என்னைப் போல் ஒருவன் (The King’s Speech)

திக்குவாயன் பாலா.. இப்படித்தான் படிக்கும் காலங்களில் அழைக்கப்பட்டேன். ஒரு வயதுக்குள்ளாகவே பேச்சு வந்த குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். ஒன்னரை வயது நடந்து கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த சைக்கிள் தலையில் விழுந்து, பலத்த அடிபட்டுவிட்டது. பதிநான்கு தையல் போட்டு விட்டு, இனி பையன் பேசவே மாட்டான் என்று சொல்லி விட்டார்கள் மருத்துவர்கள். எட்டு  மாதங்கள் எதுவும் பேசாமல் மௌனியாகவே வீட்டுக்குள் அலைந்திருக்கிறேன். என் தேவைகளைக்கூட சைகையின் மூலமே தெரியபடுத்தி வந்திருக்கிறேன்.

அப்புறம் ஒரு நாள் கொஞ்சம் பேசத்தொடங்கினேனாம். பேச்சுவராது என்று பெற்றோரும் கைவிட்டு விட்ட நிலையில் பேசியதைக்கண்டு மகிழ்ந்து போய் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி முழுமையானது அல்ல என்பது சில தினங்களிலேயே தெரிந்து விட்டது. என்னால் முழுமையாக பேச முடியவில்லை. திக்கித்திக்கித் தான் பேசி இருக்கேன். பேசாமல் இருப்பதற்கு இது மேல் என்று வீட்டினரும் மகிழ்ச்சியை மடைமாற்றிக்கொண்டார்கள்.

இந்த திக்குவாய் பழக்கத்தினால் நான் அடைந்த அவமானங்களும், மனவேதனையும் கொஞ்சநஞ்சமல்ல.. பள்ளியில் படிக்கும் போது திக்குவாய் பாலா என்று தான் அழைக்கப்பட்டேன். வகுப்பறையில் பாடங்களை எல்லா மாணவர்களும் ஓவ்வொரு பத்தி படிக்க வேண்டும் என்று எழுதப்படாத விதி இருந்தது. எல்லோரும் படிக்கும் போது எனக்கும் ஆசை வரும், புத்தகத்துடன் எழுந்து நிற்கும் போது, ‘பாலகிருஷ்ணா நீ படிக்க ஆரம்பிச்சின்னா.. பிரீயட்டே முடிஞ்சு போயிடும் அதனால ஒக்கார்’ என்று ஆசிரியர் உட்கார வைத்து விடுவார். அவர் அப்படி சொன்னதும், வகுப்பறையில் எழும் சிரிப்பொலியில் என் கண்கள் நிறைந்துவிடும்.

வீட்டிலேயே கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கொண்டு போனாலும், வகுப்பறையில் திக்காமல் வாசிக்க முடிந்ததில்லை. சில சமயங்களில் ஆசிரியர்களின் அனுமதியே கிடைக்காது. திக்குவாய் காரணமகாவே சகமாணவர்களின் ஏளனப்பார்வை என்மீது இருந்தது. பல சந்தர்ப்பங்களில்  ப்..ப்..பா.. பா.. பா.. பாலா…. என்று நான் பேசுவது போன்றே என்னையும் அழைப்பார்கள். (அவர்களும் சிறுவர்கள் தானே, அடுத்தவரின் வலி, வேதனைகளை உணர்ந்துகொள்ளும் பக்குவம் அந்த வயதில் எதிர்பார்க்க முடியாது ) என்னை எந்த விளையாட்டுக்குக்கும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அதனால் தான் புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு வந்தது. சகமாணவர்களை விட புத்தகமனிதர்களுடன் பேசத்தொடங்கினேன்.

என்னுடைய விடாமுயற்சியின் காரணமாக எட்டாம் வகுப்பில் ஒரு முறை சரி வாசிடா என்று பாடங்களில் ஒரு பத்தியை வாசிக்க கணேசன் சார் அனுமதி கொடுத்தார். ஆனால்.. அன்றும் நாக்கு உள்ளே இழுத்துக்கொள்ள.. அசிங்கப்பட்டு அமர்ந்து கொண்டேன். அன்று வீட்டுக்கு வந்ததும், பெரியதாக அழுது அடம்பிடித்தேன். பள்ளிக்கே போகமுடியாது என்றும் சொல்லிவிட்டேன்.

கொஞ்ச நாளிலேயே, எங்க ஊருக்கு வந்திருந்த ஒரு கேரள சாமியார் போன்று தோற்றம் தரக்கூடிய (காவி வேட்டியும் துண்டும் தான் அணிந்திருந்தார்) ஆயுர்வேத வைத்தியரிடம் என்னை அழைத்துப்போனார்கள். அவர் மலையாளியாக இருந்தாலும் தமிழ்பேசுவார். நாகர்கோவில்காரர்களைப்போல பேச்சில் மலையாள வாடை அடிக்கும்.  என் நாக்கை நீட்டச்சொல்லி பார்த்தார். பின் நெய் போன்ற ஏதோவொரு எண்ணெய்யை நாக்கில் தடவி விட்டார். தினமும் வீட்டில் தடவச்சொல்லிக்கொடுத்தார். அதன் மொக்கையான சுவை இப்போதும் நினைவில் இருக்கிறது.

கூழாங்கற்களை இரண்டோ மூன்றோ கொடுத்து, வாய்க்குள் வைத்துக்கொள்ளச்சொல்லி, அவர் கேள்வி கேட்பார். நான் பதில் சொல்ல வேண்டும்.  வாயினுள் இப்படியும் அப்படியுமாக ஓடும் கூழாங்கற்களின் மீது நாக்கு பட்டு, பேச்சு தடைபடும். அதோடு  அவர் ஒரு டைரி வைத்திருப்பார். அதில் Tongue – twister பயிற்சிக்கான சில வாக்கியங்களை குண்டு குண்டான கையெழுத்தில் எழுதி வைத்திருப்பார்.

தினமும் காலையிலயே அவரிடன் போய், கூழாங்கற்களை வாயில் அடைத்துக்கொண்டு, நாக்கு நன்கு சுழலவேண்டும் என்பதற்காக.. அருணகிரி நாதரின், திருப்புகழில் ’முத்தைத்திரு.. பத்தி திருநகை’யை வாசிக்கச்சொல்லுவார். அப்புறம், ’ஓடுற நரியில ஒரு நரி கிழநரி, கிழநரி முதுகுல ஒரு முடி நரைமுடி’ன்னு சொல்லச்சொல்லுவார். அதுவும் 80 டெசிபல் அளவில் கத்திச்சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், கையிலோ, காதிலோ, நிமிட்டிக்கிள்ளு வைத்து விடுவார். அவர் கிள்ளிய இடம் சிவந்து போய் நாலு நாட்களுக்கு வலி எடுக்கும். முரட்டு வைத்தியம் தான்.

இடையிடையே, ’உன்னால பேச முடியும்.. பேசும் போது வேறெதும் யோசிக்காதே.. பேசும் ஒரு வார்த்தையை மட்டும் பேசு. அடுத்தவார்த்தையையும் சொல்லி பார்த்துகிட்டே பேச நினைச்சா.. நாக்கு இழுத்துக்கும். நல்லா.. சத்தமா பேசினா.. திக்குவாய் காணாமப்போயிடும். அதனால சத்தம்போட்டு பேசு.’ என்று இப்படி அவ்வப்போது கவுன்சிலிங்க் வேற கொடுப்பார். கிட்டத்தட்ட ஆறுமாதங்களுக்கும் மேலாக இப்பயிற்சி எடுத்துக்கொண்டேன்.

அதன்படியே சத்தம் போட்டு, பேசப் பேச.. எனக்கு இருந்த திக்குவாய் குறைய ஆரம்பித்தது. வாலு போய் கத்தி வந்த கதை மாதிரி, திக்குவாய் போய் சத்தம் போட்டு பேசும் வழக்கத்திற்குள் மாட்டிக்கொண்டேன். பயிற்சியின் போது அந்த வைத்தியர் சொல்லி உள்வாங்கிக்கொண்டதாலோ என்னவோ.. இப்போதும் கொஞ்சம் மெதுவாக பேசும் போது, நாக்கு இழுத்துவிடுமோ என்ற அச்சத்தினாலயே திக்குவாய் வந்துவிடுகிறது.

டெல்லியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் அங்கே இருந்தவர்கள் எல்லோருக்கும் என் குரலும் சத்தமும் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். ’பாலாஜி நீங்க ரகசியம் பேசுனாக்கூட பக்கத்து ஆபிஸில் கேட்க்கும்’ என்று கிண்டலாக சொல்லுவார்கள். உள்ளுக்குள் வலித்தாலும்.. சிரித்துக்கொண்டு கடந்து போய் விடுவேன்.

