு இருக்கும். எனவே, இரவு உறக்கம் நன்றாக இருக்கும். உறக்கம் நன்றாக இருப்பதால், காலையில் புத்துணர்வுடன் இருப்பார்கள்.

உடற்பயிற்சிகளை இளம் வயதிலேயே பழக்கப்படுத்தி விடுவதால், பிள்ளைகள் வளர்ந்து பதின் பருவத்திலும், இளைஞர் பருவத்திலும்கூட இப்பழக்கம் தொடரும். ஐம்பதில் வளைய வேண்டுமென்றால், ஐந்தில் வளைந்த அனுபவமும் வேண்டுமல்லவா!

 

(நன்றி:- 2015 மே, செல்லமே )

This entry was posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.