நண்பர்கள், தோழிகளின் அப்பாக்களில் எல்லாம் எனது அப்பாவைத் தேடுவேன். இன்னும் சொல்லப்போனால் வயது கூடி மூப்பெய்திய அப்பாவின் வயதொத்த மனிதர்கள் எல்லோரிடமுமே என் அப்பாவின் சாயலைத்தேடுவது எனது வழக்கம்.

அதற்கொரு காரணமும் உண்டு; எனது 15வது வயதில் என் அப்பா காலமானார். அதனால் எனக்கு அவரது நினைவுகள் பெரும்பாலும் பிறரின் வார்த்தைகளின் வழியே உருவகப்படுத்திக் கொண்டதாகவே இருக்கிறது. கொஞ்சமாக செல்லரித்துப்போன புகைப்படம் போல சொந்த அனுபவத்தில் இருக்கும் நினைவுகளும் கூட உடன் பிறந்தோரின் வார்த்தைகளோ என்ற மயக்கம் எனக்கு எப்போதுமுண்டு. அதனாலேயே நண்பர்களின் வழி அவர்களின் அப்பாகளிடம் எனது அப்பாவை தேடுவது வாடிக்கை.

அப்படி நான் கண்டைந்த அப்பாக்கள் ஏராளம். அதில் நான் வியந்த, ஏக்கம் கொள்ளவைத்த அப்பாக்கள் சிலரே. அதில் ஒருவர் தான் திரு. அப்துல் ஜப்பார் அவர்கள். இணையத்தமிழ் உலகில் தீவிரமாக இயங்குபவர்களுக்கு ஆசிப் மீரானைத் தெரியாதிருக்க வாய்ப்பில்லை. பலராலும் அண்ணாச்சி என்று அன்புடன் அழைக்கபடுவர் ஆசிப். அவரின் தந்தையே திரு. அப்துல் ஜப்பார் அவர்கள். இவர் பல்துறை வித்தகர், உண்மையான சகலாகலா வல்லவர் என்றால் மிகையல்ல.

ராமேஸ்வரத்தில் வசித்த காலங்களில் இலங்கை வானொலியின் ஒலிபரப்பை கேட்பது என்பது அன்றாட செயல்பாடுகளில் ஒன்று. அப்போது ஒலிபரப்பாகும் நாடகங்களில் இவரது குரல் கேட்டிருக்கிறேன். பெயர் அளவில் மட்டுமே அப்போது தெரியும். அதுபோல இவரது தமிழ் கிரிக்கெட் வர்ணணைகளையும் சில சமயங்களில் கேட்க வாய்த்திருக்கிறது.

ஆசிப் அண்ணாச்சியின் அறிமுகத்திற்கு முன்னரே அப்பா அப்துல் ஜப்பார் எனக்கு குரல் வழியே அறிமுகமாகி இருந்தார். நான், பிறமொழி கலப்பின்றி தமிழில் பேசுவதற்கு தொடர்ந்து முயலுகின்றவன் என்பது என்னை நேரடியாக அறிந்தவர்களுக்குத் தெரியும் . அதற்கு அடிகோலியவர்களில் அப்பா அப்துல் ஜப்பாரும் ஒருவர்.
அப்பாவிடம் என்னைக் கவர்ந்த விஷயங்கள் எத்தனையோ உண்டு. அதில் முதன்மையானது அவரின் சுறுசுறுப்பு. ஓய்வறியாமல் உழைத்துக்கொண்டே இருப்பதும் சமூக மாற்றத்திற்கேற்ப தன்னை புதுப்பித்துக்கொண்டே இருப்பதும் அவரது இயல்புகள். அப்பா அப்துல் ஜப்பார் யாரையும் காயப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்திப் பார்த்ததில்லை. எவர் மீதும் எப்போதும் அவருக்கு குறைகளோ குற்றங்களோ இருந்ததில்லை. தன்னைப்போலவே பிறரையும் நேசிப்பதும் சாதி மத வேறுபாடுகள் பார்க்காத மனிதநேயராக, ஏற்றதாழ்வு பார்க்காத நல் மனிதராகவே அப்பா அப்துல் ஜப்பாரை பார்த்திருக்கிறேன். அக்குணம் அப்படியே ஆசிப் அண்ணாசியிடமும் இருக்கிறது. அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு, நானும் பின்பற்ற நினைக்கும் ஒரு குணாதிசயம் இது.
அதுபோல தனக்கு அனுபவமும், வாசிப்பும் அதிகம் என்ற மமதை துளியுமின்றி, எதிரிலிருப்பவர்களிடம் உரையாடுவது அப்பாவின் அருங்குணங்களில் ஒன்று. அவரிடம் எதுபற்றியும் விவாதிக்கலாம். தொடர்ச்சியாக அப்டேட் ஆகிக்கொண்டே இருப்பவர் என்பது கூடுதல் சிறப்பு.

அப்பாவிடம் புதிய நூல்கள் பற்றியும், மொழிபெயர்ப்பு நுணுக்கங்கள் பற்றியும் பேசிக்கொண்டிருப்பது எப்போதும் வியப்பு அளிக்கக்கூடியதாகவே இருக்கும். ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் போது உள்ள சவால்களை தனது அனுபவங்களின் வழி இவர் சொல்லச்சொல்ல கேட்டுக்கொண்டே இருக்கலாம். அதுபோல கிளிஷே என்று இன்று இணையத்தில் பலரும் நக்கலடிக்கும் தேய்வழக்குகளை தவிர்ப்பதின் அவசியத்தை, இவரது ஒரு சிறுகதையை எழுத்தாளர் சுஜாதா பாராட்டியதைப் பற்றி எல்லாம் சொல்லுவார். (எனக்கு அக்கதையின் பெயர் மறந்துவிட்டது)

• வர்ணனையாளர்
• விளையாட்டுச் செய்தி ஆசிரியார்.
• அரசியல் விமர்சகர்
• சிறுகதை எழுத்தாளர்
• மொழிபெயர்ப்பாளர்
• நாடக ஆசிரியர்
• பாடலாசிரியர்
• கவிஞர்
என்று அப்பா அப்துல் ஜப்பார் நுழைந்து பார்க்காத துறைகளே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். உலக அளவில் பல நிறுவனங்கள் இவருக்கு விருதுகள் வழங்கி, தங்கள் அம்மைப்பை கௌரவித்துக்கொண்டன என்பதுதான் நிஜம்.

****

இன்று அப்பா அப்துல்ஜப்பார் மொழிபெயர்த்த நூலான, ‘இறைத்தூதர் முஹமத்’ நூலின் அறிமுகம், அவரின் 80வது பிறந்தநாளையும் சேர்த்துக்கொண்டாடும் ஒரு விழா நடக்க இருக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் வாருங்கள், கலந்துகொண்டு, கொண்டாடி மகிழ்வோம்.

நாள்: இன்று (23.06.2018) சனிக்கிழமை, மாலை: 6.30 மணி முதல்

இடம்:
கவிக்கோ மன்றம்,
2வது பிரதான சாலை,
சி.ஐ.டி. காலணி, மைலாப்பூர்,
சென்னை- 4

(குறிப்பு: அப்பா அப்துல் ஜப்பாரின் பிறந்தநாள் ஜூன் 26ம் தேதிதான் என்றாலும் விழா இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது)