பிள்ளைகள் செய்துபார்க்க எளிய விஞ்ஞான சோதனைகள்!

sothanai

 

 

எனது பள்ளிப்பருவத்தில் பாடங்கள் தவிர்த்த மற்ற விஷயங்களில் ஆர்வம் அதிகமிருந்தது. அதற்காக வாங்கிய அடிகளும் அதிகம்தான். எந்த விளையாட்டுப்பொருளை எடுத்தாலும் அதனைப் பிரித்து, ஆராய்ந்து மீண்டும் அதேபோல மாட்டிவிடுவேன். மீண்டும் சரியாக பொருத்தமுடியாதபோது, உதைபடுவேன். செய்துபார் என்று எந்த நூலில் படித்தால் அதனை அப்படியே செய்துபார்க்கும் பழக்கமும் இருந்தது எனக்கு!

ஒருமுறை எங்கள் ஊருக்கு கியாஸ் பலூன் விற்பவர் ஒருவர், மூன்று சக்கர ட்ரைசைக்கிளில் ஓர் உருளையைக்கட்டிக்கொண்டுவந்து, பலூனில் கியாஸ் நிரப்பி விற்பனை செய்தார். அந்த பலூனில் நீளமான நூலைக்கட்டிக்கொடுப்பார். அதைப் பிடித்துக்கொண்டு நாம் ஓடும்போது, பலூனும் அப்படியே மேலே பறந்தபடியே வரும். பட்டத்தைப் பிடித்துக்கொண்டு ஓடும்போது நல்ல காற்றுவேண்டும். அப்போதுதான் அது பறக்கும். ஆனால் கியாஸ் பலூனுக்கு காற்று எல்லாம் ஒரு மேட்டரே அல்ல.

வீட்டுக்குள் வந்து பலூனை விட்டால், அது மேலே விட்டத்தில் ஒட்டிக்கொள்ளும். இன்னொரு சமயத்தில்தான் அந்த கியாஸ் பெயர் ஹீலியம் என்றும், இவ்வகை பலூன்களை நாமளே செய்யலாம் என்பது பற்றியும் எதிலோ படித்தேன்.
அதன் செய்முறை இதுதான்: ஒரு பாட்டிலில், (அப்போது சப்பையான சாராய பாட்டில்கள் இலகுவாகக் கிடைக்கும். அல்லது மருந்து பாட்டில் ஏதாவது எடுத்துக்கொள்ளவேண்டும்.) பாதி அளவுக்கு அலுமினிய பேப்பரை இட்டு நிரப்பவேண்டும். ( மருத்து சுற்றிவரும் அலுமினியமோ, சிகரெட் பெட்டிக்குள் வரும் அலுமினியமோ உதவும். – அக்காலத்தில் சிகரெட் பெட்டிக்குள் வரும் அலுமினியத்தை எளிதாக உரித்து எடுத்துவிடலாம்) அப்புறம் சின்ன கோலிக்குண்டு அளவுக்கு ஒரு சுண்ணாம்பு உருண்டையைப் பாட்டினுள் இடவேண்டும். அப்புறம் முக்கால் பாட்டில் தண்ணீர் (வெதுவெதுப்பான நீர் உத்தமம்) ஊற்றவேண்டும்.

இப்போது பாட்டிலின் வாயில் ஒரு பலூனை மாட்டி, வெயிலில் வைக்கவேண்டும். ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆகும் என்பதால் பாட்டிலை வெயிலில் வைத்துவிட்டு, நான் நிழலில் காத்திருப்பேன். வெயில் ஏற ஏறப் பாட்டிலின் உள்ளே வேதியல் மாற்றம் நிகழ்ந்து, கியாஸ் உருவாகும். அந்த கியாஸ் பலூனில் நிறைய பலூன் உப்பியபடியே வரும். அதைக் கவனமாக பிரித்து, பலூனின் வாயில் நூலைக்கொண்டு முடிச்சு போட்டுவிட்டால் கியாஸ் பலூன் தயார்.
இப்படியே ஒரு நாளில் அதிகபட்சமாக 8 & 10 கியாஸ் பலூன்கள் வரை தயாரித்துள்ளேன். எதற்காக இந்தக் கதை என்கிறீர்களா?

சமீபத்தில் இப்படியான வேடிக்கையான சோதனை முயற்சிகள் செய்துபார்க்கும் படியான நூல்களைப் படிக்க வாய்த்தது. அது கிளறிய நினைவுகள்தான் மேலே சொல்லப்பட்டவை.

ஆயிஷா இரா.நடராசன், வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகிய மூன்று துறைகளில் ’10 எளியச் சோதனைகள்’ என்ற நூல் வரிசை எழுதி இருக்கிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து, புக்ஸ் ஃபார் சில்ட்ரன் இப்புத்தகங்களை வெளியிட்டுள்ளது. 2007ம் ஆண்டில் முதற்பதிப்பு கண்ட, இந்நூல்களின் ஆறாம் பதிப்பைத்தான் நான் படித்தேன்.

கற்றலில் ஆர்வமுடைய உங்கள் குழந்தைக்கு இந்தமாதிரியான நூல்களை வாங்கிக்கொண்டுங்கள். இப்படியான சோதனைகளுக்கு குழந்தைகளை ஊக்குவியுங்கள். 10 வயதுடைய குழந்தையும் இச்சோதனைகளைச் செய்துபார்க்கும்படி எளிமையாக எழுதப்பட்டுள்ள நூல் இது. யாருக்குத்தெரியும் நாளை, உங்கள் பிள்ளையும் ஏதாவது ஒரு துறையில் ஆர்வம் ஏற்பட இச்சோதனைகள் துணை புரியலாம்.

ஒரு நூலில் விலை ரூ.20/- மட்டுமே. மூன்று நூல்களும் சேர்த்து ரூ.60/-.

மூன்றிலுமாக சேர்த்து மொத்தம் 30 சோதனைகள். செய்முறைப் படங்களுடன் உள்ளது. இச்சோதனைகளின் பின்னால் இருக்கும் அறிவியல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

நூல்கள்: 10 எளியச் சோதனைகள் (வேதியியல், இயற்பியல், உயிரியல்)

ஆசிரியர்: இரா. நடராசன்.

வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன் (பாரதி புத்தகாலயம்)

நூல் தேவைக்கு: 044-24332424/24332924
#வாசிப்பு #வாசகப்பரிந்துரை #சிறுவர்_நூல் #இளையோர்_நூல்