சமீபத்தில் அலுவலக நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, பழைய நினைவுகளை எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் the king’s speech படம் பார்த்திருக்கியான்னு கேட்டார். படத்தின் பெயரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. ஆனா.. படம் பார்க்கலைன்னு சொல்லிட்டேன். மறுநாள் டிவிடி கொண்டு வந்து கொடுத்தார்.

இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ படம் பார்த்து இருக்கிறேன். ஆனால் படம் தொடங்கிய ஐந்து நிமிடத்திற்குள்ளாகவே அழுது, படத்தை பார்க்க முடியாமல் கண்கள் கண்ணீரால் நிறைந்ததில்லை.


the king’s speech படம் தொடங்கிய ஐந்து நிமிடத்திற்குள் எனக்கு அது நிகழ்ந்தது. படத்தை நிறுத்தி விட்டேன். சிறிது நேரத்திற்குப் பிறகு, மீண்டும் படம் பார்க்கத் தொடங்கியபோதுதான் என் வாழ்வை கொஞ்சம் திரும்பிப் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஆயிரக்கணக்காணோர் கூடி இருக்கும் இடத்தில் மேடையில் பேசுவதற்கு பிரிட்டீஷ் அரசரான ஆறாவது ஜார்ஜ் மன்னன் வந்து நிற்பதில் இருந்து படம் தொடங்குகிறது. அந்த மன்னனுக்கு இருந்த திக்குவாய் குறித்த படம் இது.

அந்த மன்னனுக்கு speech therapy அளிக்கக்  கூடிய மருத்துவருக்கும், அவருக்குமிடையிலான நட்பு,  திக்குவாய் காரணமாக பதவி ஏற்பதில் ஏற்படும் சிக்கல், அதிகார பீடத்திலிருந்தாலும் அவனுக்குள் இருக்கும் மன அழுத்தங்கள் ஆகியவற்றை மிக அழகான முறையில் படமாக்கியிருக்கிறார்கள்.


மன்னனுக்குப் பயிற்றுவிக்கும் பல காட்சிகளில் என்னை நான் பொருத்திப் பார்த்துக் கொண்டேன். எனக்கும் கூட அதே மாதிரியான பயிற்சிகள்தான் வழங்கப் பட்டன – சிற்சில மாறுபாடுகளுடன். கூழாங்கல்லுக்குப் பதில் அங்கே கோலிக்குண்டுகளை பயன்படுத்துகிறார்கள்.  அங்கும் சத்தம் போட்டு பேசச் சொல்லுகிறார்கள். அதே வகையான உளவியல் ஆலோசனைகளும் கொடுக்கப்படுகிறது. படத்தில் நடித்திருந்தவர்கள் அனைவருமே கவர்ந்தாலும் ஆறாவது ஜார்ஜ் மன்னனாக வரும் காலின் பர்த்(Colin Firth) வார்த்தைகளால் சொல்ல விவரிக்க முடியாத அளவுக்கு அற்புதமாய் நடித்திருக்கிறார். ஒவ்வொரு வார்த்தைகளை பேசும் போது, உள்மனதில் ஒளிந்திருக்கும் பயன் அவர் கண்களில் தெரிகிறது. நாக்கு இழுத்துக்கொள்ளும் போது, அவரின் வாயசைவுகளும், முகமும் ஒரு குறைபாடுடைய நிஜமனிதராகவே அவரை முன்னிருத்துகிறது.

நான் மிகவும் திணறிக் கொண்டிருந்த சமயங்களில் எனக்குத் உச்சரிக்க சிரமம் தரக்கூடிய எழுத்துக்கள் எனில் ‘ப’, ‘பி’, ‘ர’ போன்றவைதான். படத்திலும் கூட ‘people’ என்பதை உச்சரிக்க சிரமப்படும் போது ‘a…people’ என்று சொல்லச் சொல்லி அந்த தெரபிஸ்ட் சொல்லித்தரும் உத்தி உண்மையில் மிகவும் நுட்பமானது. அதுபோலவே பேச எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் சரியான இடைவெளி விட்டு பதட்டமில்லாமல் பேச வேண்டும் என்பதையும் படத்தின் இறுதிக் காட்சிகளில் மிக அழகாகக் காட்டியிருக்கிறார்கள். மெலோடிராமா வகையைச் சேர்ந்த படம் என்பதால், பலருக்கும் இது பிடிக்காமல் போகலாம். ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு புதிய அனுபவத்தை உணர்வு ரீதியாக புரிந்து கொள்ள விரும்புபவர்கள் இப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.

