நனி சைவம் ட்ரை பண்ணலாமா?

இது என்ன புதுசா இருக்கே என்று பார்க்கிறீர்களா? வீகேன்(Vegan) என்று ஆங்கிலத்தில் சொல்லுவதைத்தான், தமிழில் நனி சைவம் என்கிறார்கள்.

நம்மில் பலரும் அறிந்தது சைவம், அசைவம் மட்டுமே. ஆனால் மாறி வரும் உலகில் மாறாதது எதுவுமிருக்க முடியாது என்பதைப்போல, சைவ உணவு பழக்கத்திற்குள்ளேயே தீவிரமான சைவப்பிரிவு தான் இந்த நனி சைவம். இன்றைக்கு உலகின் பல பகுதிகளிலும் கடைபிடிக்கப்பட்டு வரும் இப்பழக்கம், உணவிலிருந்து வாழ்க்கை முறையாக மாறி நனி சைவக் கோட்பாடாக (வீகேனிஸம்) பரவி வருகிறது.

பொதுவாகச் சைவ உணவு உட்கொள்ளுகின்றவர்கள் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் எல்லாம் எடுத்துக்கொள்ளுவார்கள். ஆனால் நனி சைவத்தினர் அதைத்தொடமாட்டார்கள். தேன் உட்பட விலங்குகளிடமிருந்து பெறப்படுவதை உணவிலும், செருப்பு, பெல்ட், பர்ஸ், லிப்ஸ்டிக் என எங்கும் எதிலும் பயன்படுத்துவதில்லை என்பதுதான் வீகேனிஸத்தின் கோட்பாடு. தாவர உணவு வகைகள் மட்டும் தான் இவர்களின் உணவின் அடிப்படை.

ஜங்க் புட்ஸ் மாதிரியான எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட உணவு வகைகளுக்கு மாற்றாக ஆரோக்கிய நனி சைவ உணவை பரிந்துரைக்கிறார்கள். இவ்வுணவை நாமே வீட்டில் செய்துகொள்ள முடியும். பாலீஷ் செய்யப்படாத முழுமையான தானிய வகைகளான சிகப்பரிசி, பயறு வகைகள், உடைக்கப்படாத பயறு வகைகள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றுடன், எண்ணெய்யில் பொறிக்கப்படாத உணவுகளும் ஆரோக்கிய நனி சைவ உணவு முறை.

12195939_1094976373879734_7700709808306038287_n

”பாலில் இருந்து கிடைக்கும் கால்ஸியத்தை விட, அதிகமான கால்ஸியம் எள்ளில் இருந்து கிடைக்கிறது” என்கிறார் மருத்துவர் சரவணன். இவன் நனி சைவ உணவை பரவலாக்கி வரும் ஷேரன் ((SHARAN – Sanctuary for Health and Reconnection to Animals and Nature) என்ற அமைப்பின் உடல் நல ஆலோசகராக இருக்கிறார்.

மேலும் அவர் கூறும்போது, ”இந்த உணவுமுறையில் மனிதனுக்குப் போதிய சக்தி எல்லாம் கிடைக்குதான்னு பலருக்கும் சந்தேகம் இருக்கு. அது தேவையற்றது. நனி சைவ உணவுமுறையில் நமக்குத்தேவையான மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் எல்லாமும் கிடைக்கின்றன. பால் தவிர்ப்பதால் கால்ஸியம் குறைபாடு வருமோன்னு அச்சப்படத்தேவையில்லை. பாலில் கிடைப்பதை விட, எள்ளில் இருந்து எடுக்கப்படும் பாலில் அதிகம் கால்ஸியம் இருக்கிறது.

பட்டை தீட்டப்பட்ட உணவுகள், ஜங்க் புட், போன்றவற்றை மறுக்கிறோம். மாறாக இயற்கை உணவுகள் எல்லாம் நல்லது. முழுமையான தாவர உணவுகள் என்பதுதான் ஷேரனின் உணவுத்திட்டம். பழங்களும் காய்கறிகளும் அதிகமாக உட்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகக் கிடைக்கிறது. அதோடு, நனி சைவத்திற்கு நீங்கள் மாறி விட்டால் உடல்பருமன் பிரச்சனை,  இரத்தக்கொதிப்பு, சர்க்கரை குறைபாடு, இதய நோய் பிரச்சனைகள், குழந்தைகளின் ஹைப்பர் போன்றவற்றினால் பாதிப்புக்குள்ளானவர்களிடம் மிகுந்த முன்னேற்றம் தெரிகிறது.

வடை, பூரி போன்ற உணவுகள் வீகேனில் தான் வரும் என்றாலும், எண்ணெய் இல்லாமல் இவற்றை நாம் செய்ய முடியும். அதற்கான பயிற்சிகளை எங்கள் அமைப்பு கொடுக்கிறது.

பி12 விட்டமின், விட்டமின் டி ஆகியவை வீகேன் உணவில் குறைவு என்பதால், ஆய்வு செய்து இவை தேவைப்படுகின்றவர்களுக்கு, இந்த விட்டமின்களை ஈடுசெய்வதற்கான மருந்துகள் கொடுப்போம். விட்டமின் டி-க்கு வெயிலில் விளையாடச்சொல்லுவோம். விலங்கில் இருந்து பெறப்படும் பால் எல்லோராலும் எளிமையாக ஜீரணிக்க இயலாது. அவர்களுக்கு எல்லாம் நனி சைவம் சிறந்தது.

நனி சைவம் பின்பற்ற நினைப்பவர்களுக்கு http://sharan-india.org/ என்ற இணையதளம் மிகவும் பயன்தரும். ஆலோசனைகள் பெறலாம். மேலும், நனி சைவ சமயல்கள், ஆலோசனைகள் என்று நிறைய புத்தகங்கள் இலவசமாக டவுன்லோடு செய்து படித்து தெரிந்துகொள்ளலாம்.” என்கிறார் மருத்துவர் சரவணன்.

என்னென்ன மாற்று?

பால் – விலங்கிடமிருந்து பெறப்படும் பாலுக்கு மாற்றாக, தேங்காய்ப் பால், சோயா பால், பாதாம் போன்றவை அருந்தலாம்.

டீ/காபி – பொதுவாக டீ/காபி உடல்நலத்திற்கு நல்லதல்ல என்பது பரவலான கருத்து. உடனடியாக நிறுத்த முடியாவிட்டால், சோயா பாலில் டீ/காபி தயாரித்து அருந்தலாம். அல்லது க்ரீன் டீ பயன்படுத்தலாம்.

தயிர்/மோர் – சோயா பால்/ வேர்கடலையில் இருந்து பால் எடுத்து தயிர் / மோர் பருகலாம்.

இறைச்சி- இதற்கு இணையான சுவை கொடுக்கக்கூடிய காளான் / சோயா டோஃபூ வகைகள் நல்லது.

யாருக்கெல்லாம் நனி சைவம்?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாத் தரப்பினருமே, இந்த உணவு முறையைப் பின் பற்றலாம். இதன் காரணமாகவே பல மேலைநாடுகளில் இவ்வகை உணவுப்பழக்கம் வேகமாகப் பரவி வருகிறது.

நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்!

 

 

 

(நவம்பர் 1ம் தேதி வீகேன் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது)

நன்றி: செல்லமே -நவம்பர்2015

படம் நன்றி: https:pixabay.com