எனக்கு கிடைத்த சுதந்திரத்தை என் மகனுடன் பகிர்ந்தேன் – நேர்காணல் ஞாநி

 

ஞாநி (படம் நன்றி- தமிழ் இந்து)

உங்களின் சிறு வயது பற்றிச்சொல்லுங்களேன்!

நான் இன்னும் கூட உள்ளுக்குள் சின்னப் பையன் தான். (சிரிக்கிறார்). அதனால அரசியல் சட்டப்படியான சின்ன வயசான 5 வயதுக்கு கீழே இருந்தப்ப எனக்கு என்ன நடந்துதுச்சுன்னு வேணா பேசலாம்.  கொஞ்சம் சிக்கல் இருந்தது. அதைக் கூட பின்னாலதான் உணர்ந்தேன் . அப்பாவுக்கு இரண்டு மனைவியர். நான் இரண்டாவது மனைவியின் பிள்ளை. ஆனால் என்னோட இருபதாவது வயது வரைக்கும் ஒரே குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாகத்தான் வாழ்ந்தோம். மூணு அண்ணன், ஒரு அக்கா, ஒரு தங்கை. எங்கம்மாவுக்கு நான் ஒரே பிள்ளை.  அப்பா என்னுடைய அம்மாவுக்கு சொந்த தாய்மாமன், ஆனால் அப்பாவின் முதல் மனைவியை வெளியில இருந்து திருமணம் செய்துகிட்டு வந்தார். எங்க அப்பாவை வளர்த்தவர் என்னோட தாத்தா (அம்மாவுடைய அப்பா). அவர் இறந்ததும் அவரோட இரண்டு பெண்களையும் பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு என்னோட அப்பாவுக்கு இருந்தது. ஒருத்தங்க என்னோட அம்மா. இன்னொருத்தங்க என்னோட பெரியம்மா. அவங்களுக்கு எங்கப்பா, சொந்த முயற்சியில் கல்யாணம் செய்துவச்சார். ஒரே மாதத்துல என்னோட பெரியம்மா விதவையாகி திரும்பி வந்துட்டாங்க. அப்பாவின் பராமரிப்பில் இருந்த என்னோட அம்மாவை அப்பா இரண்டாம் தாரமாக கட்டிக்கொண்டார். அம்மாவுக்கு அப்பா தாய்மாமன் உறவு என்பதால் அம்மா, அப்பாவின் முதல் மனைவியை மாமி என்றுதான் அழைப்பார். அவரைப்பார்த்து நானும் அப்படியே அழைத்தேன். பெரியம்மாவான மாமியுடன் எனக்கு எவ்வித சங்கடமும் இருந்ததில்லை. அவங்களும் பாசமாகத்தான் இருந்தாங்க. என்னை வளர்த்தெடுத்ததில் இந்த மூன்று பெண்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அவங்க மூவரும் தான் என்னை சிறப்பாக வளர்த்தாங்க.

என்னோட அம்மா அவங்களோட 56வது வயதில் இறந்துபோயிட்டாங்க. பெரியம்மா 70 வயதுக்கு மேல இருந்தாங்க. மாமி அவங்களோட 86வது வயதில் தான் இறந்தாங்க. தன்னுடைய கடைசி காலத்தில் என்னுடன் சில ஆண்டுகள் தங்கி இருந்தாங்க. எல்லோரும் என்னிடம் அன்பாகத்தான் இருந்தாங்க.

வீட்ல பெரிய பண வசதி எல்லாம் கெடையாது. வாடகை வீடுதான். பெரிய குடும்பத்தை சென்னையில வெச்சு காப்பாத்தமுடியாதுன்னு அப்பா எங்களை செங்கலப்ட்டுல தங்கவெச்சுட்டு அவர் 45 வருடம் தினமும் ரயில்ல சென்னைக்கு வேலைக்குப் போய்ட்டு வந்தார். எனக்கு நினைவு தெரிஞ்சு என் சிறு வயதில் பெரியதாக எதற்கும் கஷ்டப்பட்டதில்லை. ஆடம்பரமான ஆசைகளும் கெடையாது. தினமும் மத்யானம் பள்ளிக்கூடத்துக்கு இட்லிதான் கட்டிக் குடுப்பாங்க.  வித்யாசமான  ஒரு கஷ்டம் வந்துச்சு. 4வது படிக்கும் போதே, கண்ணாடி போட்டுட்டேன்.. மைனஸ்-9 பவர். ஒரு தடவை என்னோட கண்ணாடி உடைஞ்சு போச்சு. அதை உடனடியாக வாங்க முடியவில்லை.  அப்ப கஷ்டப்பட்டேன். எல்லோரையும் மாடு முட்டும், நான் மட்டும் தான் மாட்டைப் போய் முட்டினவன்.யே முட்டுவேன்னு சொல்வேன். ஏன்னா எதிரில் இருப்பது கூட அப்ப கிட்ட வராம தெரியாது. மற்றபடி எனக்கு கஷ்டங்கள் இல்லை.  எனது அப்பா, தனது பிள்ளைகளை சுதந்திரமாகத்தான் வளர்த்தார் என்பதை இங்கு சொல்லியாக வேண்டும்.

Gnani-appaBook

பொதுவாகவே அந்த காலத்து அப்பாக்கள் ரொம்பவும் கண்டிப்பானவர்களாக இருப்பார்களே?

ஒழுக்கமும், கண்டிப்பும் மிக்கவர்தான் அப்பா.  எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கணும் என்று எதிர்பார்ப்பார். அவரோட டேபிளை கலைத்துப்போட்டுவிடுவோம். என்னதான் திரும்பவும் அடுக்கி வச்சாலும் அப்பா கண்டுபிடிச்சுடுவார். அப்பா இறந்தபிறகு நானும் என் சகோதர சகோதரிகலும் சேர்ந்து அப்பாவைப் பத்தி  ஒரு சின்ன நூல் வெளியிட்டோம். அதுல ஒரு கட்டுரையில என்னோட அண்ணன் குறிப்பிட்டிருந்தார். அப்பா அடிச்சதே இல்லைன்னு. அப்புறம் தான் யோசிச்சுப்பார்த்தேன். ஆமா… அப்பா என்னிக்குமே எங்க யாரையுமே அடிச்சதில்லை. படிப்பு விஷயங்களில்கூட அப்பா என்னிக்குமே நெருக்கடி கொடுத்ததில்லை.

அதே சுதந்திரத்தை, உங்களின் மகனுக்கும் நீங்கள் கொடுத்தீர்களா?

கண்டிப்பா… சுதந்திரம் கொடுப்பதல்ல. எல்லாரும் பகிர்வது. எனது மகன் மனுஷ் நந்தன் சின்னப்பையனாக இருக்கும்போதே அவனை தோளில் சுமந்துகொண்டு, நானும் அவன் அம்மாபத்மாவும் எல்லா பொது நிகழ்ச்சிகளுக்கும்  கூட்டங்களுக்கும் போவோம். என்னுடைய எல்லா நண்பர்களையும் அவனுக்கு அப்போதே தெரியும். எங்களுடைய எந்த எதிர்பார்ப்பையும் அவன்மேல் நாங்கள் திணிக்கவில்லை.

மனுஷ் திரைப்படக்கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு காரணம் நீங்கதானா?

இல்லையில்லை. மனுஷின் படிப்பு விஷயங்கள் எதிலும் எங்களின் தலையீடு இருந்ததில்லை. 1989ம் ஆண்டிலேயே நான் தொலைக்காட்சிக்குள் வந்துவிட்டேன். அதனால் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் எல்லாம் அவனை அழைத்துக்கொண்டு போயிருக்கிறேன். இவனுக்கு இதில் ஆர்வம் வந்திருக்கலாம். சின்னவயசிலேயே என்னோட சீரியல்களில் சின்னச்சின்ன வேடங்களில் குழந்தைநடிகனாக அறிமுகமாயிட்டான். எங்க வீட்டுல எந்த பண்டிகையும் கொண்டாட மாட்டோம். பிறந்த நாளை மட்டும்தான் கொண்டாடுவோம்.  அவனோட பதினோறாவது வயதில் ”பிறந்த நாளுக்கு என்ன  வேண்டும்?” என்று கேட்டபோது, “ஷூட்டிங் பண்றேன். அதுக்கு செலவுக்கு காசுகொடுங்க”ன்னு கேட்டான். கொடுத்தோம். இரண்டு குறும்படங்களை எடுத்தான். அதன் பின் படிப்புல கவனமா இருந்தான். பத்தாவது முடிஞ்சதும், ஃபோட்டோகிராஃபி படிக்கணும்னு கேட்டான். ஊர் முழுக்கத்தேடி, சூளைமேடு கார்ப்பரேஷன் ஹைஸ்கூலில் 11ம் வகுப்பில் ஃபோட்டோகிராஃபி பாடம் இருப்பதை கண்டுபிடித்து, அங்கே சேர்த்தோம். 12வது முடிச்சதும், திரைப்படக்கல்லூரியில் சேர்ந்தான். அப்புறம் சினிமா துறையில் நுழைந்தான்.  இப்படி எல்லாமே அவன் விரும்பியபடி தான் நடந்துச்சு.

சுட்டி விகடன் அனுபவத்தைச் சொல்லுங்களேன்?

1998, 99ம் ஆண்டுகளில் சுட்டி விகடன் தொடங்குவதற்காக என்னை அழைத்தபோது, ஆறுமாத காலம் மார்க்கெட் ஸ்டெடி பண்ணினேன். சுட்டிவிகடன் என்ற பெயரை நான் தான் தேர்வு செய்தேன். பூந்தளிர் இதழ் நின்றுபோன சமயம் அது. தமிழ் கோகுலத்தைவிட, ஆங்கில கோகுலம் அதிகம் விற்பனை ஆகிக்கொண்டிருந்த்து. மேலும் சில ஆங்கில சிறுவர் பத்திரிகைகள் இருந்ததே தவிர, தமிழில் சிறுவர் இதழ் எதுவும் இல்லை. தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு பள்ளி தேர்வு செய்து, அங்கிருந்து ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரைத் தேர்வு செய்து, ஆய்வுகள் மேற்கொண்ட பிறகுதான் சுட்டிவிகடன் கொண்டுவந்தோம். அப்பை ஒரு ஆய்வு நடத்தினபிறகுதான் பத்திரிகையை ஆரம்பிக்கணும்னு நான் சொன்னதை அப்போதைய ஜே எம் டி சீனிவாசன் முழுமையாக ஏற்றுக் கொண்டு அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அந்த பத்திரிக்கை வந்த பின், பள்ளிகளுக்குச்சென்று கலர்கலாட்டா மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தினோம். சுட்டிவிகடனை பரவலாக கொண்டு செல்ல இதுமாதிரி நிகழ்ச்சிகள் பெரிதும் பயன்பட்டது. ஒரு வருடம் நான் சுட்டிவிகடனில் இருந்தேன்.

அன்றைக்குப்போல, சிறுவர்களுக்கான நூல்கள், பத்திரிக்கைகளுக்கு பெரியஅளவில் வரவேற்பு இருப்பது போல தெரியவில்லையே?

அப்பவும் கூட பெரிய அளவில் சிறுவர்களுக்காக தனிப்பத்திரிக்கைகள் இருந்தாமாதிரி நினைவு இல்லை. பெரியவங்க படிக்கும் எல்லா பத்திரிக்கைகளிலுமே சிறுவர்களுக்குன்னு தனி பகுதி இருக்கும். தீபாவளி மலர் மாதிரியான இதழ்களிலும் சிறுவர் பகுதி உண்டு.  கண்ணன் என்ற பத்திரிகை மட்டும் தான் அப்போ சிறுவர் பத்திரிகை. நான் நாலாவது படிக்கும் போதே ஆனந்தவிகடன் வாசிப்பேன். இந்த பல்லு உடைஞ்சதே அப்படித்தான். (முன்பக்கத்தில் உடைந்த பல்லைக்காட்டி சிரிக்கிறார்.) அப்பா படிக்கும் முன் நாம படிச்சிடனும்னு புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஓடும்போது, கூடத்து பெரிய தூண்ல மோதி, விழுந்து இது உடைஞ்சு போச்சு. அப்போ ஆனந்தவிகடன்ல எல்லாம் சிறுவர்பகுதி வரும். நான் சொல்லுவது அறுபதுகளில். பின்னர் எழுபதுகளின் இறுதியில் நிறைய சிறுவர்களுக்கான தனி புத்தகங்கள் வந்தன. எண்பதுகளுக்கு பிறகு அதுவும் விழுந்துவிட்டது. அதிலும் தொலைக்காட்சிகள் சிறுவர்களை தங்கள் பக்கம் இழுத்ததும், சிறுவர் பத்திரிகைகள் தாக்குப் பிடிப்பது என்பது மிகுந்த சிரமமாகிவிட்டது. பொதுவா சிறுவர் பத்திரிகைகளுக்கு பெரிய இடம் இல்லாமல் போனதற்கான காரணமாக நான் நினைப்பது, பள்ளியில் வாசிப்பு பழக்கத்தை முன்னெடுக்காததுதான்.

என்னோட பார்வையில் பள்ளிகளில் எட்டாம் வகுப்புக்கு முன்னர் ஸ்மார்ட் கிளாஸ்போர்ட் வந்தது தவறு. ஆடியோ, வீடியோ தான் வாசிப்பு பழக்கதைக் கெடுக்கிறது. எப்படி படிப்பதை மட்டும் பழகிக்கொண்டு, ஆடியோ, வீடியோ பற்றி தெரியாமல் இருப்பது தப்போ, அப்படியே அதை மட்டும் வச்சுகிட்டு, வாசிப்பை கைவிடுவதும் தப்புதான். ஒண்ணு இருந்துவிட்டு, இன்னொன்று இல்லாமல் இருப்பது தவறு. இதை பள்ளியில் இருந்து தான் தொடங்க முடியும். அதுவும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்குள் வாசிக்கும் வழக்கத்தை நாம் ஏற்படுத்தியாக வேண்டும். அப்படி செய்யாதபோது, வாசிப்பு பழக்கம் குறைகிறது. வாசிப்பு குறையும் போது, மார்க்கெட் இல்லாமல் போகிறது. அதனால் இந்த பக்கம் வருவதற்கு தயங்குகிறார்கள்.

மாயாஜால கதைகளை விட, குழந்தைகளுக்கு அறிவியல் கதைகள்தானே இன்றைக்குத் தேவை?

அப்படி சொல்லுவதற்கு இல்லை. எல்லாவிதமான கதைகளும் தேவையாக இருக்கு. இதுதான் வேணும் அதுதான் வேணும் என்று சொல்லமாட்டேன். எளிமையாகச் சொல்வதானால் குழந்தைகளுக்கு நீங்கள் பேய்க்கதைகள் சொல்லலாம். ஆனால் அப்படி சொல்லும்போது, குழந்தை பேய் இருக்கான்னு கேட்டால், அறிவியல் பூர்வமாக பேய் என்பது நிரூபிக்கப்படவில்லை என்பதையும் சேர்த்துச்சொல்லவேண்டியது நமது கடமை.

பள்ளிகளில் அன்று கைவேலை என்று சொல்லப்படுகின்ற கிராஃப்ட் வகுப்புகள் இருந்தன…

குழந்தைகளின் கற்பனையை வளர்த்தெடுக்க, இவ்வகை வகுப்புகள் மிகவும் துணையாக இருந்தன. என்னுடைய ஓவிய ஆர்வமும்கூட இவ்வகை வகுப்புகளால்தான் ஏற்பட்டது. இன்றைக்கு பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பத்தாவதிலும், பன்னிரெண்டாவதிலும் மார்க் எடுக்க வைக்கும் ரேஸில் ஒன்றாவதிலேயே துரத்தத் தொடங்கிவிடுகிறார்கள்.

இன்றைய  பெற்றோர் தாங்கள் விரும்பும் செயலையே செய்யச் சொல்லுகிறார்களோ?

