கருவிகளின் கதை

karuya

திருவிளையாடல் படத்தில் வரும் வசனம் அது போல, பிரிக்கவே முடியாதது எது என்று கேட்டால்… கேள்விகளும் குழந்தைகளும் என்று தைரியமாகச் சொல்லலாம்.

குழந்தைகள் கேள்விகள் கேட்கும் போது, பதில் சொல்லியபடியே இருக்கும் பல பெற்றோரும், நமக்குப் பதில் தெரியாத கேள்வி ஒன்றினை அக்குழந்தை கேட்கும் சமயத்தில் கோபப்பட்டு பார்த்திருக்கிறேன். தெரிந்துகொண்டு சொல்கிறேன் என்று சொல்லுவதை விட்டு, கோபப்படுவது எப்படி நியாயமாக இருக்கமுடியும்.

எல்லா விஷயங்களையும் எல்லோரும் விரல் நுனியில் தெரிந்துவைத்திருக்கமுடியுமா என்ற கேள்வி எழலாம். முடியாது என்பது பதிலாக இருந்தாலும், தெரிந்துகொள்வதில் என்ன தவறு இருக்கப்போகிறது? அதற்காக ஒவ்வொன்றைப்பற்றியும் பெரிய பெரிய தனி நூல்கள் வாங்கிப் படிக்கவேண்டியதிருக்குமே என்று அச்சப்படத் தேவையில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகள் பற்றிய செய்திகளைச்சொல்லும் ஒரு குட்டி நூல் உள்ளது.

பிள்ளைகளின் கேள்விகளுக்கு சில சமயம் பதில்களை நாமே சொல்லிக்கொடுக்கலாம். சிலவற்றை அவர்களாகவே படித்து, புரிந்துகொள்வதற்காக வாய்ப்பை நாம் ஏற்படுத்திக்கொடுக்கலாம். அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க கருவியாலஜி என்ற சிறு நூல் உதவும்.

ஆம்.. கருவிகளின் கதைகள் கொண்ட நூல் இது. இதில், மொத்தம் 25 நவீன கண்டுபிடிப்புகளின் சுருக்க வரலாறு இருக்கிறது. கால்குலேட்டர், மிக்ஸி, ஸ்மார்ட் போன் தொடங்கி, இயந்திரமனிதன் (ரோபோட்) வரை இவற்றைக் கண்டுபிடித்தவர்கள் பற்றிய செய்தி, இவை என்ன பணியைச்செய்கின்றன, எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது போன்ற சுவாரஸ்யமான தகவல்களை எளிமையான நடையில் எழுதி இருக்கிறார் நூலாசிரியர்.

சிறுவர்கள் மட்டுமல்லாது பெற்றோரும் படிக்கவேண்டிய நூல்.

நூல்: கருவியாலஜி

ஆசிரியர்: இரா. நடராசன்.

வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன் (பாரதி புத்தகாலயம்)

நூல் தேவைக்கு: 044-24332924 / 24332424

#வாசிப்பு #வாசகப்பரிந்துரை #சிறுவர்_நூல்
#இளையோர்_நூல்