மனித குலத்தின் வரலாற்றில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது என்ற செயலுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.

முதன் முதலில் சக்கரத்தைக் கண்டுபிடித்தவர் அதை எப்படிச் செய்வது என்பதை அடுத்த தலைமுறையினரிடம் பகிர்ந்து கொள்ளாமல் போயிருந்தால்.. என்னவாகி இருக்கும்..?

இன்று வரை நம் மனித இனத்தின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பாக சக்கரம் மட்டுமே இருந்திருக்கும். ஆம்! மீண்டும் மீண்டும் அதை மட்டுமே ஒவ்வொரு தலைமுறையும் கண்டுபிடித்துக் கொண்டு இருந்திருக்கக்கூடும். ட்ரெட் மில் இயந்திரத்தில் நின்ற இடத்திலேயே நடப்போமே, அப்படியாக மனித கண்டுபிடிப்புகளும் தேங்கிப் போயிருக்கக்கூடும்.

ஆனால் வாய் மொழியின் வழியாகவும், பின்னர் எழுத்துக்களின் வழியாகவும் தங்கள் அனுபவங்களை, கண்டுபிடிப்புகளை, அவதானிப்புகளை தலைமுறைதோறும் கைமாற்றி வந்ததாலேயே நம் மனித குலத்தின் அத்தனை முன்னேற்றங்களும் சாத்தியப்பட்டுள்ளன.

அந்த வகையில் தன் வரலாற்று எழுத்துக்களும், அனுபவப் பதிவுகளும் கூட சக்கரத்தை மீள மீள கண்டுபிடிப்பதை தவிர்க்கும் முயற்சிகளே. அப்போதுதான் தேங்கிவிடாமல் நதி போல ஓடிக்கொண்டே இருக்கமுடியும். அத்தகைய ஓர் அனுபவத்தை பகிரும் நூல்தான் இந்த எழுதாப்பயணம் நூல். அநேகமாக தமிழில் இதுபோன்றதொரு முயற்சி முன்னெப்போதும் நிகழ்ந்ததில்லை என்றே நினைக்கிறோம்.

*******

அரும்பு அறக்கட்டளையின் தொடர் செயற்பாடுகளில் எப்போதும் துணை நிற்கும் அன்புத்தம்பி, எழுத்தாளர் சரவணன் பார்த்தசாரதி வரவேற்புரை நிகழ்த்தினார். கூடவே ஓடியாடி பல வேலைகளைச்செய்தார்.

 

எழுதாப்பயணம் நூலை வெளியிட நாங்கள் அழைத்திருந்தது தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறைச் செயலர் மரியாதைக்குரிய திரு. ஜெ. ராதாகிருஷ்ணன் அவர்களை, கொடுத்த வேலையை செய்வது சராசரியான மனிதர்கள் எல்லோராலும் செய்யக் கூடியதுதான். ஆனால் இக்கட்டுகளில் எப்படி செயலாற்றுகிறோம் என்பதே ஒருவரின் தனித்துவத்தை, அவர்களின் திறமையை வெளிக்காட்டும்.

”வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்” என்கிறது குறள்.

வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும் என்பது இக்குறளின் பொருள்.

மழை வெள்ளத்திற்கு மேல் பெரிய துன்பங்கள் எதையும் அதிகம் கேள்விப்பட்டிருக்காத நிலையில் பேரிடராக வந்த சுனாமியின் போது இவர் ஆற்றிய மீட்புப் பணிகளுக்காக சர்வதேச கவனம் பெற்றவர் என்பது மட்டும் இவருக்கான அடையாளம் இல்லை. அந்த பேரிடர் மீட்புப் பணிகளின் போது குடும்பத்தை இழந்த இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் வளர்ச்சிப் பாதையில் இன்றும் வழிகாட்டிக் கொண்டிருக்கும் உயரிய உள்ளத்திற்கு சொந்தக்காரர். பழகுவதற்கு எளிமையானவர்.

