pathin

 

“புத்தகம் வாசிக்கிறதால என்ன பாஸ் கிடைக்கும்?” என்று ஒரு நண்பர்,  பல ஆண்டுகளுக்கு முன் கேட்டார்.

அதே மாதிரியான கேள்வியை பல சந்தர்ப்பங்களில் வேறு சிலரிடமும் எதிர்கொண்டிருக்கிறேன். இதற்குப் பதில் என்னிடம் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அப்போதைய மனநிலையைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும்.

இக்கேள்வி பொதுவான வாசிப்பு பற்றியது என்பதால் அப்படி. குறிப்பிட்ட நூல் பற்றி என்றால் அதற்கென தனித்தனி பதில் சொல்ல முடியும்.

அப்படியொரு நூலைப்பற்றித்தான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘பதின்’சமீபத்தில் படித்து எனை மறந்த நூல்.

நூலில் தொடக்கத்திலேயே “இதில் வரும் நான் என்ற சொல் என்னைக் குறிக்கவில்லை. நம்மைக் குறிக்கிறது” என்று சொல்லிவிடுகிறார். அது நூறு சதவிகிதம் உண்மை. சந்தேகமில்லாமல் நம்மை நமது பால்யத்திற்கும், பதின்ம வயதிற்கும் அழைத்துச்செல்கிறது இந்நூல்.

இது புனைவு அல்லது அபுனைவு என்று வகைமைப் படுத்தமுடியாது என்றே தோன்றுகிறது. 216 பக்கங்களில் விரிந்துகிடக்கும் நினைவுகளின் குறிப்புகள்.

இதில் வரும் சங்கர் போன்றே எனக்கும் ஒரு நண்பன் இருந்தான். அவனோடு நானும் ஒரு அற்ப காரணத்திற்காக சண்டையிட்டுக்கொண்டு பிரிந்துவிட்டோம். சுமார் 20 ஆண்டுகள் கழித்து, ஊருக்குச்சென்றபோது அவனைப் பார்த்தேன். அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விட்டான்.

கூட்டத்தில் ஸ்பெல்லிங் கேட்ட அறிவாளிமாதிரியான ஆளை நானும் கடந்திருக்கிறேன். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஞாபக அடுக்குகளின் அடியில் புதைந்துபோன பல சம்பவங்களும், மனிதர்களையும் மீண்டும் உயிர்ப்பித்துக் கொடுத்த புத்தகம் இது.

நீங்கள் 30 வயதைத் தொட்டவராக இருந்தால் அவசியம் வாசியுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் நீங்களே மறந்துபோன பலரையும் இந்நூல் நினைவுபடுத்தும்.

ஒரே மூச்சில் வாசிக்காமல். பழைய சம்பவங்களையும் நபர்களையும் நினைத்துக்கொண்டு நூலை மூடி வைத்துவிட்டேன். பின்னர் சில பக்கம். மீண்டும் பழையபடி நினைவோடை. மீண்டும் வாசிப்பு என்று ரசித்து ரசித்து வாசித்தேன். அதுபோல, இந்நூலை வாசிக்கும் எனக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறதே.. பால்ய/பதின் பருவ தோழிகள் அல்லது பெண்கள் இந்நூலினை வாசிக்கும் போது அவர்கள் எப்படி உணர்வார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்.

நூல்: பதின்
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்.
வெளியீடு: உயிர்மை பதிப்பகம், சென்னை

 

#வாசிப்பு #வாசகப்பரிந்துரை #பதின்Â