தோல்வி நிலையென நினைத்தால்..

mask-1027228_640

படம் நன்றி:- pixabay

 

சமீபத்தில் நீங்கள் தோல்வியடைந்தது எப்போது?! நினைவு இருக்கிறதா? இந்தத் தோல்வி என்பது சின்னதாகக்கூட இருக்கலாம். பேருந்தை பிடிக்க முயன்று, முடியாமல் போனது, அலுவல் பணியைத் திட்டமிட்டபடி முடிக்காமல், மேலதிகாரியிடம் டின் வாங்கிக்கொண்டது இப்படி எதுவாகவும் இருக்கலாம். கொஞ்சம் யோசித்துப்பார்த்தால்.. புலப்படும். அப்படியே நமது கடந்த காலத்திற்குப் பயணமாகி சந்தித்த தோல்விகளைச் சிந்தித்துப்பாருங்கள். வரிசையாக அவை வரும்.

இன்று நம் பிள்ளை எப்போது தோல்வியை எப்போது சந்தித்தார்கள் என்று யோசித்துப்பாருங்கள். விடை கண்டுபிடிக்க முடியாவிட்டால்.. அவர்களை அழைத்தே கேட்டுப்பாருங்கள். அவர்களிடமிருந்து உங்களுக்குக் கிடைக்கும் பதில் வியப்பாக இருக்கும். தோல்வியையே சந்திக்கவில்லை என்பதாகத்தான் பல பிள்ளைகளும் பதில் சொல்கிறார்கள்.

இன்றைய பிள்ளைகள் தோல்வியைக்கண்டு அஞ்சுப்பவர்களாகவும் அதை அறவே வெறுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இது உண்மையில் நல்லதா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். வாழ்க்கையில் ஏற்றம் என்றால் இறக்கமும் இருக்கும் தானே? பகலென்றால் இரவும், மேடு என்றால் பள்ளமும் இருக்கும் தானே? ஆனால் ஒன்றை விட்டுவிட்டு, இன்னொன்று மட்டும்தான் வேண்டும் என்பது எப்படிச் சரியானதாக இருக்கும்.

இது குழந்தைகளின் தவறு என்று சொல்லவரவில்லை. அவர்களுக்கு இதனைச்சொல்லி புரியவைக்காத பெற்றோரின் அறியாமை என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. தோல்வியில் இருந்து பெறப்பட்ட ஒவ்வொரு அனுபவங்களின் வழியே தான் இவ்வுலகம் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

தாங்களால் முடியாததையும், தாங்கள் தவறவிட்ட இடங்களையும் தம் பிள்ளைகள் பிடிக்கவேண்டும் என்ற பெற்றோரின் எதிர்பார்ப்பில் இருந்து துவங்குகிறது இன்றைய குழந்தைகளின் ஓட்டம்.

எங்கும் எதிலும் போட்டி. போட்டியிலும் கூட முதலிடம் வரவேண்டும் என்ற வேட்கை. அதனால் தான் தோல்வியைத் தாங்கிக்கொள்ளமால் தற்கொலையை நோக்கி ஓடும் இன்றைய இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.

2000-2009ஆம் ஆண்டுவரை தமிழகத்தில் தற்கொலைசெய்து கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது. இதில் தேர்வு தோல்வியின் காரணமாகத் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை மட்டும் இரண்டாயிரத்தைத்தொடுகிறது. தோல்விக்குத் தற்கொலை எப்படித் தீர்வாக இருக்கமுடியும்? உயிரை மாய்த்துக்கொண்டால் வெற்றிபெற்றவராகிவிடுவோமா என்ற சிந்திக்கக்கூட இயலவில்லை இன்றைய தலைமுறையினரால். அவர்களுக்கு இதனைப் போதிக்காமல் விட்டது யாருடைய தவறு? தோல்வியினால் ஏற்படும் தற்கொலைகளை வெறும் எண்ணிக்கையாக மட்டும் அணுகமுடியவில்லை. இதன் பின்னால் இருக்கும் சமூக உளவியலையும் உற்று நோக்கவேண்டியதிருக்கிறது.

