மந்திரச்சந்திப்பு- 1

1.

அந்த அறைக்குள் சுவரில் சரிந்து அமர்ந்திருந்தான் சூர்யா. அவனைச் சுற்றிலும் பல கதைப்புத்தகங்கள் சிதறிக்கிடந்தன. பரிட்சை அட்டையில் செருகிய காகிதத்தில், வாட்டர் கலரில் வரைந்த ஓவியம் ஒன்று மின்விசிறியின் காற்றினால் படபடத்துக்கொண்டிருந்தது.

திறந்திருந்த ஜன்னலின் வெளியே நடமாட்டமே இல்லாத தெருவை எவ்வளவு நேரம் தான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க முடியும். அப்புறம் படம் வரைந்தான். இந்த புத்தகங்களை எல்லாம் ஏற்கெனவே படித்துவிட்டான். இப்போது சோர்வார் அமர்ந்துவிட்டான். தலையை உயர்த்தி,  அறையைச் சுற்றிலும் நோட்டமிட்டன் சூர்யா. எத்தனை முறை பார்த்து என்ன புதியதாக ஏதும் தென்படவில்லை.

மிகுந்த சோர்வாக இருந்த்து. உடம்பை அப்படியே முன்னுக்கு நகர்த்தி, வெற்றுத்தரையில் படுத்தான். பார்வை மேல் நோக்கி இருந்தது. இறக்கைகள் தெரியாமல் வேகமாக சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியைப் பார்த்தான். அதன் இறக்கைகள் வேகமாக ஓடுவதைப் பார்க்கவே விசித்திரமாக இருந்தது.

இதற்கு எத்தனை றெக்கைகள்? மூன்றா? நான்கா? வீட்டின் கூடத்தில் இருப்பதில் நான்கு றெக்கைகள் உண்டு. ரெண்டு றெக்கை மட்டும் வைத்த மின்விசிறி இருக்குமா? என்றெல்லாம் யோசித்தவாரே மின்வீசிறியையே பார்த்துக்கொண்டிருந்தான் சூர்யா.

திடீரென அந்த அறைக்குள் புகை மூட்டம் சூழந்தது. வாசமில்லாத புகை. பொதுவாக எல்லா புகைகுமே ஏதாவதொரு வாசமிருக்கும் அல்லவா. ஆனால் இந்த புகைக்கு எந்த வாசனையுமில்லை. இரண்டொருதரம் மூக்கை உறிஞ்சிப் பார்த்த சூர்யாவுக்கு புரிந்துவிட்டது. இது சுந்தரன் தான். ஆம்! அதே சுண்டைக்காய் இளவரசன் சுந்தரன்.

வாரிச்சுருட்டி எழுந்தான் சூர்யா. மின் விசிறியின் வேகத்தில் புகை அறைக்குள் சுழன்று அடித்தது. ஓடிச்சென்று மின்விசிறியின் சுவிட்டை ஆப் செய்தான்.

”சுந்தரா! நீங்க தானே?” என்று கேட்டான் சூர்யா.

பதில் இல்லை.

மீண்டும் கூறினான், ”சுந்தரா எங்கே இருக்கீங்க? வெளியே வாங்க! நீங்க தானே..”

“வந்தேன்.. வந்தேன். எப்படி இருக்கிறாய் சூர்யா?”

குரல்வந்த திசையை நோக்கினான் சூர்யா. அங்கே, இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு நிற்கும் சுந்தரன் தெரிந்தான். நீல வண்ணத்தில் பளப்பளப்பாகத் தெரிந்தான். பார்ப்பதற்கு பழைய அதே சுந்தரனைப் போல தெரிந்தாலும், அவனைச்சுற்றிலும் ஏதோ ஒளி பரவி இருந்தது போலத் தெரிந்தது.

கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தான் சூர்யா. சுந்தரனின் உருவம் முத்திரள் படமாகத் (ஹால்லோகிராம் படம் – hologram image) தெரிந்தது. சில நிமிடங்களிலேயே அங்கே நிற்பது நிஜமான சுந்தரன் இல்லை. அவனைப்போன்ற ஒர் மாயத்தோன்றம் தான் என்பதை உணர்ந்துகொண்டான்.

“இதென்ன நீங்கள் இங்கே இருக்கீங்களா? இல்லையா?”

“இருக்கேன். ஆனால் இல்லை” என்று பதில் சொன்னான் சுந்தரன்.

”புரியலையே..!”

”இரு அதற்குமுன் என் கேள்விகளுக்கு பதில் சொல், நீ ஏன் சோர்வாக இருக்கிறாய்?”

“ம்.. வீட்டுக்குள்ளேயே அடைஞ்சி கிடந்தா..”

“ஏன் வீட்டுக்குள்ளேயே இருக்க?”

“கொரோனான்னு ஒரு வைரஸ் பரவுதாம். அது பரவாமல் இருக்க.. பிற மனிதர்களிடமிருந்து விலகி இருக்கச்சொல்லி இருக்காங்க. அதனால எல்லோருக்கும் லீவு கொடுத்து வீட்டுக்குள்ளேயே இருக்கச் சொல்லீட்டாங்க. “

“ம்.. இதன் காரணமாகவேதான், எங்கள் நாட்டிலும் வெளியே வெளியே யாரும் செல்லக்கூடாதுன்னு தடை விதிச்சிருக்காங்க. இன்னும் எங்கள் தேசத்தில் இந்நோய் வரவில்லை என்றாலும் யாரும் கொண்டுவந்துவிடக்கூடாது அல்லவா.., அதனால்தான் வெளியே செல்ல எங்களுக்குத்தடை.

எனக்கும் ஒரே இட்த்தில் அடைந்து கிடக்கப்பிடிக்காமல் உன்னைப் பார்க்க நினைத்தேன்.  நான், உங்கள் நாட்டுக்குள் வராமல், என் நாட்டில் இருந்து, என்னுடைய மந்திரசக்திகள் மூலமாக உன்னை சந்திக்க முத்திரள் படமாக வந்திருக்கிறேன்.”

“வாவ்.. அப்ப, இது நிஜமான சுந்தரன் தானா?”

”ஆமா.. பார்க்கலாம் பேசலாம். ஆனால் தொட்டு உணரமுடியாது..”

”ஐ சூப்பர் தான். ஆனால் நாம மட்டும் பேசிட்டே இருந்தா ரொம்ப போர் அடிக்குமே எங்கேயும் வெளியில போகவே முடியாதா?..”

”அது முடியாது சூர்யா, அரசாங்க உத்தரவை மீறுதல் குற்றமல்லவா? பேசாமல் உன் அறைக்குள்ளேயே உலகை என்னால் கொண்டு வரமுடியும்…”

”என்னது..?”

“ஆமா.. நீ யாரையாவது சந்திக்கவேண்டும்னு நினைத்தால், அவங்க பெயரைச்சொல்லு, அவர்களையும் இங்கே முத்திரள்படமாக கொண்டுவந்துவிடுகிறேன்.”

”நிஜம்மாவா…?”

“ஆம் பெய்யாலுமே”

“ஒரு நிமிசம் இரு சுந்தரா..” என்று சொன்ன சூர்யா,  சிந்திக்கத்தொடங்கினான். யாரை அழைக்கலாம். உடனடியாக அவனது மனதில் நிறைய பெயர்கள் வந்துபோயின. எதிலுமே உறுதியாகச் சொல்லமுடியாமல் குழம்பினான்.

(அவன் யாரை சந்திக்க விரும்பினான்.. என்பதை நாளை மதியம் 4 மணிக்கு அறிந்துகொள்ளலாம்!)

This entry was posted in சிறுவர் இலக்கியம் and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 3 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.