தெரிந்ததும்.. தெரியாததும்- பீடி தொழில்

என் சிறு வயதில் எங்க ஊரில் ஓர் அப்பத்தா பீடி புகைத்து பார்த்திருக்கிறேன். ஆரம்பகாலத்தில் தாத்தாவோடு சேர்ந்து சுருட்டு புகைத்தாராம். அவரின் மறைவுக்குப் பின் பீடிக்கு மாறியவர் அப்பத்தா! குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து பிடிகள் வரை புகைப்பார். ஆனாலும் அவருக்கு சளி கட்டியோ, இருமல் இருந்த மாதிரியோ நினைவில் இல்லை.

ராமேசுரத்திற்கு சுற்றுலா வரும் உ.பி மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாய மக்கள் பலரும் ஆண்,பெண் பாகுபாடில்லாமல் புகைத்து மகிழ்வதை பார்த்திருக்கிறேன்.

இன்றைய இந்தியாவில் புகைக்கும் பழக்கத்தினால் ஏற்படும் கேன்சர் நோய்க்கு பலியாகும் மக்களின் எண்ணிக்கை நாட்டில் விபத்துக்களால் இறப்பவர்களை விட அதிகம் என்ற தகவலை ஒரு புள்ளிவிபரமாக படித்த நினைவு இருக்கிறது.

சமீபத்தில், நெல்லை சென்றிருந்த இருந்த போது சுரண்டை பகுதிக்கும், சோலைச்சேரி பகுதிக்கும் போயிருந்தேன். அங்கே கண்ட காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது.

ஒரு தெருவுக்குள் குழு குழுவாக பெண்கள் கூடி பீடி சுற்றிக் கொண்டிருந்தார்கள். கேரளாவில் மட்டும் தான் பீடி சுற்றும் தொழில் நடக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். 84ல் கேரளா போயிருந்த போது பீடி சுற்றுவதை வேடிக்கை பார்ப்பதே என் வாடிக்கையாக இருந்தது. அவர்களின் வேகமும், லாவகமும் பார்ப்பதர்கே அழகாய் இருக்கும்.

ஆனால், தமிழகத்திலும் கூட அப்படியான தொழில் நடப்பது எனக்கு புதிய செய்தி. இந்தியாவில் இருக்கும் பல லட்சம் பீடித்தொழிலாளர்களில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் ஒன்பது லட்சம் பீடி சுற்றும் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

இந்த தொழில் இங்கு எப்போது வந்தது என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை. பல தலைமுறைகளாக செய்து வருகின்றனர். இந்த தொழிலில் இயங்குபவர்கள் 99 சதவீதம் பேர் பெண்கள் தான்.

உடல் நோவுகண்டு வீட்டில் இருக்கும் ஆண்களும் இதில் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக மீசை அரும்பும் வரை ஆண் பிள்ளைகள் பீடி சுற்றுவதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. சுற்றிவிட்டு பணத்தை (வீட்டினரிடமே) பெற்றுக்கொண்டு, பொழுது போக்க/செலவு செய்ய ஓடி விடுவார்கள். மீசை அரும்ப ஆரம்பித்ததும், அது பெண்களுக்கான வேலை என்று ஒதுக்கி வைத்துவிட்டு கிளம்பி விடுவார்களாம்.

காலையில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பீடி சுற்ற அமரும் ஒரு பெண் அடுத்த நாள் காலைக்குள் ஆயிரம் பீடிகளை அநாயசமாக சுற்றித்தள்ளுகிறார். அப்படி ஆயிரம் பீடிகளை சுற்றினால் ரூ. அறுபது வரை சம்பளம் கிடைக்கும்.

இவர்களுக்கு பீடி கொடுக்கும் கம்பெனியில் நோட்டு போட்டு, பி.எப் பிடிக்கிறார்கள். சம்பளத்தில் பணம் பிடிக்கப்படும் இந்த பணம் குறைவான தொகை என்றாலும், இதில் ஈடுபட்டிருக்கும் அனேகரும் ஏழை மக்க்கள் என்பதால் அவர்களுக்கு இந்த சேமிப்பு பெரிதும் உதவுகிறது.

இப்பகுதில் இம்மக்களின் திருமண சடங்கின் போது, மணப்பெண் எத்தனை நோட்டு வைத்திருக்கிறார்? என்பதை மாப்பிள்ளை வீட்டார் விசாரித்தே திருமணங்களை முடிவு செய்கிறார்கள். இந்த நோட்டுக்களின் அளவு…, கொடுக்கப்படும் ரொக்க வரதட்சணை பணத்திற்கு ஈடானதாக இங்கு கருதப்படுகிறது.

