வாங்க பழகலாம்..

சின்ன வயசில் நான் மிகவும் வியப்பாக பார்த்த மனிதர் என்றால் அது நாகராசன் என்ற அண்ணன் தான். அவர் ஒரு சவ்வு மிட்டாய் வியாபாரி. தோளில் பெரிய மூங்கிலை சாய்த்து வைத்திருப்பார். அந்த கழியின் மேல பாவாடைச் சட்டை அணிந்து, கையில் சலங்கை மாட்டி இருக்கும் பெண் பொம்மை பார்க்க அழகாக இருக்கும். கண் எழுதி, உதட்டுக்கு சாயமிட்டு, தலைவாரி, காதுகளில் கம்மல் மாட்டிக்கொண்டு இருக்கும் பொம்மை அது. மூங்கிலில் உள்ளே இருந்து வரும் கயிறு ஒன்றில் வளையம் மாட்டி அதை கீழே தொங்க விட்டிருப்பார். கால் பெருவிரலால் வளையத்தை இழுக்க.. அந்த பொம்மை கை தட்டும்.

தெருப்பசங்க எல்லாரோடும் கூட்டமாக ஐஞ்சு பைசா, பத்து பைசாவுக்கு சவ்வு மிட்டாய் வாங்கித் சாப்பிட்டிருக்கிறேன். கூடுதல் பணம் கொடுத்து வாங்குபவர்களுக்கு கடிகாரம், கிளி பொம்மை எல்லாம் அந்த மிட்டாயிலயே செய்துகொடுப்பார். அச்சு அசலான உருவமாக அவை இல்லாது போனாலும், எங்கள் கற்பனையை தூண்டிவிடுவதில் முக்கிய பங்கு வகித்தது.

பெண்பிள்ளைகள் வந்தால், பல்லி வால் சைசில் கூடுதல் மிட்டாய் எடுத்து கண்ணத்தில் ஒட்டி அனுப்புவார். ஆண் பசங்களுக்கு மீசை வைத்துவிடுவார். கார், கிலி, கடிகாரம், மீசை என எல்லா வடிவங்களிலும் நான் அவரிடம் மிட்டாய் வாங்கி சாப்பிட்டிருக்கிறேன்.

படைப்பின் கடவுள் பிரம்மா என்று சொல்லி வளர்க்கப்பட்டு, அதை நம்பிய காலம் அது. எனக்கு நாகராசண்ணன் பிரம்மாவாகவே தெரிந்தார். அவரின் கற்பனைகள் எல்லாம் எங்களின் கைகள் வழி எங்களுக்குள் நுழைந்தது என்றே சொல்லலாம். கற்பனையை வித்திட்ட ஆசான்களில் அவரும் முக்கியமான ஒருவர் என்றால் அது மிகையல்ல.

வீட்டின் கடைக்குட்டியாக பிறந்ததினால் பல சமயங்களில் நன்மையும் சில சமயங்களில் தொல்லைகளையும் அனுபவிக்க வேண்டியதிருக்கும். நானும் அனுபவித்திருக்கிறேன். ஏதாவது சேட்டைகள் செய்து அப்பாவிடம் மூத்தவர்கள் அடியோ திட்டோ வாங்கும் போது தப்பித்துக்கொள்ளுவது மாதிரியான நன்மைகளும், நான் மட்டும் மாட்டிக்கொள்ளும் போது எல்லோரும் முறை வைத்து பூஜை போடுவது மாதிரியான தொல்லைகளும் இதில் அடங்கும்.

குழந்தைகள் எண்ணிக்கையில் அதிகம் என்பதால் எப்போதும் வீட்டில் விளையாட்டுப் பொருட்கள் இரைந்து கிடக்கும். அவற்றில் சிலவற்றை அண்ணன்கள் கழட்டி ஆய்வு செய்வதை பார்த்திருக்கிறேன். பின்னாளில் திக்குவாய் காரணமாக எவருடனும் கலக்கமுடியாத சமயங்களில் நூல்களும், கழட்டிப்போடப்பட்ட கார் மாதிரியான விளையாட்டுச் சாமான்களுமே கை கொடுத்தன.

