சேவல் ஏன் கூவுகிறது தெரியுமா? இந்திய சிறுவர் நாடோடிக்கதைகள்

yaanai parantha pothu

 

சேவல் ஏன் கூவுகிறது தெரியுமா? ஆம்… அதற்கொரு கதை இருக்கிறது. இந்திய சிறுவர் நாடோடிக்கதைகள் படித்தபோது, அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டேன்.

நாடோடிக்கதைகளின் ஆசிரியர்கள் இன்னாரென்று கூறமுடியாது. பலவும் வாய்மொழியாகச் சொல்லப்பட்டு, அப்படியே எல்லைகள் கடந்து பல தேசங்களையும் இக்கதைகள் அடைந்துள்ளன.

அவற்றை ஆங்காங்கே தொகுத்து எழுத்துவடிவில் சிலர் பதிவு செய்தும் வைத்துள்ளனர். அதனாலேயே இக்கதைகள் சாகாவரம்பெற்று இன்னும் உயிர்ப்போடு இருக்கின்றன என்றே சொல்லலாம்.

இந்திய தேசத்தில் சொல்லப்படுகின்ற பல நாடோடிக் கதைகளில் சிலவற்றைத் தொகுத்து, சுட்டிவிகடனில் தொடராக எழுதியுள்ளார் ரமேஷ் வைத்யா. அக்கதைகள் இப்போது தனிநூல்வடிவம் பெற்றுள்ளது.

தமிழ் வாசிக்கத்தெரிந்த, பத்து வயதிற்கு மேற்பட்ட எவரும் படித்து புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான மொழியில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. நாடோடிக்கதைகளிலும் ’இதனால் அறியப்படும் நீதி யாதெனில்’என்ற தொனி ஒலிப்பதைக் காணமுடியும். நூலாசிரியர் இக்கதைகளில் கவனமுடன் அதைத் தவிர்த்திருக்கிறார். 25 கதைகளைக்கொண்ட இந்த நூலில் பல கதைகள் எனக்கு புதியதாக இருந்தன. நிறையக் கதைகள் ’அட’ போடவைக்கும் ரகம். சிலகதைகளைப் படிக்கும் போது, நிச்சயம் வாய்விட்டே சிரிப்பீர்கள்.

குழந்தைகள் என்றில்லாமல் பெரியவர்களும் கூட இக்கதைகளைப் படிக்க முடியும். கிட்டதட்ட எல்லாக் கதைகளிலுமே ஒரு சின்ன இடைவெளி இருப்பதைக் காணமுடிகிறது. இந்த இடைவெளியை, தம்  குழந்தைகளுக்கு கதை சொல்லும் பெற்றோர் இட்டு நிரப்பிக்கொள்ளவேண்டும். உங்களின் கற்பனைக்கும் இங்கே இடமுண்டு.

அது போல, நான் எப்போதும் ஒரு விஷயத்தை நம்புகிறவன். சாகசக்கதைகள் என்றாலே லாஜிக் மீறல் தான். அதேவேளை கதைக்குள்ளே லாஜிக் மீறல் இருக்கக்கூடாது என்ற நிலைப்பாடு உடையவன் நான். கதைக்குள் லாஜிக் ஓட்டைகளைக் கச்சிதமாக அடைத்து, கதைகளை எழுதி இருக்கிறார் நூலாசிரியர். இப்படியான கதைகளைக் காணமுடிந்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

நூல்களில், முன்னுரை, பின்னுரை பார்த்திருப்போம். இந்நூலில் முன்னுரைகளுக்கு அப்புறம் ஒரு நடுவுரை எழுதப்பட்டிருக்கிறது. 12 கதைகள் படித்த பின் இந்த நடுவுரை வருகிறது. முன்னது பெற்றோரை நோக்கி எழுதப்பட்டிருக்கிறது. நடுவுரை குழந்தைகளை நோக்கி எழுதப்பட்டிருப்பது சிறப்பு. இடையிடையே படங்களும் வாசிப்பை சுவாரஸ்யப்படுத்துகின்றன.

இக்கதைகள் வாசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

நூல்: யானை பறந்தபோது

ஆசிரியர்: ரமேஷ் வைத்யா

பதிப்பகம்: அகநாழிகை வெளியீடு(9994541010 / 7010134189)

விலை: ரூ.100

 

#வாசிப்பு #வாசகப்பரிந்துரை #சிறுவர்_நூல்

#இளையோர்_நூல்