அதனாலேயே இப்பகுதியில் பல பெண்குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்படுவதில்லை. சிறுவயது முதலே பீடி சுற்றும் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சில வீடுகளில் மட்டும் தங்கள் பெண் பிள்ளைகளை துவக்கப்பள்ளி வரை அனுப்புகின்றனர். அதற்கு மேல் படிக்கப்போகும் பெண் குழந்தைகளின், குடும்பப் பின்னனி வளமானதாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.

ஒரு கிலோ இலையும், இருநூறு கிராம் புகையிலையும் கொடுப்பார்கள், அதில் ஆயிரம் பீடிகள் சுற்ற வேண்டும். அடுத்த நாள் காலை சுற்றியதைக் கொடுத்திட வேண்டும். தவறினால் திரும்பவும் வேலை கிடைக்காது. ஆனால் ஒரே நாளில் ஆயிரம் பீடிகள் சுற்றி விடும் வேகத்திற்கு இவர்களின் கை பழகி இருந்தாலும், பூச்சி கடித்த இலை, புகையிலை தூள் அளவின் அதிக தேவை என்று ஏதாவது இடையூறு வந்துவிடும்.

அதனால் ஆயிரம் பீடிகள் எண்ணிக்கை வராது. ஆயிரம் வராமல் பீடி கம்பெனியின் கிளை(நெல்லையில் பல கிராமங்கள் ஒன்று கூடும், பெரிய கிராமங்களில் இவை இருக்கின்றன.)யில் எப்படி கொண்டு போய் கொடுக்க முடியும்…? அப்படியான சூழல்களில் இவர்களுக்கு உதவ, பீடிகளை கட்டு கட்டி, தயார் நிலையில் வைத்திருக்கும் சிறு வியாபரிகளும் உண்டு. ஆனால்.. இவர்கள் காசுக்கு விற்பது இல்லை. பண்டமாற்று முறை போல.., பத்துகட்டு பீடிக்கு ஒரு கட்டு பீடியை ஈடாக பெறுகிறார்கள். இது ஒரு வகை வட்டி. அதுவும் ஒரு நாளுக்குள் கொடுக்க வேண்டும், கொடுத்தால் ஒரு கட்டு, இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்டால்.. இரண்டு கட்டு! இப்படி நாள் ஒன்றுக்கு ஒரு கட்டு வீதம் வசூலிக்கிறார்கள்.

கை நோக பீடி சுற்றிய பின்னும் கையில் காசு பார்க்க முடியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பின்ன.. வட்டியாக மாற்றுக்கட்டு கொடுத்தே ஓய்ந்து போகிறார்கள். இம்மக்களுக்கு அரசு தரப்பில் இருந்த முறைசாரா தொழிலாளர்கள் என்ற பிரிவில் வருகிறார்கள். இவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு பின் ஓய்வூதியமும் வருகிறது. அதுவும் மாசம் அதிகபட்சமாக வரும் ஓய்வூதியம் எவ்வளவு தெரியுமா? முப்பது ரூபாய்.

அந்த பணமும் பணவிடையாக(எம்.ஓ) வராது. இவர்கள் ஏதாவதொரு வங்கியில் கணக்கு திறந்து அந்த வங்கி கணக்கு எண்ணை அரசுக்கு கொடுத்தால்…அவர்கள் நேரடியாக வங்கியில் பணம் வர ஏற்பாடு செய்வார்கள். (வங்கி கணக்கு திறக்க குறைந்தபட்சம் ரூ.300 தேவை. அதுவும் இருப்பு நிதியாக வங்கி கணக்கிலேயே இருக்கவேண்டும்)

ஏழை மக்களின் உழைப்பை.. முதலாளிகள் மட்டுமல்ல.. முதலாளிகளுக்கு கம்பளம் விரிக்கும் இந்த அரசும் கூட சுரண்டுகிறது.

(2007ம் ஆண்டு எழுதியது. மீள் பதிவு செய்யப்படுகிறது)

This entry was posted in அனுபவம், கட்டுரை, சமூகம்/ சலிப்பு, புகைப்படம். Bookmark the permalink.

3 Responses to தெரிந்ததும்.. தெரியாததும்- பீடி தொழில்

 1. (மீள் பதிவு) படித்ததில்லை…

  /// ஏழை மக்களின் உழைப்பை.. முதலாளிகள் மட்டுமல்ல.. முதலாளிகளுக்கு கம்பளம் விரிக்கும் இந்த அரசும் கூட சுரண்டுகிறது. ///

  உண்மை…

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி…

 2. தலைவரே,

  எப்பிடி இருக்கிங்க? மீள்பதிவு அருமை!

  ஸ்ரீ….

 3. Venkataraman says:

  எப்படி நண்பா…இப்படி எல்லாம் எழுத முடிகிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.