பாடங்களைப் புரிந்து படித்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. பள்ளிகளும் கூட, மாணவர்களுக்குப் பாடங்களைப் புரிந்து நடத்துவதற்குப் பதிலாக மனப்பாடம் செய்து, அப்படியே காகிதத்தில் நகலெடுக்கவே பெரிதும் உதவுகின்றன. இது பற்றிய சிறிதும் அக்கரை இல்லாத, பெற்றோராக நாம் இருக்கிறோம். நம்முடைய சிறு பிராயத்தில் விளையாடுவதற்கும், ஓவியம், இசை, நடனம் என்று கற்றுக்கொள்ளும் போது இருந்த சுதந்திரம் இன்று இப்பிஞ்சுகளுக்கு உள்ளதா? எல்லாவற்றிலும் ஒரு பரபரப்புடனே அணுகுகின்றனர். அது பாடமாக இருந்தாலும் சரி, திறன் வளர்க்கப்பயன்படும் கலைகளாக இருந்தாலும் சரி. ஏனெனில் இன்றைய பெற்றோருக்கு தனது பிள்ளைகள் எல்லாவற்றிலும் முதலாவதாக வரவேண்டும். அதனைச் சரியென எண்ணும் பிள்ளைகளும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

சமீபத்தில் தோழி ஒருவரின் வீட்டிற்குப் போய் இருந்தேன். அங்கே ஒன்பதாவது படிக்கும், அவரின் பெண் பிள்ளை அழுதுகொண்டிருந்தாள். “அடுத்தமுறை கவனமாக இருந்தால் எடுத்துவிடலாம்” என்று தோழியும், அவள் கணவரும் ஆறுதல் கூறிக்கொண்டிருந்தனர். என்னவென்று விசாரித்ததில் ஆங்கிலத்திலும், சோஸியலிலும் மதிப்பெண்கள் குறைந்துவிட்டதாகவும், அதனால் பள்ளியின் ரேங்க் பட்டியலில் பின்னுக்குப் போய்விட்டதாகவும் கூறினார்கள். என்னென்ன மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள் என்று கேட்டபோது எனக்கு வியப்பு தாளவில்லை. ஆங்கிலத்தில் 90 மதிப்பெண்ணும், சமூகவியலில் 83 மதிப்பெண்ணும் பெற்றிருந்தாள் அப்பெண். ரேங்க் பட்டியலில் ஆறாம் இடம்.

நானெல்லாம் பள்ளியில் படிக்கும் போது, 35 மதிப்பெண் எடுத்துப் பாஸாவதற்கு வழியைப்பார் என்றுதான் என் பெற்றோர் சொல்லி அனுப்பினார்கள். ஆனால் இன்று தொன்னூறு மதிப்பெண் எடுத்த குழந்தையிடம் இன்னும் கவனமாக இருந்தால் அடுத்தமுறை கூடுதல் மதிப்பெண் எடுத்துவிடலாம் என்று கூறும் பெற்றோராக மாறி இருக்கிறார்கள்.

தொன்னூறு எடுத்துவிட்டு அழும் குழந்தையைவிட, நூற்றுக்கு நூறு எடுத்துவிட்டு, ஓடும் குழந்தைகளை நினைத்தால் இன்னும் பாவமாக இருக்கிறது.

ஒரு தலைமுறைக்கே நாம் தோல்விகளைக் கற்றுத்தராமல்.. பந்தயத்தில் ஓடும் ரோபோக்களாக, அதுவும் முதலிடத்திற்கு வரும் ரோபோக்களாக மாற்றிவைத்திருக்கிறோமோ என்று சந்தேகம் வருகிறது. இதனால்தான் சின்னத்தோல்விகளுக்கும் மனமுடைந்து விபரீத முடிவுகளை நோக்கிச்செல்லும் இன்றைய இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. மன அழுத்தம் என்பது இன்று நாற்பதைக் கடந்தவர்களை விட, முப்பது வயதிற்கும் குறைவானவர்களிடையே அதிகமிருப்பது கண்கூடு.

தேர்வு முடிவுகள் வருவதற்கு முந்தைய தினம், தோற்றுவிடுவோமோ என்று தற்கொலை செய்துகொண்ட பத்தாவது படிக்கும் சிறுமியைப் பற்றிய செய்தியை நாளிதழில் படித்தேன். அந்தோ பரிதாபம்.. நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்வில் வெற்றியும் பெற்றிருந்தாள் அச்சிறுமி. இத்துடன் நிற்கவில்லை இப்பட்டியல், வேலை கிடைக்கவில்லை என்பதால் தற்கொலை, மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால் தற்கொலை, அலுவலகத்தில் ஆட்குறைப்பு நடப்பதால் எதிர்காலம் குறித்து அச்சத்தில் தற்கொலை -என்று நாளிதழ்களைத் திறந்தாலே.. தற்கொலைச் செய்திகளும் அதன் பின்னனியும் மிகவும் சோர்வடையச்செய்கின்றன.