மேலும் படம் பற்றி:- http://www.imdb.com/title/tt1504320/

தொடர்புடைய இன்னொரு பதிவு :

திக்குவாய் – சரியாகப் பயிற்சியும் முயற்சியும் போதும்!

This entry was posted in அனுபவம், சினிமாப் பார்வை, திரைப் பார்வை and tagged , , , , . Bookmark the permalink.

15 Responses to என்னைப் போல் ஒருவன் (The King’s Speech)

 1. வணக்கம் அண்ணே…

 2. arunmozhi says:

  UR REAL LIFE STORY U HAVE NARRATED VERY WELL…..IT CAN BECOME AN INSIRATION FOR FEW PERSONS WHO WANTS TO OVERCOME THIS STAMMERING PROBLEM…..THANKS FOR UR SHARING…… ARUNMOZHI

 3. உணர்ச்சிகரமான பதிவு! உணர்ச்சிபட வைத்தது!

 4. rkraghunath says:

  Nanraaga ezhudugirai…Thodarnthu ezhudu..

 5. பாலா,

  அருமையான பதிவு. அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். 🙂

 6. பாலா, ஏற்கனவே ஒரு முறை எங்கேயோ இதுப் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருப்பதாக ஞாபகம். (தவறாகவும் இருக்கலாம்). ஆனால் அந்த குறையை பெரிதாக எடுக்காமல் அதை வென்று இன்று பலரும் மதிக்கும்படியாக இருக்கும் உங்களை மிகவும் பாராட்டுகிறேன். ஆமா அப்புறம் அந்த சாமியாரை (வைத்தியரை) என்னிக்காவது சந்திச்சீங்களா?

 7. rajaram says:

  ரொம்பப் பிடிச்சுருக்கு தல

 8. உண்மை தான் மஞ்சூர் அண்ணா, ஏறகனவே பல முறை சொன்ன விசயம் தான். படம் என்னை மிகவும் பாதித்ததால் மீண்டும் சொல்லி இருக்கிறேன். அந்த மருத்துவரை பிறகு பார்க்கவில்லை.

  பாரா- நன்றி தல, படம் பாருங்க ரொம்பவும் பிடிக்கும்!

 9. Feb = Apr = June

  ஒரு மாசத்துக்கு ஒருக்கா எங்க போறீங்க? பாலா அடிக்கடி எழுதணும்…

  ஒவ்வொரு வரியை வாசிக்கும் போதும் உங்கள் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. மிகவும் அனுபவித்துப் படித்தேன் பாலா…. அருமை…

 10. Manimaran says:

  Super bala….will u help me…post any treatment experience in ur life

 11. RAJKUMAR says:

  Dear Sir,

  I also have that problem. I get confidence after read your story.

 12. நெஞ்சைத் தொட்ட பதிவு பாலா. விடாமுயற்சி வெற்றி தரும். வேளாண் கல்லூரியில் என்னுடன் படித்த நண்பர் ஆல்பர்ட் சேவியர் சரளமாகப் பேசுவதில் சிரமம் கொண்டவராக இருந்தார். முதலாம் ஆண்டில் அவர் பட்ட சிரமங்களை நான் அறிவேன். ஆனால் விடாமல் முயற்சி செய்து, பேச்சுப் பயிற்சி செய்து, நான்காம் ஆண்டு வரும்போது அனைத்துக் கல்லூரிப் பேச்சுப் போட்டிகளில் வெளுத்து வாங்கும் அற்புதமான பேச்சாளராகத் தன்னை உயர்த்திக் கொண்டார். தன்னம்பிக்கை என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதெல்லாம் அந்த அருமை நண்பரின் முகம் என் மனதில் வந்துபோகும். வாழ்த்துகள் பாலா. புன்னகை உலகம் இதழுக்கும் எழுதுங்கள்.

  Susi Thirugnanam

 13. sivakumar says:

  Friend,
  Really interesting!! I am also ” Unnaipol oruvanthan”. From my childwood i faced lot of problems.But Confident and effort given success to me…” Pratice make a man perfect ” this comedy dialogue told by santhanam. but it’s true for stammering people like us.

 14. Pingback: திக்குவாய் – சரியாகப் பயிற்சியும் முயற்சியும் போதும்! | யெஸ்.பாலபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.