குழந்தைக் கவிஞர் பிறந்தநாள் இன்று

தமிழில் குழந்தைக்கவிஞர் என்றால் அது அழ.வள்ளியப்பா தான். இந்த அடைமொழியுடன் சில நூல்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இன்று அவரது பிறந்தநாள். (நவம்பர் 7)

வங்கில் பணியில் இருந்தாலும் தம் வாழ்நாளில் குழந்தைகள் இலக்கியதிற்காக பெரும் தொண்டாற்றி உள்ளார் என்றால் அது மிகையல்ல.

பண்டித ஜவஹர்லால் நேரு மீது மிகுந்த பற்று கொண்டவர் வள்ளியப்பா. தொடர்ந்து பல பாடல்களை நேருவை கருப்பொருளாக வைத்து எழுதி இருக்கிறார். இவை தவிர, நேருவின் வாழ்க்கை வரலாற்றை பாடல் வடிவிலும், கட்டுரைவடிவிலும் எழுதியுள்ளார்.

நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி, இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதே நாளில் ஒரு நூலையாவது வெளியிடுவது என்ற வழக்கத்தைக்கொண்டிருந்தார் வள்ளியப்பா. அவர் மட்டுமல்ல, அக்காலகட்டத்தில் குழந்தைகளுக்காக எழுதிய பலரும் இதே நாளில் தங்களது புதிய நூற்களை வெளியிட்டு, அந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர். குழந்தைகள் எழுத்தாளர் சங்கமும் இப்பணியை செய்தது.

வள்ளியப்பா, பல மொழிபெயர்ப்பு நூல்களையும் தமிழுக்கு தந்திருக்கிறார். காலத்தால் அழியாத பல பாடல்களை தமிழுக்கு கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

அவர், கோகுலத்தில் பொறுப்பில் இருந்தபோது, கோகுலம் உறுப்பினர் சங்கம் என்றொன்றை தொடங்கினார். (பெயர் குழப்பம் எனக்கு உள்ளது) அவ்விதழில் வெளியாகும் கூப்பனை பூர்த்தி செய்து அனுப்பி வைத்தால், அழ.வள்ளியப்பாவின் கையெழுத்து போடப்பட்ட உறுப்பினர் அட்டை, நமக்கு அஞ்சலில் வரும். நான் அதில் உறுப்பினராக இருந்தேன். கோகுலத்தில் பாடல், துணுக்கு, சிரிப்பு போன்றவற்றை எழுதி அனுப்பும் போது, நமது உறுப்பினர் எண்ணையும் குறிப்பிட்டு எழுதினால் பிரசூரமாகும் போது நம் பெயருக்குக்கீழ் உறுப்பினர் எண்ணும் பிரசூரமாகும். தபால்காரர் கொண்டுவந்துகொடுத்த அந்த உறுப்பினர் அட்டையை தபால்காரர் என் அப்பாவிடம் கொடுத்துவிட்டுப்போக, படிக்கிறதை விட்டுட்டு பாட்டு எழுதுறியா பாட்டு என என் அப்பா அடி பிண்ணி எடுத்துவிட்டார். அப்புறம் எனக்கு எழுதும் ஆசை இல்லாமல் போய்விட்டதெல்லாம் தனிக்கதை.

தமிழ் மொழி இருக்கும் வரைக்கும் அழ.வள்ளியப்பாவின் புகழ் இருக்கும். அவரது படைப்புக்களை தமிழக அரசு நாட்டுடமையாக்கி உள்ளது. அவை இணையதிலேயே கிடைக்கின்றன.

குழந்தைகளுக்கு நல்ல சந்தம்கொண்ட பாடல்களும் நற்போதனைக் கதைகளையும் அறிமுகப்படுத்த விரும்பும் பெற்றோர், கீழ்க்காணும் சுட்டியில் இருந்து அவரது நூற்களை தரவிக்கிக் கொள்ளலாம்.

 

குழந்தைக்கவிஞரும் நேரு மாமாவும்

படம்: தில்லியில், 1956 நவம்பர் 14ஆம் தேதி, அனைத்திந்திய புத்தகக்கண்காட்சியை சாகித்ய அகாதமி நடத்தியது. அதில் தமிழ்ப் பிரதிநிதியாகக் குழந்தைக்கவிஞர் கலந்துகொண்டார். அப்போது, தமிழ்ப்பகுதிக்கு வந்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

அழ.வள்ளியப்பா நூற்களைப் பெற: https://goo.gl/viHP6h