ஆட்டிச நிலையாளர்கள் பெரும்பாலும் ஏதாவதொரு கற்பனையில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். கண்களை கண் கொண்டு நோக்குவது, முகம் பார்த்து புன்னகைப்பது போன்ற செயல்களை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இப்படி இருப்பவர்களை எவர்தான் விரும்புவர்.

அதனாலேயே இவர்களுக்கு நண்பர்கள் வாய்ப்பது என்பது அரிது. பக்கத்தில் இருக்கும் ஒருவனை மதிக்காமல் கற்பனையில் மிதந்து கொண்டிருப்பவனை எந்த நண்பன் ஏற்றுக்கொள்வான். நட்பு என்பது ஒருவழிப் பாதை அல்லவே. இருவரும் பரஸ்பரம் பேசி சிரித்து பகிர்ந்துகொண்டால் மட்டுமே நல்ல நட்பு வளரமுடியும். இதன் காரணமாகவே ஆட்டிசநிலையாளர்களின் நண்பனாக பெற்றோர் மட்டுமே இருப்பர். பல வீடுகளில் உடன்பிறந்தோர் கூட சிறு வயதில் இவர்களோடு விளையாடுவதோ, பார்த்துக்கொள்வதோ இல்லை என்பதே நிதர்சனம்.

சரி எதற்காக இவ்வளவு விரிவாகப் பேசுகிறேன் என்றால்.. கனிக்கும் நண்பர்கள் அமைவது கடினம் என்று எங்களுக்கும் தெரியும். பள்ளியில் அவனுக்கென சில நட்புகளை நாங்களாக உருவாக்கித்தர முயன்றோம். அதில் முழுமையாக வெற்றிபெறமுடியவில்லை. ஒரு சமயத்தில் இதனைப் பற்றி, தம்பி சரவணன் பார்த்தசாரதியிடம் உரையாடினோம். “அப்படியெல்லாம் இல்லண்ணே.. அவனுக்கு தோதான ஆளு கிடைச்சிருக்க மாட்டாங்க” என்றார். அதோடு கூடுதலாக இன்னொரு விஷயத்தையும் சொன்னார். அவருக்கு பள்ளிப் பருவத்தில் சக மாணவர்களைவிட, கொஞ்சம் கூடுதல் வயதானவர்களுடனேயே நட்பு இருந்ததாகவும் சொன்னார்.

அதன் பின் அவர் வாரம் ஒருமுறை வீட்டுக்கு வருவதும், கனியோடு உரையாட முயல்வதுமாக பல மாதங்கள் போனது. கனிக்கு மற்ற எல்லா வண்டிகளையும் விட புல்லட் என்றால் மிகவும் பிடிக்கும். சரவணனிடம் இருக்கும் புல்லட் வண்டியில் கனியை ஒரு ரவுண்ட் கூட்டிக்கொண்டு போவார். அந்த ரவுண்ட்க்காகவே வார இறுதியில் அவரை இவன் எதிர்பார்க்கத் தொடங்கினான். அப்புறம் நானும் சரவணனுமாகக் கனியை அடிக்கடி கடற்கரைக்கு அழைத்துச் செல்லத் துவங்கினோம். கனிக்கு கடலும் பிடிக்கும். மிகுந்த உற்சாகமாக வருவான். அந்த ஒன்றிரெண்டு மணி நேரம் கனியைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பில் இருந்து லக்ஷ்மிக்கு கொஞ்சம் ஓய்வு. இப்படியாக நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் சென்றன.

ஆரம்பத்தில் சரவணனை மாமா, அங்கிள் என்றெல்லாம் அழைக்கச் சொல்லிக் கொடுத்திருந்தோம். வீட்டிற்குள் நுழையும் போதே கனியை சரவணன், “என்ன மிஸ்டர், எப்படி இருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே நுழைவார் என்பதால் கனியும் சரவணனை ’மிஸ்டர்’ என்றே அழைக்கத் துவங்கினான். அது ஒரு பெயர் அல்ல, விளி என்பதையும், நம்மை ஒருவர் அழைத்தால் அப்படியே திருப்பி அழைக்கலாமென்றும் அவன் எப்படி, எங்கே கற்றுக் கொண்டான் என்பதே எங்களுக்குப் புரியாத புதிர்தான். ஆனாலும் தன் உள் வட்டத்தில் சரவணனை சேர்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை எங்களால் உணர முடிந்தது.

கடந்த ஆண்டு நாங்கள் குடும்பத்துடன் பாண்டிச்சேரி சென்றோம். இரண்டு நாள் தங்குவதாகத் திட்டம். அப்போது, அங்கிருக்கும் எங்களது பண்புடன் குழுவின் குடும்ப நண்பர் கிச்சாஜிக்கு, போன் போட்டு வந்திருக்கும் தகவலைச் சொன்னோம். அவர் அடுத்தநாள் காலை கடற்கரைக்குச் செல்லாம் என்று சொன்னார்.

மறுநாள் கடற்கரைக்குச் சென்றோம். அழகான அந்த கடற்கரையில் அவனை கரையில் உட்கார வைத்து நனைய வைத்து, நானும் கிச்சாஜியும் பார்த்துக்கொண்டோம். கொஞ்ச நேரம் கழித்து, அவனை நீருக்குள் இன்னும் கொஞ்சம் ஆழத்திற்குக் கொண்டு சென்று அமிழ்த்தி நனைய வைக்கப்பார்த்தேன். அவ்வளவுதான் பயந்து போய் கனி திமிறத் தொடங்கினான். நான் பிடியை இறுக்கி, மீண்டும் அவனை இன்னும் கொஞ்சம் நனைத்துவிட முயன்றேன். அப்போது அவன், “ சரவண மாமா, சரவண மாமா” என்று கூப்பாடு போட்டு கத்தத்தொடங்கினான். அதைக் கவனித்த கிச்சாஜி கேட்டார், “அது யாருங்க தல சரவணன்? கனி கத்துறானே!” என்றார்.

அப்போதுதான் சரவணனுடன் நாங்கள் இருவரும் அடிக்கடி கடற்கரை சென்றது நினைவுக்கு வந்தது. அங்கே கடற்கரையில் அவனை கால் நனைத்து விளையாட வைப்பது சரவணனின் பணி. அதனால் பயம் வந்ததும் உதவிக்கு இவன் சரவணனை அழைக்கிறான் போல என்று உணர்ந்துகொண்டேன்.

அம்மா அப்பாவைத் தவிர இன்னொரு நபரை உதவிக்கு அழைக்கலாம் என்று என் மகன் தெரிந்துவைத்திருக்கிறான் என்பதும், அந்தளவுக்கு சரவணனை அவனுக்கு மிகவும் பிடித்துப்போய் இருக்கிறது என்பதும் அப்போதுதான் அறிந்துகொண்டோம்.

சரவணன் பார்த்தசாரதி

சரவணன் மாமா வீட்டுக்குப் போகலாமா என்றால் உடனடியாக தயாராகிவிடுவான். அவர்கள் வீட்டிற்குள் எவ்வித தயக்கமும் இல்லாமல் சென்று சுற்றி வருவதும், சரவணனின் அம்மாவிடம் ஒட்டிக்கொண்டு இருப்பதும் அவனுக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று.

இப்போதெல்லாம் சரவணனுடன் கனியை தைரியமாக தனியாகவே அனுப்பி வைத்துவிட முடிகிறது. அவனைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப அவனைக் கையாளத்தெரிந்த ஒரு நல்ல நண்பனை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறோம் என்பது எங்களுக்கு உண்மையில் மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.