யாரை சந்திக்க விரும்புகிறாயோ அவர்களை இந்த அறைக்குள்ளேயே கொண்டுவருகிறேன் என்று சுண்டைக்காய் இளவரசன் சொன்னதும் முதலில் வியந்துபோனான் சூர்யா. பின் சுதாரித்துக்கொண்டு, யாரை அழைக்கலாம் என்று யோசித்தவனுக்கு ஊரில் இருக்கும் தங்கை ஷாலு நினைவு வந்தாள். (ஆம்! மரப்பாச்சி சொன்ன ரகசியம் கதையில் வந்தே அதே ஷாலினிதான்.)

”என்ன யோசனை செய்தாயிற்றா இல்லையா?” என்று கேட்டான் சுந்தரன்.

“ம்.. ஊரில் இருக்கும் என் தங்கை ஷாலினியை இங்கே வரவைக்க முடியுமா?”

“ஹா..ஹா.. ஏன் முடியாது? நான் சொல்லுகின்றபடி நீ செய்”

“என்ன செய்யவேண்டும்?”

“வடக்கு பக்கம் பார்த்து நில்! உனது வலதுகாலை மடக்கி, இடது கால் முட்டியில் வைத்து, ஒற்றைக்காலில் நிற்கவேண்டும். கைகளை தலை மேலாகத்தூக்கி, ஒரு வணக்கம் வைத்து, கண்களை மூடி நீ யாரை சந்திக்கவேண்டுமோ அவரை நினைத்துக்கொள், நான் இங்கிருந்து மந்திரம் சொல்கிறேன்.” என்றான் சுண்டைக்காய் இளவரசன் சுந்தரன்.

சூர்யாவும் அவன் சொன்னபடியே நின்று, கண்களை மூடி ஷாலினியை நினைக்கத்தொடங்கினான்.

++++
சில நிமிடங்களியேலே ஷாலினியின் முகம் தெரிந்தது. தரையில் படர்ந்து, ஏதுவோ படம் வரைந்துகொண்டிருந்தாள். பின்னால் அவள் தம்பி ஹரி படுத்து உறங்கிக்கொண்டிருதான்.

“ஷாலினி, தெரிகிறாளா?” என்று கேட்டான் சுந்தரன்.

“ஆமாம், நல்லா தெரியுறா!”

“இப்போது நீ அவளிடம் பேசு, அவள் இங்கே வர விரும்புகிறாளா என்று கேள்?!”

“நான் இங்கே இருந்து கேட்டால் அவளுக்கு கேக்குமா என்ன?”

“ம்..கேட்கும்! நீ பேசித்தான் பாறேன்!”

”ஹாய்.. ஷாலு!” என்றான்.

படம் வரைந்துகொண்டிருந்த ஷாலினி திடுக்கிட்டு, சுற்றுமுற்றும் பார்த்தாள். பயந்த அவளது முகத்தைப் பார்த்ததும் சூர்யாவுக்கு சிரிப்பு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான்.

“ஷாலு! நான் தான் சூர்யா பேசுறேன்”

“டேய்! அண்ணா.. ஊர்ல இருந்து வந்திருக்கிறாயா.. இரு நான் வந்து கதவைத்திறக்குறேன்” என்று எழுந்து அறைக்கதவை திறக்கப்போனவளைத் தடுத்தான் சூர்யா, “ நில்லு.. நில்லு ஷாலு. நான் அங்கே வரலை!”

“அப்ப எங்கே இருந்து பேசுற..?”

“எங்க வீட்டில் இருந்து பேசுறேன். சுண்டைக்காய் இளவரன் செய்த மந்திரத்தால் என் வீட்டில் இருந்து, ஊரில் இருக்கும் உன்னோடு பேசுறேன். சரி! நீ எங்க வீட்டுக்கு வர்றியா?” என்று கேட்டான் சூர்யா!

இவன் சொன்னதை புரிந்தும் புரியாமலும் குழப்பத்துடன் மையமாக தலையை ஆட்டினாள் ஷாலு.

“ஒரு நிமிஷம் இரு.. அவளுக்கு உன் உருவம் தெரியலை. குரல்மட்டும் தான் கேட்கிறது. உன் உருவத்தைப் பார்த்தால் அவளுக்கு நீ சொல்லுவது புரியலாம்.” என்ற சுந்தரன், ஏதே மந்திரங்களைக் கூறினான்.

