பொதுவாக எந்த வேலை செய்தாலும் அதன் விளைவென்ன என்று அறியத் துடிப்பது பொது இயல்பு. பொது வேலைகளில் வேண்டியது சில/பல மாதங்களில் கிடைத்துவிடுவதுண்டு. விழிப்புணர்வு பிரச்சாரங்களில் அதன் விளைவுகள் அவ்வளவு சீக்கிரமாக, வெளிப்படையாக தெரிவதில்லை. நாம் உழைத்துக்கொண்டே இருக்கவேண்டியதிருக்கும். எந்த வினையும் இன்றி எதிர்பார்ப்பின்றி உழைப்பைக் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டியதிருக்கும்.

ஆட்டிசம் குறித்த எனது விழிப்புணர்வு பணிகளிலும் இதே கதைதான். அதிலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்டிச நிலைக் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் மகிழ்வைத் தொலைத்து விடாது இருக்க வேண்டும் என்பதை முக்கியத்துவப் படுத்தி எழுதியும், பேசியும் வருகிறேன். ஹேப்பி பேரண்டிங் எனும் இந்த தலைப்பில் ஆட்டிச நிலைக் குழந்தைகளை பெற்றோர்களுக்கான பயிற்சி வகுப்புகள் எடுத்துவருகிறேன். அதுபோலவே இக்குழந்தைகளை வளர்த்தெடுப்பதில் தந்தையரின் பங்கு பற்றிய பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தி வருகிறேன்.

இதற்கு முன் நடத்திய தந்தையருக்கான இரண்டு பயிலரங்கங்களும் தனியார் ஏற்பாடு செய்தவை என்பதால் அங்கு வந்து கலந்து கொண்ட தந்தையரோடு எனக்கு எந்த நேரடித் தொடர்பும் இல்லை. எனவே நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களிடம் அவ்வப்போது பேசும்போது, நல்ல மாற்றம் தெரியுது சார் என்று அவர்கள் பொதுப்படையாக சொல்வதோடு முடிந்து போகும்.

சென்ற வாரம் நடந்த சென்னையில் தந்தையருக்கான ஒரு பயிலரங்கம் நடந்தது. அதுவும் வாய்ஸ் எனும் பெற்றோர் அமைப்பின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பெற்றோர் குழுமத்தின் நாங்களும் இருக்கிறோம். கடந்த ஞாயிறு மதியம் நடந்த பயிலரங்கில் சுமார் 40 தந்தையர்கள் கலந்து கொண்டது பெரியவிஷயமக எனக்குத் தோன்றியது. என் நிபந்தனை ஒன்றுதான். குழந்தையை தந்தையோடு அனுப்பிவிட்டு, அம்மாக்கள் ஓய்வில் இருக்கவேண்டும். நிகழ்வரங்கில் குழந்தைகளைப் பார்க்க தன்னார்வலர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திட்டமிட்டபடி, சுமார் இரண்டுமணி நேரம் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. அன்றி இரவே பல குழந்தைகளின் அம்மாக்களிடமிருந்து குழுமத்தில் தந்தையர் கூட்டத்திற்கு நன்றி தெரிவித்து தகவல்கள் வரத்தொடங்கின. முதல் முதலாக தங்கள் கணவர்கள் பிள்ளைகளைப் பற்றிய எண்ணங்களை பகிர்ந்து கொண்டவை, சொல்லமலேயே சில பொறுப்புகளை எடுத்துக்கொள்வது, குழந்தையோடு அதிக நேரம் செலவளிப்பதாக உறுதிகொடுத்தது என்று அவர்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து தாய்மார்கள் அங்கே பகிரும் பின்னூட்டங்கள் உண்மையிலேயே என்னை மன நிறைவு கொள்ளச் செய்கின்றன.

சூழ வாழும் மனிதருக்குள் ஒரு தினையளவு மாற்றத்தையேனும் ஏற்படுத்த முடிகிறது என்பது தரும் நிறைவுதான் வாழ்கைச் சுழலின் இழுப்பையும் மீறி பயணிக்கும் ஆற்றலைத் தருகிறது. இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம் என்பதும் உணர்ந்தே இருக்கிறேன். இப்போதைக்கு மீ வெரி ஹாப்பி!

#ஆட்டிசம் #விழிப்புணர்வு


Comments

3 responses to “ஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்!”

  1. Highly appreciative work. I have come across a friend’s family with an autistic child. Stress on the parents is immense. Appreciate your noble work. Sincere dishes that your work brings about positive strides in the society.

  2. Highly appreciative work. I have come across a friend’s family with an autistic child. Stress on the parents is immense. Appreciate your noble work. Sincere wishes that your work brings about positive strides in the society.

  3. உண்மையிலேயே வெரி ஹாப்பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *