சில மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தியை படித்தேன் இங்கிலாந்தில் உள்ள ஓர் ஆட்டிசநிலைச் சிறுவன் தினம்தோறும் வெவ்வேறு நாடுகளின் கொடிகளை தன் வீட்டு முன்னால் ஏற்றி வருகிறான். அந்த செய்தியை ஒட்டி அச்சிறுவன் மற்றும் அவன் தாயாரின் பேட்டிகளை பார்க்க நேர்ந்தது அப்பேட்டியில் அச்சிறுவன் சொல்லியிருந்த ஒரு விஷயம் என் மனதில் தைத்தது. ஒவ்வொரு நாளும் “காலையில் எழும்போது எதற்காக இன்று எழவேண்டும் என்ற என் கேள்விக்கு இந்த கொடியேற்றும் செயல் ஒரு நல்ல பதிலாக இருக்கிறது” என்றான் ஜோஷ் எனும் அச்சிறுவன். ( அச்செய்தியின் சுட்டி இங்கே: https://www.bbc.com/news/av/uk-england-hampshire-44717719/teenager-flies-the-flag-for-autism)

கிட்டத்தட்ட இதே போன்றதொரு கேள்வியை கனியும் தினந்தோறும் கேட்பதுண்டு; ”எங்க போறோம்?” என்ற கேள்வியுடன் தான் அவனது ஒவ்வொரு நாளும் விடியும். வார நாட்கள் எனில் பள்ளி என்றும், அவனுக்கு பிடித்த நீச்சல் வகுப்பு, இசை வகுப்பு என்று சொல்லி சமாளிப்போம். விடுமுறை நாட்கள் எனில் நிச்சயம் அவனுக்கு ஒரு லாங்க் ட்ரைவ் தேவை. அதாவது குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் டூவீலரில் எங்கும் நிறுத்தாமல் வண்டியை ஓட்டிக்கொண்டே இருக்கவேண்டும். நன்றாக பேசக்கூடிய அந்த இங்கிலாந்து சிறுவன் சொன்ன பிறகுதான் கனியின் கேள்விக்கு பின்னால் இருக்கும் உணர்ச்சிகளை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது

ஆட்டிஸம் என்பதையே தமிழில் தன்முனைப்பு குறைபாடு என்று நாங்கள் சொல்கிறோம். அவர்களின் தன்முனைப்பை தூண்டுவதற்கு ஒவ்வொரு நாளையும் பொருளுள்ளதாக ஆக்குவதற்கு ஏதேனும் அவன் விருப்பத்தை உணர்ந்து அந்நாளை அர்த்தமுள்ளதாகச் செய்ய வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். அர்த்தம் என்பது நமது சராசரி மனங்களின் அகராதிப்படி அல்ல; அக்குழந்தைகளின் உள்ளார்ந்த ஈடுபாடை ஒட்டிய ஏதேனும் ஒரு செயலாக அது இருக்க வேண்டும்.

இப்படியான பயணத்தை நான் மட்டும் தொடங்கவில்லை. பலரும் பல வழிகளில் முயன்றுள்ளனர். எனக்குத்தெரிந்து ஒரு தாய், சில மாதங்களுக்கு முன் திருவான்மியூரில் அமைந்துள்ள ஒரு ஷாப்பிங் மாலில் குழந்தைகள் விளையாடும் இடத்திற்குச்சென்று தம் குழந்தையைப் பற்றி சொல்லி அனுமதி கேட்க, குழந்தைகளை விளையாட ஐநூறு ரூபாய் வரை வசூலிக்கும் அவர்கள்  தனி நேரம் ஒதுக்கி, இலவசமாகவே அனுமதி அளிக்க முன்வந்தனர். அதும் 15 குழந்தைகள் வரை! அந்தத் தாய் தனக்குத் தெரிந்த பல சிறப்புக்குழந்தைகளையும் அழைத்துச்சென்றுள்ளார்.

சின்னச்சின்ன ஆசைகள் எனும் தலைப்பின் கீழ் எனது அனுபவங்களை எல்லாம் எனது தளத்திலும் இங்கே சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதன் காரணம் பெருமை பீற்றிக் கொள்ளவோ அல்லது சுய பிரதாபத்திற்காகவோ அல்ல. அந்த இங்கிலாந்து சிறுவன் எனக்கு அளித்த குறிப்பை போல எனது இந்த பதிவுகளும் மற்றவர்களுக்கு எதையேனும் உணர்த்தக் கூடும் என்பதே என் எதிர்பார்ப்பு.

எல்லோரும் இதே பாணியில் முயற்சிக்க வேண்டும் என்பதில்லை அக்குழந்தைகளின் ஆர்வத்தைக் கண்டுணர்ந்து, அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தூண்டுவதை நோக்கி குழந்தையை அழைத்துப் போவது பயனுள்ளதாக இருக்கும் என்பதை உணர்ந்தவே சின்னச்சின்ன ஆசைகளை பதிவு செய்கிறேன்.

அதனால்தான் கனிக்கு பிடித்தமான மனிதர்களை, இடங்களை அழைத்துப்போய் காட்டுவது என்ற முடிவுக்கு வந்தோம். இதை எல்லாம் ஏதோ நான் பத்திரிக்கையாளனாக இருப்பதால் எதையும் சாதித்துவிடவில்லை. ஓர் ஆட்டிச நிலைக்குழந்தையின் தகப்பனாக எல்லா இடங்களுக்கும் அனுமதி கோரி கடிதம் அனுப்புகிறேன். பல இடங்களில் நேரில் சென்று பேசுகிறேன். சிலரிடம் தொலைபேசியில் பேசுகிறேன். அணுகும் எல்லா இடங்களிலும் அனுமதி கிடைத்துவிடவில்லை. பல இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. சில எண்கள் வேண்டி உதவிகேட்ட பல பத்திர்க்கை நண்பர்கள்கூட அதன் பின் என் தொலைபேசி அழைப்புக்களை எடுப்பதுகூட இல்லை. இப்படி பல அனுபவங்கள் உண்டு. நான் பத்திரிக்கையாளனாக முயன்றிருந்தால் ஒருவேளை மகனின் ஆசைகளை எப்போதே நிறைவேற்றி இருக்க முடியும். அதைச் செய்யாமல் சாதாரண தகப்பனாகவே எல்லா இடங்களிலும் முட்டி மோதுகிறேன். எனக்கும் என் மகனுக்கும் கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் அன்பு+கருணையின் அடிப்படையிலேயே கிடைக்கிறது. மாறாக நான் பத்திரிக்கையாளன் என்பதற்காக அல்ல என்பதையும் இங்கே அழுத்தமாகப் பதிவு செய்கிறேன்.

சமூக ஆர்வல அன்பர்களுக்கு அப்படியே ஒரு சிறுவிண்ணப்பம்;  என்னைப்போன்று சிறப்புக்குழந்தைகளுடன் இருக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களால் இயன்ற அளவு உதவ வேண்டுகிறேன்.

உங்கள் பிள்ளைகளுடன் ஆட்டிசநிலைச்சிறுவர்களை கலந்து பழகவும் விளையாடவும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுங்கள்.

புறந்தள்ளப்படும் இச்சமூகத்தில் இருந்து தனித்தீவாகப் போய்க்கொண்டிருக்கும் சிறப்புக்குழந்தைகளுடைய குடும்பங்களுக்கு (அவரவர் வீட்டுப்பகுதியில் இருப்பவர்களுக்கோ அல்லது உறவு/ நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கோ) துணை நின்று, தனிமனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் குழந்தைகளின் விருப்பம் அறிந்து, அவர்களை விளையாட்டுப் பூங்கா, உங்கள் இல்லம், கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு அழைத்துச்செல்லும் பொறுப்பினை மனமுவந்து எடுத்துக்கொண்டால், சொந்தக்குழந்தைபோல நீங்கள் பார்த்துக்கொண்டால் இக்குழந்தைகளுடன் வாழும் பெற்றோரின் நிலைமையை நன்கு உணரவும், அவர்களுக்காக நீங்கள் நிஜமான அக்கரையுடன் பேசவும் முடியும்.

நாள் முழுவதும் அக்குழந்தையுடன் நேரம் செலவழிக்கும் குடும்பத்தினருக்கும் உங்களால் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். அந்த ஓய்வு அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு அவர்கள் தயார் செய்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

நன்றி படங்கள் : Shutterstock, google