மும்பையில் இருந்த சமயங்களில் என்னை அதிகம் கவர்ந்த பகுதிகளில் தாராவியும் ஒன்று. எங்கு பார்த்தாலும் தமிழில் சாயல் முகங்கள்.. வேட்டி, சேலைகளில் மனிதர்கள், மனுசிகள்.., சத்தமாக தேனீர்கடையில் கேட்கும் தமிழ் பாடல்கள், தமிழில் பெரிய பெரிய விளம்பரப் பலகைகள்.. என்று எங்கு பார்த்தாலும் தமிழ்நாட்டின் ஏதோவோரு நகரத்தை.. பார்ப்பவரின் பார்வைக்கேற்ப காட்டும் பகுதி தாராவி. தமிழ்நாட்டுக்கே வந்து விட்ட உணர்வை அது தோற்றுவிக்கும். அப்படிப்பட்ட தாராவி குறித்து…
“ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி; இரண்டாம் நம்பர் என்று கூறப்படுகின்ற சட்டவிரோத காரியங்களுக்கும் தலைமை இடம்; நாகரீகம் தெரியாத மக்கள் வசிக்கும் இடம்; சுகாதாரமற்ற பகுதி” -என்றெல்லாம் வர்ணிக்கப்படும் தாராவியின் பொருளாதார பலம் பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
கிட்டதட்ட ஆறு லட்சம் குடிசைகள் ஒருங்கே இணைந்து நூற்றி எழுபத்தி அய்ந்து ஹெக்டேர் பரப்பரவில் விரிந்து கிடக்கும் பகுதி தான் தாராவி. மாகிம் ரயில் நிலையத்தின் கிழக்கு பகுதியிலிருந்து, சயான் ரயில் நிளையத்தின் மேற்கு பகுதி வரை பரந்து இருக்கும் தாராவி, முன்பு பெரிய வாய்க்கால் பகுதியாக இருந்தது.
மும்பையின் வேற்று மாநிலத்தவர்களில் கடைநிலை மக்கள் பெருவாரியாக இந்த பகுதிகளில் மணல் கொட்டி தங்களின் வசிப்பிடங்களுக்காக குடிசைகளைப் போடத்தொடங்கினார்கள். ஆரம்ப காலத்தில் மகராஷ்டிரா மக்களும், உ.பி மாநிலத்தவர்களும், எல்லா பகுதியைச்சேர்ந்த இஸ்லாமிய மக்களின் கைகள் ஓங்கி இருந்தன. ஆனால் இன்று தென்னிந்தியர்கள்.., குறிப்பாக தமிழர்களின் கை ஓங்கி இருக்கும் பகுதி இது.
தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இருபத்தியெழு (தற்போது மாநில அரசு இப்பகுதியில் இவை இயங்க தடை போட்டு இருக்கிறது), நூற்றுக்கும் அதிகமான ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனங்கள், பெரிய இயந்திரங்களுக்கு உதவும் போல்டு, நட்டு போன்ற சின்னச்சின்ன உபகரணங்கள், ஊறுகாய், அப்பளம், முறுக்கு, மிக்சர் மற்றும் பிரட், பன் போன்ற உணவு வகை பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் நிறைந்து இருக்கின்றன.
இவை தவிர ப்ளாஸ்டிக் கழிவுகளை ரீசைக்கிளின் செய்யும் குடோன்கள், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகள், ஜரிகை வேலைகல் நடக்கும் இடங்கள் என வகைவகையான தொழில்கள் நடந்து வருகின்றன.
இங்கிருக்கும் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் அதிகமானவை பெரிய பெயர் பெற்றிருக்கும் ரைட்மார், ஆம்பிசன், குமார்ஸ், பீட்டர் இங்லாண்ட் போன்ற நிறுவனங்களுக்கான ஆடைகள் இங்கிருந்து தான் தயாராகிறது.
முதலில் இந்நிறுவனங்களே ஆரம்பத்தில் சொந்தமாக குடோன் வைத்து தயாரித்து வந்தன. ஆனால் இப்போது தாராவி முழுக்க தினக்கூலிக்கு வேலைபார்க்கும் நிறுவனக்களே அதிக அளவில் இயங்கி வருகின்றன.
குறைந்தது ஒவ்வொரு ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களிலும் இருபதுக்கும் குறையாமல் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஒவ்வொருவரும் வாரத்திற்கு தலா ரூ.900 முதல் ரூ.1400 வரை சம்பளம் எடுத்து வருகின்றனர்.
இது போல தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூடப்பட்டலும், மும்பைக்கு வெளியே இருந்து பதனிடப்பட்ட தோல்களை வாங்கி விற்கும் வியாபார நிறுவனங்கள் இருநூறுக்கும் மேல இருக்கின்றன. இவை மாதத்திற்கு பதினான்கு லட்சத்திலிருந்து இருபது லட்சம் வரை வியாபாரம் இருக்கிறது.
இங்கு ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து வாரத்திற்கு குறைந்தது அறுபதினாயிரம் ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றன. இது இருபது பேர் வேலை செய்யும் நிறுவனத்தின் கணக்கு. அதற்கு மேல் வேலையாட்கள் வைத்திருக்கும் நிறுவனங்களும் உண்டு. இங்கு அறுபதினாயிரம் என்ற எண்ணிக்கை வேறு படும்.
|
சாதாரணமாக ஒரு தையற்காரர் ரூ.8 முதல் ரூ. பதினாறு வரை ஒரு ஆடைக்கு வாங்குகிறார்கள். (சட்டைக்கு ரூ.எட்டு முதல் தொடங்குகிறது. பேண்ட்-க்கு ரூ. பத்து முதல் தொடங்குகிறது.) மிகச்சாதாரணமாக இருபது பேர் வேலை பார்க்கும் ஓர் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் சம்பளமாக வாரத்திற்கு ரூ. 48,000 வரை செலவு செய்கிறது.
இது தவிர, கூடுதல் நேர வேலைக்கான(ஓ.ட்டி) சம்பளம் தனி. வேலை பார்ப்பவர்களுக்கே வாரம் நாற்பத்தியெட்டாயிரம் சம்பளமாக கொடுக்கும் ஒரு நிறுவனத்தின் வார வருவாய் எவ்வளவு இருக்கும் என்று நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
இந்த ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் தயாராகும் ஆடைகளுக்கு ‘காஜா-பட்டன்’ வைத்துக்கொடுக்க என்றே நிறைய தனி நபர்கள், அதற்கான இயந்தரங்களைப் போட்டு சின்ன இடங்களைப் பிடித்து இருக்கின்றனர். தினம் செலவு போக நூறிலிருந்து நூற்றி அய்ம்பது ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள்.
இவை தவிர மாதம் குறைந்தது ரூபாய் முப்பதாயிரம் முதல் அய்ம்பதனாயிரம் வரை லாபம் வரக்கூடிய கடலைமிட்டாய், முறுக்கு போன்ற திண்பண்டங்களின் நிறுவனங்களும் உண்டு.
எது எப்படியான போதிலும் மாதம் குறந்தது அய்ந்து முதல் எட்டு கோடி வரை பணம் புரள்கிறது என்பது நிதர்சனம். அது பகிரங்கமாக வெளியே வரும் போது தான் தாராவி மேம்படும்.
(2007 பிப்ரவரியில் எழுதியது, மீள் பதிவு செய்யப்படுகிறது)
பலப்பல தகவல்கள் அறியாதவை…
பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி… வாழ்த்துக்கள் …