சிறப்புக் குழந்தைகளின் வாழ்வில் ஆரம்ப நிலை இடையீடு(Early intervention) என்பது மிகவும் முக்கியமானது. குழந்தைகளிடம் அதிகமான முன்னேற்றத்தைத் தரக்கூடிய ஒன்று. இவர் தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறைச் செயலராக இருந்த போது தமிழகத்தில் EI Centreகளின் எண்ணிக்கையை உயர்த்துவதில் கவனம் செலுத்தினார். சிறப்புக் குழந்தைகளின், அவர்கள் பெற்றோரின் தேவையறிந்து காப்பீடு உள்ளிட்ட திட்டங்களிலும் மாற்றங்கள் கொண்டு வந்தவர்.

திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் புத்தகத்தை வெளியிட பாடகி திருமதி. சௌம்யா, மருத்துவர் திருமதி. தேவகி, மூத்த ஊடகவியலாளர் திரு. ஜென்ராம், பேராசிரியரும் டிசம்பர் 3 இயக்க நிறுவனத் தலைவருமான திரு. தீபக், ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

*******

சிறு குழந்தைகள் பசி, தூக்கம், ஈரம் என எல்லாவற்றிற்கும் அழுகை மூலம் மட்டுமே அம்மாவுக்கு சமிக்ஞை தரும். மெல்ல மெல்ல மொழி வசப்பட்டு, தன் தேவைகளை, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முடிந்ததும் அக்குழந்தையின் அழுகையின் அளவும், தீவிரமும் குறைவதைக் கண் கூடாகப் பார்க்கலாம். வாழ்நாள் முழுவதும் மொழி வசப்படாமல் போகும் குழந்தைகள் அழுகைக்குப் பதிலாக இன்னும் தீவிரமான நடத்தைக் குறைபாடுகளுக்குள் சிக்கி சுற்றியுள்ளோரின் ஏளனத்திற்கும், கண்டனத்திற்கும் உள்ளாகின்றனர். அத்தகைய குழந்தைகளுக்கு தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஏதேனும் செய்ய முடியுமா என்ற எங்களின் தேடலே இந்த ‘அரும்பு மொழி’ மொபைல் செயலி.

ஆட்டிச நிலைக்குழந்தைகளுக்கு என ஒரு மொபைல் செயலி என்ற எண்ணம் தோன்றியதுமே, அதுகுறித்த தேடலில் ஏற்கனவே சந்தையில் இருப்பனவற்றை ஆய்வு செய்தோம். அவற்றில் சில போதாமைகள் இருப்பதாக எங்களுக்குத்தோன்றியது. மேலும் (அதிக) விலைகொடுத்து வாங்கவேண்டிய தேவையும் இருந்தது. எனவே பயனர்கள் பயன்படுத்த எளிமையானதாகவும் இருக்கவேண்டும், இலவசமாகவும் இருக்க வேண்டும் என்பதால் என்ற யோசனையில் உருவானது அரும்பு மொழி. இச்செயலியை சிறப்பான முறையில் உருவாக்கிக்கொடுத்த ஐ நோசிஸ் மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநர் தமிழ்செல்வன், அவரின் குழு உறுப்பினர்களுக்கும் பெற்றோர்களின் சார்பாக எங்களின் நன்றியை பதிவு செய்கிறோம். செயலியின் உள்ளே பயன்படுத்த சில படங்கள் தேவை என்றதும், ஐ2 ஸ்டூடியோ நண்பர் சரவணவேலிடம் தகவலைச்சொன்னோம். சிறப்பான படங்களை எடுத்துக்கொடுத்த அவருக்கும் எங்கள் அன்பு.

இதில், மேலும் புதிய படங்களையும், அதுதொடர்பான ஒலிக்குறிப்புகளையும் சேர்க்க, நீக்க எடிட் செய்யவும் முடியும். எளிமையாகப் பயன்படுத்தக்கூடியது. எனவே அந்தந்தக் குழந்தையின் படங்களையே உள்ளிட்டுக் கொள்ள முடியும் என்பதால் குழந்தைகளுக்கும் ஆர்வம் கூடும். நிச்சயம் இச்செயலி சிறப்புக்குழந்தைகளுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் பயனுள்ளதாக இருக்குமென்றே நம்புகிறோம்.

***********

இச்செயலியை வெளியிட நாங்கள் அழைத்திருந்தது கர்நாடக் இசைப் பாடகி திருமதி. சௌம்யா அவர்களை. அடிப்படையில் வேதியியல் பட்டதாரியான இவர் இசைத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். இசைப் பேரொளி, யுவகலா பாரதி, நாத ஒலி, தமிழ் இசைச் செல்வி, சங்கீத சூடாமணி போன்ற பல்வேறு விருதுகளுக்கும் உரியவர். எல்லாவற்றையும் விட சிறப்புக் குழந்தைகளுக்கும் இசைக்குமான உறவைப் பற்றிய புரிதல் உடையவர்.

அக்குழந்தைகளுக்காகப் பாடுவதில் தனி இன்பம் காண்பவர். அக்குழந்தைகளின் மழலை இசையைக் கூட மனப்பூர்வமாக ரசித்துக் கேட்டுப் பாராட்டும் மனம் உடையவர். சிறப்புக் குழந்தைகளிடம் தாயுள்ளத்துடன் அன்பு செலுத்தும் திருமதி. சௌம்யா அவர்கள் அரும்பு மொழி செயலியை வெளியிட்டார்.

****

அடுத்து வாழ்த்துரை வழங்க வந்தவர் அடிப்படையில் ஒர் உளவியலாளர், மருத்துவர் என்ற நிலைகளைக் கடந்து, ஒரு முன்மாதிரியான பெற்றோரும் கூட.

கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு என்கிறது குறள். நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்பது இக்குறளின் பொருள்.

ஒரு சிறப்புக் குழந்தையின் அன்னையாகவும், ஒரு மருத்துவராகவும் தன் கடமைகள் என்ன என்பதை உணர்ந்து தனது அறிவு, திறமை ஆகிய எல்லாவற்றையும் இச்சிறப்புக் குழந்தைகளின் உலகிலேயே செலுத்தி உழைத்து வருபவர். இவர் அரும்பு அறக்கட்டளையின் ஆலோசனைக்குழுவின் முக்கிய உறுப்பினரும் கூட.

ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவற்றைக் கடக்கும் வழிவகைகள் குறித்த வழிகாட்டுதல்களோடு அமைந்தது அவரது பேச்சு. தொடர்ந்து திரு. ராதாகிருஷ்ணன் அவர்களும், திருமதி. சௌம்யா அவர்களும் தங்களது வாழ்த்துரையை வழங்கினர்.

அரும்பு மொழி செயலியை உருவாக்கிய ஐநோசிஸ் நிறுவனத் தலைவர் திரு. தமிழ்ச்செல்வனுக்கு பாராட்டுச் சான்றிதழை திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.

விழாவில் குழந்தைகள் விளையாட அரங்கின் வெளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பொறுப்பாக நின்று குழந்தைகளை கவனித்துக் கொண்டும், அவர்களோடு சேர்ந்து விளையாடி மகிழ்வித்துக் கொண்டுமிருந்த தன்னார்வலர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் மூலம் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வாய்ஸ் பெற்றோர் குழும நிர்வாகியான திருமதி. ரஞ்சனி அரும்பு அறக்கட்டளையின் முன்னோடியான செயல்பாடுகள் தனக்கு எவ்விதம் உந்து சக்தியாக இருந்தது என்பதை குறிப்பிட்டார். ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர்களின் ஒன்றுகூடலின் முக்கியத்துவம், அது போன்ற நிகழ்வுகளில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கான தன்னார்வலர்களின் வலை ஒன்றினை அமைப்பது போன்ற செயல்களில் அரும்பின் செயல்பாடுகள் தனக்கு உணர்தியதாகவும், அதுவே வாய்ஸ் என்ற பெற்றொர் குழுமத்தை தான் துவக்கியதன் மையப்புள்ளி என்றும் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.