ஒருவேளை விட்டிருந்தால் ஜி.டி. நாயுடு ரேஞ்சுக்கு வந்திருப்பேனோ என்னவோ.. முடிந்து போனதை நினைத்து வருந்தி பயனில்லை. நான் சொல்லவந்த விசயம் வேறு, வழக்கம் போல பாதை மாறிவிட்டேன்.

கருவேல மரங்களின் முள் எடுத்து, பனை ஓலையில் காற்றாடி செய்து, முனையில் ஆட்டாம் புழுக்கையை சொருகிக்கொண்டு ஓடிய நாட்கள் பசுமையாக நினைவில் இன்றும் இருக்கிறது.

எங்கள் ஊரில் தென்னைமரங்கள் நிறைய என்பதால் தென்னை ஓலைகளில் பீபீ செய்வது, ராக்கெட் செய்வது, கண்ணாடி, வாட்ச், பாம்பு என விதவிதமாக செய்து மகிழ்ந்திருக்கிறேன். தென்னங்குறும்பையில் ஒலி எழுப்பும் சுற்றி, நுங்கு மட்டையில் வண்டி, தென்னை மட்டையில் படகு(வீட்டுக்குத் தெரியாமல் கடற்கரைக்கு போய் அதை வைத்து விளையாடுவோம்), சோடா மூடியில் சுழலும் சக்கரம், டாலர், மோதிரம் அதோடு சோடாமூடியுடன் பாசியை இணைத்து ஓசை எழுப்பும் சாதனம்,  சிகரெட் காலி அட்டைப்பெட்டிகளைக்கொண்டு எங்கோண வடிவில் கூடு மாதிரியானவை இப்படி ஏகப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் செய்து பார்த்திருக்கிறேன்.

ஒர் ஆடித்திருவிழாவின் போது எங்கள் ஊர் கோவில் வாசலில் ஒரு ஸ்டீம் போட்டு விற்பவரை பார்த்தேன். தாம்பாளம் மாதிரியானச் சின்னப் பாத்திரத்தில் ஏற்றப்பட்ட விளக்கொளியுடன் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது. விலை கேட்ட போது பதினைந்து ரூபாய் சொன்னார் என்று நினைவு. அதனால் வாங்க முடியவில்லை.

கொஞ்ச தூரத்தில் இன்னொருவர் பாத்திரத்தில் குட்டி குட்டியான மீன்களை ஓடவிட்டுக்கொண்டிருந்தார். பத்துகுட்டி மீன்கள் அடங்கிய பாக்கெட்டுக்கு ஐந்து ரூபாய் விலை சொன்னார். வாங்கியாச்சு. சின்னச்சின்ன பிளாஸ்டிக் துண்டுகளை மீன்வடிவில் வெட்டி வைத்திருந்தார். ஆர்வத்துடன் வீட்டுக்கு ஓடிவந்து தண்ணீருக்குள் விட்டால் அது ஓடவில்லை. ஏமாற்றப்பட்டு விட்டோமோ என்று நினைத்து, மீண்டும் ஓட்டமாய் மீன் விற்றவரைத்தேடிப் போனேன். ஆனால் அங்கே இருந்த கடைகள் எதையுமே காணோம்.

மிகுந்த ஏமாற்றத்துடன் நின்றுகொண்டிருந்தேன். அருகில் இருந்த பொட்டிக்கடைக்காரரிடம், ‘அண்ணே, இங்கன மீனு வித்துக்கிட்டு இருந்தவங்க எல்லாம் எங்கேன்னு தெரியுமா?’ன்னு கேட்டேன்.

அவரோ சிரிச்சுகிட்டே, என்னடா.. இந்த வயசுலயே மீனு எல்லாம் வாங்க ஆரம்பிச்சுட்ட..’ என்றார். நான் பதறிப்போய், அய்யோ அண்ணே.. நெசமீனு இல்ல.. பொம்மை மீனு’ என்றேன். அவரும் அப்படி சொல்லு..என்று சிரித்துக்கொண்டு, அவர்கள் எல்லாம் கடையைக்கட்டிக்கொண்டு ஆடித்தபசு நடக்கும் இடத்திற்கு போய் விட்டதாகச்சொன்னார்.

கொஞ்ச தூரத்தில் இருந்த குமரன் சைக்கிள் கடையில் இருந்து, சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு, ஆடித்தபசு நடக்கும் ராமதீர்த்தக்கரை பக்கம் போனேன். ஊரின் மொத்தச்சனமும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அங்கே குழுமியிருந்தது. சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு, கூட்டத்தினரை விளக்கிக்கொண்டு உள்ளே போனேன். கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு அப்புறம் என்னிடம் மீன் விற்றவரைக் கண்டு பிடித்து, ‘என்னண்ணே இது, நீங்க கொடுத்த பாக்கெட்டுல இருந்து ஒரு மீனுகூட ஓட மாட்டேங்குது’ என்று புகார்குரலில் அவரிடம் மீன் பாக்கெட்டை நீட்டினேன்.

அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு, ’என்ன பண்ண?’ என்று கேட்டார். நானும் விபரமாக சொன்னேன். ’சூடம் வைக்கலையா?ன்னு கேட்டார்.

’சூடமா?’

‘ஆமாப்பா.. மீனோட சூத்துல கொஞ்சூண்டு சூட்டத்தை வச்சாத்தான் அது ஓடும்’

அப்போது தான் தாம்பாளத்தில் ஓடிக்கொண்டிருந்த மீன்களை கவனித்தேன். சின்னதாக சூட்டம் சொருகி இருப்பது தெரிந்தது. வீட்டுக்கு வந்து, அதே போல செய்து பார்த்தபோது, மீன் ஓடத்தொடங்கியது. குறுக்கும் நெடுக்குமாக மீன்கள் ஓடுவது அழகான அனுபவம். (நாக்கு சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கினால் ஆன, Tongue cleanerல் தான் அம்மீன்கள் செய்யப்பட்டிருந்தன என்பது பிற்பாடுத்தான் எனக்கு தெரியவந்தது)

அப்போது வந்துகொண்டிருந்த பூந்தளிர் புத்தகத்தில் இதுபோன்று செய்து பழக பல ஐடியாக்களைக் அள்ளிக்கொடுத்துக்கொண்டிருப்பார்கள். அனேகமாக அவை எல்லாமே வாண்டுமாமா எழுதியவை. அழகான ஓவியத்தில் அவை வரும். பின்னர் தினமலரின் சிறுவர் மலரில் இதுபோன்று வந்துகொண்டிருந்தது. இப்போதெல்லாம் சிறுவர் பத்திரிக்கைகளில் இது வருகிறதா தெரியவில்லை. (சமீபத்தில் படித்த அம்புலிமாமா இதழில் இப்படியான செய்முறை குறிப்புகளைப் பார்த்தேன்) குழந்தைகளுக்கான தொலைக்காட்சிகளில் இப்படியான சில நிகழ்ச்சிகள்  வருகிறது.

அப்படிப் படித்த எல்லா சோதனைகளையுமே கிட்டதட்ட செய்து பார்த்திருக்கிறேன். சிறுவயதில் தொடர்ந்த பழக்கம்.. இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இதனை ஒர் இயக்கமாக சில மாவட்டங்களில் செய்தது. அப்புறம் தொடர்ந்த நினைவு இல்லை. சுனாமியில் இருந்து மீண்ட குழந்தைகளுக்கான புத்துணர்வு முகாம்களில் இதுபோன்ற செய்வினைப் பொருட்களை அக்குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டபோதே அவர்கள் மன அழுத்தங்களில் இருந்து மீண்டுவந்ததாக நிகழ்ச்சியை நடத்திய தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று பேட்டியில் சொல்லி இருந்தது இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது.

இன்று குழந்தைகள் இதுபோன்ற விசயங்களில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. வீதியில் கிரிக்கெட்டும், கம்யூட்டரில் டிஸும் டிஸுமுமாக கழிகிறது அவர்களின் பொழுதுகள். கதை சொல்லிய பாட்டிக்கள் இப்போதெல்லாம் தொலைக்காட்சி தொடர்களில் மூழ்கி, கதைகளை மறந்து போய்விட்டனர்.

