திக்குவாய் – சரியாகப் பயிற்சியும் முயற்சியும் போதும்!

திக்குவாயன் பாலா.. இப்படித்தான் படிக்கும் காலங்களில் பள்ளி, தெரு எல்லா இடங்களிலும் அழைக்கப்பட்டேன். ஒரு வயதுக்குள்ளாகவே பேச்சு வந்த குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். ஒன்னரை வயது நடந்து கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த சைக்கிள் தலையில் விழுந்து, பலத்த அடிபட்டுவிட்டது. அள்ளிப்போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள் பெற்றோர். பதிநான்கு தையல் போட்டு விட்டு, ”பையனுக்கு இனி பேச்சு வரும்னு சொல்ல முடியாது. பிள்ளையைக் காப்பாற்றியதே பெரிசு” என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். சுமார் ஓராண்டு எதுவும் பேசாமல் மௌனியாகவே வீட்டுக்குள் அலைந்திருக்கிறேன். என் தேவைகளைக்கூடச் சைகையின் மூலமே தெரியபடுத்தி வந்தேனாம்.

அப்புறம் திடீரென ஒரு நாள் கொஞ்சம் பேசத்தொடங்கினேனாம். பேச்சுவராது என்று மருத்துவர்களும் பெற்றோரும் கை விட்டுவிட்ட நிலையில், நான் பேசியதைக்கண்டு மகிழ்ந்து போய் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி முழுமையானது அல்ல என்பது சில தினங்களிலேயே தெரிந்து விட்டது. என்னால் முழுமையாகப் பேச முடியவில்லை. திக்கித்திக்கித் தான் பேசி இருக்கேன். பேசாமல் இருப்பதற்கு இது மேல் என்று வீட்டினரும் மகிழ்ச்சியை மடைமாற்றிக்கொண்டார்கள்.

இந்தத் திக்குவாய்ப் பழக்கத்தினால் நான் அடைந்த அவமானங்களும், மனவேதனையும் கொஞ்சநஞ்சமல்ல. பள்ளியில் படிக்கும் போது திக்குவாயன், அல்லது திக்குவாய் பாலா என்று தான் அழைக்கப்பட்டேன். நான் படித்த பள்ளியில் ஒரு பழக்கம் இருந்தது. ஒவ்வொரு வகுப்புக்கும் பாடங்களை எல்லா மாணவர்களும் ஆளுக்கு ஒரு பத்தி வீதம் படிக்க வேண்டும். எல்லோரும் படிக்கும் போது எனக்கும் ஆசை வரும், புத்தகத்துடன் எழுந்து நிற்கும் போது, ‘டேய் நீ படிக்க ஆரம்பிச்சின்னா.. பிரீயட்டே முடிஞ்சு போயிடும் அதனால ஒக்கார்’ என்று ஆசிரியர் உட்கார வைத்து விடுவார். அவர் அப்படிச் சொன்னதும், வகுப்பறையில் எழும் சிரிப்பொலியில் என் கண்கள் நிறைந்துவிடும்.

வீட்டிலேயே கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கொண்டு போனாலும், வகுப்பறையில் திக்காமல் வாசிக்க முடிந்ததில்லை. பல சமயங்களில் ஆசிரியர்களின் அனுமதியே கிடைக்காது. திக்குவாய் காரணமகாவே சகமாணவர்களின் ஏளனப்பார்வை என்மீது இருந்தது. பல சந்தர்ப்பங்களில் ப்..ப்..பா.. பா.. பா.. பாலா…. என்று நான் பேசுவது போன்றே என்னையும் அழைப்பார்கள். (அவர்களும் அப்போது சிறுவர்கள் தானே என்று இன்று புரிகிறது; அடுத்தவரின் வலி, வேதனைகளை உணர்ந்துகொள்ளும் பக்குவம் அந்த வயதில் எதிர்பார்க்க முடியாதுதான் ) என்னை எந்த விளையாட்டுக்குக்கும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அதனால் தான் புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு வந்தது. சகமாணவர்களை விடப் புத்தகமனிதர்களுடன் பேசத்தொடங்கினேன்.

