ஷாலுவின் கண் முன் மரப்பாச்சித் தோன்றியது. வேறு ஆடைகள் அதற்கு அணிவிக்கப்பட்டிருந்தது. ஆடை மாறினாலும் அதனை அடையாளம் காண்பது ஷாலுவிற்கு என்ன கடினமா என்ன?

மரப்பாச்சியைப் பார்த்த்துமே அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது, “ஏய்! ஷாலு ஏன் இப்ப அழுரே!”

“சாரி இளவரசி, நான், உன்னைய தொலைச்சிட்டேன். இப்ப நீ எங்க இருக்க? எப்படி இருக்க?”

“ஹா..ஹா.. இதுக்கா அழுகிறாய். நீ என்னை தொலைக்கவில்லை ஷாலு. நானாகத்தான் உன் கையில் இருந்து நழுவிக்கொண்டு போனேன். இப்போ இங்கே ஒரு மலைக்கிராமத்தில் இருக்கிறேன். சந்தோசமாக இருக்கிறேன். ஆமா.. பூஜா.. எப்படி இருக்கா?”

”ம்.. அவ நல்லா இருக்கா! நான்தான் உன் நினைப்பாவே இருக்கேன். நீ சொல்லிக்கொடுத்த, பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் குறித்து,  à®ªà®² பள்ளிகளில் சென்று பூஜாவும் நானும் பேசிக்கொண்டு வருகிறோம். எங்க மீஸ் எல்லாம் ரொம்ப ஹெல்ப் செய்யுறாங்க.

“ஓ!.. அப்படியா.. ரொம்பவும் மகிழ்ச்சியான விஷயம்.”

”அதோட, நம்ம கதைக்கு ஆனந்தவிகடன் நம்பிக்கை விருது எல்லாம் கொடுத்தாங்க”

”ஆஹா.. நல்ல விஷயம். விகடன் மாதிரி பாரம்பரியமிக்க பத்திரிகை வழியா, நம்ம செய்தி பலருக்கும் போய்ச் சேர்ந்தால் மகிழ்ச்சிதான். அது சரி, இப்ப எதற்கு என்னை அழைத்தாய்?”

“சும்மாத்தான். வீட்டுக்குள்ளேயே அடைபட்டு கிடக்கோமா..அதுதான். எல்லோரும் ஒரு மீட்டிங்க் போடுவோம்னு நினைச்சு உன்னையும் கூப்பிட்டேன்”

“எல்லோரும்னா..?”

”நான், என் அண்ணன் சூர்யா, சுண்டைக்காய் இளவரசன் சுந்தரன்” என்று ஷாலு சொல்லிக்கொண்டிருக்கும்போதே.. அவர்கள் இருவரும் மரப்பாச்சிக்குத் தெரிந்தனர்.

“ஆஹா.. எல்லோருக்கும் வணக்கம். ஷாலுவின் வீடு போல இங்கே தனி அறை எல்லாம் இல்லை. அவள் வீடுபோல இது பெரிய வீடு அல்ல. அதனால மயிலிடம் பேசி, அவளை வீட்டுக்கு வெளியே தனியே கொண்டுவந்துவிடுகிறேன்.”

”மயிலா?”

”ஆமா ஷாலு, உன்னைப் போலவே எனக்கு இங்கே அவள்தான் துணை! கொஞ்சம் பொறு இதோ வருகிறேன்” என்று சொன்ன மரப்பாச்சி. மறைந்துபோனது.

”ஐயையோ என்ன அதுக்குள்ள மறைஞ்சுபோச்சு..?”

“அடடா! அவசரப்படாதே.. அது திரும்பவும் வரும்” என்றான் சூர்யா.

“நீங்க எல்லாம் வேறு யார் கண்ணுக்காச்சும் தெரிவிங்களா?”

“தெரியமாட்டோம் ஷாலினி. நாம் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் என்பதால் தெரிகிறோம். மற்றவர்களின் கண்களுக்கு தெரியமாட்டோம். அப்படி தெரியவேண்டும் என்றால் நம்மில் யாராவது ஒருவர் மனதில் வேண்டிக்கொண்டால், மற்றவர்களுக்கும் புலப்படுவோம்.” என்று சுந்தரம் விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கும் போதே, மரப்பாச்சி தோன்றியது.