இணையத்திலும் கூட மேலைநாடுகளில் இது போன்ற செய்வினைப்பொருட்கள் குறித்து எழுதுபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். Arvindgupta மாதிரி வட இந்தியாவில் பலர் செய்துகொண்டிருக்கிறார்கள். அரவிந்த்குப்தாவின் பணி மிக முக்கியமானது. (தனிக்கட்டுரை எழுதும் அளவுக்கு) ஆர்வமுடையவர்களை இணைத்துக்கொண்டு, யூட்டியூப்பில் தனியாக பலமொழிகளில்(தமிழ் உட்பட) குழந்தைகளுக்கான செய்வினைப்பொருட்களை செய்துகொண்டே இருக்கிறார் இவர்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவர்களின் சிந்தனையும், கற்பனை வளமும் அவசியம் என்பதை மறந்துபோன மனிதர்களாகிவிட்டோம் என்பதை நினைக்கும் போது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.

நம்மில் அனேகம் பேருக்கு.. இன்று நினைவில் இருக்கும் குழந்தைகளுக்கான கைவினைப் பெருட்களை செய்து பார்த்து, குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்கவேண்டும். இணையத்தில் இயங்குபவர்கள் படமெடுத்து, செய்முறையோடு பதிவு செய்திட்டால்.. எதிர்வரும் காலங்களில் அவை அனைத்துக் குழந்தைகளுக்கும் பயன்படலாம்.

This entry was posted in அனுபவம், Do It Yourself and tagged , , , , , , . Bookmark the permalink.

7 Responses to வாங்க பழகலாம்..

 1. இந்த விளக்கேத்தினால் ஓடும் படகு வாங்கி எங்க வீட்டு கொலுவில் கீழே வைக்கும் குளத்தில் விட்டிருக்கிறோம். :))) மழை நாளில் பேப்பரில் அப்பா செய்து தரும் கப்பல், கத்தி கப்பல் இதெல்லாம் வைத்து விளையாடி இருக்கிறோம். வேறு எதுவும் பெருசா செஞ்சதில்லை – எனக்கு இயல்பாவே கொஞ்சம் படைப்பூக்கம் கம்மிதான் போல :))

 2. வித்தியாசமான, விளக்கமான பதிவு… தொடருங்கள்… நன்றி…

 3. பாரதி இங்கு வீட்டில் ஒரு குழந்தைகளை ஒரு வரையறைக்குள் கொண்டு வர முடியல.

  கணினி விளையாட்டுக்கள் ஒரு பக்கம். அது அலுத்துப் போனவுடன் சீட்டு விளையாடுகிறார்கள். அது முடிந்தவுடன் மடிக்கணினி பக்கம் வந்து விடுகிறார்கள். இது முடிந்தவுடன் சைக்கிள் எடுத்துக் கொண்டு பேய்த்தனமாக ஓட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். இது முடிந்ததும் அப்பா போர் அடிக்குது என்கிறார்கள்.

  எனக்கு தலை சுத்துது….

  எனக்கு ஆப்பு அடிக்கவே பல மடங்கு வேகமாக இரண்டு பேர்கள் படாய் படுத்தி எடுக்கிறார்கள். ஒருவர் மட்டுமே என் கட்சி.

 4. நாமக்கல் சிபி says:

  தலக்கு கொழந்த மனசு!

 5. அரவிந்த் குப்தாவின் வலைதள இணைப்பும் கொடுத்திருக்கலாம். பயனற்ற பொருட்களைக்கொண்டு விளையாட்டுப் பொருட்களை உருவாக்குவதில் விற்பன்னர். இத்துறையில் பல நூல்களை எழுதியவர். பள்ளி மாணவர்களுக்கு பல பரிசோதனைகளை தன் வலைதளத்தில் காணொளியாக இணைத்திருக்கிறார்.
  http://arvindgupta.com

 6. முந்தைய பின்னூட்டத்தில் இணையமுகவரி தவறு. மன்னிக்கவும்.
  http://www.arvindguptatoys.com

 7. ஷாஜஹான், கொடுக்கலாம் தான். ஆனால்.. தேடலுடையவன் கண்டடைவான் என்பது என்னுடைய நம்பிக்கை. அதனால் தான் சுட்டி கொடுக்கவில்லை. வேண்டுபவர் கொஞ்சம் கூகிளிடமும் கேட்கட்டுமே! 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.