
பிரபஞ்சன்
மேடையில் குழுமி இருக்கும் பலருக்கும் பிரபஞ்சனை நேரடியாக அறிமுகம் இருக்கும். அவரோடு பேசியும் பழகியும் ஒன்றாக உணவருந்தியும் இருப்பீர்கள். அந்த வாய்ப்பு எனக்கு கிட்டியதில்லை. நான் எப்போதுமே அவரை மதிப்பு மிக்க எழுத்தாளராக, ஒரு வாசகனாக இருந்து மட்டுமே அணுகி இருக்கிறேன். அவர் கலந்துகொண்ட பல கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தாலும் பார்வையாளனாக, அவரது ரசிகனாக, ஆசிரியனைக்கண்டு பயம்கலந்த மரியாதையோடு விலகி நிற்கும் மாணவனாகத் தள்ளி நின்று, அவரை அவரின் ஆளுமையை ரசித்திருக்கிறேன். அவ்வளவுதான்.
பொதுவாக காவியம் என்பதன், பாட்டுடைத் தலைவனாக அரசனோ, இறைவனோ இருப்பதே இயல்பு. ஆனால் தமிழின் முதற் பெருங்காப்பியமான சிலப்பதிகாரமோ சாதாரண மானிடர்களான கோவலனையும் கண்ணகியையும் நாயகன் நாயகியாகக் கொண்ட மக்கள் இலக்கியமாக அமைந்தது.
அதுபோன்றே வரலாற்று புனைவுகள். அவை பற்றிக் கேட்கவே வேண்டாம். வேறு வழியே இல்லாமல் மன்னர்களையே நாயகர்களாகக் கொண்டு, வேல் விழி மங்கையரை உப்பரிகைகளில் நிற்க வைத்து, அண்ணலையும் அவளையும் நோக்க வைப்பதையும், அரண்மணைச் சதிகளையுமே திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருந்தோம். கல்வெட்டுக்கள், செப்பேடுகள் என்று கிடைத்திருக்கும் மிகக் குறைவான ஆதாரங்களும் அரசர்கள் பற்றியவையே.
எனவே இது தவிர்க்க முடியாதது என்ற நிலையில்தான் பிரபஞ்சன், அனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகளைக் கொண்டு மானுடம் வெல்லும் நாவலை எழுதினார். இதிலும் அரசர்கள் உண்டு என்றாலும், கோழி திருடியவன், கக்கூஸ் போக தடைபோட்டவன், அடிமைகளின் கதை என இவர் பேசிய தளம் விரிவானது. அதனால்தான் ” தமிழில் தக்க வரலாற்றுப் புதினம் தோன்றவில்லையே என்கிற வசை என்னால் ஒழிந்தது!“ என்று அவர் கர்வமாகச் சொன்னார். அவர் சொன்னதில் துளியும் தவறே இல்லை.
அவரேதான் தன் நாவலில், படையெடுப்பு என்பது எப்படி ஒரு விவசாயியை அகதியாக்குகிறது என்பதையும் பேசியிருப்பார். தேவதாசிகள் என்ற மனுஷிகளையும் பேசி இருப்பார்,
தேவதாசிகள் நாட்டியம் அல்லது பாட்டுக் கச்சேரி முடித்தபின் அதற்கான சன்மானத்தைப் பெறுவதற்கு முன் பெரிய மனிதர்களின் மார்பில் சந்தனம் பூச வேண்டும் என்று ஒரு நடைமுறை இங்கே இருந்திருக்கிறது.
கோவில் கச்சேரிகளில் கூட தர்மகர்த்தாக்களுக்கும் இன்னபிற பிரபுக்களுக்கும் இந்த சேவையை செய்த பின்னரே சன்மானம் கிட்டும் என்பதுதான் வரலாறு. அச்செயலை செய்ய மறுத்ததால் ஊரை விட்டே வெளியேறும், ஒரு தேவதாசியின் கதாபாத்திரத்தை எந்த வரலாற்று நாவலிலாவது பார்க்க வேண்டுமென்றால் அதற்கு பிரபஞ்சனிடம்தான் வர வேண்டும்.
கண்ணில் படும் பெண்களையெல்லாம் கொண்டு போய் அந்தப்புரத்தில் சேர்த்துவிட்டு சாப்பிடும் முன் ஒரு குளிகை, சாப்பிட்டபின் ஒரு லேகியம், வீரியத்திற்கு ஒரு தைலம் என்று திரிந்த மன்னர்களைப் பார்க்க வேண்டுமென்றால் அதுவும் பிரபஞ்சனின் நாவலில்தான் சாத்தியம்.
சமகால எழுத்துக்களிலும் பிரபஞ்சனின் கதைகள் எல்லாவற்றிலும் அடிப்படையாக இருப்பது மனித நேயமே. மரி என்றொரு ஆட்டுக்குட்டி சிறுகதையில் ஆசிரியர்கள் கற்பிக்கும் இயந்திரங்களாக மட்டும் இருக்கக் கூடாது, கூடவே கொஞ்சம் அன்பையும் நம்பிக்கையையும் மாணவர்களிடம் விதைத்தால் மட்டுமே நல்ல விளைவுகளை எதிர்பார்க்க முடியும் என்பதை சொல்லுவார்.
எல்லா நோய்களுக்கும் மருந்து எங்களிடம் உண்டு என்று சாலையோரங்களில் கூடாரம் அமைத்து லேகியம் விற்பவர்கள் சொல்லுவார்கள். அவர்களைப் போன்று சிலர் எல்லாவற்றிற்கும் கருத்துசொல்லிக்கொண்டிருப்பதை தமிழ் இலக்கியச்சூழலில் காணமுடியும். இன்னும் சிலரோ எது நடந்தாலும் திரும்பிக்கூட பார்க்காமல் தானுண்டு தன் படைப்புண்டு என்று இருப்பவர்களையும் நாமறிவோம். இவர்களில் இருந்து மாறுபட்டவராகவே நான், பிரபஞ்சனை பார்க்கிறேன். தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் அளவிற்கு அழுத்தனாம அரசியல் கருத்துக்களை, பொதுவெளியில் அவர் தைரியமாகப் பேசியே இருக்கிறார். எதற்கும் அஞ்சுவதென்பது அவரிடம் இல்லை.
கலை மக்களுக்காகவே என்று பேசிய பிரபஞ்சன், வறட்சியான மொழியைக் கொண்டிருக்கவில்லை. அவரது எழுத்தின் மூலம் இலக்கிய நுட்பங்களையும், வாசிப்பின்பத்தையும் ஒருங்கே தந்த முன்னோர்களில் ஒருவராக இருந்தார் பிரபஞ்சன்.
அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் பிரபஞ்சனை இன்னும் நுணுக்கமாக அணுகுவார்கள்/ அணுகவேண்டும். வரும் காலங்களில் பிரபஞ்சன் பள்ளி மாணவர்கள் பலர் வருவார்கள் எனும் நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.
அவரது கதைகளிலே தமிழ்கூறும் நல்லுலகில் என்றும் அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார். அவருக்கு எனது புகழஞ்சலி வணக்கம்!
(24.12.2018 அன்று சென்னையில் நடைபெற்ற, பிரபஞ்சன் நினைவேந்தல் நிகழ்வில் பேசியதின் எழுத்து வடிவம்)
-0-0-0-0-0-0-0-0-