நல்ல சூழல் என்பது நாம் நம் குழந்தைகளுக்குத் தரும் நல்ல சிந்தனைகளே! -ஆர்.எம். கெளரி (ஓய்வு பெற்ற ஆசிரியர்)

(ஆமை காட்டிய அற்புத உலகம்- நூல் குறித்து, தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கும் ஆசிரியர் அம்மா கௌரி அவர்களுக்கு நன்றி)

================

ஒரு தாய் தன் குழந்தைகளுக்குக் கதை சொல்லி மகிழ்விப்பாள். ஆனால் எனக்கு என் பிள்ளைகள் கதை சொல்லி அதை நான் கேட்கும் வாய்ப்புக் கிடைத்துவிட்டது. என் பிள்ளை போன்ற யெஸ்.பாலபாரதியின் சிறார் நாவல் “ஆமை காட்டிய அற்புத உலகம்” படிக்கும் போது நானும் ஒரு குழந்தையாகவே உணர்ந்தேன். பாலா – பொதுவுடைமைவாதி. தன் சிந்தனையைப் படைப்பில் கொண்டுவரும் ஒரு சிறந்த எழுத்தாளர்.

ஆனால் குழந்தை இலக்கியம் படைப்பது அவ்வளவு எளிதல்ல. அதிலும் எழுத்தில் எளிமையும், கருத்தில் வலிமையும் கொண்டு ஒரு சிறார் நாவல் எழுதுவது மிகக்கடினமான வேலை.

சாதி, மதம் என்ற பிரிவினைகள் எதுவும் இல்லாமல் நட்போடிருக்கும் சிறுவர்களுடன் தன் நன்றி உணர்வால் நட்பாகும் ஜூஜோ என்ற ஆமை, அந்தச் சிறுவர்களோடு சேர்த்து நம்மையும் ஆழ்கடலுக்கு அழைத்துச் செல்கிறது. பிரமிப்பளிக்கும் கடல் வாழ் உயிரினங்கள், கடல் கொண்ட நகரங்களின் சிதிலங்கள், பவளப்பாறைகள் வழியே அவர்களோடு நாமும் பயணிக்கிறோம்.

சால்மன், திருக்கை, சுறா, டால்பின்கள், திமிங்கிலம் என்று ஒவ்வொரு உயிரினத்தின் பண்புகளையும் நெருடல்கள் எதுவும் இல்லாமல் சொல்லியிருப்பது சிறப்பு. அதோடு நின்றிருந்தால் அது வெறும் கதையாக மட்டுமே இருந்திருக்கும், ஆனால் இயற்கையை மாசுபடுத்திச் சிதைக்கும் விஷயங்கள், அவை ஏன் நிறுத்தப்பட வேண்டும் என்பது மாதிரியான கருத்துகளைச் சொல்லும் போதுதான் அது ஒரு படைப்பாக முழுமையடைகிறது. இந்த நாவலைப் படிப்பவர்கள் யாராக இருந்தாலும் கதை காட்சியாக விரிவதை உணரலாம். குழந்தைகளுக்குக் காட்சியாக ஒரு விஷயத்தை உணரச் செய்துவிட்டாலே அவர்கள் சிந்தனை தானாகத் தூண்டப்பட்டுவிடும் என்பதை என் ஆசிரியப்பணியில் நேரடியாகக் கண்டிருக்கிறேன்.

நல்ல சூழல் என்பது நாம் நம் குழந்தைகளுக்குத் தரப்போகும் சிந்தனைகளை வைத்தே தீர்மானிக்கப்படும். அது இம்மாதிரியான படைப்புகளால் மட்டுமே சாத்தியமாகும் என்று நான் நம்புகிறேன்.

தீவொன்றில் பிறந்து, தன் முதல் சிறார் நாவலுக்கு, கடலையே கதையின் களமாகத் தேர்ந்தெடுத்து அதைச் சிறப்பாகவும் செய்திருக்கும் யெஸ். பாலபாரதிக்கு வாழ்த்துகள்.

—-

நூல்:- ஆமை காட்டிய அற்புத உலகம்

ஆசிரியர்: யெஸ்.பாலபாரதி

விலை:- ரூ. 60/-

வெளியீடு:- புக் ஃபார் சில்ட்ரன், (பாரதி புத்தகாலயம்)

எண்: 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை- 600018

தொலைபேசி:- 044- 24332424