பகுதி-4

(கொரோனா வைரஸ் பரவுலைத்தடுக்க, மக்கள் எல்லோரையும் வீட்டுக்குள் இருக்கும்படி கூறியதோடு, ஊரடங்கு உத்தரவையும் அரசு பிறப்பித்தது. வெளியே செல்லமுடியாத சோகத்தில் சூர்யா, இருந்தபோது சுண்டைக்காய் இளவரசன் சுந்தரன், அவன் முன் முத்திரள் உருவமாகத் தோன்றினான். வெளியில் செல்ல அனுமதி இல்லாததால், விரும்புகிறவர்களை வீட்டுக்குள்ளேயே அழைத்துவருகிறேன் என்று அவன் தெரிவித்தோடு, சூரியாவின் தங்கை ஷாலினியையும், அவள் விரும்பிய மரப்பாச்சி பொம்மையையும் அதன் தோழி மயிலையும் சந்திக்கவைத்தான். இனி..)

”யாரை சந்திக்க விரும்புகிறாய் மயில்?”

“அதுதான் என்ன சொல்லன்னு குழப்பமா இருக்கு. ஊரில் இருக்குற என்னோட மாமா வீட்டுக்கு போகலாம்னு இருந்தோம். நான் பொறந்ததில இருந்து இந்த மலைப்பகுதியில் தான் இருக்கேன். எனக்கு கடலைப் பார்க்கனும்னு ரொம்ப ஆசை. மாமா இருக்குற ஊர்ல் பெரிய கடல் இருக்கு. மாமா பையன் குமாருக்கு ஒரு ஆமை தோஸ்த் எல்லாம் இருக்காம். அதை எல்லாம் பார்க்கனும்னு நினைச்சேன்.”

”இப்ப உனக்கு மாமா பையனைப் பார்க்கணுமா? ஆமையைப் பார்க்கணுமா?”

“ரெண்டுபேரையுமே பார்க்கனும். மொதல்ல ஆமை. அப்புறம் குமார்.”

சில வினாடிகள் கண்களை மூடி இருந்துவிட்டு, சுந்தரன் கேட்டான், ”ஜூஜோங்கிற அந்த வயசான வயசான ஆமை தானே?”

“ஆமாம்.. அது பேசுமாம். குமாரையும் அவன் நண்பர்களையும் கடலுக்குள்ளே எல்லாம் அழைச்சுட்டுப் போச்சாம். அதே ஆமைதான்!”

சுந்தரன் கை தொழுது ஏதோ முணு முணுத்தான்.

இவர்களுக்கு நடுவில் திடீரென கொஞ்சம் நீல ஒளி தோன்றியது. முதலில் விட்டுவிட்டுத் தோன்றிய ஒளி, சில நிமிடங்களிலேயே நிலைபெற்றது. இப்போது அந்த ஒளியில் ஆமையின் உருவம் தோன்றியது.

“வணக்கம். ஜூஜோ! நாங்கள் உன் நண்பன் குமாரின் உறவுக்காரப் பெண்ணான மயிலின் நண்பர்கள்” என்றான் சுந்தரன்.

“ஹாய்.. சுந்தரா.. நலமா? உமக்கெல்லம் தனியே அறிமுகம் தேவையா என்ன?” என்று சொன்னது ஜூஜோ.

“ஹாய் ஜூஜோ! நான்தான் மயில்..” என்று அவள் பேசத்தொடங்கியதுமே, ஜூஜோ குறுக்கிட்டது, “ஓ! நீ தானா அது. இந்த கோடையில் என் உறவுக்காரப்பெண் மயில் வருவாள் என்று சொல்லி இருந்தான் குமார். இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் வரமுடியாமல் போய்விட்டது போல.. பரவாயில்லை. எப்பவும் நீ ராமேஸ்வரம் வரலாம். கடலுக்குள் பயணம் அழைத்துச்செல்ல தயாராகவே இருக்கிறோம்” என்றது ஜூஜோ!

”நாங்களும் வரலாமா ஜூஜோ?” என்று கேட்டான் சூர்யா.

“தாராளமாக வரலாம்.”

“ஓ! நன்றி! கடலுக்குள் என்னென்ன பார்க்கலாம்?”

“கடல் வாழ் உயிரினங்கள் பலவற்றைப் பார்க்கலாம். கடலுக்குள் மூழ்கிய கப்பல், பழைய நகரம் எல்லாவற்றையும் பார்க்கலாம். அப்படியே மனிதர்களாகிய நாம் எவ்வளவு குப்பைகளை கடலில் கொட்டுகிறோம் என்பதையும் பார்க்கலாம்” என்று புதுக்குரல் கேட்டது.

எல்லோரும் திரும்பிப் பார்க்க.. ”ஹாய்.. நான் தான் குமார்” என்றபடியே குமார் ஓடிவந்து சேர்ந்துகொண்டான்.

“என்னது கடலுக்குள் குப்பையா?” என்று அதிர்ச்சியாக்கேட்டாள் மயில்.