இன்றைய சூழலில் 35 வயதுக்குள் இருக்கும் பெற்றோர் ஓரளவு குழந்தை வளர்ப்பில் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். பிள்ளைகளின் உணர்வுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். 35 வயதிலிருந்து 50 வயதைத்தொடும் பெற்றோர்தான் நீங்கள் சொல்வதுபோல இருக்கிறார்கள். அதிலும் அவர்களுக்கு எது சரி என்ற குழப்பமும் இருக்கிறது. தங்களுக்குக் கிடைக்காததெல்லாம் குழந்தைகளுக்கு எப்படியாவது கிடைத்துவிடவேண்டுமென்ற பதைப்பு இருக்கிறது.

சிறுவர்களுக்கான தொலைக்காட்சிகள் குழந்தைகளின் அறிவு வளர்க்கும் விதமாக இல்லை என்கிறார்களே!

பெரியவர்களுக்கான விஷயங்களே மலினமானதாக கிடைக்கும்போது, குழந்தைகளுக்கு மட்டும் எங்கிருந்து நல்ல விஷயங்கள் கிடைத்துவிடப்போகிறது. எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையதுதானே? தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பிலேயே இங்கே பிரச்னைகள் இருக்கிறது. பெற்றோரின் கனவுகளுக்கு தீனி போடும் நிகழ்ச்சிகள் தான் குழந்தைகளை வைத்து நடத்தப்படுகின்றன. இவை குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம் உண்டு. குழந்தைகள் நடிக்கிற படங்களை குழந்தைகள் ரசிப்பதில்லை. பெரியவர்கள் தான் ரசிக்கிறோம். குழந்தைகள் எதை ரசிக்கிறார்கள் என்று ஆராயவேண்டும். உதாரணமா, பேபி ஷாம்லி இங்கே மிகப்பெரிய குழந்தை நட்சத்திரமாக இருந்த போது, எந்த குழந்தையும் அவரை ரசிக்கவில்லை. பெற்றோர்தான் ரசிச்சாங்க. குழந்தைகள் யாரை ரசிச்சாங்க.. ரஜினி, பிரபு, பிரபுதேவா, சிம்பு, சிவகார்த்திகேயன் என்று பெரியவர்களைத்தான் ரசிக்கிறாங்க. ஏன்னா.. குழந்தைகள் பெரியவர்களை எண்டர்டெய்ன் செய்யுறாங்க. குழந்தைகளை பெரியவங்க தான் எண்டர்டெய்ன் செய்யுறாங்க. அப்போ குழந்தைகளுக்கான நாடகங்கள், சினிமா எல்லாமே பெரியவர்களை வச்சு நாம தயாரிக்கணும். அந்த புரிதல் இங்கே வரும் போது குழந்தைகளுக்கான உண்மையான சினிமாக்கள் வரும்.

உலக அளவில் ஒரு பெரிய விவாதம் நடக்கிறது: ஒரு தரப்பு, பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் நண்பர்களாக நடந்துகொள்ள வேண்டும் என்கிறது. மற்றொரு தரப்போ, “இல்லைநண்பர்கள் போல நடக்கலாமே தவிர, நண்பர்களாக ஆகிவிடக்கூடாது” என்கிறது.  உங்கள் கருத்து என்ன? (வளர்ந்த, வளர்த்த அனுபவத்திலிருந்து…)

நம்ம மரபுலேயே அழகான பழமொழி இருக்கிறது. ‘தோளுக்கு மிஞ்சினால் தோழன்’ இதுதான் இதற்கான கோல்டன் ரூல். தோளை எட்டும் உயரம் வரும்வரை  வழிகாட்டியாக கண்டிப்பாக எடுத்துச் சொல்லும் பெற்றோராக கூட இருக்கலாம். தோளை எட்டிவிட்டால், சம்மான நண்பராக பாவிக்க வேண்டும்.  நட்பாக இருப்பது என்றால் அவர்கள் என்ன தப்பு செய்தாலும் சொல்லாமல் இருக்கிறதுதான் நட்புன்னு பலரும் தப்பா நினைச்சுக்கிறாங்க. நல்ல நண்பனைப்போல இங்கேயும் தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

—-

(நன்றி: செல்லமே, ஜீலை-2015)

This entry was posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, நேர்காணல் and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.