அசிங்கப்பட்டாலும் விடாமல் தினமும் ஆசிரியர்களிடம் ’ நானும் வாசிக்கிறேன் சார்’ என்று கேட்பேன். என்னுடைய விடாமுயற்சியின் காரணமாக எட்டாம் வகுப்பில் ஒரு முறை சரி வாசிடா என்று பாடங்களில் ஒரு பத்தியை வாசிக்கக் கணேசன் சார் அனுமதி கொடுத்தார். ஆனால், அன்றும் நாக்கு உள்ளே இழுத்துக்கொள்ள.. அசிங்கப்பட்டு அமர்ந்து கொண்டேன். அன்று வீட்டுக்கு வந்ததும், பெரியதாக அழுது அடம்பிடித்தேன். பள்ளிக்கே போகமுடியாது என்றும் சொல்லிவிட்டேன்.

அப்போதுதான் அந்த ஆயுர்வேத வைத்தியர் எங்கள் ஊருக்கு வந்திருந்தார். அவரைப்போய்ப் பார்த்தோம். முழுங்கிவிடமுடியாத பெரிய அளவு கூழாங்கற்களை இரண்டோ மூன்றோ கொடுத்து, வாய்க்குள் வைத்துக்கொள்ளச்சொல்லி, அவர் கேள்வி கேட்பார். நான் பதில் சொல்ல வேண்டும். வாயினுள் இப்படியும் அப்படியுமாக ஓடும் கூழாங்கற்களின் மீது நாக்கு பட்டு, பேச்சுத் தடைபடும். ஆனாலும் பேசியாகவேண்டும். அதோடு அவர் ஒரு டைரி வைத்திருப்பார். அதில் Tongue – twister பயிற்சிக்கான சில வாக்கியங்களைக் குண்டு குண்டான கையெழுத்தில் எழுதி வைத்திருப்பார்.

தினமும் காலையிலயே அவரிடன் போய், கூழாங்கற்களை வாயில் அடைத்துக்கொண்டு, நாக்கு நன்கு சுழலவேண்டும் என்பதற்காக.. அருணகிரி நாதரின், திருப்புகழில் ’முத்தைத்திரு.. பத்தி திருநகை’யை வாசிக்கச்சொல்லுவார். அப்புறம், ’ஓடுற நரியில ஒரு நரி கிழநரி, கிழநரி முதுகுல ஒரு முடி நரைமுடி’ன்னு சொல்லச்சொல்லுவார். அதுவும் 80 டெசிபல் அளவில் கத்திச்சொல்ல வேண்டும். இடையிடையே, ’உன்னால பேச முடியும்.. பேசும் போது வேறெதும் யோசிக்காதே.. பேசும் ஒரு வார்த்தையை மட்டும் பேசு. அடுத்தவார்த்தையையும் சொல்லி பார்த்துகிட்டே பேச நினைச்சா.. நாக்கு இழுத்துக்கும். நல்லா.. சத்தமா பேசினா.. திக்குவாய் காணாமப்போயிடும். அதனால சத்தம்போட்டு பேசு.’ என்று இப்படி அவ்வப்போது கவுன்சிலிங்க் வேறு கொடுப்பார். கிட்டத்தட்ட ஆறுமாதங்களுக்கும் மேலாக வீட்டிலேயே தனியா இப்பயிற்சிகளை எடுத்துக்கொண்டேன்.

சத்தம் போட்டு, பேசப் பேச.. எனக்கு இருந்த திக்குவாய் குறைய ஆரம்பித்தது. வாலு போய்க் கத்தி வந்த கதை மாதிரி, திக்குவாய் போய்ச் சத்தம் போட்டு பேசும் வழக்கத்திற்குள் மாட்டிக்கொண்டேன். பயிற்சியின் போது அந்த வைத்தியர் சொல்லி உள்வாங்கிக் கொண்டதாலோ என்னவோ.. இப்போதும் கொஞ்சம் மெதுவாகப் பேசும் போது, நாக்கு இழுத்துவிடுமோ என்ற அச்சத்தினாலயே திக்குவாய் வந்துவிடுகிறது.