“ஆமாம்.. ஒவ்வொரு ஆண்டும் கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் எடை எவ்வளவு தெரியுமா? சுமார் ஆயிரம் கோடி கிலோ. இவ்வளவு குப்பைகளையும் கடலில் கொட்டுவதால் அதில் வாழும் உயிரினங்கள் பலவற்றிற்கு சுகாதாரக்கேடுகள் ஏற்பட்டுட்டே இருக்கு.”

‘ஐயோ! பாவமே..!” என்று மயில் வருத்தப்பட்டாள்.

“மயில், நீ என்னை மையமாக வச்சு எழுதப்பட்ட ’ஆமைகாட்டிய அற்புத உலகம்’ கதையைப் படி. உனக்கு இன்னும் பலவிஷயங்கள் தெரிய வரும்.” என்று ஜூஜோ கூறிக்கொண்டிருக்கும்போதே, சூர்யாவின் அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உடனடியாக முத்திரள் உருவங்கள் மறையத்தொடங்கின.

கதவைத் திறந்துகொண்டு வந்தது, சூர்யாவின் அம்மா, “ஏண்டா.. ரூம்முக்குள்ளேயே அடைபட்டு கெடக்க. கொஞ்சம்  ஹாலுக்கு வந்து டிவி ஏதுனா பார்க்கவேண்டியதுதானடா?” என்று கேட்டார்.

“டிவி வேணாம்மா.. இங்கே இவ்ளோ.. புக்ஸ் இருக்குல்ல அதையே படிச்சிக்கிறேன்”

”சரி.. காலையில அப்பா திட்டினதை இன்னும் மனசுல வச்சுட்டு இருக்காம.. வா.. வந்து டி.வி. பார்த்துக்கோ “ என்றவர், அறைக்கதவை சாத்திவிட்டு சென்றுவிட்டார்.

அவர் அந்த பக்கம் நகர்ந்ததுமே, முத்திரள் உருவங்கள் எல்லாம் மறுபடியும் தோன்றின.

சூர்யா, எல்லா உருவத்தையும் பார்த்து புன்னகைத்தான். “அம்மா திடீர்ன்னு வந்த்துல.. ஒரு நிமிஷம் பயந்துட்டேன். அதனால வேர்த்துக்கொட்டிடுச்சு”

“ஹா..ஹா..” என எல்லோரும் சிரித்தனர்.

“ஆமா, எனக்கொரு டவுட்!” என்று கையை உயர்த்தினார் குமார்.

“ம்.. கேளுடா!” என்றாள் மயில்.

“நீங்க எல்லோரும் இப்ப எனக்கு படமாகத் தெரியுறீங்க.. அதே போல உங்க வீட்டிலும் என்னோட படம் தெரியுமா என்ன?”

“இதற்கு பதில் நான் சொல்கிறேன்” என்று குறுக்கிட்டு பேசத்தொடங்கினான் சுந்தரன்.

“எல்லோருக்கும் எல்லோரின் உருவமும் முத்திரள் காட்சியாகத் தெரியும். கிட்டத்தட்ட வீடியோ கால் செய்வது போல, நீங்க பேசிக்கொண்டே நடக்கலாம், ஆடலாம், சாப்பிடலாம் என்னவேண்டுமென்றாலும் செய்யலாம். நீங்கள் செல்லும் இடமெல்லாம் இந்த காட்சி தொடரும்.”

”ஐ.. அப்படியா..” என்ற குமார் கொஞ்சம் குதித்துப் பார்த்தான். எந்த காட்சியிலும் மாற்றங்கள் தெரியவில்லை. மீண்டும் சுந்தரன் தொடர்ந்தான், “என்னுடைய அறையில் நிஜத்தில் நான் மட்டும் இருக்கேன். நீங்க எல்லோரும் முத்திரள் படமாக இருப்பீங்க. இதுபோலத்தான் எல்லோருடைய இட்த்திலும்.. நாங்க இருக்கோம். ஆனா இல்லை” என்று சிரித்தான் சுந்தரன்.

”சும்மா.. சும்மா.. இப்படி சிரிச்சுட்டே இருக்கப்போறீங்களா..? வெளியில எங்காச்சும் பறந்து போகப்போறீங்களா?”

குரல் கேட்டு அனைவரும் ஒருகணம் திகைத்தனர். எல்லோரும் சுற்றிப் பார்த்தனர், எவருடைய கண்ணுக்கும் யாரும் தெரியவில்லை.

சுந்தரன் கண்மூடி, பேசியது யார் எனக்காட்டும்படி தனது குருவை வேண்டினான்.

அவனுடைய கண்களுக்கு மட்டும் ஒரு பழைய செய்தித்தாள் தெரிந்தது.

சுந்தரன் அதிர்ந்துபோனான். செய்தித்தாளா பேசியது!?

(உண்மையில் அங்கே பேசியது யார்? மனிதனா? அல்லது செய்தித்தாளா? விவரம் அடுத்த பகுதியில் )

பாகம் 1: https://blog.balabharathi.net/?p=1973

பாகம்2: https://blog.balabharathi.net/?p=1977

பாகம்3: https://blog.balabharathi.net/?p=1981

பாகம்4: https://blog.balabharathi.net/?p=1986

++++++++++++++++++++++++++