நமது பிள்ளைகளுக்கு நாம் தோல்வியையும் பழக்கவேண்டும். விரக்தியின் விளிம்பில் எப்போதும் நிற்கும் இந்தத் தலைமுறையினரிடம் தோல்வியைப் பழக்கிக்கொடுத்து, அவர்களை மீட்கவேண்டும். இது பெற்றோரின் கடமை மட்டுமல்ல.. சமூகத்தை நேசிக்கும் எல்லோருடைய கடமையும் கூட!

பெற்றோருக்கான சில ஆலோசனைகள்

தோல்வி குற்றமல்ல

தேர்விலோ வேறு செயல்களிலோ ஏற்படும் தோல்வி என்பது குற்றமல்ல. அது அனுபவம் என்று பிள்ளைகளுக்குப் புரியவைக்கவேண்டியது பெற்றோரின் பங்கு. அதைப்போலவே தோல்வியடைந்த மாணவர்களை ஒதுக்குவதோ, ஏளனப்படுத்துவதோ கூடாது என்பதையும் ஆசிரியர்கள் உணரவேண்டும்.

குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்

அந்தக் கிளாஸ், இந்தக் கிளாஸ் என்று எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகளுடன் தினமும் அரைமணி நேரமாவது செலவிடுங்கள். இது ஏதோ அம்மாவுக்கு மட்டும் என்றில்லை. அப்பாவும் நேரம் செலவளிக்கவேண்டும்.

மனம் விட்டுப்பேசுங்கள்

குழந்தையுடன் நேரம் செலவழிக்கும் சமயங்களில் குழந்தைகளிடம் மனம் விட்டுப்பேசுங்கள். தேர்விலோ, இதர போட்டிகளிலோ தோல்வி என்பது இயல்பானது என்பதைச்சொல்லி புரியவையுங்கள். உலகில் தோல்வி அடையாத மனிதனே இல்லை என்று சொல்லிக்கொடுங்கள். பிள்ளைகளுக்குக் கிடைக்கும் தோல்விக்காக, அவர்கள் ஒருபோதும் தண்டனைக்கு உட்பட மாட்டார்கள் என்பதையும் உணர்த்துங்கள்.

மதிப்பெண் முக்கியமல்ல

வெறும் மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கையில் வெற்றியைத் தராது என்று சொல்லிக்கொடுங்கள். பாடங்களையோ இதர கலைகளையோ கற்றுக்கொள்ளும் போது புரிந்துகொண்டு படித்தால்.. அதுவே வெற்றிதான் என்பதைச்சொல்லிக்கொடுங்கள். தேர்வுகளில் மதிப்பெண் குறைந்துபோனால் குழந்தைகளிடம் கடிந்துகொள்ளாதிருங்கள்.

விட்டுக்கொடுக்காதீர்

மதிப்பெண் குறைந்துபோய்விட்டதாகப் பள்ளியில் இருந்து புகார் வந்தால்.. குழந்தையிடம் சண்டை பிடிக்காமல், என் பிள்ளை புரிந்து படிப்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். வெறும் மதிப்பெண் மட்டும் எங்கள் இலக்கு அல்ல என்று பள்ளி ஆசிரியர்களிடம் சொல்லிவிடுங்கள். எப்போதும் மதிப்பெண் விஷயங்களில் குழந்தையின் பக்கம் நில்லுங்கள்.

மீண்டும் எழுதலாம்

தேர்வில் தேற்றுப்போனால்.. அச்சம் கொள்ளத்தேவை இல்லை என்றும், அடுத்தக் கல்வியாண்டுக்குள் மறுதேர்வு எழுதிக்கொள்ளமுடியும் என்பதையும் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள். தேர்வில் வெற்றி தோல்வி என்பது இயல்பானதுதான் என்பதையும், தோற்றுப்போவது ஒன்றும் பெருங்குற்றமல்ல என்பதையும் சொல்லிக்கொடுங்கள்.

=====================================

நன்றி: செல்லமே ஏப்ரல்-2016

This entry was posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to தோல்வி நிலையென நினைத்தால்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.