அடுத்த வினாடி, சூர்யாவின் முத்திரள் உருவம் ஷாலினியின் முன்னால் தோன்றியது. அவள் விழிகள் விழிய பார்த்தாள்.

”டேய் அண்ணா.. என்னது இது?”

“இது முத்திரள் உருவம். சுந்தரனின் மந்திர ஏற்பாடு” என்றான் சூர்யா.

“அப்படீன்னா..”

”அவரவர் இல்லத்தில் இருந்தபடியே நாம் அனைவரும் ஒன்றாக சந்திக்கக்கூடிய ஏற்பாடு” என்றான் சுதந்திரன்.

அங்கே திடீரெனத் தோன்றிய இன்னொரு உருவத்தைப் பார்த்து, முதலில் தயக்கமுற்ற ஷாலினி, சமாளித்துக்கொண்டு, “ஓ! நீங்க தான் சுந்தரனா? ஹாய்!” என்று அவனைப் பார்த்து கையசைத்தாள்.

பதிலுக்கு சுந்தரனும் ’ஹாய்’ என்றான்.

”இதெல்லாம் எப்படி..?”

ஒருவரின் மாய உருவத்தை இன்னொருவரிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறேன். இப்போது என்னுடைய அறையில் நீங்கள் இருவரும் முத்திரள் உருவமாக இருக்கிறீர்கள். அதுபோலவே, நம் ஒவ்வொருவரின் உருவமும் இன்னொருவர் இருக்குமிடத்தில் இப்படித்தோன்றும். எங்கள் தேசத்தில் நெருக்கடிக் காலத்தில் பதுங்கிக்கொண்டு, இப்படித்தான் மற்றவர்களை சந்திப்போம்” என்றான் சுந்தரன்.

“நல்ல வேளை, உங்களை எல்லாம் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். வீட்டுக்குள்ளேயே அடைச்சி வச்சிட்டாங்க. ரொம்பவும் போர் ஆகிடுச்சு.”

“ஒரே இடத்தில் இருப்பது கொஞ்சம் போரான விஷயம்தான்!”

”ஆமா! வீட்டுக்குள்ளேயே இருக்கன்னும்னு ஆரம்பத்துல சொன்னப்போ நல்லா ஜாலியா இருக்கும்னு நினைச்சேன். நாட்கள் செல்லச்செல்ல பயங்கரமான போர் ஆகிடுச்சு. இந்த நேரத்தில மரப்பாச்சியும் இல்லையேன்னு கஷ்டமா இருந்துச்சு”

“கஷ்டம் தான்..” என்ற சூர்யா, “நாம ஏன் அந்த மரப்பாச்சியை இங்கே கொண்டுவரக்கூடாது?” என்று கேட்டான்.

”என்னது திரும்பவும் அந்த மரப்பாச்சி எனக்கு கிடைக்குமா?”

”இல்லை இல்லை” என்று அவசரமாக மறுத்த சுந்தரன், “மரப்பாச்சி,  à®¨à®®à¯à®®à¯à®Ÿà®©à¯ கலந்து உரையாட விரும்பினால் அதன் பிம்பம் இங்கே தோன்றும். அது நேரடியாக வராது. இப்போ, நானும் சூரியாவும் உன் வீட்டு அறைக்குள் உன் முன்னாடி நிற்கிறோமே அதுபோல..” என்றான்.

“ஆனா, அது இப்போ எங்கே இருக்குன்னு எனக்குத்தெரியாதே..!” என்றாள் ஷாலு.

“அது ஒரு பிரச்சனையே அல்ல. நீ அதை மனதில் நினைத்தால் போதும்..” என்று சூர்யாவுக்கு சொன்னதை எல்லாம் திரும்பவும் கூறினான் சுந்தரன்.

அவளும் கால்களை மடங்கி, தலைக்கு மேல் வணங்கி நிற்க, சுந்தரன் மத்திரங்களை ஜெபிக்கத்தொடங்கினான்.


(ஷாலு, மரப்பாச்சியைப் பார்த்தாளா?! – நாளை மதியம் -4 மணிக்கு!!)

பாகம் 1: https://blog.balabharathi.net/?p=1973