கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பது போல ஆட்டிச நிலையாளர்களின் உலகம் என்னவென்பது நமக்குப் புரியாது, அவர்களுக்கோ அதைச் சொல்லத் தெரியாது என்பதுதான் யதார்த்தம். டெம்பிள் கிராண்ட்லின் போல வெகு சிலர் எழுதத் துவங்கிய பின்னரே ஒரளவு அவர்கள் உலகின் மீதும் வெளிச்சம் விழுந்தது எனலாம். ஆனாலும் கூட ஒவ்வொரு ஆட்டிச நிலையாளரின் தனித்துவமான மன உணர்வுகளை இன்னமும் நம்மால் சரிவர புரிந்து கொள்ள முடிவதில்லைதான்.

அனுபவத்தினால் ஓரளவுக்கு பெற்றோர்/காப்பாளர்கள் சில அனுமானங்களைக் கொண்டிருக்கிறோம் என்றாலும் கூட தினம் தினம் புதுப் புது படிப்பினைகளும் பெற்றபடியேதான் இருக்கிறோம்.

அவர்கள் உலகைப் புரிந்து கொள்வது ஒரு சவால் என்றால், அவர்களை நம் உலகிற்கு இழுத்து வருவது அதை விடவும் பெரிய சவால். ஆனாலும் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்யன் போல நாங்களும் எங்கள் மகனை நம் உலகத்திற்குள் இழுத்துவரும் முயற்சியுடன், அவனது உலகையும் புரிந்துகொள்ள முடியுமா என்று பார்த்து வருகிறோம். அதிலொன்று மனிதர்கள் சூழந்த இவ்வுலகை அவனுக்கு அறிமுகம் செய்துவைப்பது. அதாவது அவனுக்கு எதுவெல்லாம் பிடிக்கிறதோ, அதுபற்றிய விளக்கத்தை செயல்வடிவில் காட்டுவதுடன் அதன் பின்னிருப்பவர்கள் மனிதர்கள்தான் என்பதை அவனுக்கு உணர்த்தும் முயற்சியாகவும் சில விஷயங்களைச் செய்யத்தொடங்கி உள்ளோம். அதைப் பகிர்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

பொதுவாக தொலைகாட்சிகள் குழந்தைகளுக்கு ஆகாது என்பார்கள். ஏனெனில் அது ஒருவழிப் பாதை. அது பேசிக்கொண்டே இருக்கும். நாம் வாய் பிளந்து வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்போம். இதன்காரணமாகவே சிறுபிள்ளைகளை அதிக நேரம் தொலைக்காட்சி முன்னால் அமரவைத்தால் அவர்களின் பேச்சு தாமதப்படும் என்று சொல்வார்கள்.

எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இருந்தாலும் தினமும் அதைப் பயன்படுத்துவதில்லை. எப்போதாவது ஒருநாள் ஓடும். அதுவும் மகன் வீட்டில் இருக்கும் போது, அவன் விரும்பும் சானல் மட்டுமே ஓடும். உலகத்தொலைக்காட்சிகளில் முதல்முறையாக” என்பதுமாதிரி அடிவயிற்றில் இருந்து கத்தும் விளம்பரங்கள் அவனுக்கு அலர்ஜி என்பதால் ஜெயா டிவியும், ராஜ் டிவியும் தான் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் பெரும்பான்மை நேரம் அத்தொலைக்காட்சிகள் சத்தம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும், இவன் வேறு வேலைகளில் ஈடுபட்டிருப்பான்.

அதில் வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர்பான விளம்பரங்களுக்கு மட்டும் அவன் ஒலிவைத்து கேட்பான். மற்ற விளம்பரங்களை பெரும்பாலும் மியூட் செய்துவிடுவான். அதிலும் அவனுக்கு ஜெயா டிவி லோகோ மீது அப்படி என்ன அதித பிரியமோ தெரியாது. ஜெயா டிவி லோகோவை வரைந்து, அதில் வரும் நிகழ்ச்சிகளை எழுதி, அழிப்பது அவனுக்கு பிடித்த விளையாட்டுகளில் ஒன்று. அந்த லோகோ மீதிருக்கும் அவனது ஆசையை அறிந்துகொண்டதும் அவனை ஜெயா டிவி அலுவலகத்திற்கு அழைத்துச்செல்ல நினைத்தோம்.

அங்கு பணியாற்றும் அண்ணன் திருமலையிடம் விபரம் சொல்லி, அலுவலகத்தில் இருக்கும் பெரிய சைஸ் லோகோவுடன் நின்று படம் எடுக்கவேண்டும் என்று சொன்னேன். அவரும் அலுவகத்தில் பேசி, நேற்றுக்காலை வரச்சொன்னார். இரண்டு நாளாக கனியிடம் நாம ஜெயா டிவி அலுவலத்திற்கு ஞாயிறன்று போகிறோம் எனச்சொல்லிச் சொல்லி அவனை மனதளவில் தயார் படுத்தினோம்.

நேற்று காலை, நானும் தம்பி சரவணன் பார்த்தசாரதியும் கனியை அழைத்துக்கொண்டு ஜெயா டிவி அலுவலகம் சென்றோம். திருமலை அண்ணன் வேறு வேலையாக வெளியே சென்றுவிட்டார். இருப்பினும் எங்கள் வருகை குறித்து, அங்கிருப்பவர்களிடம் அவர் சொல்லிச்சென்றிருந்தார்.

உள்ளே நுழைந்ததும் வரவேற்பறையில் இருந்த பெரிய ஜெயா டிவி லோகோவைப் பார்த்ததும், பையனுக்கு பயங்கர எக்ஸைட்மென்ட். கிட்டச்சென்று தொட்டுப் பார்த்தான். அவனுக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது என்பதை அவன் முகத்திலே உணர முடிந்தது. ஏற்கனவே இவனுக்கு ஒலியை உள்வாங்குவதில் சென்சரி (auditory sensory) பிரச்சனைகள் இருப்பதால், எப்போதும் இயர் மஃப் (ear muff) காதுகளில் மாட்டிவிட்டிருப்போம்.

அதிக மகிழ்ச்சி (excitement) அடையும் நேரங்களில் காதுகளை பொத்திக்கொள்வதும் இவனது வழக்கம். ஜெயா டிவி லோகோ பார்த்த மகிழ்ச்சியில் காதில் மாட்டி இருந்த இயர்மஃபை எடுக்கவே விடவில்லை. சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம். அடுத்ததாக உள்ளே செல்லலாம் என்று பார்த்தால் அதற்கான வாய்ப்பு அங்கே அமையவில்லை.

அதனால் அடுத்தாக புதியதலைமுறை சானல் செல்லலாம் என்று முடிவெடுத்து, அண்ணன் கார்மல் அவர்களுக்கு தொலைபேசினேன். அவர் வெளியூரில் இருப்பதாகச் சொல்ல, ‘பாண்டியன் அல்லது தென்னவனிடம்’ பேசுங்களேன் என்றார்.

அடுத்து சானலில் தலைமை ஒளிப்பதிவாளர் அண்னன் தென்னவனுக்கு போன் போட்டேன். விஷயத்தைச் சொன்னதும் உடனடியாக அலுவலகத்தில் இருந்த இன்னொரு ஒளிப்பதிவாளருக்கு தகவல் சொல்லிவிட்டு, எங்களை போகச்சொன்னார்.

அங்கே சென்று, நிகழ்ச்சிகள் ஒளிப்பதிவு ஆகும் இடங்களைக் காட்டினோம். ஸ்டூடியோவையும் ஒளிப்பதிவு செய்யப்படும் விதங்களையும் அவனுக்கு சொல்லிக்கொடுத்தேன். புரிந்துகொண்டானா என்பது தெரியாது. ஆனால் வியப்பாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தான். கொஞ்ச நேரத்தில் இயல்பு நிலைக்கு அவன் வர, காதுமாட்டியை கழட்டி விட்டேன்.

கொஞ்ச நேரம் அங்கே இருந்துவிட்டு, அப்புறம் அங்கிருந்து கிளம்பினோம். மாலை முழுவதும் சானல்கள் சென்றுவந்ததை அவ்வப்போது நினைவுபடுத்திக்கொண்டே இருந்தோம்.

இன்று காலையில் தூங்கி எழுந்ததும், “நேற்று எங்கே போனோம்?” என்று கேட்டதும், கனியின் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.

‘ஜெயா டிவி’ என்றான்.

அப்புறம் என்று கேட்டபோது, ‘புதியதலைமுறை’ என்றான்.

”ஆர் யூ ஹாப்பி?” என்று கேட்டபோது, குதித்துக்கொண்டே “ஹாப்பி! ஹாப்பி!!” என்று சொன்னவன். என்னை கழுத்துடன் கட்டிக்கொண்டான்.

அவன் கவனிக்காவிட்டாலும் பரவாயில்லை என நானும் ‘மீ டூ ஹாப்பிடா பையா’ என்று சொல்லி, அவனை அணைத்துக்கொண்டேன்.

(தொடரும்)

நன்றி: கேட்டதும் எப்போதும் உதவுகின்ற நண்பர்களுக்கு!