பேராசிரியர். தீபக் பெற்றோர்கள் தங்கள் உரிமைகளையும், கடமைகளையும் எப்படி உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டல்களை வழங்கினார். ஆட்டிச நிலையாளர்களின் எதிர்கால வாழ்கைக்கு ஒரு இணைப் பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டியதன் அவசியம், சர்வதேச அளவில் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து அவற்றை இங்கும் நடைமுறைப்படுத்த வேண்டியதன் தேவை ஆகியவற்றைக் கோடிட்டுக் காட்டிய தீபக்கின் பேச்சு பெற்றோர்களை சிந்திக்கத் தூண்டுவதாக இருந்தது.

விளையாடிக் களைத்த குழந்தைகளின் முகங்களும், சிந்தனை வயப்பட்டிருந்த பெற்றோர்களின் முகங்களும், விற்றிருந்த புத்தகங்களின் எண்ணிக்கையும் விழா வெற்றிகரமாக நிறைவேறியது என்று எங்களுக்கு உணர்த்தியது.

விழாவுக்கு உறுதுணையாக இருந்த தோழர் திரு. பிரபாகரன் அவர்களும், ஊடகவியலாளரும், ஆவணப்பட இயக்குனருமான திருமதி. ஹேமா அவர்களும் தனிப்பட்ட காரணங்களால் விழாவில் கலந்து கொள்ள முடியாது போனது மட்டுமே சற்று மனதிற்கு வருத்தம் தந்த ஒரு விஷயம்.

விழாவில் நூல் நூல் விற்பனை பொறுப்பை எடுத்துக்கொண்ட எங்கள் குடும்பத் தோழியான திருமதி. தீபா ஸ்ரீராமுக்கும் ஸ்பெஷல் நன்றி.

நாங்கள் முன்னெடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் எப்போதும் துணை நிற்கும் பண்புடன் குழும/குடும்ப உறுப்பினர்களின் உடனிருப்பே யானை பலம் தந்தது. விழாவினை அருமையாகத் தொகுத்து வழங்கிய தங்கை ஸ்ரீதேவி செல்வராசனுக்கு நன்றி என்று சம்பிரதாயமாகக் கூறிவிட முடியாது, குடும்ப உறுப்பினர்களுக்குள் இதெல்லாம் எதற்கு என்று கோபித்துக் கொள்ளக் கூடும். எனவே உதயன் & ஸ்ரீ தம்பதியினருக்கு எங்கள் அன்பு. விளையாட்டிலும் சாக்லேட்டிலும் முழுகி அம்மாவை விழா வேலைகளை கவனிக்க தற்காலிகமாக தாரை வார்த்துக் கொடுத்த வெண்பாக் குட்டிக்கு அன்பு முத்தங்கள்.

மற்றபடி வெகுநாட்களாக கண்ணிலேயே படாதிருந்த பல்வேறு நண்பர்கள் வெளியூரிலிருந்தெல்லாம் குடும்பத்தோடு வந்திருந்து சிறப்பித்தது இன்ப அதிர்ச்சி. (நந்தா & நரேஷைத்தான் சொல்கிறேன் என்பது பண்புள்ளவர்கள் அனைவருக்குமே புரியும் 🙂

 

அரும்பு மொழி செயலியை தரவிறக்கம் செய்ய:  https://tinyurl.com/arumbumozhi

எழுதாப் பயணம் நூலினை ஆன் லைனில் வாங்க:

https://tinyurl.com/e-payanam