மரப்பாச்சியின் பின்னாடியே பாவாடைச் சட்டை அணிந்து, இரட்டை சடை பின்னல் போட்ட ஒரு சிறுமியும் தெரிந்தால்.. முத்திரள் உருவத்தில் தெரிந்தவர்களை வாயைப் பிளந்தபடியே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“இவள் தான் மயில்” என்ற மரப்பச்சி; மயிலிடம் திரும்பி, இவங்க எல்லாம் நம்ம நண்பர்கள் வேறு வேறு ஊரில் இருந்து பேசுறாங்க!” என்றது.

எல்லோரையும் பார்த்து புன்னகைத்தாள் மயில்.

”என்னால நம்பவே முடியலை. போன மாசம் தான் என்னாட மிஸ் மகாலட்சுமி ஹலோகிராம் பற்றி எல்லாம் சொல்லிட்டு இருந்தாங்க. இப்ப நிஜத்திலேயே பார்க்கிறேன்” என்றாள் மயில்.

“உங்கள் மிஸ் சொல்லிக்கொடுத்த்து அறிவியல். இவை நான் மந்திரத்தால் உருவாக்கியவை” என்று கூறினான் சுந்தரன்.

“ஆமா! மரப்பாச்சி பொம்மை பேசும்னு யாராவது சொன்னா நானே நம்பி இருக்க மாட்டேன். இது என் கையில் கிடைக்கும்வரை” என்று மரப்பாச்சியைக் கையில் எடுத்து ஒரு முத்தம் கொடுத்தாள் மயில்.

ஷாலுவுக்கு பொறாமையாக இருந்தது. அதைக் கவனித்துவிட்ட, சூர்யா பேச்சை மாற்றினான்.

“உங்க ஊரில் எல்லாம் ஊரடங்கு எப்படி போகுது மயில்?”

“நகரம் மாதிரி, பெரிய பாதிப்பு எல்லாம் இல்லை. ஏன்னா.. இங்கிருந்து மக்கள் வெளியில போக மாட்டோம். வெளியில் இருந்து இங்கே வர்றவங்க மூலம் தான் நோய்த்தொற்று ஏற்படவாய்ப்பு அதிகமாம். மலைக்கு கீழேயே யாரையும் மேலே அனுப்பாமல் தடுத்துவிடுவதால் நோய் பாதிப்பு ஏதுமில்லை”

“ஓ! சூப்பர். அப்ப பாதுகாப்பா இருக்கீங்க என்பதே, கேட்க சந்தோஷமா இருக்கு!” என்றான் சூர்யா.

”ஆனா.. இந்த கோடை விடுமுறைக்கு, ஊரில் இருக்குற எங்க மாமா வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டு இருந்தாங்க அம்மா. இந்த கொரோனா வந்து எல்லாத்தையும் கெடுத்துடுச்சு..”

“இப்பூ..அவ்வள்ளவுதானே.. உனக்கு அங்கே யாரைப் பார்க்கனும்னு சொல்லு.. அவங்களை இங்கேயே கொண்டுவந்துடலாம்” என்றான் சுந்தரன்.

“என்னது.. இங்கேயே..!?”

”ஆமா! மயில், ஊரில் இருப்பவர்களில் உனக்கு யாரைப் பார்க்கணுமோ அவங்களை இங்கேயே, எங்களைப் போல முத்திரள் உருவமாகக் கொண்டுவரலாம்.. உன்னோட ஆசை என்னன்னு சொல்லு..?”

“ஆசையைச்சொல்லவா.. அல்லது அங்கே சந்திக்க விரும்புறவங்களைப் பற்றி சொல்லவா..?” என்று கேட்டாள் மயில்.

“அம்மா தாயே.. கடிக்காமல்.. நீ போகவிரும்பிய உன் மாமா ஊரில் யாரைப் பார்க்கனும்னு நினைக்கிறியோ, அவங்க பெயரைச்சொல்லு” என்று கையெடுத்துக்கும்பிட்டான் சூர்யா.

எல்லோரும் சிரித்துவிட்டனர்.

மயில் யாரைச்சொல்லலாம் என்று யோசித்தாள். மாமாவையா? அத்தையையா? அல்லது மாமா மகனையா? மகளையா?

(மயில் யாரைத்தேர்வு செய்தாள் என்பதை அறிய, நாளை மதியம் 4மணிவரை காத்திருங்கள்)

பாகம் 1: https://blog.balabharathi.net/?p=1973

பாகம்2: https://blog.balabharathi.net/?p=1977

பாகம்3: https://blog.balabharathi.net/?p=1981