இப்போது சிந்தித்தால் ஒரு விஷயம் தெரிவாகப்புரிந்தது, திக்குவாய் என்பது மனவியல் சார்ந்த பிரச்சனை. இதனை இடைவிடாத பயிற்சிகளின் மூலம் சரி செய்துகொள்ள முடியும்.

இதையே தான், திக்குவாய் உள்ளவர்களுக்காக இலவசமாகப் பேச்சுப்பயிற்சியும், தன்னம்பிக்கையும் chennaistammering.com என்ற இணையத்தின் வழியிலும் நேரடியாகவும் அளித்துவரும் மணிமாறனும் சொல்கிறார். (காண்க: கடைசிப்பத்தி செய்தி)

என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்லுவதாக இருந்தால், எந்தச்சொல் பேசுவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறதோ, அச்சொல்லின் முன்னால், தொடக்க எழுத்தாக “அ” என்றோ, ”A” என்றோ சேர்த்துச் சொல்லச்சொல்லுங்கள். இது பேசுவதற்குக் கூடுதல் பயன் தரும்.

பயிற்சியும் முயற்சியும் இருந்தால் மீண்டுவரக்கூடியதுதான் திக்குவாய் பிரச்சனை. அதனால் குழந்தைகள் மனசு ஒடிந்துபோகாமல் பார்த்துக்கொள்ளுவதும், அவர்களை உற்சாகப்படுத்துவதும் பெற்றோராகிய நம் கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தாலே போதும்.

வல்லுநர் வார்த்தை:-

Manimaran

திரு. மணிமாறன்

மணிமாறன். இவரும் திக்குவாய் பாதிப்புக்குள்ளானவர். அரசுப்பணியில் உயர் பதவியில் பணியாற்றி, இன்று ஓய்வில் இருக்கும் மணிமாறன், தொடந்து, திக்குவாய் குறித்த விழிப்புணர்வுக்காகச் செயலாற்றி வருகிறார். தன்னுடைய அனுபவங்களின் வழி பலருக்கும் பயிற்சியும் கொடுத்து வருகிறார். இதோ அவர் கொடுக்கும் டிப்ஸ்:

1. குழந்தையின் பேச்சுத் திறன் பற்றி நீங்கள் ரொம்பக் கவலைப் படுவதைக் அவனிடம் காட்டிக் கொள்ளாதீர்கள்.
2. ஆரோக்கிய விஷயத்தில் கவனமாய் இருங்கள். சத்தான உணவு, தேவையான தூக்கம் என அவனது உடல் ஆரோக்கியத்தைப் பராமரியுங்கள்.
3. குழந்தை பேசுகையில் கவனமுடன் கேளுங்கள். அவன் என்ன சொல்கிறான் என்பதுதான் உங்களுக்கு முக்கியமே தவிர, எப்படிச் சொல்கிறான் என்பது பற்றிக் கவலைப்படவில்லை என்பதை அவனுக்கு உணர்த்துங்கள்.
4. மூச்சுப் பயிற்சி, உடல் மொழியில் சில மாற்றங்கள் போன்ற சின்னச் சின்ன நுணுக்கங்களைத் தொடர்ந்து செய்ய வையுங்கள்.
5. அன்னியர் முன்னால் பேசிக்காட்ட சொல்லாதீர்கள். அதே நேரம் அவனாகப் பேச ஆசைப்பட்டால், அதை ஊக்குவியுங்கள்.
6. குழந்தை எப்படி இருக்கிறானோ அப்படியே, அவனது குறைநிறைகளோடு அவனை ஏற்றுக் கொள்ளுங்கள்.
7. குழந்தையின் மீது கொண்ட பரிவால் அவனது இயல்பான பொறுப்புகளில் இருந்து விதிவிலக்கு அளிக்கத் தேவையில்லை. ஒழுக்கத்தைக் கடைபிடிப்பது அவனது கடமை என்பதை உணர்த்துங்கள்.
8. குழந்தையின் திக்கல் திடீரென அதிகரித்தால் வீட்டிலோ பள்ளியிலோ அவனுக்கு உணர்ச்சி பூர்வமான அழுத்தம் அதிகரிக்கிற்தா என்பதைப் பாருங்கள்.
9. நன்றாகப் பேசும் போது பாராட்டுங்கள். ஆனால் அந்தப் பாராட்டு அவன் பேசும் விஷயங்களுக்காக இருக்க வேண்டுமே தவிர, திக்காமல் பேசுவதற்காகத் தனிப்படப் பாராட்ட வேண்டாம்.
10. ஆரோக்கியமான பொழுது போக்குகளையும், ரசனைகளையும் வளர்த்துக் கொள்ள உதவுங்கள்.
11. ஒரு போதும் வேகமாகப் பேச வேண்டிய கட்டாயத்தை உருவாக்காதீர்கள்.
12. நிதானமான, சீரான வேகத்தோடு கூடிய பேச்சையே ஊக்குவியுங்கள்.
13. ”பேசறதுக்கு முன்னாடியே யோசிச்சுக்கோ”, “மெதுவா/வேகமா பேசு”, “பொறுமையா, முழுசா பேசு” போன்ற தேவையற்ற ஆலோசனைகளைத் தவிருங்கள்.
14. கடினமான வார்த்தைகளுக்குப் பதில் எளிமையான வார்த்தைகளை மாற்றி உபயோகிக்கச் சொல்லாதீர்கள். இதன் மூலம்,  அச்சொற்களை எதிர்காலத்தில் சொல்ல வேண்டிய நேரத்தில் பதட்டத்தையும், பயத்தையுமே அதிகரிக்கும்.
15. நீங்களாக வார்த்தைகளை எடுத்துக் கொடுக்காதீர்கள். குழந்தையே தன் வார்த்தைகளைத் தானே கண்டடையட்டும்.
16. பள்ளியிலும், வீட்டிலும் பேசுவதை ஊக்குவியுங்கள்.
17. அன்பு, புரிந்து கொள்ளும் பரிவு, பொறுமை – இந்த மூன்றுமே தாரக மந்திரங்கள். இவற்றோடு உங்கள் குழந்தையை அணுகினால் நிச்சயம் அவனாலும் தெளிவாகப் பேச முடியும்.

(அக்டோபர்- 22ம் நாள் திக்குவாய் விழிப்புணர்வு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது)

நன்றி- செல்லமே- அக்டோபர் 2015

+++++++++++++++++

தொடர்புடைய மற்றுமொரு பதிவு:

என்னைப் போல் ஒருவன் (The King’s Speech)

This entry was posted in அனுபவம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு and tagged , , , , , , . Bookmark the permalink.

3 Responses to திக்குவாய் – சரியாகப் பயிற்சியும் முயற்சியும் போதும்!

 1. a.rajkumar says:

  VERA excessas kudunga

 2. Pingback: என்னைப் போல் ஒருவன் (The King’s Speech) | யெஸ்.பாலபாரதி

 3. jpnagneeuk@gmail.com says:

  அண்ணே,
  நவம்பர் 24,25 2018-ல் சென்னை் ஐரிஸ் ஹோட்டலில் டிசா சார்பில் நடந்த ஒர்க்ஷாப் நிகழ்ச்சியில் நான் பங்குகொண்டேன்.
  உங்களின் பேச்சை நேரில் கேட்டேன்.

  நகைச்சுவையாக ரொம்பநேரம் உங்களின் திக்குவாய் அனுவங்களை பேசிய நீங்கள் கடைசியில் யாரும் அறியாவண்ணம் கண் கலங்கியதை எண்ணல் உணரமுடிந்தது.

  ஏன் என்றால் என் நான்கு வயது மகனும் திக்குவாய் பிரச்சனையால் அவதிப்படுகிறான் என்னைப் போல.!

  அருமையாக பேசினீர்கள் அண்ணே.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.